ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியம் காட்டும் உணவு

எழுத்துச் சொல், பொருள் என்று முறையே மொழிக்கும், இலக்கியத்திற்கும் தொல்காப்பியர் விரிவான இலக்கணம் தந்துள்ளார். பொருளதிகாரத்திலும் அகப்புற இலக்கியங்களுக்கு விரிவான இலக்கணம் யாத்துள்ளார். அகப்புற இலக்கியங்களுக்கு திணைத்துறைகளை விரிவாக ஆய்வு செய்து தந்துள்ளார். அதத்திணையில் ஐந்துவகை நிலங்களும் அவற்றின் முதல் கரு உரிப்பொருள் பற்றிச் சிறப்பாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். சில இடங்களில் மட்டும் உணவு பற்றிய செய்தி

எழுத்து, சொல்பற்றியும் பொருளதிகாரத்தில் அகப்பொருள் இலக்கணம் பற்றியும் ஆய்வு செய்துள்ள தொல்காப்பியர் உணவு என்ற மனிதனின் மிக இன்றியமையாத தேவையான ஒன்று பற்றி மட்டும் விளக்கமாகப் பேசாதது ஆய்வுக்குரியது.

அகத்திணையியலில் நிலங்களுக்குரிய கருப்பொருள் பற்றிப் பேசும்போது மட்டும் உணா என்ற சொல் உணவு என்று பொருள்தரும் வகையில் அமைந்துள்ளது. அச்சொல் வரும் நூற்பா பின்வருமாறு,

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப

இன்னும் பெருஞ்சோற்றுநிலை, பிண்டம், போன்ற உணவு தொடர்பான சில பல சொற்களே தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உரையாசிரியர்தம் உதவி

தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐயந்திரிபற விளங்கிக்கொள்ள வேண்டும் என்றால் நாம் உரையாசிரியர் உதவியோடுதான் தொல்காப்பியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே, தொல்காப்பியம் காட்டும் உணவு என்ன என்பதை தொல்காப்பியத்திற்குக் குறிப்பாக அகப்பொருளுக்கு உரை எழுதியுள்ள நச்சினார்கினியர்தம் விளக்கத்தையே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

தொல்காப்பியர் ஐந்துவகை நிலங்களுக்கும் கருப்பொருள் கூறும்பேது உணவு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நச்சினார்கினியர் தரும் விளக்கத்தைக் கீழே காண்போம் இதுவும் நமக்குப் புதிதல்ல.

1. முல்லை நிலமக்களுக்கு உணவு-வரகு, சாமை நீர் - கான்யாறு

2. குறிஞ்சி நில மக்களுக்கு உணவு - ஐவென நெல்லும் தேன்திணையும், மூங்கிலரிசியும் நீர் - அருவி நீர், சுனை நீர்

3. மருதநில மக்களுக்கு உணவு - செந்நெல் - வெண்ணெல் நீர் - ஆற்றுநீர், மனைக்கிணற்றுநீர், பொய்கை நீர்

4. நெய்தல் நிலமக்களுக்கு உணவு - உப்புக்கு விலைமாறிய பண்டமும், மீனுக்கு விலைமாறிய பண்டமும் நீர் - மணற்கிணறு, உவற்குரிநீர்

5. பாலை நில மக்களுக்கு உணவு - ஆறலைத்த பொருளும், சூறை கொண்ட பொருளும் நீர் - அறுநீர் கூவலும், சுனை நீரும்.

தொல்காப்பியர் காலச் சமுதாயத்திற்கும் சங்ககாலச் சமுதாயத்திற்கும் மிகுந்த வேறுபாடு இல்லாத நிலையில், சங்கால மக்கள் கொண்ட உணவு வகை அனைத்தும் தொல்காப்பியர் கால மக்களும் கொண்டிருப்பர் என்று கொள்ள இடமுண்டாகிறது. இந்நிலையில் சங்ககால மக்கள் உணவு வகைகளே தொல்காப்பியர் காட்டும் உணவாகக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது. எனவே அவற்றை கீழ்கண்டவாறு சற்று விளக்கமாகக் காண்போம்.

உணவு சமைக்கும் அடுப்பு வகைகள்

உணவு என்றால் உணவு அப்படியே வானத்திலிருந்து வந்துவிடாது. அதைச் சமைப்பதற்கு உரிய கருவியாக அடுப்பு வேண்டும். இந்த அடுப்புப் பற்றிய செய்திகளை பல சங்க இலக்கியங்கள் சுட்டி நிற்கின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

1. முடித்தலை அடுப்பு (புறம்.28.6)

2. ஆண்டலை அணங்கடுப்பு (மது.காஞ்.29)

3. ஆடுநனிமறந்த கோடுயர் அடுப்பு (புறம்.164)

4. முரியடுப்பு (பெரும்பாணாற்றுப்படை)

இவ்வாறு அடுப்புப் பற்றி நிலையப் பேசுகின்ற இலக்கியங்கள் சமைக்கும் இடமான சமையல் இடம் பற்றியும் பேசுகின்றன. . அவை பின்வருமாறு.

