ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியம் - பொருளியல் அறத்தொடுநிலை

முன்னுரை

மக்களுக்கு உறுதிதரும் பொருள்கள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு இந்நான்கிலும் சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து வீடு ஆதலின் நூல்களால் நுவலப்படுவது ஏனை மூன்றுமே தன் துன்பத்தை உணர்ந்து வருந்துவதும் எல்லா உயிர்க்கும் பொதுவான இயல்பு ஆனால் மக்கள் வாழ்க்கையின் தனிச்சிறப்பு அதில் பகுத்தறிவு விளக்கம் அமைந்திருப்பதும் இன்பத்தை அவாவி நிற்றலுமேயாகும். எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் (பொருளியல்) ஆதலின் தொல்காப்பியர் அறம் பொருள் இன்பம் என்ற முறைவைப்பினை மேற்கொள்ளாது இன்பம் பொருள் அறம் என்ற முறைவைப்பினை மேற்கொள்வராயினார் அதன்படி காமபுணர்ச்சி பற்றி இயம்பவந்த ஆசிரியர்

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங்காலை
மறையோர் தேயத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (களவியல்1)

எனக் கூறுவாராயினார் ஐந்திணையிடத்து நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயுங்கால் மறையோரிடத்து ஒதப்பட்ட மணம் எட்டனுள்ளும் துறையமை நல்யாழ்த்துணைமையோர் எனப்படும் கந்திருவம் நெறியாகும் என்று உரையாசிரியர் உரைப்பர் காந்திருவம் மணம் (ஒத்த தலைவனும் தலைவியும் தாமே கூடும் கூட்டம்) மேற்கொண்ட இருவருக்கும் உள்ளப்புணர்ச்சியோ மெய்யுறு புணர்ச்சியோ நிகழ்ந்தபிறகு ஒருவரையொருவர் மணந்து வாழும் கற்பென்னும் திண்மையே களவொழுக்கத்தின் முடிந்த பயனாகும் இக்களவொழுக்கம் இரண்டு திங்கள் கால எல்லைக்கு மீறலாகாது என்பது இலக்கணவிதி என்பதை

களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
திங்கள் இரண்டின் அகமென மொழிப (இறையனார் களவியல் நூற்பா32)

இந்நூல்பா உணர்த்தும் சமுதாயக்கட்டுப்பாடு நிறைந்த களவொழுக்கம் கற்பொழுக்கமாக மாறுவதற்குத் துணை நிற்பது அறத்தொடு நிலை என்ற துறையாகும். இதுகுறித்துப் பொருளியல் கூறும் கருத்துக்களைக் காண்போம்.

அறத்தொடுநிலை - விளக்கம்

தலைமகள் தலைவியிடத்துப் பகற்குறி இரவுக்குறி ஆகிய இருவகை குறியானும் மேற்கொள்ளும் களவு வெளிப்பட்டால் சுற்றாத்தார் தலைவியை இற்செரிப்பர். தலைமகன் வரும் வழியாலும் பொழுதாலும் அவனுக்கு ஏதம் வரும் என்று தோழி அச்சமுற்று இவ்வொழுக்கம் நும்குடிப்பிறப்புக்கும் சிறப்புக்கும் பொருந்தாமையின் இனி நீவிர் இவனை மணந்து கொள்வதே தகுதி என்று தலைவனை வரைவு கடாவத் தொடங்குவாள். ஆனால் தலைவனோ களவு ஒழுக்கத்திலேயே நோக்கமுடையவனாய் ஒழுகுதலின் இக்களவுக்கூட்டம் சிறிதுசிறிதாகச் சிலர் பலர்க்கு வெளியாகிப் புறம்பழித்தல் நிகழும் அதனால் தலைவியின் அன்னை முதலியோர் தலைவியை இற்செறித்துக் காவலில்வைப்பர். தாயார் முதலியோர் வேலனைக் கொண்டு வெறியாட்டயர்வித்துக் குறிகேட்கத் தொடங்கவும் அக் குறியால் நன்களவொழுக்கம் ஒருகால் வெளியாங்கொல் என்று தலைவி அஞ்சிக் கலங்குவாள் ஏதிலார் மணம் பேச வருதலும் கூடுமன்றோ தலைவன் இரவுக்குறியின் பொருட்டு அவன்வரும் வழியில் எண்கும் வெண்கோட்டு யானையும் அரவும் புலியும் வரையரமகளிரு முடையதாகலின் இத்தகைய அவற்றால் தலைவனுக்கு ஏதம் வரும் என்று ஆற்றாளாம் தலைவியின் இத்தகைய துன்ப நிலையையெல்லாம் தோழி உணர்ந்து இனி அக்களவினைத் தமர்க்கு செய்துக்கொடுக்கச் செய்தல் தக்கது என்று நினைத்து அவர்க்குச் களவொழுக்கத்தை மெல்ல வெளிப்படச்செய்து தலைவிக்குறித்தத் தொடங்குவாள் இங்ஙனம் வெளிப்படுத்தலையே அறத்தொடு நிற்றல் என்று ஆன்றோர் வழங்குவார் இதற்கு அறனழியாமை நிற்றல் என்பதும் கற்பின் தலைநிற்றல் என்பதும் பொருளாகும்.

