ஆய்வுச் சிந்தனைகள்


மூதறிஞர் அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பணிகள்

முன்னுரை:

தற்காலத்தில் வாழ்ந்து வரும் குறிப்பிடத்தக்க தமிழறிஞர்களுள் அடிகளாசிரியரும் ஒருவராவார். இவர், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், படைப்பிலக்கிய நூல்கள் என்ற வகையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கிய நூல்களுள் தொல்காப்பியம் பற்றிய நூல்களின் பணிகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பணிகள்

மூதறிஞர் பேராசிரியர் திரு. அடிகளாசிரியவர்கள் பின்வரும் கால வகையில் தொல்காப்பியப் பணிகளைச் செய்துள்ளார்.

1. தொல்காப்பியம் - எழுத்து - இளம்பூரணர் (1969)

2. ஐவகையடியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம் (1977)

3. தொல்காப்பியம் - பொருள் - செய்யுளியல் - இளம்பூரணர்.

4. தொல்காப்பியம் - சொல் - இளம்பூரணர் (1990)

5. தொல்காப்பியம் - பொருள் - (செய்யுளியல்: நீங்கலாக ஏனைய எட்டு இயல்கள்) அச்சில்

6. தொல்காப்பியம் - பொருள் - செய்யுளியல் - உரைநடை - அச்சில்

இனி ஒவ்வொன்றாய் நோக்குவோம்.

1. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - இளம்பூரணர் - 1969

திரு. அடிகளாசிரியர் தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணர் உரையை 1959 ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். அவர் அப்பதிப்பைத் தம் சொந்த பொருட்செலவில் பதிப்பித்து அவரே வெளியிட்டுள்ளார். அப்பதிப்பின் சிறப்புகள் வருமாறு:

இவர் ஏட்டுப்பிரதிகளுடன் ஒப்பு நோக்கி விளக்கக் குறிப்புகளுடன் அமைத்துத் தந்துள்ளார். எழுத்ததிகார இளம்பூரணர் உரை வெளியீட்டின் வளர் நிலையில் இவர் பதிப்பு சிறப்பாக அமைந்துள்ளமை காணலாம். எடுத்துக்காட்டுகளின் அகராதி, உரைப்பொருள் அகரவரிசை என்னும் அகராதிகள் இப்பதிப்பின் சிறப்புக்குக் காரணமாகும்.

அடிகளாசிரியர் அப்பதிப்பின் முன்னுரையில் அப்பதிப்பை அச்சிட எடுத்துக்கொண்ட முயற்சிகளை எழுதியுள்ளார். அவ்வுரை நம் நெஞ்சை நெகிழ வைக்கின்றது.

2. ஐவகையடியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம் (1977)

ஐவகைப்படியும் என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்கம் என்ற ஆய்வு நூலைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை 1977 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு இராசபாளையம் மணிமேகலை மன்றத்தார் நிகழ்த்திய இரு சூத்திர விளக்கக் கட்டுரைப் போட்டியில் அடிகளாசிரியர் கலந்து கொண்டு முதற் பரிசைப் பெற்றுள்ளார். அப்பரிசுப்பெற்ற ஆய்வுக் கட்டுரையை சென்னைப் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டுள்ளது.

3. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் - இளம்பூரணர் உரை (1985)

மூதறிஞர் அடிகளாசிரியர் தமது 72 ஆம் அகவையில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியில் நியமிக்கப்பட்டார். அப்பணி நியமனக் காலத்தில் மேற்பதிப்பை அடிகளாசிரியர் உருவாக்கித் தந்தார். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகப் பதிப்புத்துறை 1985 ஆம் ஆண்டு அந்நூலை அச்சிட்டுள்ளது.

அடிகளாசிரியர் ஏறத்தாழ பதினைந்து இலக்கண நூல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, பல ஏட்டுச் சுவடிகளுடன் ஒப்பிட்டு, அருமையான பாட பேதத்துடன் அந்நூலை பதிப்பித்துள்ளார். பலதமிழ்ப் பேராசிரியர்கள் அந்நூலைப் படித்து நல்ல விளக்கம் பெற்று வருகின்றனர் என்பது வெள்ளிடைமலை.

4. தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - இளம்பூரணர் உரை - 1990

இந்நூலையும் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழம் பதிப்புத்துறை வெளியிட்டுள்ளது. இந்நூலும் அடிகளாசிரியரின் எழுத்ததிகாரப் பதிப்பைப் போன்று சிறப்புடன் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

5. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அச்சில் (செய்யுளியல் நீங்கலாக ஏனைய எட்டு இயல்கள்)

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அடிகளாசிரியர் பணியாற்றிய காலத்தில் மேலது நூல் உருவாயிற்று. ஆனால் அந்நூல் அச்சுவாகனம் ஏறாமல் இருப்பதை அறிந்து அடிகளாசிரியர் நாளும் வருந்திக் கொண்டுள்ளார். அவரின் வருத்தத்தைத் தீர்ப்பது தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பொறுப்பாகும்.

6. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் - ஆராய்ச்சி உரைநடை (அச்சாகும் நிலை)

மூதறிஞர் அடிகளாசிரியர் அவர்கள் தொல்காப்பியச் செய்யுளியலின் மேல் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். அவ் ஈடுபாட்டின் காரணமாக நாளும் செய்யுளியல் பற்றிய சிந்தனையைக் கொண்டிருப்பவர். செய்யுளியல் பற்றிய பல அரிய ஆராய்ச்சி சிந்தனைகளின் தொகுப்பே மேலது நூலாகும்.

அந்நூல் எளிய உரைநடையில் அமைந்துள்ளது. ஆனால் பொருள் முட்டுப்பாட்டின் காரணமாக அச்சுவாகனம் ஏறாமல் உள்ளது.

முடிவுரை:

1. மூதறிஞர் அடிகளாசிரியர் தொல்காப்பியத்தின் மேல் மிகுந்த ஈடுபாடு உடையவர்.

2. தொல்காப்பிய முழுமைக்கும் அடிகளாசிரியரின் பதிப்புப்பணி அமைந்துள்ளது.

3. அடிகளாசிரியர் இளம்பூரணர் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவரின் உரையை மட்டும் பதிப்பித்துள்ளார். ஆனால் உரிய இடங்களில் பல உரையாசிரியர்களின் உரையைக் காட்டியுள்ளார்.

4. ஏட்டுச் சுவடிகளுடன் ஒப்பீடு, நல்லபாட பேதம், நூற்பா முதலானவற்றின் அகரவரிசை ஆகிய இவையெல்லாம் இவரின் பதிப்புச் சிறப்பிற்குக் காரணங்களாகும்.

5. கையெழுத்து வடிவில் உள்ள இவரது தொல்-செய்யுளியல் உரைநடை அச்சுவாகனம் ஏறினால் தமிழுலகம் மிகப்பெரிய பயனுறும்.

6. தமிழக அரசு இவருடைய தொல்காப்பியப் பணியைப் பாராட்டி இவருக்குத் தொல்காப்பியச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.7. அடிகளாசிரியர் தொல்காப்பியம் தொடர்பாகப் பல அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ள அவற்றைத் தனித்து ஆராயலாம்.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link