ஆய்வுச் சிந்தனைகள்


உரையாசிரியர்களின் காலம்

உரை எழுதுவது-தமிழ் மொழியில் ஒரு தனித்துறையாக வளர்ந்துள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றில் நூலாசிரியர்களுக்குச் சமமாக உரையாசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். உரையாசிரியர்கள் நற்றமிழ் மொழிக்குச் செய்துள்ள தொண்டு அளப்பரிதாம். காலம் பல கடந்தும் கன்னித்தமிழ் குன்றாது பொலிந்து இலங்குவதற்கு உரையாசிரியர்கள் ஆற்றிய பணி சொல்லுந்தரமன்று. இன்று கிடைக்கின்ற தமிழ் இலக்கண நூல்களுள் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம்.

தொல்காப்பியத்தின் சிறப்பு

தொல்காப்பியம் என்னும் பழம்பெரும் இலக்கண நூல் தமிழ் மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்குகின்றது. வளமாக வாழ்ந்த தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் இது திகழ்கின்றது. இந்நூலில் உள்ள விழுமிய கருத்துக்களை அறிந்து கொள்ள உரையாசிரியர்களின் உரைகள் பெரிதும் பயன்படுகின்றன.

தொல்காப்பிய உரையாசிரியர்கள்

தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை எழுதியவர் இளம்பூரணர். இவரைப் பற்றிப் பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் போன்றோர் உரை எழுதியுள்ளார். தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குப் பழைய உரை ஒன்று உள்ளது. இதனை இயற்றியவர் ஊர், பெயர் எதுவும் தெரியவில்லை. இவ்வுரையாசிரியர்களின் காலம் பற்றி ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

இளம்பூரணர்

தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு உரையாசிரியர் என்ற பெயர் ஏற்பட்டது. தொல்காப்பிய உரையாசிரியர்களான சேனாவரையரும் (கி.பி.13 ஆம் நூற்) நச்சினார்க்கினியரும் (கி.பி.14 ஆம் நூற்) இளம்பூரணர் உரையைத் தழுவியும் மறுத்தும் உரை எழுதுகின்றனர். எனவே இளம்பூரணர் இவர்களுக்கு முற்பட்டவர் என்பது தெளிவு.

சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் (கி.பி.12 ஆம் நூற்) வேனிற் காதையின் தொடக்க வரிகளுக்கு எழுதிய விளக்கத்தில் "உரையாசிரியரான இளம்பூரணவடிகள் முகவுரை யானும் என இளம்பூரணரைச் சுட்டுகிறார். எனவே காலத்தால் அவருக்கு முற்பட்டவர் இளம்பூரணர்".

கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புறப்பொருள் வெண்பா மாலை, தமிழ் நெறி விளக்கம் என்னும் இரு நூல்களிலிருந்தும் இளம்பூரணர் மேற்கோள் காட்டியுள்ளார். எனவே இவர் கி.பி.9ஆம் நூற்றாண்டிக்குப் பிற்பட்டவர் ஆகிறார்.

இளம்பூரணத்தின் குழந்தை என அறிஞரால் சுட்டப் பெறுவது நன்னூல் பவணந்தி முனிவர் இளம்பூரணத்தைப் பெரிதும் தழுவித் தமது நூலை இயற்றியுள்ளார். பவணந்தி முனிவரின் காலம் கி.பி.13 ஆம் நூற்றாண்டு ஆதலின் முனிவருக்கு முந்தியவராகிறார் இளம்பூரணர்.

இளம்பூரணர் எழுத்ததிகார உரையுள் இரு இடங்களில் (எழுத்து 125, 248) "பரணியாற் கொண்டான்" என்னும் எடுத்துக் காட்டினைக் கையாண்டுகிறார். பரணிணை ஆண்ட வீரராசேந்திர சோழனின் காலம் கி.பி.1063.70. பொருளதிகாரக் களவியல் உரையில் மன்றல் எட்டனைப் பற்றி இளம்பூரணர் விளக்குவது யாப்பருங்கால விருத்தியின் எதிரொலி போன்று உள்ளது. யாப்பருங்கால விருத்தியின் காலம் கி.பி.1015 - 1040 என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையெல்லாம் ஆராய்ந்து நோக்குமிடத்து இளம்பூரணரின் காலம் பதினொன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

பேராசிரியர்

பேராசிரியர் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை எழுதியிருக்க வேண்டும். ஆனால் பொருளதிகாரத்தின் இறுதி நான்கு இயல்களுக்கு எழுதிய உரைகள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. இவ்வுரையே மிகச் சிறந்ததாக விளங்குகின்றது. இப்பேராசிரியர் தம் உரைகளில் நன்னூல், தண்டியலங்காரம், யாப்பருங்கலம் ஆகிய நூலாசிரியர்களின் கருத்துக்களை எடுத்துக் கூறி மறுக்கின்றார். எனவே இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் எனலாம்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு
(குறள் 632) பக்.5

என்ற குறட்பாவில் வரும் கற்றறிதல் என்பதனைப் பேராசிரியர் கற்றலும் அறிதலும் என இரண்டாகப் பிரித்துக் கூறியிருப்பதைப் பரிமேலழகர் தம் உரையில் மறுத்து எழுதியுள்ளார். பரிமேலழகர் காலம் 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி ஆதலின் பேராசிரியர் காலம் அதற்கு முற்பட்டது. அதாவது 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி என்பது பெறப்படும்.

