ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியத்தில் கல்வி

முன்னுரை

"கல்வி கரையில; கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல" என்ற வாழ்வியல் உண்மையை முற்றும் உணர்ந்த பெருந்தகை தொல்காப்பியர். இத்தகைய பண்பு நிறைந்த தொல்காப்பியம் இயற்றிய "தொல்காப்பியம்" கல்வி குறித்து எடுத்தியம்பியுள்ள கருத்துக்களைப் பற்றி ஈண்டு காணலாம்.

பண்பாளர் கருத்து

"பயிற்சியும் பாடத்தில் தேர்ச்சியும் பெற்று கடமையுணர்வோடும் உற்சாகத்தோடும் ஆசிரியர்கள் பணிபுரிவதோடு மாணவர்களுக்கு முன் மாதிரியாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே பரஸ்பர மதிப்பும் நம்பிக்கையும் இழையோட வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களைப் போன்றே நினைத்துப் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்பர் காந்தியடிகள்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் கல்வியைப் பற்றி அறிவுடைமை, கல்வி, கல்லாமை, கேள்வி போன்ற அதிகாரங்களில் விளக்கமுற விளம்பியுள்ளார்.

தொல்காப்பியத்தின் தொடக்கம்

"வடவேங்கடத் தென்குமரி" எனத் தொடங்கும் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் முதலே கல்வியின் இன்றியமையாமை புலப்படத் தொடங்குகின்றது. முதலில் தமிழக எல்லையைக் கூறிய பனம்பாரனார். வழக்கின் கண்ணும் செய்யுளின் கண்ணும் எழுத்து, சொல், பொருள் என்னும் மூவிலக்கணத்தையும் ஆராய்ந்து செந்தமிழ் நில வழக்குடன் தான் நூலியற்றக் காரணமான முதல் நூல் கூறியவற்றைக் கண்டு அவற்றை முறைப்படி ஆய்ந்த தொல்காப்பியர் நூல் செய்ததாகக் கூறுகிறார்.

இதிலிருந்து நல்ல நூற்களைக் கற்று கல்வி வல்லாராய் விளங்குபவரால் தான் நூல் இயற்றப்பட்டது என்று தொல்காப்பியர் காலச் சூழல் புலப்படுகின்றது.

ஆசிரியரும் மாணாக்கரும்

"ஈவோன் தன்மை யீதலியற்கை
கொள்வோன் தன்மை கோடன் மரபு"

என்பதால் ஆசிரியரை ஈவோன் என்றும் அவர்தரும் கல்வியை ஏற்றுக் கொள்வதால் மாணவரைக் கொள்வோன் என்றும் தொல்காப்பியம் விளம்பியுள்ளது.

ஈவோரைக் கற்கப்படுவோர் கற்கப்படாதோர் என இரு வகையாகப் பகுப்பர். கற்கப்படுவோருக்கு உவமையாக மலை, நிலம், பூ, துலாக்கோல் ஆகியவையும் கற்கப்படாதோருக்கு உவமையாக கழற்பெய்குடம், மடற்பனை, முடத்தெங்கு, குண்டிகைப் பருத்தி ஆகியவையும் கூறப்படுகின்றன.

கொள்வோனைக் கற்பிக்கப்படுவோர் என்றும் கற்பிக்கப்படாதோர் என்றும் இருவகைப்படுத்துவர். கற்பிக்கப்படுவோரை தன்மகன், ஆசான்மகன், மன்மகன் பொரு நனி கொடுப்போன், வழிபடுவோன், உரைகோளான் என அறுவகையாகவும், கற்பிக்கப்படாதோரை மடி, மானி, பொச்சாப்பன், காமுகன், கள்வன், அடுநோய்ப்பிணியாளன், ஆறாச்சினத்தன், தடுமாறுநெஞ்சத்தவன் என எண் வகையாகவும் கூறுவர். கற்பிக்கப்படுவோருக்கு அன்னம், கிளி, நெய்யரி போன்றவையும் கற்பிக்கப்படாதோர்க்கு குரங்கெறிவிளங்காய். எருமை போன்றவையும், உவமையாகக் கூறப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.

ஆசிரியர் இலக்கணம்

ஆசிரியருக்குப் பல உவமைகள் கூறிய தொல்காப்பியம் "ஈதலியல்பே" என்று தொடங்கும் நூற்பாவின் மூலம் ஆசிரியர் பாடம் கூறும் இயல்மை விளம்புகின்றது.

"பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்
புகழ்ந்த மதியிற் பொருந்தும் ஓரையில்
தெளிந்த அறிவினன்".

என்பதால் தான் கூறக்கருதும் பொருளின் பல்வேறு பரிமாணங்களையும் உணர்ந்து, விளக்கமுற, மாணவர் புரிந்து கொள்ளும் வகையில் தக்க உவமை, உவமேயங்களுடன் கூற வேண்டும் என்கின்றது. எனவே தான் கூறக்கருதும் பொருளிள் ஐயம் திரிபற தெளிந்த அறிவும் ஆசிரியனுக்கு இன்றியமையாதது என்கின்றது. மேலும், மாணவனது அறிவுத்திறம் அவன் புரிந்து கொள்ளும் முறை ஆகியவற்றை அறிந்து, அவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஓர் மனநல மருத்துவன் போல் ஆசிரியர் பாடம் கற்பிக்கும் முறையும் தொல்காப்பியர் காலத்தில் செம்மையுற இருந்தமையை இதன் மூலம் நாம் உணர முடிகின்றது.

