ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் அறம்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களில் இருபத்தேழு, இயல்களில் தமிழ்மொழிக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கணக் களஞ்சியம் ஆகும். அதனுள் மூன்றாவதான பொருளதிகாரம் ஒன்பது இயல்களில் இலக்கியம் படைப்பதற்கான கோட்பாடுகளை/கொள்கைகளைத் தெளிவுற எடுத்துக் காட்டுகிறது. இக்கட்டுரை பொருளதிகாரம் காட்டும் இலக்கியக் கோட்பாட்டின் வழி அறக்கருத்துகளைத் தொகுத்துச் சுட்ட முற்படுகின்றது.

இலக்கணம் காட்டும் இலக்கிய மாந்தர்களின் வழி சமுதாயத்தில் மக்கள் எவ்வாறு வாழ வேண்டும், மனம் ஒத்த அன்புடைய தலைமக்களின் வாழ்க்கைமுறை இல்லறக் கடமைகள், ஆட்சிமுறை போன்ற இலக்கியக் கோட்பாடுகளில் அறம் இழையோடி இருப்பதைக் காணலாம்.

சமுதாயத்தில் அறம்

பண்பும், ஒழுக்கமும் உள்ள உயர்ந்தவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளைப் பின்பற்றி நடந்தால், வீடும், நாடும் நல்ல வழியில் செல்லும், முன்னோர்கள் சொன்ன சொற்களைப் பொன்போல் போற்றி வாழ்க்கையை நடத்துவதால், இல்லறம் நல்லறமாக விளங்கும் என்பதைக் தொல்காப்பியர்,

பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக்கிளந்து (நூற்பா-148)
தொல்லோர் கிளவி-(நூற்பா-111)
மையறு சிறப்பின் உயர்ந்தோர்பாங்கின்-(நூற்பா-115)

என்பதன் மூலம் உயர்ந்தவர்களிடம் பற்றும், மரியாதையும் கொண்டு, அவர்கள் கூறிய நற்கருத்துகளைக் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதை அறியலாம். சமுதாயத்தில் வாழ்கின்ற பண்புள்ளவர்கள், உயர்ந்தவர்கள், சான்றோர்கள் இவர்களைப் பேணுவது தலையாயக் கடமையாகக் கொண்டனர்.

திருமணம் அறம்

அன்புடன் கூடிய களவு வாழ்க்கையில் தலை மக்களிடையே பொய், வழு, தோன்றியபிறகு பெரியோர்கள் முன்பாகச் சடங்குகளுடன் கூடிய மன்றல் விழா நடைபெறுவதை,

கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வதுவே
(நூற்பா-140)

என்றும்,

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப-(நூற்பா-143)
இவ்வாறு திருமணம் நடக்கின்ற தலைமக்களுக்கு மனம் ஒத்த அன்புமட்டுமின்றி, குணநலன்கள் ஒத்திருக்க வேண்டும்,
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறை அருள் உணர்வு திருவுஎன- (நூற்பா-269)
என எடுத்துக்காட்டுகின்றார்.

இல்லறம்

இல்லறம் நடத்துகின்ற பெண்களுக்கு வேண்டிய அன்பு, அருள், ஒழுக்கம், பொறையுடைமை, உறவினர்களை மனமுவந்து உபசரிக்கும் விருந்தோம்பும் பண்பு போன்ற நற்பண்புகளை எடுத்துக் கூறுகின்றார். குடும்பத்திற்கு விளக்காகத்திகழும் பெண்களுக்கு அன்பும் அறனும், கொண்டிருந்தாலே இல்லறம் நல்லறமாக மாறி சமுதாயம் ஏற்றம் பெறும்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
(திருக்குறள்-51)

வள்ளுவர் வாக்குப்படி மனைக்கு மாண்புடையவளாக கணவனுக்குப்பெருமை எற்படும் வகையில் இல்வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதில் தொல்காப்பியர் பெண்ணறங்களை,

செறிவும், நிறைவும், செம்மையும் செப்பும்
அருமையும், பெண்பாலர்க்கு உரிய சிறந்த குணங்கள்
(நூற்பா-206) என்றும்,

உரிமை கொடுத்த கீழவோன் பாங்கில்
பெருமையில் திரியா அன்பின் கண்ணும்
- (நூற்பா-145) என கூறுகின்றார்.

இல்லறம் கடைப்பிடிக்கும் தலைவிக்கு வேண்டிய நல் இயல்புகளை, நற்பண்புகளைக் கூறும்போது, தொன்மையான குடி மரபை வழுவாமல் காத்து, இல்லற வாழ்க்கை நடத்துவதும், அருளோடு கூடிய அன்பு நிறைந்த இனிய சொற்களைக் கூறுவதும், மக்கட்செல்வத்துடன், அறமும், உறவினருடன் கூடி வாழ்வதும், சிறந்த வழியில் தன் கணவனை நல்வழிப்படுத்துவதும், போன்ற நற்பண்புகள் இல்லப்பெண்களுக்கு வேண்டியவை என்கின்றார்.