மேலும் இவர் செய்யுளியல் உரையில் (149)
கொன்ற ஏத்தித் தொழுவோம் யாமே

என்னும் கொன்றை வேந்தன் செய்யுள் மேற்கோள் காட்டுகின்றார். மதுரை என்னும் நீதி நூலிலிருந்து அட்டாலும் பால் சுவை என்ற பாடலையும் மேற்கோள் காட்டுகின்றார் (செய் 72) இவை பேராசிரியரின் காலத்தை அறிவிக்கும் தக்க சான்றுகளாய் உள்ளன.

சேனாவரையர்

இவர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை எழுதியுள்ளார் ஆற்றூர்ச்சேனாவரையன் என்பார் ஆசிரியர் மாணாக்கர் முறையில் தம் முன்னோரிடமிருந்து தமக்குக் கிடைத்த நிலம் மனைகளை தம்மூர்ச் சோமநாத சுவாமி என்னும் பெயரிய சிவன் கோயிலுக்கு வழங்கிய செய்தி ஒரு கல்வெட்டில் குறிக்கப்பெறுகிறது இக்கல்வெட்டின் காலம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் ஏழாம் ஆட்சியாண்டு ஆகும். அது கி.பி. 1275 ஆகும். இப்பாண்டியனை எம்மண்டிலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகரன் (கி.பி.1268) - 1311) என்று வரலாறு ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே சேனாவரையர். அப்பாண்டிய மன்னன் காலத்தில் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் எனலாம்.

நச்சினார்க்கினியர்

இளம்பூரணர் சேனாவரையர் பேராசிரியர் ஆகிய உரையாசிரிர்களை நச்சினார்க்கினியர் தம் உரையுள் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் திருமுருகாற்றுப்படை உரையில் பரிமேலழகர் கொள்கையினை மறுத்து எழுதியுள்ளார் இவர் தொல்காப்பியச் சொல்லதிகார உரையில் நன்னூல் ஆசியரான பவணந்தி முனிவரின் கருத்துக்களை எடுத்துக் காட்டுகின்றார். இவர் சீவக சிந்தாமணியில் அடியார்க்கு நல்லாரின் கருத்தை மறுத்து எழுதியுள்ளார்.

நச்சினார்க்கினியர் தம் சீவக சிந்தாமணி உரையில் மத்தி இலம்பகத்தைச் சார்ந்த நாடகம் நயந்து காண்பர் என்ற 391 ஆம் பாடலுக்கு பொருள் எழுதும் போது கோடகம் என்பதற்குத் தாமம், முகுடம், பதுமம் கோடகம் கிம்புரி என்னும் ஐவகையிற் சிகரமாய்ச் செய்த முடி என்று விளக்கம் தருகிறார். இக்கருத்து சூடாமணி நிகண்டினைத் தழுவி எழுதப்பட்டதாகும். இதன் ஆசியரின் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு எனவே நச்சினாக்கினியர் காலம் கி.பி.14 நூற்றாண்டின் இறுதி ஆகும்.

நச்சினார்க்கினியர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியிலாவது பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலாவது வாழ்ந்திருக்கலாம் என்பர் பேராசிரியர் மு.அண்ணாமலை ஆயின் நச்சினார்க்கினியரும் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது அறிஞர் சிலரது கருத்தாகும்.

தெய்வச்சிலையார்

இவர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை இயற்றியவர் இவர் இளம்பூரணர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் ஆகிய மூவர்க்கும் பிற்பட்டவர் எனலாம் இவர் தம் உரையில் மற்ற உரையாசிரியர்களையோ கருத்தையோ குறிப்பிடவில்லை.

கல்லாடர்

சொல்லதிகாரத்திற்கு உரை இயற்றிய ஆசிரியர் அனைவர்க்கும் பிற்பட்டவர் கல்லாடர், இளம்பூரணர், சேனாவரையர் ஆகிய இருவரும் காட்டிய உதாரணங்களைக் கல்லாடர் அப்படியே மேற்கொள்கின்றார். பெயர்நிலைக் கிளவி என்னும் சூத்திர உரை நச்சினார்க்கினியர் உரையின் எதிரொலியாகவே உள்ளது. கல்லாடர் நச்சினார்க்கினியர்க்குப் பின்னும் பிரயோக விவேக நூலார்க்கு முன்னும் வாழ்ந்தவர் எனலாம் இவரது காலம் 15, 16 ஆம் நூற்றாண்டாகலாம்.

மேற்குறிப்பிட்ட கருத்துக்களை நோக்கும் போது தொல்காப்பிய உரையாசிரியர்கள் காலம் கி.பி.11 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.16 ஆம் நூற்றாண்டு முடிய எனலாம்.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link