ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பிய எழுத்ததிகாரம் சிறப்புப்பாயிரம்

முன்னுரை

தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் முதலில் உரைக்கப்பட்டுள்ளது. சிறப்புப்பாயிரமாகும். எந்நூல் உரைப்ப தாயினும் அந்நூற்கு முதலில் பாயிரமுரைத்தே பனுவலுரைக்க வேண்டுமென்பது மரபு ஆகும். ஆயிரமுகத்தான் அகன்ற தாயினும், பாயிரமில்லது பனுவலன்றே என்பதனாலறிக.

பாயிரமென்பது நூற்குப் புறவுரையாக அமைவதாகும். பாயிரம் கேட்டு நூல் கேட்டால் நூல் நுவல்வது மாணாக்கனுக்கு இனிது விளங்குமாதலின் பாயிரம் கேட்டல் வேண்டும். அப்பாயிரமாவது பொதுவும் சிறப்புமென இருவகைத்து, சிறப்புப்பாயிரம் பற்றிச் சிறிது சிந்திப்போம்.

சிறப்புப்பாயிரத்தின் இலக்கணம்

"பாயிரத்திலக்கணம் பகருங்காலை
நூல் நுதல் பொருளைத் தன்னகத்தடக்கி
ஆசிரியத்தானும் வெண்பா வானும்
மருவிய வகையான் நுவறல் வேண்டும்"

என்பதாகும். நூல் இயற்றுபவரே பாயிரம் பகறல் தன்னைத்தானே புகழ்ந்ததாகும். அது மரபன்றாதலின் பாயிரம் செய்தற்குரியோர் பனுவலியற்றுவோர்தம் ஆசிரியர், அன்றித் தன்னொடு ஒருங்குகற்ற ஒரு சாலை மாணாக்கர், அன்றித் தன் மாணாக்கர், என இவர், இந்நூற்குச்சிறப்புப்பாயிரம் செய்தார் தொல்காப்பியனாருடன் பயின்ற ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார் ஆவர். சிறப்புப்பாயிரம் பதினோரு வகையாகும்.

ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண்பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத்தியல்பே
காலங்களனே காரணமென்றிம்
மூவகையேற்றி மொழிநருமுளரே

என்பதாகும். இப்பதினொன்றும் சிறப்புப் பாயிரத்துள் காணக்கிடைப்பதாகும்.

சிறப்புப்பாயிரம் செப்புவது

வட வேங்கடந் தென்குமரி ஆ இடைத் தமிழ்கூறும் நல் உலகத்து வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின் - என்ற தொடருக்கு வடக்கின் கண் உளதாகிய வேங்கடமும் தெற்கின் கண் உளதாகிய குமரியுமாகிய அவற்றை எல்லையாகவுடைய நிலத்து வழங்கும் தமிழ் மொழியினைக் கூறும் நன் மக்களால் வழங்கும் வழக்கும் செய்யுளுமாகிய என்று இளம்பூரணனார் கூறுகிறார். இத் தொடருக்கு வடக்கின் கண் வேங்கடமும் தெற்கின்கண் குமரியுமாகிய அவ்விரண்டெல்லைக் குள்ளிருந்து, தமிழைச் சொல்லும் நல்லாசிரியரது வழக்கும் செய்யுளுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினாலே என்று நச்சினார்க்கினியர் உரை செய்கின்றார். வட வேங்கடந்தென்குமரி எனவே தொல்காப்பியர் காலத் தமிழ் நாட்டின் எல்லை பெறப்பட்டது.

மங்கலத்திசை யாதலின் வடக்கு முன் கூறப்பட்டது. தமிழ் நாட்டிற்கு வடக்கின்கட் பிற வெல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லையாகக் கூறினார். அகத்தியனார்க்குச் செவியறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுறுக் கடவுள் வரைப்பென்னும் இயைபு பற்றி என்பது என்று தொல்காப்பிய சூத்திர விருத்தி கூறுகின்றது.

வடவேங்கடந்தென்குமரி இதில் குமரி என்பது யாறோ, மலையோ, கடலோ என்ற ஐயத்தல் பலரும் ஆராய்ந்து யாறே என்றனர்.

"வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்"

என்ற புறநானூற்றுப் பாடலிலுள்ள குமரி என்பதற்கு ஆறு என்று அதனுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மலையும் இருந்தது என்பது குமரிக்கோடும் என்ற சிலப்பதிகார அடியால் விளங்குகின்றது. குமரியாற்றின் தெற்கே நாற்பத்தொன்பது நாடுகடல் கொண்டது. ஆகலின் என புலவர் ஞா.தேவ நேயப்பாவாணர் அவர்கள் கூறி உள்ளார்கள். கடல் கொள்வதன் பின்பு பிற நாடும் உண்மையின், தெற்கும் எல்லை கூறப்பட்டது என்று இளம்பூரணர் உரையில் கூறப்பட்டுள்ளது. எனவே குமரி என்பது தொல்காப்பியர் காலத்தில் ஆறு என்பதைக் குறிப்பிடுகின்றது என்பது அறிஞர் பலரின் முடிவு.

நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையத்து என்பதால் பாண்டியன் மாகீர்த்தி அவையின்கண்ணே அரங்கேற்றப்பட்டது என்பதால் காலமும் களனும் பெறப்பட்டன. தமிழ்ப் பேராசிரியர் கா.சுப்பிரமணியம் அவர்கள், தென்னவன் காலம் கடல் கோள் நடந்த காலமாகத் தெரிதலால் தொல்காப்பியர் காலமும் அக்காலமே என்பது தெளிவு நிலந்தரு திருவிற்பாண்டிய னெனப்பாயிரத்துள் விதந்தோதுதலின் அங்ஙனம் நிலம் தந்த பேருதவிக்குப் பின்னரே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட தென்று கொள்ளுதல் இயைபுடையதே என்று கூறுகின்றார்.

அறங்கரை நாவின் நான் மறைமுற்றிய அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து என்பதனால் கேட்டோர் பெறப்பட்டது. அதங்கோடென்னும் ஊரின் ஆசான் அவர்கள் கேட்ட கேள்விகட்கெல்லாம் குற்றமின்றி விடைபகன்றமையால் அரில்தப என்றார்.

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத்தன் பெயர் தோற்றி இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திரவியாகரணத்தினை நன்கு அறிந்த பழைய காப்பியக் குடியினுள்ளோன் தொல்காப்பியன் எனத்தன் பெயரைத் தோற்றுவித்து என்றதனால் ஆக்கியோன் பெயரும் நூற்பெயரும் பெறப்பட்டன.

"மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலையிருந்த சீர்சால் முனிவரன்
தன்பாற்றண்டமிழ் தாவின்றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்"

பன்னிருவருள் தொல்காப்பியர் தலை மாணாக்கர் என்பது புலனாகின்றது.

எனவே இச்சிறப்புப் பாயிரத்தான் எல்லை நூல் நுதலிய பயன், வழி, யாப்பு, காரணம், காலம், களன், மெய்ச்சொல்லும் நாவினையுடைய கேட்போர், ஆக்கியோன் பெயர், நூற்பெயர் இப்பதினொன்றும் பெறப்பட்டன. மற்றும் தொல்காப்பியர் காலத் தமிழ் நாடெல்லை அறியப்படுகின்றது. தெற்கில் குமரியாறு இருந்ததெனவும் அறிகிறோம். இரு வழக்கினையும் விளக்குதலான செந்தமிழ் மொழியின் பெருமை மிகு முழு முதல் நூல் என அறிகிறோம். பாண்டியன் மாகீர்த்தியின் அவையில் அரங்கேறியதால் இது இராமாயண காலத்திற்கு முன், கடல்கோளுக்குப் பின் இயற்றப்பட்ட சீர்மிகு செந்தமிழ் நூல் ஆகும். பன்னூறாண்டு கட்கு முன் இயற்றிய நூல் இன்றைக்கும் இருந்து நம் தமிழுக்குப் பெருமை சேர்க்கின்றது நாம் பெற்ற பேறேயாகும்.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link