ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியத்தின் தொன்மைச் சிறப்பு

இன்று தமிழர்க்குப் கிடைத்துள்ள மிகத் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம் தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம் மிகத் தொன்மையான காப்பியக்குடியில் பிறந்தவரான தொல்காப்பியரால் இயற்றப்பட்ட நூலாதலின் இப்பெயர் பெற்றது என்பர்.

செய்தால் பெயர் பெற்றன அகத்தியம் தொல்காப்பியம் என இவை என இறையனார் களவியலுரை கூறுவதால் இதனை இயற்றியவர் தொல்காப்பியர் என்பது நன்கு புலனாகிறது. தொல்காப்பியரின் ஒருசாலை மாணவரான பனம்பாரனாரால் செய்யப்பெற்ற தொல்காப்பியப்பாயிரம்.

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்று கூறுகின்றது. இதற்கு உரைவகுத்த நச்சினார்க்கினியர் பழைய காப்பியக் குடியில் உள்ளோன் எனப் பெயரை மாயாமல் நிறுத்தி என எழுதியிருப்பது இக்கருத்தை வலியுறுத்தும்.

தொன்மையான காப்பியக் குடியில் பிறந்தவர் தொல்காப்பியர் அத்தொல்காப்பியரால் செய்யப்பட்டமையின் இந்நூல் தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றது.

பழந்தமிழ் நாட்டில் தொல்காப்பியக்குடி என்று ஒன்று இருந்ததென்பதை இது பழமைபற்றி விருத்த காவிய குலம் என வழங்கப்படும் என்று கருதலாகும். இது தமிழில் தொல்காப்பியப் பெயராக வழங்கப்பட்டதென்க என்பார் பனம்பாரனார். கூறிய பாயிரத்தும் தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி எனக் கூறுதலால் தன்பெயர் குலப்பெயரேயாக விளக்கம் செய்தான் என்பது கருத்தால் காண்க ஈண்டுக் குடி என்பது

அடுத்தூன்றும் நல்லாள் இலாதகுடி 2
என்புழிப் போல பிறந்த குலத்தை உணர்த்தி வந்தது 3 என்பர் பேராசிரியர் ரா. இராகவையங்கார் காப்பியக்குடி என்பது பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டில் சிறப்புற்று விளங்கிய ஓர் குடி என்பதும் அதில் பிறந்ததால் இந்நூலாசிரியர் தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றார் என்பதும் தொல்காப்பியரால் இயற்றப்பட்டமையின் இந்நூல் தொல்காப்பியம் எனப் பெயர் பெற்றதென்பதும் இவர் கணிப்பு.

தொல்காப்பியம் காலப்பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது.

தொல்காப்பியத்தின் தொன்மை

தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல் விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது. தமிழகத்தின் பண்டைக்கால வரலாற்றைச் சான்றுகளுடன் அறிய உதவும் பேரேடு இது எனக் கூறுலாம்.

காலம்

தொல்காப்பியரின் காலம் மிகவும் தொன்மையானது. அதுபற்றித் திட்டவட்டமாக உணர்வதிற்கில்லை அவர் வாழ்ந்த காலம்பற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

தொல்காப்பியப் பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என இவரைப் பனம்பாரனார் பாராட்டுகின்றார். ஐந்திரம் என்பது வடமொழியில் உள்ள மிகப்பழமையான இலக்கண நூல் இது பாணினீயத்துக்கு முற்பட்டது பாணினீயம் இயற்றிய பாணினி கி.மு 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

பாணினீயம் நிறைந்த தொல்காப்பியன் என்னாது ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனப் பனம்பாரனார் கூறியதால் தொல்காப்பியர் பாணினிக்கும் முற்பட்டவராதல் வேண்டுமென்று கருதப்படுகிறது எனவே இவரது காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டு எனக் கொள்வது பொருந்தும் என்பர் பேராசிரியர் டாக்டர் ஆறு அழகப்பன்.

