ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியரின் பொருளியல் சிந்தனை

பண்டைத் தமிழர்களின் வாழ்வியல் முறை தமிழ் மொழியின் இயல்பு இவற்றை இசைக்கும் தொல்காப்பியம் தமிழர்கள் பொருளீட்டும் முறைமையினை விளக்கும் நூலாகவும் திகழ்கின்றது. மனித வாழ்வியலுக்கு அடிப்படைத் தேவையாக விளங்கும் பொருள் எவ்வாறு ஈட்டப்பட வேண்டும் என்பதை தொல்காப்பியரின் வழிநின்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொருளியல் - விளக்கம்

ஆதியில் இறைவன் உலகினைப் படைத்தான் பின்னர் உலகில் வாழ மனிதனையும் அவனுக்குத் துணை செய்ய ஒரு மனைவியையும் கொடுத்தான். ஆதிமனிதனாகப் பிறந்தவன் தன் பசியைப் போக்கிக்கொள்ள உணவு தேடியலைந்திருப்பான். பசி தன் வயிற்றைத் கிள்ளத் தன் கைக்கு எட்டியதைப் பறித்து உண்டிருப்பான். இயற்கை அன்னை அவனைத் தன்மடியில் கிடத்தித் தாலாட்டியிருப்பாள். நிலம் இயற்கைச் செழிப்புடன் கிடந்தது. நீர்வளம் பெருக்கெடுத்தோடியது. இயற்கைத் தந்த வளத்துடன் மனிதனுடைய சொந்த முயற்சியும் சேர்ந்து உணவு உற்பத்தி செய்யத் தொடங்கினான்.

மனைவியிடம் வாழ நேர்ந்ததால் குழந்தைகள் பெருகிக் குடும்பம் வளரச் சமுதாயம் வளர்ந்தது. உழவுடன் வேறு தொழிலையும் கண்டான். பண்டமாற்று முறையில் தனக்குத் தேவையான பிறபொருளையும் பெற்றான். பண்டமாற்று முறை நன்றாகப் பயன்படாத நிலையில் பணம் எனும் ஒரு கருவியையும் உருவாக்கினான். பணத்தின் நிலையில்லாத இயல்பினையும் உணர்ந்தான்.

இங்ஙனம் மனிதன் இயற்கை தந்த நிலம் நீர் வளத்துடன் தானும் முயன்று உழைத்து உழைப்பின் பயனைத் தான் நுகர்ந்து பலருக்கும் பகிர்ந்தளிக்கும் ஆராய்ச்சியே பொருளியல் எனப்படும்.

நிலம் ஒரு பொருளியல் காரணி

தற்காலப் பொருளியலார் நிலத்தை பொருளுள் உண்டாக்குதற்குரிய காரணியாகக் கருதுவர் மேனாட்டில் தோன்றிய வணிக வாதத்தினரும் இயற்கை வாதத்தினரும் நிலத்தைப் பொன்போல் போற்ற வேண்டும் என்றனர்.

தொன்மைப் பொருளியலின் தந்தை எனப் பாராட்டப்படும் ஆடம்ஸ்மித் உள்ளிட்ட அனைவருமே உற்பத்திப் பெருக்கத்திலும் மூலதனம் உருவாக்கத்திலும் நிலம் முக்கிய இடத்தை வகிக்கின்றது என எடுத்துரைத்தனர்.

நமது நாட்டிலும் பண்டைய நாளிலிருந்தே செல்வத்தை திருமகள் எனவும் கல்வியைக் கலைமகள் எனவும் வழிப்பட்டதைப் போலவே நிலத்தையும் நிலமகள் என்று போற்றி வழிப்பட்டனர்.

"பூமி திருத்தி உண்" "பொன்னை விற்று வாழ்" "நிலத்தை வைத்து வாழ்" "மண்ணுக்கு இருப்பது மகிமை" அதை எண்ணிப் பார்ப்பது அருமை மண்ணை நம்பினவரும் மன்னனை நம்பினவரும் வீண் போகமாட்டார்கள் என வழங்கும் பல முதுமொழிகள் பண்டு தொட்டு மக்கள் வாழ்க்கையில் நிலம் பெற்றிருந்த முக்கிய இடத்தைக் காட்டும்.