இனிய இல்லறம் நல்லறமாக அமைய வேண்டிய பண்புகளைக் கூறிய தொல்காப்பியர் தேவையற்றவற்றை,

நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி
வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை
இன்புறல், ஏழைமை, மறப்போடு, ஒப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்
- (நூற்பா-270)
என இலக்கணப்படுத்துகின்றார். பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்குரிய பண்புகளையும் எடுத்துக்கூறுகின்றார்.

பெருமையும் உரனும் ஆடூ மேன -(நூற்பா.95) எனவும் அறம் பொருள் இன்பத்தில் குறையின்றி, நீதி நெறிமுறையில் வழுவாமல் இல்வாழ்க்கை நடத்த வேண்டும். பிறன்மனை நயத்தல் இன்றி ஒழுக்கமுள்ள தலைமகனாக இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார். சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடான ஓழுக்கத்துடன், நல்லறிவுடன் வாழ வேண்டும் என்பதையும், பரத்தையர் ஒழுக்கம் கூடாது என்பதில்,

பேணா ஒழுக்கம் - (நூற்பா-148)
கொடுமை ஒழுக்கம் (நூற்பா-145)
மாயப்பரத்தை - (நூற்பா-145) என்றும் கூறுகின்றார்.

அகமாந்தர்க்குரிய கடமைகள்

விருந்தினரை உபசரிப்பதை முதல் கடமையாகக் கொண்டனர்.

விருந்து புறந்தருதல் சுற்றம் ஓம்பல் (நூற்பா-150)
விருந்தோடு நல்லவை வேண்டற்கண்ணும் (நூற்பா-144)

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்தது பயனே
(நூற்பா-190)

விருந்தோடு நல்லவை வேண்டற்கண்ணும் (நூற்பா-144)
சிறந்தது பயிற்றல் இறந்தது பயனே (நூற்பா-190)

என்பதில் உறவினர்களையும், சுற்றத்தினரையும் ஓம்பும் பண்பு தலைமக்களுக்கு வேண்டிய இல்லறக்கடமை என்கின்றார்.

போரில் அறம்

ஒழுக்கம் என்பது "ஞாலத்து வரூஉம் நடக்கை" என்பர். ஒழுக்கம் அகத்திணை, புறத்திணை என இரண்டு வகைப்படும். இத்திணைகளின் மூலம் இலக்கிய மாந்தர்கள் எவ்வாறு அறத்துடன் விளங்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்தார்.

புறத்திணையில் முதலில் போர் எவ்வாறு நடைபெற வேண்டும் என்ற வழிமுறையினைக்கூறிய தொல்காப்பியர் வாகை, காஞ்சித்திணையின் மூலம் போரைத் தடுக்கும் அறச்செயல்களைக் கூறி சமுதாயத்தைப் போர் நெறியிலிருந்து காத்தார். போர் இல்லா நல்லதோர் சமுதாயத்தை அமைக்க முற்பட்டார். மனிதன் தன் வாழ்க்கையின் இறுதிநிலையில் செம்மை அடைய வேண்டும் என்பதற்காக இளமை, செல்வம், உயிர் நிலையாமையற்றி எடுத்துக் கூறிகின்றார்.

நில்லா உலகம் புல்லிய நெறித்தே (நூற்பா-76)

என்றும்

கடிமனை நீத்த பாலின் கண்ணும்
எட்டுவகை நுதலிய அவையகத்தானும்
கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்
இடையில் வன்புகழ்ச் கொடையினானும்
பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்
பொருளோடு புணர்ந்த பக்கத்தானும்
அருளோடு புணர்ந்த பக்கத்தானும்
அருளோடு புணர்ந்த அகற்சியானும்
காமம் நீத்த பாலினானுமென்று
(நூற்பா-75) என்பதில் காணலாம்.

தெரிவு கொள் செங்கோல் அரசர்-(நூற்பா-75) என்பதன் மூலம் செங்கோல் வளையாத அறம் பிறழா அரசியல் அமைப்பு, மறச் செயல்களை அறச் செயல்களுடன், நல்ல அரசாட்சியை அமைத்து பகைவரையும் நட்பாக்கிக் கொள்ளும் அறத்தை நனி நாகரிகமாகப் புறத்திணை மாந்தர்களின் மூலம் படைத்துக்காட்டுகின்றார்.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link