மாணாக்கன் இயல்பு

மாணாக்கன் ஆசிரியர் கூறிய காலத்தில், குறித்த இடத்திற்கு உரிய நேரத்தில் சென்று கல்வி கற்கும் ஆர்வம் மிக்கவனாய் இருத்தல் அவசியம் என்று கூறுவதோடு அவன் "அன்பொடு புணர்ந்தாங்கு காசற உணர்ந்தான்" என்றும் தொல்காப்பியம் கூறியதால் ஆசிரியரிடம் அன்புடன் பழகிய இயல்பும் அதன் (அன்பின்) மூலமே தனது உள்ள ஐயங்களைப் போக்கிக் கொண்ட இயல்பும் வெள்ளிடைமலை.

முழுமைக் கல்வி

"உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்களன் அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்"

என்பது வள்ளுவம் தான் கற்றவற்றை அவைக்கு அஞ்சி அவையோர் ஏற்பச் சொல்ல இயலாதவர் உயிரோடு இருப்பினும் இறந்தவருக்கு ஒப்பாவர் என்பது இக்குறளின் பொருள். இவ்வாறு இல்லாமல் கற்ற கல்வியின் பயன் உடையவராகத் திகழத் தொல்காப்பியம் வழி கூறுகின்றது.

"ஆசா னுரைத்தவை யமைவுரக் கொளினும்
காற் கூறல்லது பற்றலனாகும்"

"அவ்வினையாளரொடு பயில்வகை யொருபால்
செவ்விதின் உரைப்ப அவ்விரு பாலும்
மையறு புலமை மாண்புநனி யுடைத்தே"

என்ற நூற்பாக்கள் மூலம் ஆசிரியர் கூறியதை மனம் நிறைய ஏற்றுக் கொண்டாலும் ஆசிரியரின் புலமையில் கால்பங்கு மட்டுமே பெற முடியும் என்பதும் தன்னுடன் பயிலும் மாணவருடன் பழகுவதால் கால்பங்கும் தான் கற்றதை பிறருக்கு எடுத்துக்கூறுவதால் அரைப்பங்கும் புலமை பெறுவான் என்பதும் உணர்த்தப்படுகின்றது.

ஆண்களுக்கே கல்வி

உணர்திணை, அஃறிணை என்று உலக உயிர்களைப் பிரித்த தொல்காப்பியர் உயர்திணைக்குரியோராக ஆடுஉ, மகடூஉ, பலர் ஆகியோரைக் கூறினார். கல்வி என்பது மக்கட்குப் பொது. ஆனால் தொல்காப்பியர் பெருமையும் உரனும் ஆடூஉமென" என்பதால் கல்வியில் பெண்களை ஒதுக்கி விட்டு ஆண்களுக்கு மட்டுமே சிறப்பிடம் தந்துள்ளார். பெருமிதம் என்பதன் மெய்ப்பாட்டு வாயில்களாக "கல்வி, தறுகண், இசைமை, கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே" எனத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கது. பெண்களுக்குக் கல்வி அக்காலத்தில் வழங்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெளிவு. அதற்கான காரணம் ஆராயத்தக்கது. தொல்காப்பியர் பெருமையும் உரனும் ஆண்களுக்கு மட்டுமே உரியவையாகக் கூறியமை மனநெருடலைத் தருகின்றது. அவை பெண்களுக்கும் உரியவையாகக் கூறியிருப்பின் தொல்காப்பியம் மேலும் பொலிவுற்றிருக்கும்.

நால்வகை வருணம்

"ஓதல் பகையே தூதிவை பிரிவே" என்று பிரிவின் வகைகளைக் கூறிய தொல்காப்பியர் ஓதலும் தூதும் அரசர் அந்தணர். வணிகர், வேளாளர் என்ற நால்வகையோரிலும் உயர்ந்தோர்க்குரியனவாகவும் "உயர்ந்தோரக்குரிய ஓத்தினான" என்பதில் மூலம் பின்னோரில் உயர்ந்தோராகிய வணிகர்க்கும் ஓதுதல் நிமித்தமாகப் பிரியும் பிரிவு உண்டு என்பதாலும் அக்கால வருணாசிரம முறைபற்றி அறிய முடிகின்றது. "கீழ்ப்பால் ஒருவன் கல்வி கற்பின் மேற்பாலானும் அவன் கண்படுமே" என்ற நிலை தொல்காப்பியர் காலத்தில் இல்லை என்பது தெரிகின்றது.

முடிவுரை

தொல்காப்பியர் காலத்தில் குருகுல வழியில் கல்வி போதிக்கப்பட்டமையும் தொல்காப்பியம் வழி அறிய முடிகின்றது. தொல்காப்பியத்தில் கல்விக்குரிய காலமாக மூன்றாண்டுகள் கூறப்பட்டுள்ளன. பெருமிதம் தோன்றும் வாயிலாகவும், நகை தோன்றும் வாயிலாகவும் கல்வி கூறப்படுகின்றது. "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" என்ற நிலையில் பெண் கல்வி மற்றும் வேளாளர் கல்வி பற்றி தொல்காப்பியத்தின் வழி நாம் அறிய வருபவை அக்கால சமுதாயச் சூழலே என்பது தெரிகின்றது.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link