ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியரின் களவியல் பண்பாடு

முன்னுரை

மனித இனம் நாடோடியாய் வாழ்ந்த காலத்திலேயே மண்ணுக்கு இலக்கணம் கண்டு நானிலத்தை ஆண்டதமிழன். இந்நாளில் நாகரிகத்தால் ஈர்க்கப்பட்டு எங்கே தடுமாறிக் கொண்டிருக்கிறான். உலகமே வியக்கும் நம் பண்பாடு இலக்கியங்களில் மட்டுமே காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ்ப் பண்பாடு பற்றிய பெருமையினைப் பிறர்க்குரைக்கும் ஓர் அரிய பெட்டகமே தொல்காப்பியம் என்பதையும் அந்நூல் காட்டும் களவியல் பண்பாட்டையும் இக்கட்டுரையின் நோக்கம்.

களவும் பண்பாடும்

பண்பாடு - Culture என்றால் பக்குவப்பட்ட தன்மை என்பர். பெரும்பாலும் சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உள்ளப்பாங்கினைப் பண்பாடு என்பர். இஃது என்றும் மாறாத்தன்மையது.

களவு - என்பதற்குக் களைதல் என்று பொருள் கொள்ளலாம். "மாசினைக் களைதற்பொருட்டு மேற்கொள்ளும் ஒழுக்கம்" என்று பேராசிரியர் சி. இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சி எனும் நூலில் கூறியுள்ளார்.

தொல்காப்பியர் கூறும் களவியல் பண்பாடு

தொல்காப்பியம் - களவியலில் 51 நூற்பாக்களை வகுத்து அவற்றுள் இயற்கைப்புணர்ச்சி இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம் பாங்கியற்கூட்டம், எனும் நால்வகைப் பிரிவுகளால் தொல்காப்பியர் மக்களுக்குரிய பண்பாடுகள் பற்றிக் கூறுகின்றது.

மணம் என்பது நறுநாற்றத்தைக் குறிக்கும்,

இல்லறமே மக்கள் வாழ்வின் புகழ் எனும் மணம் பரப்பும் வாழ்வு. இத்திருமணம், காதல் துணையாக நிகழ்ந்ததே அன்றி சாதி, குலம், பொருள், செல்வாக்கு, பதவி துணையாக நிகழ்ந்திலது.

திருமணத்திற்குரிய பருவம் எய்திய ஆணும், பெண்ணும் தாமே எதிர்பட்டுக் காதலித்து மணந்து கொண்டனர். இவ்வாறு எதிர்பட்டுக் காதலிப்பது அவரவர் விதியின் வழியே நிகழும் என்று தொல்காப்பியர்,

"ஒன்றே வேறே என்றிருபால் வயின்
ஒன்றி யுயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினும் கடிவரை யின்றே" (களவியல் - 2)

எனும் நூற்பாவில் புலப்படுத்தியுள்ளார். இல்வாழ்க்கையே பண்பும் பயனுமாகக் களவியலுள் காணப்படுவதாகக் காட்டியுள்ளார்.

இயற்கைப் புணர்ச்சியுள் பண்பாடு

உள்ளக்கலப்பு கண்ணில் வெளிப்பட்டது எனில், அக்கலப்புக்குக் காரணம் தான் என்ன? ஆண், பெண் என்ற இருபாலரும் ஒருவரையொருவர் பார்த்த அளவில் காதல் கொள்வதில்லை. பின்னர் எப்படி எனில், நல்ஊழின் ஏவலால் காதற்காட்சி நிகழும் என்பார். தொல்காப்பியர் இதனை விளக்கும் வண்ணமாகப் களவியல் நூற்பா பலதாணையின் என்னும் களவியல் நூற்பா 2 -ல் கூறியுள்ளமையால் அறியலாம்.

தலைவன், தலைவி இருவரது பார்வை ஒத்த ஒரே மனம் பார்வையாக அமையும்.

"நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்" (களவியல் - 5)

வாயால் சொல்லுதல் காதலுக்குப் பொருந்தாதது, நம் பண்பாடுமன்று. ஆகையால் வாயின் செயலைக் கண்களே செய்தலால் நாட்டம் இரண்டும் உரையாகும் என்று தொல்காப்பியர் நம் பண்பாட்டினைச் சிறப்பாகப் புலப்படுத்துகிறார்.

இதனையே வள்ளுவர்,

"கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில" (குறள் - 1100)

என்பார்.

இடந்தலைப்பாட்டுள் பண்பாடு

தலைவன் - தலைவி என்ற இருவர் தற்செயலாக ஓர் இடத்தில் ஒருநாள் சந்தித்து உள்ளம் புணர்ந்த நிலையில் வேட்கை பெருகி, முதல் நாள் கண்டவிடத்தே மீண்டும் காண்பதே இடந்தலைப்பாடு.