தொல்காப்பியத்தின் காலம் கி.மு 5320 முதல் கி.மு 6ஆம் நூற்றாண்டு வரை பலவகையினவாக வரலாற்று அறிஞர்களால் கணித்துக் கூறப்பட்டுள்ளது.

கி.மு 5320 க்கு முற்பட்டதென்பர் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார்.

கி.மு 3500க்கு முந்தியதென்பர் தவத்திரு மறைமலை அடிகள்

கி.மு. 1000க்கு முற்பட்டதென்பர் நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்.

கி.மு முதல் நூற்றாண்டு என்பர் டாக்டர் மு. வரதராசனார்.

கி.மு. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் அடக்குவர் பி.டி.சீனிவாச அய்யங்கார்.

கி.மு. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டென்பர் பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை கே. ஏ. நீலகண்ட சாத்திரியாரும் இக்கருத்தினரேயாவர்.

தெற்கே இருந்த பஃறுளியாறும் குமரிக்கோடும் கடல்கோட்படாத காலத்துக்கு முன்னரே வாழ்ந்தவர் என்பது டாக்டர் வ.சுப. மாணிக்கனாரின் கருத்து.

தென்குமரி என்று நிலவெல்லை வரையப்பட்டிருத்தலின் தொல்காப்பியர் காலத்து நீண்ட நிலப்பரப்புப் பிறவும் குமரிக்குத் தென்பால் கிடந்தமை தெளிவு.

இந்நிலக்கருத்தால் நாம் அறிவது என்ன? தெற்கே பஃறுளியாறும் குமரிமலையும் இருந்த காலத்துப் பிறந்தது தொல்காப்பியம் எனவும், அந்நேடும் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களின் வழக்கையும் தழுவி இலக்கணம் கூறியது தொல்காப்பியம் எனவும் அறிகின்றோம் இத்தொன்னிலம் சங்க இலக்கியத்தாலும் சிலப்பதிகாரத்தாலும் அடியார்க்கு நல்லார் உரையாலும், இறையனார் அகப்பொருள் உரையாலும், பெருமருங்க தெளிவுபடும்.

தொல்காப்பியத்திற்கு முந்து நூல் உண்மை

ஒரு மொழியில் முதலில் தோன்றியது இலக்கியம் அதனை அடியொற்றி அமைவது இலக்கணம்.

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் என்ற பவணந்தியின் கூற்று இதனைப் புலப்படுத்தும் தொல்காப்பியர் ஒரு பெரும் இலக்கண நூலை இயற்றி விதிகள் வகுக்க வேண்டுமெனின் தமிழ்கூறு நல்லுலகத்தில் அதற்கு முன்னரே எண்ணற்ற தமிழ் நூல்கள் இருந்திருக்க வேண்டும் அன்றியும் அவ்விலக்கியங்கட்குப் பலர் இலக்கண நூல்கள் எழுதியிருந்தனர் என்பதைத் தொல்காப்பியர் என்ப, என்மனார், புலவர் என்பன போன்ற வாய்பாடுகளால் சுட்டுவது கொண்டு அறியலாம். எல்லாவற்றிற்கும் மேலாகப் பாயிரம் எழுதிய பனம்பாரனாரே.

முந்து நூல்கண்டு மறைப்பட எண்ணிப்
புலந்தொகுத்தோன்

என்று கூறிவிட்டதால் இது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாதலறிக. இதனை தமிழ்மொழி வழக்கிலும் செய்யுளிலும் சிறந்திருந்ததென்றும் எழுத்தும் சொல்லும் பொருளும்பற்றி இவர் ஆராய்ந்து கொள்வதற்கு ஏற்ற பெற்றியில் உலகவழக்கும் முந்நூல்களும் பரந்து கிடந்தன என்றும் அவற்றைத் தொல்காப்பியனார் தொகுத்துக் கூறினாரென்றும் அறியலாம். என்னும் ரா.இராகவையங்காரது கூற்றாலும் தெளிவாக அறியலாம்.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link