ஆய்வுச் சிந்தனைகள்


மெய்ப்பாடு உடல் மொழியா?

முன்னுரை

மக்களின் அகப்புற செயல்பாடுகளையும் அவர்தம் வாழ்க்கைச் சூழலையும் கொண்ட ஒரு படைப்பிலக்கியமே தொல்காப்பியம். அதிலும் குறிப்பாக மாந்தரின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் மெய்ப்பாட்டியல் என்னும் பகுதி சுவாரஸ்யம் மிகுந்தது. இப்பகுதியில் காணப்படும் மெய்ப்பாடு உடல் மொழியா? என்பதை சுருக்கிக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

உடல் மொழி

உடல் என்கிற ஊடகத்தின் வழியாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதை உடல் மொழி எனலாம். உடல் மொழி குறித்து ஆய்வாளர் திருமலை குறிப்பிடும் பொழுது உடல் மொழி பேச்சு வடிவிலே அமையாமல் உடல் உறுப்புக்கள் அசையும் செயல்படும் வகைகளிலும் ஓர் உடலுக்கும் இன்னோர் உடலுக்கும் இடையே இருக்கும் இடைவெளி நெருக்கத்திலும் முக உணர்ச்சி வெளிப்பாடுகளிலும் கை அசைவுகளிலும் சைகைகளிலும் வெளிப்படுகிறது என்கிறார். இக்கருத்தால் முகபாவனை (Facial Expression) கால்அடவு (Foods Step) தனிநிலை (Posture) அசைவு (Shake) நகர்வு உடல் மொழிக் கூறுகள் ஆகின்றன.

இவ்உடல் மொழிக்கூறுகள் தலைமுதல் பாதம் வரையிலான உடல் உறுப்புகளது அசைவுகளினால் அல்லது அவற்றின் இணைவுகளினால் பிறக்கும் பல்வேறு பொருள் பொதித்த வடிவங்களாகத் திகழ்கின்றன. ஒரு மொழியில் சொற்கள் பல்வேறு மாறுதல்களுக்கு உட்படுதல் போல உடல்மொழிக் கூறுகளும் மாறி அமைந்து உடல் மொழியை அர்த்தப்படுத்துகின்றன என்பார் பேர்டுவிசில்.

தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு

வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்தவர்கள் தமிழர்கள். சங்க காலம் தொட்டு வாழ்க்கை நெறிபிறழாமைக்கு இலக்கணமும் முக்கியப் பங்கு பெறுகின்றனவா அல்லது மெய்ப்பாடுகள் பருவத்தில்தான் ஆரம்பமாகின்றனவா என்ற கேள்விக்கு விடைகாணும் வகையில் நோக்கினால் மெய்ப்பாடுகள் அனைத்துப் பருவத்திலும் தான் காணப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக களவு, கற்பு, காலத்தில் இடம் பெற்றமை அக்கால அகவாழ்க்கையை முன்னிறுத்திப் படைக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. மெய்ப்பாட்டின் இயல்பைத் தொல்காப்பியனார்.

உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும்.

எனக் கூறுகிறார் அதாவது நினைத்துச் செயல்படாமல் இயல்பாக வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை மெய்ப்பாடுகள் என்கிறார். மெய்ப்பாடு என்பது மெய்ப்படு என்பதன் திரிந்த வடிவமாகும். படு என்பது தொழிற்பெயர் அது பாடு என நீண்டு முதனிலை திரிந்த தொழில் பெயராகின்றது.

மெய் + படு = மெய்ப்பாடு
மெய் (உடல்) + படு (தோன்றுதல்)

மெய்யில் படுதல் மெய்ப்பாடு அதாவது உணர்ச்சி மெய்யில் (புற உடலில்) வெளிப்படுதல் மெய்ப்பாடு எனப் பொன்னுச்சாமி குறிப்பிடுவது உடல் மொழிக்கு அரண் சேர்க்கின்றது.

மெய்ப்பாடு

தொல்காப்பிய அகத்திணை மெய்ப்பாடுகளில் களவுக்கால முதல் நிலை மெய்ப்பாடுகளை கட்டுரைச் சுருக்கத்திற்காக எடுத்துக் கொள்வோம். மெய்ப்பாடுகளில் வரும் மனித உடல் அசைவுகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு அர்த்தத்தை உள்நிறுத்தி விளக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில் காட்சிநிலை மெய்ப்பாட்டைக் காண்போம்.

காட்சி நிலை

"புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநயம் மறைத்தல் சிதைவு பிறர்க்கு இன்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென் மொழிப"

காட்சிநிலை மெய்ப்பாட்டினைக் குறிப்பிடுகிறார்.

