ஆய்வுச் சிந்தனைகள்


பரிணாம வளர்ச்சி நோக்கி தமிழர் திருமணம்

தொல்காப்பியம் தமிழின் முதல்நூல். தமிழ் மொழிக்குரிய எழுத்து, சொல் ஆகிய இரண்டிற்கும் இலக்கண வகுக்கும் அதே நேரத்தில் தமிழரின் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுக்கும் நூலுமாகும். தொல்காப்பியம் காட்டும் அகத்திணை மரபுகள் களவியல், கற்பியல் என்ற இரண்டு கூறுகளைக் கொண்டது. தொல்காப்பியப் பொருளதிகாரம் அகம், புறம் எனத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலையும், களவு, கற்பு எனக் குடும்பவியல் வரலாற்றையும் விளக்கும் மானிடவியல் இலக்கியம் என்று தொல்காப்பியமும், சாரக சம்கிதையும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் க. நெடுஞ்செழியன். கற்பியல் முழுவதும் மக்களின் இல்வாழ்க்கையை மையமிட்டதாகவே அமைகிறது.

கற்பு

அன்புடைய தலைவியைப் பெற்றோர் கொடுப்பப் பலரறிய மணந்து வாழும் மனைவாழ்க்கை கற்பெனச் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. இவ்வதுவைச் சடங்குடன் தலைமகன் தலைமகளை மணந்துகொள்ளும் சிறப்புடைய நிகழ்ச்சியினைக் கரணம் என்ற சொல்லால் வழங்குவர் தொல்காப்பியர். வரைதலின் சிறப்பு பற்றி,

களவு வெளிப்படுவதற்கு முன் வரைதல், வெளிப்பட்ட பின்னர் வரைதல் என மணம் இருவகையில் நிகழும். உடன்போக்கு நிகழும் காலங்களில் மணம் தலைவன் இல்லதிலேயே நிகழ்வது உண்டு. உலகில் மனிதன் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற கொள்கையுடன் வாழ்ந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே இப்படித்தான் வாழவேண்டும் என்ற வாழ்வியல் கூறுகளை இலக்கணமாகக் கொண்டு வாழ்ந்தனர் தொல்காப்பியர் காலத் தமிழ் மக்கள் என்ற ஆ.சிவலிங்கனார் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். (ஆ.சிவலிங்கனார், தொல்காப்பிய உரைவளம்,ப.2)

கற்பமணம்

தொல்காப்பியர் மணத்தினைக் களவு மணம், கற்பு மணம் என்று வேறுபடுத்திக் காட்டுகின்றார்.

கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே (தொல்.கற்பு - 1)

கற்பு என்று சொல்லப்படுவது சடங்குகளோடு கூடிய திருமண முறை என்றும், கொடுத்தற்குரிய மரபினர் கொடுக்க, கொள்ளுதற்குரிய மரபினர் கொள்வது என்றும் திருமண நிகழ்வின் முறைமையைத் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார்.

சங்க இலக்கியத்தில் திருமண நிகழ்வு
உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப்
பொருஞ் சோற்ற மலைநிற்ப நிரைகாற்
.................................................................
பல்லிருங் கதுப்பி னெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றை
(அகம்.86) என்று குறிப்பிடப்படுகின்றது.

இப்பாடலடியில் குழந்தைகளைப் பெற்ற வாழ்வரசியர் நால்வர் மணப்பந்தலுக்குள் நுழைவர். பின்பு மணமக்கள் மீது பூவையும் நெல்லையும் தூவி நீராட்டுவர். பின்னர், கற்பினின்று வழுவாது நல்ல பலவாகிய உதவிகளையும் செய்து என்றும் கணவனால் விரும்பப்படும் மனைவியாக இருப்பாயாக என்று வாழ்த்துவர். தலைவனிடம் தலைவியை ஒப்படைத்து வாழ்த்து ஒலி எழுப்புவர். திங்களினை ஒத்த உரோகிணி கூடிய நன்னாளில் அதிகாலையில் திருமணம் நிகழ்ந்துள்ளதனை அறிய முடிகிறது..

"கொடுப்போர் இன்றியும் கரணமுண்டே" (தொல்.கற்பு - 2)

கொடுப்போர் இன்றியும் கரண நிகழ்வு நடைபெறும் என்று கூறுகிறார். காரணம் எப்போது சமுதாயத்தில் கட்டாய நிகழ்வாக ஏற்பட்டதென்றால் பொய் அதிகம் நிகழ்ந்ததனால் என்கிறார்.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப"
(தொல்.கற்பு.143)

இந்நூற்பாவால் பொய்கூறலும், வழூஉப்பட ஒழுகலும் தோன்றிய பின்னர் தான் புரோகிதரை வைத்துச் செய்யும் மணம் ஏற்பட்டது என்பது புலனாகிறது. முதலில் அந்தணர், அரசர், வணிகர் என்று மூவர்க்கு மட்டும் நிகழ்த்தப்பட்டுப் பின்னர் வேளாண்மை செய்வோருக்கும் உரியதாயிற்று என்று குறிப்பிடுகிறார்.