அறத்தொடு நிற்றற்குரியோரும் அறத்தொடு நிற்கும் முறையும்

அறத்தொடு நிற்கும் முறையாவது தலைமகளது வேறுபாடு கண்டு வருந்திய செவிலி இது எதனால் ஆயிற்று என தோழியை வினவ அவள் நாங்கள் இம்மலைப் பொழிவிடத்தே ஒருகால் விளையாட நின்றேமாக அப்பொழுது ஒருதோன்றல் அனைக்குவளைப் பூக்கொண்டு அவ்வழியே செல்ல நின்மகன் இப்பூவை எம்பாவைக்கு அணியத்தரவேண்டும் என்றாள் அவனும் கொடுத்து நீங்கினான் மற்றொருமுறை சினஞ்சேர் களிறு கடிந்திடர் தீர்த்தனன் மற்றொருநாள் புனல் எம்மைக்கொண்டு சென்ற போது காத்து அருளினான் இவ்வாறு பேருதவி செய்த பெருந்தகையான் ஒருவனால் பூத்தருபுணர்ச்சியும் களிறுதரு புணர்ச்சியும், புனல் தருபுணர்ச்சியும் முன்னரே பெற்ற என் தலைவி நீவிர் வேறுபாடு உணர்ந்தற்கு வெறியாட்டயர்ந்தும் சிலர்க்கு மணம் பேசியும் போந்த செய்தி கேட்டுக் கவலையுற்றதனால் அவளுக்கு நோய் உண்டாயது போலும் என்று கூறினாள் அச்செய்தியையுணர்ந்த செவிலி அவ்வுண்மையை போலும் என்று கூறினாள் நிறப்ப நற்றாய் அதனைத் தலைவியின் தந்தை தனயர்க்குக் கூறி முறையே அறத்தோடு நிற்பாரையும் விரிவாக விளக்குகிறார் பேராசிரியர் மு.இராகவையங்கார் தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி பக்கம் 72-75)

தலைவி அறத்தொடுநிற்றல்

அறத்தொடு நிற்குங் காலத் தன்றி
அறத்தியல் மரபிலள் தோழிஎன்ப. (பொருளியல் - 11)

என்னும் நூற்பா முதலில் தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பாள் அங்ஙனம் அவள் நின்றபின்பே தோழி அறத்தொடு நிற்பாள் என்ற வாழ்வியல் மரபினைச் சுட்டுகின்றது தலைவி அறத்தொடு நிற்கும் இம்மரபு அவளுடைய காதலின் உறுதியையும் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் அறிவுத்திறனையும் உணர்ந்தக் கூடியதாகும்

துர்மருங் கறியா அன்னைக்கு இந்நோய்
தணியுதமா நிதுவென உரைத்தல் ஒன்றோ
செய்யா யாதலிற் கொடியைத் தோழி
மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த
செயலை அந்தளிர் அன்னஎன்
மதனின் மாமெயப் பசலையுங் கண்டே (நற்-224)

இப்பாடலில் கண் தலைவி அறத்தொடு நிற்றமையை அறியலாம்.

தோழி அறத்தொடு நிலை

தோழி செவிலிக்க அறத்தொடு நிற்கும் நிலை ஏழு வகைப்படும் அவையாவன எளித்தல், ஏத்தல், வேட்கை, உரைத்தல், கூறுதல், உசாவுதல், ஏதீடு, தலைப்பாடு உண்மை செப்புங்கிளவி

எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல்
சுறுதல் உசாதல் ஏதீடு தலைப்பாடு
உண்மை செப்புங் கிளவியோடு தொகையை
ஏழு வகைய என்மனார் புலவர் (நூற்பா-12)

எளித்தல்

தலைவன் நம்மாட்டு மிக எளியன் என்று கூறிதோழி அறத்தொடு நிற்பள்

அன்னை அறியினும் அதிக அலர்வாய்...
மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக்
கல்லென் சிறுநெடித் தங்கின்மற் றெவனோ
எனமொழித் தனனே ஒருவன் அவற்கண்டு....... (அகம்-110)

ஏத்தல்

தலைவன் மிக உயர்ந்ததான் என் உயர்த்திக் கூறி அறத்தொடு நிற்பாள்

ஊசி போகிய சூழ்செய் மாலையன்....
வரிபுனை வில்லன்..... (அகம் - 48)

என்று தவைனின் வீரத்தைப் போற்றிப் பேசுதலை இப்பாடலில் காணலாம்.