தொல்காப்பியத்தில் நிலம்

தொல்காப்பியர் நிலத்தை நான்காகப் பிரித்து ஒவ்வொரு நிலத்தையும் அந்நிலத்திற்குரிய தெய்வத்தோடு தொடர்புபடுத்தி,

"மாயோன் மேய காடுறை உலகம்
சேயோன் மேய மைவரை உலகம்
வேந்தன் மேய தீம்புனல் பெருமணல் உலகம்
வருணன் மேய நெய்தல் என்று
சொல்லிய முறையில் சொல்லவும் படுமே"

என்ற நூற்பாவில் கூறியுள்ளார்.

நிலத்தின் அடிப்படையிலேயே முதல் கரு உரி என்ற மூன்றையும் எடுத்துக் கூறுகின்றார். கருப்பொருள் குறித்து

"தெய்வம் உணர்வே மா, மரம், புள், பறை,
செய்தி யாழின் பகுதியொரு தொகஇ
அவ்வகை பிறவும் கருவன மொழிப"

என்கிறார்.

முல்லை நில மக்களின் தொழில் ஆநிரை மேய்த்தல், வரகுகளை கட்டல், கடாவிடுதல் எனவும் குறிஞ்சி நிலமக்களின் தொழில் தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல் எனவும் மருதநில மக்களின் தொழில் களைகட்டல், தொழில் மீன் பிடித்தல், உப்பு விளித்தல் எனவும் குறிப்பிடுகிறார். கடாவிடுதல் எனவும் நெய்தல் நில மக்களின் தொழில் மீன்பிடித்தல் உப்பு விளைத்தல் எனவும் குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு நிலப்பகுதியிலும் வாழும் மக்கள் அவ்வப்பகுதியில் கிடைக்கும் மூலப்பொருள்கள் அடிப்படையிலேயே தத்தம் தொழில்களை மேற்கொண்டுள்ளமையை நோக்கும்போது நிலச்சூழல் அடிப்படையிலும் உழைப்பின் அடிப்படையிலும் பொருளீட்டும் முறை அமைதல் வேண்டும் என்ற தொல்காப்பியர் விரும்பியது புலப்படுகிறது.

இயற்கைக் காரணங்களினால் நானிலங்களும் தம் நிலையில் மாற்றமடைந்து பாலையாய் ஆனபோது அங்கு வாழும் மக்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர். பொருளீட்டும் பொருட்டு யாவரும் எங்கும் தம் குடும்பத்தை விட்டுப்பிரிந்து செல்லலாம் இன்ன இடத்திற்கு இன்னார் தாம் செல்ல வேண்டும் என்ற வரையறையோ கட்டுப்பாடோ கிடையாது என்பதை

"மேவிய சிறப்பின் ஏனோர் படிமை
முல்லை முதலாச் சொல்லிய முறையில்
பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே"

என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

பொருளீட்டுவதற்காகவோ (அ) வேறு காரணங்களுக்காகவோ பழந்தமிழ் மக்கள் கடல் கடந்தும் சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் போது மகளிரைத் தம்முடன் அழைத்துச் செல்வதில்லை என்பதை,

முந்நீர் வழக்கம் மகடூவோடில்லை என்ற நூற்பாவால் தெளிவாக்குகின்றார். மிகப்பழங்காலத்தில் ஆண்கள் மட்டுமே பொருளீட்டுவதற்கான பெருமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை இதன்மூலம் வெளிப்படுகின்றது.

முடிவுரை

மேனாட்டுப் பொருளியல் நூல்கள் பல பொருள் உற்பத்தி (அ) மூலதனம் உருவாவதற்குக் காரணமாக நிலம் அமைவதாகக் குறிப்பிடுகின்றன. இறைவன் தந்த கொடை நிலம் என்பது உண்மைதான் பிறவெல்லாம் தோன்றி மறையலாம் அளவில் பெருகலாம் சுருங்கலாம் இதுமட்டும் தன்பரப்பில் அளவில் என்றுமே ஒரே அளவில் இருந்து கொண்டிருக்கும் எனவே நிலத்தின் அடிப்படையில் பொருளீட்டி வாழ்வதே சிறப்புடையதாக அமையும். இதனால்தான் நிலத்தை நான்காகப் பாகுபடுத்தினாரோ தொல்காப்பியர் என்று எண்ணத் தோன்றுகிறது.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link