ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியம் காட்டும் உரிமையும் உரிமை மறுப்பும்

தமிழின் உயிர்நூல் என்றும், சட்ட நூல் என்றும் அழைக்கப் பெறுவதர்குரிய பெருமைக்குரிய தொல்காப்பியம். அக்கால மக்களின் வாழ்வியல் முறைகளையும், சமூக நிலைகளையும் அகம், புகம் எனப்பிரித்துத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் தொல்காப்பியர். இன்று உலகின் மனித சமுதாயம் பாதுகாப்பு வளையமாகிய மனித உரிமைக் கருத்துக்களை உரத்தக் குரலில் முழங்கி வருகின்றது. இந்த உரிமை மாண்புகள் தொல்காப்பியத்திலும் விரவிக் காணக்கிடக்கின்றன என்பது வியப்பனதாகும். உரிமைகளை வெளிப்படுத்தும் தொல்காப்பியத்தில், உரிமை மறுப்பிற்கான மூல ஆதாரங்களும் காணக்கிடப்பது அக்கால சமூகச் சூழ்லை வெளிச்சமிடுவதாக உள்ளன. தொல்காப்பியத்தில் சிதறிக்கிடக்கும் இந்த உரிமை மற்றும் உரிமை மறுப்பு குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியம் - உரிமை

தொல்காப்பியம் அகத்திணை, புறத்திணை, களவி, கற்பு, மரபியல் போன்றவற்றில் மனித உரிமைக் கூறுகள் சிறக்கக் காணக்கிடக்கின்றன.

உரிமை கேட்கும் உரிமை

சமூகத்தலைவனாகக் கருதப்பட்ட ஆண், தன் வினைகளுக்காகப் போராடும் உரிமையும், இல்லறத்தை அமைத்துக்கொள்ளும் உரிமையும் பெற்றுத் திகழ்ந்தான் என தொல்காப்பியம் சுட்டுகின்றது.

மெய்தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல்......
மடல்மா கூறும் இடனுமா ருண்டே

(தொல்.பொருள்.இளம்.99)

என தலைவனுக்கான உரிமைகளைக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.

பெண்ணுரிமை

பெண் விடுதலையென்பது மதம், சாதி, குடும்பக் கூட்டமைப்புகளை விசாரிப்புக்கு உட்படுத்துவதிலும் பெண் பற்றிய புதிய கருத்தாக்கங்களை வளர்த்தெடுப்பதன் மூலமே சாத்தியம் என்பர் சிவகாமி. இப்பெண்ணுரிமை கருத்துக்களை தொல்காப்பியத்தில் காண முடிகின்றது.

மறுக்கும் உரிமை

பெண்ணுரிமைச் சிந்தனையின் அடித்தளம் தொல்காப்பியர் காலச் சமூகத்திலேயே காணக்கிடப்பது தமிழர்க்குப் பெருமையானதாகும்.

சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின்
அல்ல கூற்றுமொழி அவள்வயி னான

(தொல்.பொருள்.இளம்.108)

வழிபாடு மறுத்தல் மறுத்தெதிர் கோடல்
(தொல்.பொருள்.இளம்.109)

என்ற தொல்காப்பிய வரிகள் பெண் தன் கருத்தை வெளிப்படுத்தி, தவறான கருத்தை மறுக்கும் உரிமையைப் பெற்றிருந்தாள் என்பதனையும், மறுக்கும் உரிமையை அக்காலத் தமிழ்ச் சமுதாயம் வழங்கியிருந்தது என்பதனையும் அறிய முடிகிறது.

முடிவெடுக்கும் உரிமை

அக ஒழுக்கத்தில் தனது முடிவினைத் தெளிவாகக் கூறும் உரிமை பெண்ணிற்கு இருந்திருக்கிறது. தனது சந்திக்கும் இடத்தைத் தானே முடிவு செய்யும் உரிமையினைப் பெண் பெற்றிருந்தாள் என்பதனை,

களஞ்சுட்டு கிளவி கிழவிய தாகும்
(தொல்.பொருள்.இளம்.118)

என தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

இல்லற உரிமை

குடும்பம், சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரிமையுடையது என்ற மனித உரிமைக் கோட்பாட்டின் கருத்துக்களைத் தொல்காப்பியத்தில் சிறக்கக் காணமுடிகிறது.

அறத்தோடு நிற்கை
(தொல்.பொருள்.இளம்.203)

கொண்டுசிதலைக் கழிதலும்
(தொல்.பொருள்.இளம்.17)

போக்குடன் அறிந்தத் தோழி
(தொல்.பொருள்.இளம்.113)

என்ற தொல்காப்பியர் கருத்துக்களிலிருந்து இல்லற வாழ்க்கையைத் தொடர்புடைய தலைவன், தலைவியர் அமைத்துக் கொள்ளலாம் என்பதையும், அதற்காக உடன்போக்கு நிகழ்த்தும் உரிமையும் வழங்கப்பட்டிருந்தது என்பதையும் அறிய முடிகிறது.

உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில்
(தொல்.பொருள்.இளம்.145)

தனக்கு உரிமை வழங்கிய தலைவனின் பெருமையில் மாறுபடாத அன்பினிடத்து தலைவி கூற்று நிகழ்த்துவாள் என்ற தொல்காப்பியர் கருத்து மனித உரிமையின் அடிநாதத்தை உணர்த்துகின்றது. மேலும்,

"மொழி எதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே"
(தொல்.பொருள்.இளம்.180)

தலைவனின் மொழிக்கு எதிராகக் கருத்து கூறுவதற்கு பாங்கற்கு உரிமையுண்டு எனக் குறிப்பிட்டு, அக்கால உறவுநிலையையும், மனித உரிமையின் மாண்புற்ற செயல்களையும் வெளிப்படுத்துகின்றார்.

ஆண் - பெண் சமத்துவம்

சுதந்திரமான சமத்துவத்தில் ஆணும் பெண்ணும் இணைந்த அடிப்படை நிறுவனமான குடும்பத்திலிருந்து அமைதி தவழ்ந்தோடச் செய்ய வேண்டும் என்ற மனித உரிமைக் கோட்பாட்டிற்கேற்பத் தொல்காப்பியர் ஆண், பெண் சமத்துவ உரிமைகளை விளக்கியுள்ளார்.

பிறப்பே குடிமை ஆண்மை.........
(தொல்.பொருள்.இளம்.269)

என வாழ்வியல் பண்புகளில் ஆணும் பெண்ணும் சமம் என்பதை தெளிவுப்படுத்துகின்றார்.

உரிமை மறுப்பு

உரிமைகளைக் கூறியத் தொல்காப்பியர் உரிமை மறுப்பாகிய அக்காலச் சூழலையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

பெண்ணடிமைத்தனம்

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினுஞ்
செயிதீர்க் காட்சிக் கற்பு சிறந்தன்று

(தொல்.பொருள்.இளம்.111)

முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை
(தொல்.பொருள்.இளம்.37)

எத்திணை மருங்கினும், மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான

(தொல்.பொருள்.இளம்.38)

என பெண்ணுரிமை மறுக்கப்பட்டிருந்த அக்காலச் சூழலினைச் சுட்டுவதுடன் கற்பு என்ற காரணம் காட்டி உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன என்பதனையும் உணர்த்துகின்றார்.

சாதி ஏற்றத்தாழ்வு

அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்று நான்கு வகைச் சாதிகளைச் சுட்டி அவர்களின் இருப்பிடங்களையும் குறிப்பிட்டு, உரிமையற்ற நான்காம் வருணத்தார் வேளாளர் என்றும் குறிப்பிடுகின்றார்.

அறுவகைப் பட்ட பார்ப்பனர்ப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்

(தொல்.பொருள்.இளம்.74)

என வேளாளருக்குரிய உழவு, உழவாழிந்த தொழில், விருந்தோம்பல், பகடு, புறந்தருதல், வழிபாடு, வேதம் ஒழிந்த கல்வி போன்றவற்றைக் குறிப்பிடுகின்றார்.

அடிமைத்தனம்

அடிமைத் தொழில் புரிந்தோர் வாழ்ந்ததையும், அவர்களுக்கு அன்பின் ஐந்திணை உரியதாகாது எனவும் குறிப்பிடுகின்றார்.

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இலபுறத்து என்மனார் புலவர்

(தொல்.பொருள்.இளம்.74)

என்பது நூற்பா.

உரிமைப் பறிப்பு

உயர்ந்தோர் எனக் கருதப்பட்ட அரசர், அந்தணர், ஆகியோருக்கே ஓதல் பிரிவும், தூதுப்பிரிவும், உடையது என்றும், மற்ற இருவராகிய தாழ்ந்தோராகக் கருதப்பட்ட வணிகர், வேளாளர் ஆகியோருக்கு இவ்வுரிமை இல்லை என்பதனையும்,

ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன
(தொல்.பொருள்.இளம்.74)

எனக் குறிப்பிடுகின்றார். வேளாளருக்கு உழுதுண்பது மட்டுமே தொழிலாகும். பிறத்தொழில் செய்ய உரியவராகார் எனவும் குறிப்பிடுகின்றார்.

வேளாண் மாந்தர்க்கு உழுதுணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி

(தொல்.பொருள்.இளம்.625)

என்பதுடன்,

அன்னராயினும் இழிந்தோர்க் கில்லை
(தொல்.பொருள்.இளம்.629)

என மன்னர் போன்ற செல்வந்தராகிய இழிகுலத்தார் நாடு ஆண்டாலும் இழிந்தோராகவே கருதப்படுவர் எனவும் கூறுகின்றார்.

நிறைவுரை

தொல்காப்பியத்துள் இக்காலத்தில் பரவலாக பேசப்படும் மனித உரிமைக் கூறுகள் விரவி நிற்றல் நோக்குதற்குரியது. அக்கால தமிழர் வாழ்வியலில் காணப்பட்ட உரிமைகளையும், உரிமை மறுப்புக்களையும் நடுநிலையோடு வெளிப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர். இந்த உரிமைகள் மேலும் வளர்ந்தன என்பதும், மறுக்கப்பட்ட உரிமைகள் இன்று படிப்படியாக பெறப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே. இன்று நாம் ஆராயும் இந்த உரிமைச் சிந்தனைகளை நடுநிலைமையோடும், சமூக நோக்கோடும், உரிமைக் கோட்பாட்டுச் சிந்தனைகளோடும் அன்றே தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் சமூக அக்கறையும், வெளிப்படுத்திய புலனை வீரியமும், நல்லெண்ணங்களும், உரிமைச் சிந்தனைகளும் வியந்து போற்றுதற்குரியன.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link