ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியம் நூல் வரலாறு

தொல்காப்பியம் என்னும் நூற்பெயர் தொல்காப்பியனரால் செய்யப்பட்டது. என்ற பொருளில் வழங்கப்பட்டது தொல்காப்பியம் என்னும் பெயருக்கு இந்நூலின் உரையாசிரியர்களாகிய இளம்பூரணரும், சேனாவரையரும் இவ்வாறே பொருள் கொண்டு இலக்கண விதிகள் கூறியிருத்தலை அவர்தம் உரைகளில் காணலாம். தொல்காப்பியனாரோடு உடன் பயின்றவராகக் கூறப்படும் பனம்பாரனாரால் இத்தொல்காப்பியத்திற்கு இயற்றப் பெற்ற சிறப்புப் பாயிரத்தில்,

"தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோன்"

என இக்கருத்து அமைந்திருத்தலும் குறிப்பிடத்தக்கது. இந்நூலாசிரியரின் பெயராகிய தொல்காப்பியர் என்பதே, இந்நூலிற்கு வழங்கப்பெற்ற பெயர் என்றும், இப்பெயர் பிற்காலத்தில், தொல்காப்பியம் எனப் பிழையாக வழங்கப்பட்டது என்றும் கூறுவோரும் உண்டு.

தொல்காப்பியத்தின் முதல்

தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக அமைந்தது தலைச் சங்கத்தில் அகத்தியனாரல் இயற்றப்பெற்ற அகத்தியம் என்னும் நூல் என்பர்.

"அகத்தியமே முற்காலத்து முதல் நூல் என்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம், அதன் வழிநூல் என்பதூஉம் பெற்றாம்"

என்பது, தொல்காப்பியத்துப் பேராசிரியர் உரையில் காணப்படுகின்றது. தலைச்சங்கத்திலும், இடைச் சங்கத்திலும் இருந்து தமிழ் ஆராய்ந்தவராக இறையனார் களவியல் உரையில் குறிப்பிடப்பெற்ற அகத்தியனாரைப் பற்றியும், அவரால் இயற்றப்பெற்ற அகத்தியத்தைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளுவதற்கு உரிய பழைய நூற்சான்றுகள் கிடைக்கவில்லை.

கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் எழுதப்பெற்ற உரைகளில், அகத்தியம் என்ற பெயரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட சில நூற்பாக்களும், இக்காலத்தில், பேரகத்தியம் என்ற பெயருடன் அச்சிடப்பெற்று வழங்கும் நூற்பாக்களும் பிற்காலச் சொல் அமைப்புடனும், வடமொழிச் சொற்கள் மிகுதியாக விரவப் பெற்றும் உள்ளன. எனவே, அகத்திய நூற்பாக்கள் என்ற பெயரால் காணப்படும் அந்நூற்பாக்கள் தலைச் சங்கத்தில் இருந்து தமிழ் ஆராய்ந்தவர் எனக் கூறப்படும் அகத்தியனார் செய்த அகத்தியம் என்ற பழைய இலக்கண நூலினைச் சேர்ந்தன எனக் கொள்ளுதற்கில்லை.

அகத்தியர் என்னும் பெயருடய முனிவர் பலர் வடநாட்டிலும், தென்னாட்டிலும், பல இடங்களிலும் பல காலங்களிலும் வாழ்ந்தனர் என்பதனை வால்மீகி, இராமாயணம் முதலிய நூல்களால் அறியலாம். அவர்களுக்குள், தலைச்சங்கப் புலவராய் அகத்தியம் என்ற நூலினை இயற்றிய அறிஞர், தென்னாட்டிலேயே நெடுங்காலம் இருந்து தமிழ் வளர்த்த புலவராதல் வேண்டும்.

"அகத்தியனாரால் செய்யப்பட்ட மூன்று தமிழினும்" எனப் பேராசிரியர் கூறுதலால், அகத்தியனார், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் உரிய இலக்கணமாக, அகத்தியம் என்ற நூலினை இயற்றினார் என்பது புலனாகும்.

தொல்காப்பியத்தில் ஏறத்தாழ இருநூற்றைம்பது இடங்களில், முன்னைய நூலாசிரியர் பலரைத் தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார். "என்மனார் புலவர்" என்ப "அறிந்திசினோரே" மொழிப யாப்பறி புலவர்", மொழிப தொன்னெறிப் புலவர் எனவும், பிறவாறும் அவரால் குறிப்பிடப்படுவோரை, இலக்கண நூலாசிரியர்கள் என எண்ணலாம். இப்புலவர் பெருமக்களுள் சிலரைத் தொல்காப்பியனார் காலத்தினராகவும், பலரைத் தொல்காப்பியனாருக்கு முற்பட்ட காலத்தினராகவும் கொள்ளுதல் பொருந்தும்.

