ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியக் காலப் பெண்கள் நிலை

தமிழரின் தோன்மை நூலாக விளங்கும் தொல்காப்பியம் எழுத்திற்கு சொல்லிற்கு மட்டுமல்ல அதில் எழுந்த இலக்கியத்திற்கும் (பொருளதிகாரம்) இலக்கணம் படைத்து உலகிற்கு வழிகாட்டிய பெருமை உண்டு. இலக்கியங்கள் உருவாவதற்கு எழுந்த பொருளிலக்கணம் அன்றைய சமூகப் பின் புலத்தையும் பெருமளவு இனங்காட்டுகிறது. குறிப்பாக பெண்களின் நிலை குறித்து குறிப்பிடத்தக்க அளவு அறிய முடிகிறது.

பெண்கள் என்பவள் சிறந்த பண்புடன் விளங்க வேண்டும் என்பதைத் தொல்காப்பியம்

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் என்ன கிழவோள் மாண்புகள் (தொல். 1098)

என்று வரையற்றுள்ளது.

ஆரம்ப காலங்களில் ஆணுக்கு நிகராகப் பெண்களும் செயல்பட்டனர். ஆனால் இயற்கையாக உடல் ரீதியான மாற்றங்களில் ஆண் பெண் ஆகிய இருவருக்குமான தொழில் வேறுபட்டன. வினையே ஆடவர்க்கு உயிர் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்ற நிலை உருவானது முந்நீர் வழக்கம் மகடூஉ வொடு இல்லை என்பதால் கடல் கடந்து செல்வது பெண்ணுக்குத் தடை செய்யப்பட்டது. செய்து வந்திருக்கின்றன. வாழுகின்ற இடத்திற் சிறுசிறு வேலைகளைச் செய்து வந்திருக்கின்றனர். உணவுகளைப் பதப்படுத்துதல் முல்லை நிலம் மாடு மேய்த்தல் மோர் விற்றல் மருதம் வயல்களில் களையெடுத்தல் பறவைகளை ஓட்டுதல் போன்ற தொழில்களைச் செய்து வந்துள்ளனர். பெண்களின் மென்மை தன்மை உடலிலுள்ள இயற்கை மாற்றம் உள்ளது. உணர்வுகளின் மென்மை ஆகியவற்றை மனதில் கொண்டு கடல் கடந்து ஆடவனுடன் பொருள்படச் செல்வதில்லை இல்லத்தை ஆள்பவலாக அவர் தொடர்ந்து செயல்பட்டிருக்கிறாள்.

அகத்திணை சுட்டும் பெண்கள்
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்

அச்சம் நாணம் மடம் என்ற மூன்றும் எப்பருவத்திலும் பெண்களுக்குரியவையாக அமையும். இவற்றுடன் பிறர்பால் அன்பு காட்டுதல் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல் மென்மைதன்மையுடையவளாதல் பொறுமை காட்டல் என்பவற்றையும் பின்கற்றுதல் வேண்டும் என்கிறது தொல்காப்பியம். அக வாழ்க்கை களவு நிலை கற்புநிலை என்று இரண்டு பிரிவாகப் பேசப்படுகிறது.