இன்பத்தை முன்னிட்டுக் காதல் கொண்டனர், பெற்றோர் அறிந்தோ, அறியாமலோ காதல் மணம் செய்தனர். அக்காதலரின் களவு மணத்தைக் கற்பு மணமாகப் பெற்றோரோ, உற்றாரோ, உடனிருந்து செய்து வைத்தனர் என்கிறார் (பண்டிதர் அ.கி.நாயுடு, தொல்காப்பியர் கண்ட தமிழ்ச் சமுதாயம் ப.7)

நல்ல நாள் குறித்தல்

அகநானூற்றுப் பாடலில் திருமணத்திற்கு நல்ல நாள் பற்றியச் செய்தியும் காணப்படுகிறது.
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
(அகநானூறு-86)
இச்செய்யுள் அடிகளில் தீய கோள்கள் தம்மைவிட்டு நீங்கப்பெற்று வளைந்த வெள்ளிய திங்களானது தீமையில்லாத சிறந்த புகழையுடைய உரோகிணி நாளிடத்தே வந்தெய்தியதாக என்று குறிப்பிட்டுள்ளனர்.

..........................தெள்ளொளி
யாங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கள்
சகட மண்டிய துகடீர் கூட்டத்து
(அகநானூறு-136)

இப்பாடலடிகளிலும் திருமண உறவுக்கு நல்ல நாள் குறிப்பிடப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. நல்ல நாளிலும், அதிகாலைப்பொழுதிலும் மணம் நடைபெற்றுள்ளது. வீர மணத்திலும் (மகட்பாற்காஞ்சி), (புறம்-18)-இல்) நல்ல நாள் தெரிவு செய்யப்பட்டது. முல்லை நில ஆயர்களும் ஏறுதழுவி வெற்றி பெற்ற பின்னரே திருமணத்திற்கான நாளைக் குறிக்கும் வழக்கம் இருந்துள்ளதைக் கலித்தொகை 102 ஆம் பாடல் கூறுகின்றது.

திருமணம் நிகழுமிடம்

சங்க காலத்தில் திருமணம் பெண் வீட்டிலேயே நடைபெற்றுள்ளதை அறிய முடிகின்றது. தலைவி உடன்போக்கு மேற்கொண்ட போதும் தலைவியின் தாய், தலைவனின் தாயிடம் உங்கள் வீட்டில் சிலம்பு கழிதல் சடங்கு நடைபெற்று முடிந்துவிட்டது. வதுவைச் சடங்காவது எம் வீட்டில் நடத்த வேண்டும் என்று கேட்பதை ஐங்குறுநூறு - 399 ஆம் பாடலின் மூலம் அறிய முடிகிறது. பழந்தமிழர் சமுதாயத்தில் திருமணம் பெண்வீட்டில் நடைபெறுவதே வழக்கமாக இருந்துள்ளது. இன்றும் பெரும்பாலான திருமண நிகழ்வுகள் பெண் வீட்டில்தான் நிகழ்த்தப்படுகின்றன.

இன்றைய மணம்

தமிழர் திருமணங்கள் இன்றும் காலையில்தான் நடைபெறுகின்றன. ஆனால் ஒவ்வொரு இனத்திற்குத் தக்கவாறு சிறிது வேறுபாட்டுடன் காணப்படுகிறது. மேல் குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தார்க்கும் உரிய கரணம், கீழோராகிய வேளாண்மை செய்பவருக்கும் உரியதாகிறது.

அன்று திங்களுடன் உரோகிணி கூடிய நன்னாளில் திருமணம் நடைபெற்றது. இன்றும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துதான் திருமண நிகழ்வினை ஏற்பாடு செய்கின்றனர். சங்க இலக்கியக் காலத்தில் பெண்கள் கூடி நிகழ்வினைச் செய்துள்ளனர். தாலி அணிவித்த குறிப்புகள் இல்லை. காப்பிய காலத்தில் மங்கல நாண் அணிந்த குறிப்பு உள்ளது. (சிலம்பு) ஆனால் இன்று அனைத்துத் தமிழ்ச் சமுதாயத்திலும் தாலி அணிவிக்கின்ற பழக்கம் உள்ளது. புரோகிதர் வைத்துத் தான் திருமண நிகழ்வினையே நடத்துகின்றனர். புரோகிதர் மணம் ஆரியப் பண்பாட்டு கலப்பினால் வந்தது என்று கூறலாம். தமிழர் திருமணம் மனித உறவுநிலைகளைக் காண உதவும் அரிய நிகழ்வாகும். இரு குடும்பங்களின் தொடர்பினை ஒருங்கிணைக்கும் சாதனமாகும்.

முடிவுரை:

தமிழர் திருமணம் என்பது தனிமனித நிலையிலிருந்து சமூக நிலைக்குள் வளர்ந்து, நாடு முழுவதும் பரவிய பண்பட்ட வாழ்வியலின் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. தமிழ்ச் சமூகம் நாகரீக நிலைக்குத் தள்ளப்பட்டாலும், சங்க கால எச்ச மரபுகள் மனித வாழ்வியலில் இன்றும் பின்பற்றப்பட்டுள்ளதை மேற்கண்ட தரவுகளின் வழி அறிய முடிகிறது.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link