தொல்காப்பியனாருக்கு முன், புலவர் பலர் இருந்து அவர்கள் தமிழ் இலக்கண நூல்களைச் செய்துள்ளனர் என்பது அறியப்படுகின்றது. இலக்கியங்களிலிருந்து அவற்றின் எழுத்து, சொல், பொருள் முதலியவற்றின் அமைப்புமுறைகள், வரையறைகள் முதலானவற்றைத் தெரிந்து எடுத்து விளக்குவது இலக்கணம் ஆகும். ஆகவே, தொல்காப்பியனாருக்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல்களுக்கெல்லாம் அடிப்படையாக, இலக்கிய நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது.

தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம்

தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்பவரால் இயற்றப்பெற்ற சிறப்புப் பாயிரம் ஒன்று உள்ளது. தொல்காப்பியனார் பனம்பாரனார், அதங்கோட்டாசிரியர் முதலிய மாணவர் பன்னிருவர் அகத்தியனாரிடம் தமிழ் பயின்றனர் என்பது, நெடுங்காலமாகக் கூறப்பட்டு வரும் செய்தியாகும். எனவே, தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார். தொல்காப்பியனாருடன் பயின்றவர் என்பது அறிதற்குரியன அப்பாயிரத்தில் உள்ள,

"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்"

என்ற பகுதியால், தொல்காப்பியனார் வாழ்ந்த காலத்தில், தமிழ்நாட்டின் வடஎல்லை, வேங்கட மலைத் தொடராகவும், தென் எல்லை, குமரி ஆறாகவும் அமைந்திருந்தன என்பது விளங்கும்.

தொல்காப்பியனார், தம் நூலிற்கு முற்பட்ட நூல்களின் சிறப்பினை உள்ளத்துட் கொண்டு, தமிழ் மொழியை வளர்த்தற்கு இன்றியமையாத, முறையான, இயற்றமிழ் இலக்கணநூல் ஒன்றினை, இயற்றுதல் வேண்டும் என எண்ணினார். தமிழகத்தில் அமைந்த உலக வழக்கு, செய்யுள் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு, அவ்விருவகை வழக்கிலும் அமைந்த இலக்கணங்களை ஆராய்ந்தார். அவ்விலக்கணங்களை, எழுத்து, சொல், பொருள் என மூவகைப்படத் தொல்காப்பியத்துள் தொகுத்துக் கூறியுள்ளார் என்பதனை,

"வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம்தொகுத் தோனே போக்கறு பனுவல்"

என்ற நூற்பாவால் அறியலாம்.

தொல்காப்பியனார், தாம் இயற்றிய தொல்காப்பியத்தினை, நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தனது பேரவையில், நான்கு மறைகளையும் முற்ற உணர்ந்த அதங்கோட்டாசிரியரின் முன்னிலையில், அரங்கேற்றினார் என்பது புலப்படுகிறது. எனவே, தொல்காப்பியனாரை ஆதரித்து இந்நூலினைச் செய்வித்தவன், நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தன் என்பதை,

"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றியல்
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து"

என்னும் நூற்பாவால் அறியலாம்.

தொல்காப்பிய நூலின் அமைப்பு

தொல்காப்பியம் என்னும் நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை உடையது. இதில் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களாக ஆசிரியர் அமைத்திருப்பதை நோக்கும் போது, இயல்களின் எண் ஒருமைப்பாட்டில் அவர் கண்ட ஓர் அழகு உணர்ச்சி புலனாகின்றது. தொல்காப்பியத்தின் மொத்த நூற்பாக்கள் 1612 ஆகும்.

தொல்காப்பியத்தில் உள்ள மூன்று அதிகாரங்களுள் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்கள், சொற்கள் ஆகியவற்றின் அமைப்பும் வரையறையும் பற்றியன. இவை சொற்களின் பொருள்களை உணர்தற்குத் துணை புரிவன. எழுத்திலக்கணத்தினையும், சொல் இலக்கணத்தினையும் உடல் போலவும், பொருள் இலக்கணத்தினை உயிர் போலவும் கருதலாம்.

எழுத்தும் சொல்லும் பற்றிய இவ்விருவகை இலக்கணங்களைக் காட்டிலும் மக்களின் வாழ்வியல் பற்றிய பொருள் இலக்கணம், விரிவாகக் கூறுதற்கு உரியது இதற்கு ஏற்பத் தொல்காப்பியத்தில் பொருள் அதிகாரம், மற்றைய இரண்டு அதிகாரங்களினும் அளவால் பெரியதாக அமைந்திருக்கிறது.

எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகை இலக்கணங்களுள், எழுத்திலக்கணமும், சொல் இலக்கணமும் தமிழ்மொழியினைச் சிறப்பாகக் கற்போரால், ஆழமாகவும் பிரிவாகவும் கற்றற்கு உரியன.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link