களவு வாழ்க்கையில் ஐந்திணை ஒழுக்கங்கள் வழி பெண்களின் நிலை பேசப்படுகிறது. ஆற்றியிருத்தலில் வழி பங்கு மிகுதியாகச் சுட்டப்படுகிறது. பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருபு, பருவம், நிலை, அருள், உணர்வு, திரு ஆகிய பத்து இயல்புகளில் ஒத்திருக்கின்ற தலைவனும் தலைவியும் ஊழின் காரணமாகக் காதல் கொண்டு திருமணம் புரிந்து கொள்ளுவதற்கு முன்னால் பிறர் அறியாமல் சந்தித்துக் கூடி இன்புறுவர். களவுக்காலத்தில் பகற்குறி இரவுகுறி ஆகிய இரண்டு நிலையிலும் தலைவிக்கு உதவுவதில் தோழியின் பங்கு பெருமளவு பேசப்படுகிறது. தலைவனைச் சந்திப்பதற்கு ஏற்ற இடம் முதல் அறத்தொடுநிற்றல் வரை தோழியின் பங்கு மிகவும் சிறப்பாக இருந்ததை இலக்கியங்கள் வழி உணர முடிகிறது. தலைவன் தலைவி சந்திப்பிலும் ஒழுக்க நிலை கடைப்பிடிக்கப்பட்டது. அறத்தொடு நிற்றல் பண்பில் தலைவி தோழியிடமும் அறத்தொடு நின்றனர். இவ்வரிசையில் நற்றாய் தந்தையிடமும் அறத்தொடு நின்றனர். இவ்வரிசையில் தலைவி தோழி செவிலி நற்றாய் என்று பெண்களின் பங்கு அதிகமாகப் பேசப்படுவதைக் கண்டு உணர முடிகிறது. ஆனால் தலைவனுக்குத் தலைவியை எப்படிச் சந்திப்பது என்பது மட்டும் சிக்கலாக இருந்தது. தலைவனுடைய தோழனே செவிலியோ நற்றாயே ஆகியவர்களைப் பற்றி இலக்கியங்களில் பேசப்படவில்லை என்பது சிந்திக்கத்தக்கது. பெண்ணின் உயிரைவிட நாணம் பெரியது. அதனைவிட அவளது கற்பு மிக உயர்வானது இதனை தொல்காப்பியர்

உயிரினும் சிறந்தன்று நானே நானினும்
செய்தீர் காட்சி கற்பு சிறந்த றெனத்
தொல்லோர் கிளவி (தொ.1059)

என்று கூறுகிறது.

களவு வாழ்க்கையில் ஈடுபட்ட தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தோடு நடந்து கொண்ட பிறகு ஊர் அலர் தூற்றுவதற்கு கற்பு வாழ்க்கைக்கு வர விரும்புவர். வரைவு காடவுதல் என்ற நிலையில் தோழியின் பங்கு மேலோங்கி நிற்கிறது. ஆனால் தலைவியை விரைவில் திருமணம் செய்து கொள்ளுவதற்குத் தக்க ஏற்பாடுகளைச் சொல்லி திருமண விரைவைத் தலைவன் கூறியதாக பேச்சில்லை. மேலும் களவு நிகழ்ச்சியில் தலைவன் தலைவி சந்திப்பதைச் செவிலிக்குத் தெரியாமல் காத்து நிற்பவள் தோழி. தலைவன் பிரிந்து சென்ற காலத்தில் தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறார். தலைவிக்குப் பசலை நோய் உருவாதல் மெலிந்து காணப்படுதல் வளையல்கள் கழலுதல் வெறியாட்டு நிகழ்த்துதல் போன்ற துன்பங்களை அனுபவித்தல் போன்றவை தலைவிக்கு மட்டுமே உரியதாக கூறப்படுகின்றன. தலைவன் தலைவியைப் பிரிந்த காலத்தில் அவனுக்கு ஏற்பட்ட துன்பங்களை இலக்கியங்கள் மிகுதியாகச் சுட்டியிருப்பதைக் காண முடியவில்லை.

கற்பு வாழ்க்கையில் பெண்கள் நிலை களவு வாழ்க்கையை விட மேலோங்கி இருந்து களவு வாழ்க்கையைக்குறிப்பிட்ட திங்களுக்கு மேல் நீடிக்காமல் கற்பு வாழ்க்கையை மேற்கொள்ளும் தலைவனும் தலைவியும் தங்கள் வாழ்வில் ஆற்றும் கடன்களாகப் பலவற்றை இலக்கியங்கள் பேசுகின்றன. இல்லாள் என்று பெண்ணைப் பலவற்றை போற்றுவது ஆடவனை இல்லாள் அன்று குறிப்பிடுவதில்லை. எனவே இல்லத்தை ஆளக்கூடிய பொறுப்பு பெண்ணிடத்தில் இருந்ததை உணரமுடிகிறது. இவையன்றிப் பெண்தான் வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளாக ஆற்ற வேண்டிய கடமைகளாக வலியுறுத்தப்படுபவை. பல குறிப்பாக எல்லா நிலைகளிலும் எவ்வித முரண்பாடும் கொள்ளாது ஒத்தச் செல்வதே வற்புறுத்தப்பெற்றுள்ளது.