தலைவன் பகற்பொழுதில் ஊர் எல்லையில் தலைவியைச் சந்தித்து மகிழ்தல் பகற்கூட்டமாகும். இரவுநேரத்தில் மனைக்கு அண்மையில் சந்தித்து மகிழ்தல் இரவுக்கூட்டமாகும்.

"குறி எனப்படுவது இரவினும் பகலினும்
அறியக் கிளந்த ஆற்றது என்ப (களவியல் - 40)

என்று பகற்குறி இரவுக்குறிகளுக்குரிய இடங்களைத் தொல்காப்பியர் (களவியல் - 41, 42) குறிப்பிடுகிறார்.

காதல்வலியே வழியாகக்கொண்டு தலைவன்வரினும் தோழிக்கு அது நல்வரவாகாது. இங்குவருக என்று இடம்மாற்றிக் குறித்திடுவாள். இந்நிலை நம்பார்வைக்குத் தலைவனை அலையவைத்து, அலைக்கழிப்பு செய்வதுபோல் தோன்றும். ஆனால் நாள் நீடிக்காமல் தலைவன், தலைவியை மணக்க வேண்டும் என்பதற்கே பொறுப்புடன் தலைவிமேல் பற்றுடையவளாய் தோழி உரைப்பாள்.

இக்காதல் உணர்வு உயர்ந்ததேயன்றி, தாழ்ந்ததாகாது இவ்விடந்தலைப்பாட்டால் இளைய நெஞ்சங்கள் வேகம் தணிகின்றன, அமைதியடைகின்றன; நம்பிக்கை கொள்கின்றன. என்று காதலர்களின் மனதைப் பண்படுத்துவதற்காகத் தொல்காப்பியர் அமைத்துள்ளார்.

பாங்கற் கூட்டம் கூறும் பண்பாடு

இடந்தலைப்பாட்டின் பின்னர் பாங்கனாகிய நண்பன் தலைவனைக் காண்கிறான். தலைவனின் முகச்சோர்வினைக் கண்டு சோர்விற்கான காரணமறிகிறான். தலைவியைக்கான்பாங்கன் மூலம் நிகழும் கூட்டங்கள் பன்னிரெண்டன்கிறார் ஆசிரியர். இவ்வாறு நிகழும் கூட்டமே பாங்கற்கூட்டம் எனப்படும்.

"பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப" (களவியல் - 13)

தலைவன் தலைவிபால் கொள்ளும் காதலுக்குப் பாங்கன் துணைநிற்பது மட்டுமல்லாமல் காமம் தகுதியில்லாரிடத்துச் செல்வதாலின் அது மேற்கொள்ளத்தக்கதன்று என்றும் இடித்துரைக்கும் இடமே தொல்காப்பியர் நம் பண்பாட்டை எடுத்துரைக்கும் இடமாகக் காணப்படுகிறது.

பாங்கியர் கூட்டம் கூறும் பண்பாடு

தலைவிக்கும், தோழிக்கும் உள்ள நெருக்கத்தை உணர்ந்த தலைவன் களவுத் தொடர்பைத் தோழியிடம் சென்று வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ, நயமாக களவுகளைப் புலப்படுத்துவான். அதுவே பண்பாடுமாகும்.

குறையுற்ற தலைவனின் தோற்றத்திலோ, பண்பிலோ ஈடுபட்ட தோழி அவன் குறையை முடித்துவைக்க எண்ணும் தலைவியை எப்படி அணுகுவது என்பது தான் சிக்கல் களவுச்செய்தி தோழிக்குத் தெரியுமென்று அறிந்தால்கூட அவள் நாணம் பொறாள்.

எனவே மெய்யான நிகழ்ச்சியைச் சொல்லியோ பொய்யான நிகழ்ச்சியைக் கற்பித்தோ இருபொருள்படும்படித் தொடர் அமைத்து எவ்வகையானும் தலைவியின் நாணம் ஊறுபடாத வகையில் அவள் கூறுவாள் என்ற பண்பாடு தோன்ற தொல்காப்பியர்

மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் (களவியல்-24)
.............. முடிப்பு இல்லை.

முடிவுரை

தொல்காப்பியர் கூறும் களவியல் பண்பாடானது காமமும் காதலும் குறித்து ஒருசேர நினைத்தல் தகும். மக்கட்கு இவ்விருவகை உணர்வும் இளமையில் முகிழ்ப்பனவே. காமம் என்பது அழியும் உடம்பைப் பற்ற நிகழும் அவா ஆகும். காதல் என்பது அழியாத உயிருணர்வைப் பற்றி நிகழும் அன்பு ஆகும். வாழ்க்கையிற் சிலநாள் கழித்த பின் காமம் தொலைவுறும் காதல் இறுதிவரை நிலையுறும் என்னும் இனிய கருத்துக்களை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது எனலாம்.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link