ஆய்வுச் சிந்தனைகள்


தொலகாப்பியர் காட்டும் வாழ்வியல் இலக்கணம்

முன்னுரை:

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"

என்று சிறந்த வாழ்க்கையின் தன்மையினைக் கூறுகிறார் வள்ளுவர்.

தொடக்கத்தில் நாடோடியாகத் திரிந்து கொண்டிருந்த மக்கள் ஓரிடத்தில் தங்கி வாழ முற்பட்டனர். அவ்வாறு வாழும் போது கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினர். அவர்கள் காட்டில் கிடைத்த பழங்களையும், விலங்குகளை வேட்டையாடியும் உண்டனர். பின்னர் நாகரிகம் வளர வளர பயிர்களை விளைவித்து உண்ணக் கற்றுக் கொண்டனர். இவ்வாறாக மனிதன் படிப்படியாக வளர்ந்து வந்தான். நாகரிகத்துடன் வாழத் தொடங்கிய மாந்தன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற நிலைமாறி இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொண்டான். இவ்வாழ்வியல் இலக்கணமாகத் தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது.

அகவொழுக்கம்:

அகவொழுக்கத்திற்குரியவற்றை

"கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை யென்ப"
(தொ.பொ.947) எனப் பாடுகிறார்.

இவற்றுள் அன்பின் ஐந்திணை எனப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவற்றுள் பாலை நீங்கலாக ஏனைய நான்கனுக்கும் நிலங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஏனைய கைக்கிளை பெருந்திணை இரண்டனுக்கும் நிலங்கள் வகுக்கப்படாததன் காரணம், இஃது தனிப்பட்ட மாந்தனைப் பொறுத்தது என்பது காரணமாக அமையலாம்.

பாலை நிலமானது தனிப்பட்ட நிலமன்று. அது தோன்றும் முறையே

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"

எனவே, பாலைநிலம் ஒன்றின் திரிபேயன்றி இயற்கையன்று.

பெயர்கள்:

மக்கள் தாங்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் பெயர் பெற்றிருந்தனர். சான்றாக முல்லை நில மக்கள் ஆயர்வேட்டுவர் என அழைக்கப்பட்டனர். முல்லை நிலம் காடும் காடு சார்ந்த இடமாதலால் இங்கு ஆடுமாடுகள் வளர்த்தல், விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற தொழில்களே நடைபெற முடியுமாதலால் இத்தொழில் செய்வோருக்கு ஆயர், வேட்டுவர் என்ற பெயர்கள் அமையப்பட்டன. இவ்வாறு பிரிக்கப்படட பெயர்களே பிற்காலத்தில் சாதிப்பெயர்களாயின.

பிரிவு:

தலைமகன் கல்வி கற்றற் கண்ணும், போரின் கண்ணும் தூது செல்வதன் கண்ணும் பிரிந்து சென்றான். பிரிவானது அரசர், வணிகர், வேளாளர், ஏவலர் எனும் நால்வருக்கும் மாறுபட்டு அமைந்துள்ளது.

கல்வியின் கண் பிரிதல் அரசர் வணிகர் ஆகியோருக்கு உரித்தாகும். தூதுப்பிரிவு அரசனுக்கு மட்டுமல்லாது வணிகர் வேளாளருக்கும் உடையதாகும். பொருள் வயிற் பிரிதல் தலைமக்களுக்கு உரியதாகும்.

"வினையே ஆடவர்க்கு உயிரே"

என்பதற்கேற்ப வினையின் காரணமாக தலைமகன் பிரிதல் கடமையாகும். பெருமையும், வலிமையும் கொண்டவரே சிறந்த ஆடவராகக் கருதப்பட்டனர்.

ஒவ்வொரு பிரிவினுக்கும் குறிப்பிட்ட காலம் உண்டு. கல்வியின் கண் பிரியும் பிரிவு மூன்று ஆண்டுகளாகும், பகைவயிற் பிரிவு, தூதுப்பிரிவு, பொருள்வயிற் பிரிவு போன்றவற்றிற்கு ஓராண்டு காலமாகும்.