மேலும் தன் துணைவனை எத்துன்பத்தாலும் சோர்வு அடைந்து விடாது காத்தலும் பெண்ணின் பொறுப்பாக இருந்து குழந்தைகளைப் பேணி காத்தல் விருந்தோம்பல் போன்ற அறங்களையும் செய்திருக்கிறாள். கணவன் பரத்தன்மை மேற்கொண்டாலும் கூட அவனை ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டவளாக இருந்திருக்கிறாள். களவு நிலையிலும் கற்பு நிலையிலும் பெண் என்பவள் உயர்வாகக் கருதப்பட்டாலும் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்திருக்கிறாள் என்பதை உணர முடிகிறது. இலக்கியங்கள் பெண்களுக்குரிய துன்பங்கள் எனச் சுட்டுமளவிற்கு ஆண்களுக்கு அத்தகைய துன்பம் காட்டப்பெறவில்லை கோடிட்டு மட்டுமே காட்டப்படுகிறது.

புறத்தினை சுட்டும் பெண்கள்

புறத்திணையில் பெண்களின் பங்கு என்ன என்பதைச் சுட்டிக்காட்டும் பகுதிகளும் உள வீரம் கல்வி புகழ் போன்றவற்றில் பெண்கள் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளனர். தன் ஒரே மகனை போருக்கு அனுப்பும் தாயாகவும் தன்னுடைய கணவன் போர்க்களத்தில் இறந்துவிட்டான் என்பதை உணர்ந்து தானும் உயிர்நீத்தல் தன் கணவனின் உயிர் குடித்த வெலன் தணை கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் கொண்டவனின் தலையை சேர்த்தணைத்து உயிர்விடல் கணவனின் ஈமத்தீயுள் பாய்ந்து உயிர்நீத்தல் கணவன் இறந்த பின்பு கைம்மை நோன்பு மற்கொள்ளுதல் போன்ற கடுமையான துன்பங்களை ஏற்பவளாக பெண் காட்டப்படுகிறாள். மறக்குடியில் பிறந்த பெண்ணிற்கேற்ற மனநிலையும் அரசர்களுக்குத் தூது சொல்லும் பொருட்டு கல்வித்திறன் பெற்றிருந்த நிலையும் புறத்திணையில் பெண்களின் நிலையை உணர்த்தக் கூடியவை.

தமிழ் இலக்கண மரபின்படி பார்த்தால் இலக்கணம் தோன்றியது இலக்கியங்களுக்காகவே. அவ்விலக்கியங்களில் (பொருளதிகாரம்) சுட்டப்படும் பெண்கள் களவு காலத்தில் கற்புகாலத்தில் இலக்கண கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்திருந்தனர் என்பதை உணர முடிகிறது. ஆனால் ஆடவர்க்கு இத்தகைய உயிர் என்ற நிலை மட்டும் சிந்திக்கத்தக்கது. வினையே ஆடவர்க்கு உயிர் என்ற நிலைமட்டும் உணர்த்தப்படுகிறது. பெண்களுக்குரிய முல்லைசான்ற கற்பு பிரிவினால் ஏற்படும் துன்பங்கள் ஆடவர்க்கு உரியதாக கூறப்படாதது மேலும் ஆராயத்தக்கது. மற்றும் தலைவனின் தோழனோ செவிலியோ நற்றாயோ ஆகியோரைப் பற்றிக் குறிப்புகளும் இடம் பெறாததும் ஆராயத்தக்கது.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link