அன்னாய் வாழி வேன் டன்னை என்தோழி... நாடன்
மலர்ந்த மார்பிற் பாயல்
தவநனி வெய்ய நோகோ யானே (ஐங் 215)

கூறுதல் தோழி செவிலித்தாயிடம் நம் தலைவியை இத் தலைவனுக்கே கொடுக்க வேண்டும் என்று உறுதியுடன் கூறி அறத்தொடநிற்பாள்.

செவிலி நற்றாய் அறத்தொடுநிற்றல் மரபு

காமம் மிக்க வழியல்லது சொல் நிகழ்ச்சி இன்மையின் தலைமகள் தான் கருதிய பொருள்மேல் உண்டாகும் வேட்கையைத் தலைமகள் தன்னாலே அறிவர் என்பர் ஆசிரியர்

உற்றுழியல்லது சொல்ல லின்மையின்
அப்பொருள் வேட்கைக் கிளவியி னுணர்ப (13)

என்பது நூற்பா இதில் உணர்ப எனப் பன்மையாற் கூறினமையான்

அவ்வுணர்ச்சி செவிலிக்கும் நற்றாய்க்கும் ஒக்கும் இதனால் சொல்லியது அறத்தொடு நிற்பதன் முன்னமே செவிலி குறிப்பினால் உணரும் எனக் கொள்க என்பர் உரையாசிரியர்

அன்னாய் வாழிவேன் டன்னை நின்மகள்
பாலும் உண்ணாள் பழங்கள் கொண்டு
நனிபசந் தனளென வினவுதி (அகம் 48)

இதன்கண் செவிலி குறிப்பினால் தலைவியின் களவு ஒழுக்கத்தை அறிந்தமை உணர்த்தப்பட்டது.

முடிவுரை

அறத்தொடு நிலை என்பதில் வரும் அறம் என்பதற்குக் களவு என்றும் கற்பு என்றும் தக்கது என்றும் இங்ஙனம் பலவாறாகப் பொருள் கொள்ளலாம் சொல்லி தலைவி நின்ற ஒழுக்கத்தைக் கூறுதல் கற்பில் தலைநிற்றல் தக்கதனைச் சொல்லி நிற்றல் என்றெல்லாம் விளக்கிக் கூறலாம் தலைவி தோழிக்கு அறத்தோடு நிற்பாள், தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்பாள், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்பாள், நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்பாள், பண்டைத் தமிழகத்தே ஒத்த தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் கண்டு களவினாற் கூடுவர் என்றும் அவ்வொழுக்கம் பிழைபடாமல் நெறிப்பட நிற்றல் வேண்டிக் கற்பொழுக்கம் பூண்டு இல்லறநெறி நிற்பர் என்றும் அந்நன்னெறிக்கு உறுதுணையாய் அமைவது அறத்தொடு நிலை என்றும் அறிந்து அக்கால வாழ்வியல் துறைக்கு இலக்கணம் அரணாக நிற்பதை உணர்ந்து பெருமிதம் அடைய முடிகின்றது.

செறிவும் நிறையும் செம்மையுஞ் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பா லான (14)

செறிவு என்பது அடக்கம் நிறைவு என்பது அமைதி செம்மை என்பது மனம் கோடாமை செப்பு என்பது சொல்லுதல் அறிவு என்பது நன்மை பயப்பனவும் தீமை பயப்பனவும் அறிதல் அருமை என்பது உள்ளக் கருத்தறிதல் இவை எல்லாம் பெண்பாலர்க்குரியவை. இத்தகைய செறிவான ஆளுமைப் பண்புகளைத் தங்களிடம் கொண்ட தலைவி தோழி செவிலி நற்றாய் - ஆகிய அனைவரும் முறையாக அறத்தொடு நிற்றல் சமுதாயத்தில் பெண்களின் ஒழுக்க நெறிக்கு (கற்புநெறிக்கு ஆண்களால் பாதிப்பு ஏற்பட்டுவிடா வண்ணம் பெண்கள் மிகவும் எச்சரிக்கை எடுத்துக்கொள்ளும் விழிப்புணர்வு செயல்பாடு (Awareness) எனலாம். ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வில் முறையை இலக்கண அமைப்பில் கூறிய பெருமை தொல்காப்பியருக்கும் அந்நூலைப் பெற்ற தமிழுக்கே சேரும்.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link