புகுமுகம் புரிதல்

தலைமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்/ பார்க்கும்போது நேருக்கு நேர் காதல் உணர்ச்சி ததும்ப காணுவது தனது மனக்குறிப்பை முகத்தில் வெளிப்படுத்துவது. தலைவனின் காதல் பார்வைக்கு தலைவி மனம் இசைந்து தனது மனமும் முடிவை, விருப்பத்தை முகமலர்ச்சி என்ற உடல்மொழியால் தெரிவிக்கின்றாள். இரு மனமும் ஈர்க்கப்பட்டு இரண்டறக் கலக்கின்றன. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவாக இது அமைகிறது. மன உணர்வுகளை முகத்தைப் போல் வெளிகாட்டும் திறமை வாய்ந்த கருவி வேறு எதுவும் இல்லை என்று திருமலை குறிப்பிடுவது, இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

புகுமுகம் புரிதல் என்ற மெய்ப்பாட்டை ஏராளமான அகப் பாடல்கள் விளக்குகின்றன. புகுமுகம் புரிதல் என்பது கண்களால் பார்த்து முக மலர்ச்சியால் தெரிவிப்பது, பூவுண்டகண் பேரமர்மழைக்கண் என தலைவியின் கண்கள் மென்மையான குளிர்ந்த இனிமை தரக்கூடிய கண்களாக சித்தரிக்கப்படுகிறது. தலைவியின் கண்களில் இனிமையை வைத்து உடல் மொழியால் கருத்துக்களை தெரிவிப்பது இலக்கியங்களில் நடந்திருக்க வேண்டும். தலைவியின் இனிமை தரக்கூடிய பார்வை தலைவனை ஈர்ப்பது இயல்பே! இந்நிலையை கவிச்சக்ரவர்த்தி கம்பனும்

"எண்ணரும் நிலத்தினாள் இறையாள் நின்றிழி
கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலை பெறாமல் உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"

எனக் கண்ணொடு கண்கள் கவ்வுகின்ற நிலையாகக் காட்டுவதும் எண்ணத்தக்கது.

பொறிநுதல் வியர்த்தல்

தலைவன் விருப்பத்துடன் நோக்கிய நோக்குக்கு எதிர்ப்பார்வை பார்த்த தலைவி நாணம் கொள்கிறாள். அவள் உள்ளத்தில் காதல் உவகையாய் ஊற்றெடுக்கிறது. காதல் மனப்போராட்டத்தில் அடுத்து என்ன பேசுவதென்ற திகைப்பில் அச்சத்தில் ஒரு வகையான பயத்தில் மேனி பரவசமடைகின்றன. இந்நிலையில் அவளது நெற்றியில் குறு வியர்வைத் துளிகள் தோன்றி அவள் காம உணர்வை வெளிப்படுத்துகின்றன. இங்குறு வியர்த்தல் என்ற உடல்மொழி பெண்மையின் ஒருமித்த பண்புகளை வெளிப்படுத்துவதுடன் தலைவனைப் போல் உடனடியாக வெளியிடமுடியாத நிலையையும் சுட்டுகிறது எனலாம்.

சிதைவு பிறர்க்கின்மை

ஒரு பெண் தன் காம உணர்வை வெளிப்படுத்துவது என்பது இயல்பான ஒன்று அல்ல. பெண்மைக்குரிய சாயலே அதனை வெளிக்காட்டாவண்ணம் வாழ்வின் அம்சங்களை ஒழுகுவது ஆகும். தனது உள்ளச்சிதைவை மற்றவர்க்கு புலனாகாமல் மறைக்க முகத்தை கூந்தனுள் புதைத்துக் கொள்வது.

1. கூந்தலில் மறைத்தல்
2. தலைகுனிதல்
3. கால்விரல்களால் நிலத்தைக் கிளறுதல்

போன்ற வெளிப்பாடுகள் தம் உள்ளத்து உணர்வை மறைக்க ஏற்படுகின்ற செயலாகும். தலைவியானவள் தன் முகத்தை கூந்தலில் மறைப்பதும் தலைகுனிவதும் நேருக்கு நேர் பார்க்க முடியாத மனப் போராட்டத்தைக் குறிப்பிடுவதும், பார்வையைத் தவிர்ப்பது என்பது காதலின் நிலையை தெளிவாக்குகிறது என ஆய்வாளர் திருமலை குறிப்பிடுவது பொருத்தமாக அமைகிறது.

முடிவுரை

களவு வாழ்க்கையில் ஈடுபடும் தலைமக்கள் அவர்தம் வேட்கையை விருப்பத்தை சந்திப்பின் வாயிலாக புணர்ச்சியின் வாயிலாக ஈடேற்றும்பொழுது ஏற்படும் குறிப்புப் பொருளையே (உடலின் கண் நிகழும் தோன்றும்) மெய்ப்பாடுகள் அதிகம் விளக்கி நிற்கிறது. எண் வகை மெய்ப்பாடுகளாக நகை அழுகை போன்றவைகளை குறிப்பிட்டாலும் அக வாழ்க்கை மெய்ப்பாட்டு உணர்வை நாம் உடல் பிரிவு புணர்வு போன்றவற்றை விளக்கும் மெய்ப்பாடுகளான களவு கற்பு மொழியாக ஏற்றுக் கொள்வதில் மாறுபட்ட கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் மனத்தின்கண் நிகழும் மாற்றங்கள் அவர்களது உடல் ஒரு தேவையையும் மன விருப்பத்தையும் காட்டுவதாகவே அமைகிறது. உடலும் ஒரு வகை மொழிதானே! கண்ணும் இதர உறுப்புகளும் பேச ஆரம்பித்த பொழுது வாய் சொற்களுக்கு என்ன பயனும் இல்லை என்பது நாம் அறிந்த ஒன்றே ஆக தொல்காப்பியர் காட்டும் மெய்ப்பாடுகள் உடல் மொழியின் அடிப்படைகளாக அமைந்திருப்பதை அக்காலத்திலேயே காண முடிகிறது.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link