அட்டில்

உணவு தயாரிக்கப்படும் இடங்கள் பற்றி அகநானூறு, நற்றிணை, சிறுபாணாற்றுப்படை, பட்டினப்பாலை போன்ற பிற சங்க இலக்கியங்களிலும் காணக்கிடக்கின்றன. சான்றுக்குச் சில.

1. அகநானூறு - உதியனட்டில் போல ஒலியெழுத்து அருவியார்க்கும்
2. சிறுபாணாற்றுப்படை - புளிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்
3. பட்டினப்பாலை - அறநிலை இய அகனட்டில்

சமையல் செய்யும் பாண்டம்

சமையல் செய்யவும், பரிமாறவும் பயன்படும் பாத்திரங்கள் பற்றியும், சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. சிலவற்றைக் காண்போம்.

1. இருங்கட் குழிசி (புறம்.65-2)
2. மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி (புறம்-168-9)
3. அட்டகுழிசி அழற்பயந்தாங்கு (புறம்-23)
4. வெண்கோடு தோன்றாக் குழிசி (புறம்-251)
5. முரவு வாய் ஆடுறு குழிசி (புறம்-371)
6. மேலும் புகர்வாய்க் குழிசி, சோறடு குழிசி

போன்ற பாண்டங்களை மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தியதை உணர முடிகின்றது.

உணவு வகை

பண்டைத் தமிழ் மக்கள் இறைச்சியை விரும்பி உண்டனர். அதன் பல்வேறு பெயர்கள் பின்வருமாறு.

ஊன், இறைச்சி, புலால், ஊழ்ததல், தசை, தடி, புன், புரளி, புலவு முதலியன.

இவற்றோடு மிளகுப் பொடி தூவி, கடுகிட்டுத் தாளித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தமிழர் விரும்பி உண்ட உணவு நெல் உணவாகும். அதன் பல்வேறு பெயர்களாவன.

வரி செஞ்சாலி, செந்நெல், சொல், இயவை, ஐவனம் முதலியன. மேலும் புழுங்கலரிசியே தலையாய உணவாக இருந்து வந்திருக்கிறது.

அதற்று அடிசில், அமலை, அமிழ்து, அயினி, அவி, உணா, உண், தோரி பருக்கை, பிசி, மிசை, வல்சி போன்ற பல பெயர்கள் உண்டு.

பலவகையான பலகார வகைகளையும் விரும்பி உண்டதற்கான சான்றுகள் பல உள்ளன.

பலவகையான கள் அருந்தி மகிழும் பழக்கமும் இருந்ததை சங்க இலக்கியங்கள் பலவும் உணர்த்தி நிற்கும்.

தானிய வகை உணவுக்கு பக்க உணவாக மாமிச உணவையும், காய்கறி உணவையும் வைத்து, சுவை மிகுந்த குழம்பு, பொரியல் கூட்டு, அவியல் போன்றவற்றையும் சேர்த்து உண்ணும் பழக்கம் உடையவராகத் தமிழர் இருந்துள்ளனர்.

பால் பொருட்கள்

மேலும் பால்படு பொருட்களும் பெருமளவில் உட்கொண்டு வந்துள்ளனர். ஏடு, தயிர், மோர், வெண்ணிற நெய், வெண்கட்டி முதலியனவும் இலக்கியங்களில் சுட்டப்படுகின்றன.

பெருஞ்சோற்று நிலை என்ற தொடர் காணப்படுகிறது. சிறு சோற்றுநிலை இருந்திருக்கக் கூடும். இல்லங்களில் உள்ளவர் சேர்ந்து உண்ணுவது சிறுசோற்று நிலையாகவும், போர்க்குச் சென்று வந்த பிறகும், போர்க்குச் செல்வதற்கு, முன்னரும் அரசன் வீரர்களுக்குக் கொடுக்கும் உணவு பெருஞ்சோற்று நிலையாகவும் இருந்திருக்கலாம். மேலும் அரசன் பிறந்தநாள்விழா, திருமணநிகழ்ச்சியில் அளிக்கப்படும் உணவு, இன்னும் முக்கிய நிகழ்ச்சிகளில் பலர் சேர்ந்து உண்ணும் நிலைக்குக் கூட இப்பெயர் இருந்திருக்கலாம்.

இதுகாறும் பார்த்தபோது சங்ககால உணவுமுறையும் தொல்காப்பியர் காட்டும் உணவும் பெரிதும் வேறுபாடு உடையதில்லை என்று புலனாகிறது. பக்க எல்லை கருதி பெரிய அளவில் சான்றுகள் தர இயலவில்லை என்று கூறுவதற்கும் கடப்பாடுடையேன்.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link