பெண்களின் நிலை:

பிரிவின் போது கடல் வழிப்பயணம் மேற்கொள்ளும் போது பெண்கள் செல்வதில்லை. பெண்கள் மடலேறுதல் இல்லை. அச்சம், மடம், நாணம் போன்ற பண்புகள் பெற்றவளே சிறந்த பெண்ணாகக் கருதப்படுவதால் மடலேறுதல் ஒழுக்கமில்லாததாகக் கருதப்பட்டது. ஆனால் தான் தேர்ந்தெடுத்த தலைவனோடு தனக்கு வரைவு செய்து கொடாவிடத்து பெண்கள் உடன்போக்கினை மேற்கொண்டனர். இந்த உடன் போக்கினை அந்தணர் போன்றோரும் ஏற்றிருக்கின்றனர் என்பதைக் கலித்தொகையில் காணலாம். அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையினை வற்புறுத்தும் சொல்வன்மை, நல்லறிவு, போன்றவை பெண்ணின் பண்புகளாகும்.

இல்லற வாழ்க்கை:

இல்லற வாழ்க்கையானது களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என இரண்டாகப் பகுக்கப்படுகிறது. தலைவனும் தலைவியும் ஊழ்வினையின் காரணமாக எதிர்ப்பட்டு காதல் கொள்வர். இவர்களுக்குத் தோழி மிக முக்கியமான பாத்திரமாக அமைக்கிறாள். பாங்கனின் துணையும் உண்டெனினும் தோழியே பெரும்பான்மைத் துணையாகிறான். தோழியானவள் தலைவியின் செவிலித் தாயாக விளங்குபவளின் மகளாவாள், தலைமகன் வரைவு நீட்டிக்குமிடத்தும் பிரிவினிடத்தும் தோழி கூற்று அமைகிறது.

தலைமகனும் தலைமகளும் களவு வாழ்க்கையிலிருந்து கற்பு வாழ்க்கையினை மேற்கொள்ளும்போது "அறத்தொடு நிற்றல்" எனும் பண்பு மிகச்சிறந்த இடத்தைப் பெறுகிறது. தலைவி தான் காதல் கொண்ட செய்தியினைத் தோழிக்கு அறிவிக்க, தோழி செவிலித்தாய்க்கும், செவிலித்தாய் நற்றாய்க்கும், நற்றாய் தந்தைக்கும், சொல்லும் முறை மிகச்சிறப்புடையது.

வாயில்கள்:

தலைவன் பரத்தையின்பாற் சென்று திரும்பும்போது தலைவி ஊடல் கொள்வாள். இவ்வூடலைத் தவிர்க்கும் பொருட்டு, தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அதிவர், கண்டோர் எனும் பன்னிருவரும் தலைவன் தலைவியர் வாழ்வில் தொடர்புடைய வாயில்களாக அமைவர். இவர்கள் தலைவன் தலைவியரின் மகிழ்ச்சியையே குறிக்கோளாக் கொண்டிருப்பர்.

மனைவியின் முன்னால் தலைவனின் புறத்தொழுக்கம் போன்ற கொடுமைச் செய்திகளைக் கூறுதல் வாயில்களுக்கு இல்லை. மனைவியின் முன்னாள் செயலற்ற சொற்களைச் சொல்லுதல் மனைவி உள்ள உறுதியுடன் இருக்கும் நிலையில் வாயில்கட்டு உண்டு.

முடிவுரை:

இக்கட்டுரையில் நிலப்பாகுபாடு, இல்லறவாழ்வு, பெண்களின் நிலை, வாயில்களின் பங்கு போன்றவை பற்றி ஆராயப்பட்டுள்ளன. பெண்களின் உரிமைப்பெற்றவராயும் எல்லை வகுத்துக்கொண்டவராயும் வாழ்ந்திருக்கின்றனர். உடன்போக்கு நிகழ்ச்சியானது கற்பு வாழ்வின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது. இவ்வாறாகத் தொல்காப்பியத்தின் மூலம் அக்கால மக்களின் வாழ்வியல் இலக்கணத்தை அறிய முடிகிறது.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link