ஆய்வுச் சிந்தனைகள்


மரபியல் - அன்றும் இன்றும்

"பல்புகழ் நிறுத்த படிமையோன்" என்று பாராட்டப்படும் தொல்காப்பியரால் முப்பெரும் பிரிவுகளைக் கொண்ட தொல்காப்யி இலக்கண நூல் படைக்கப்பட்டது. பிற மொழியில் எழுத்தும், சொல்லும் பற்றியே இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழியில் மட்டும் இலக்கியத்தில் அமையும் பொருளுக்கும் இலக்கணம் கூறப்பட்டு உள்ளது. இது தமிழ்மொழிக்கே உரிய சிறப்பியல்பாகும். ஒல்காப் புகழ்பெற்ற தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணத்தினை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மரபியல் என ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளார். ஒன்பது இயல்களுள் ஒன்றான மரபியல் உணர்த்தும் செய்திகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

மரபு என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஆன்றோர் வழங்கிய சொற்களை அவர்கள் வழங்கிய முறைப்படியே கூறுவது ஆகும். இத்தகைய மரபினைப் பற்றி கிளவியாக்கத்தில் கூறப்பட்டுள்ளது. யானை மேய்ப்பவனை பாகன் என்றும், ஆடு மேய்ப்பவனை இடையன் என்றும் கூறுவதே மரபு ஆகும். இவற்றை மாற்றிக் கூறினால் அது மரபு வழுவாகக் கருதப்படுகிறது. செய்யுளிலும் செய்யுளுக்கு உறுப்பாகக் கூறப்பட்ட இருபத்தாறனுள் ஒரு வகை மரபு கூறப்பட்டுள்ளது. இது செய்யுளுக்கே செய்யுள் வழக்கிற்கும் பொதுவாகிய வேறு சில மரபுகள் கூறப்பட்டுள்ளன. உயர்திணை, அஃறிணை என்னும் இருவகைத்திணைகளைச் சார்ந்த பொருள்களின் இளமை, ஆண்மை, பெண்மை ஆகியவை பற்றிய மரபும், அஃறிணைப் பொருள்களாகிய புல், மரம் ஆகியவை பற்றிய மரபும் கூறப்பட்டுள்ளன.

மரபியலில் இளமைப் பெயர்களாகத் தொல்காப்பியனார்

"மாற்றருஞ்சிறப்பின் மரபியல் கிளப்பிற்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்று
ஒன்பது குழவியோ டிளமைப் பெயரே"
என்று கூறியுள்ளார்.

ஆண்பாற் பெயர்களாக ஏறு, ஏற்றை, ஒருத்தல் களிறு, சே, சேவல் இரலை, கலை, மோத்தைநகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்னும் பதினைந்து பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். பெண்பாற் பெயர்களாக பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகம், கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, மந்தம் என்னும் பதின்மூன்று பெயர்களைச் சுட்டி செல்கிறார்.

இவ் இலக்கணத்தினின்றும், புல்முதல் மக்கள் ஈறாக உள்ள உயிர்த் தொகுதிகளில் இன்ன இன்ன பிரிவின்று இன்ன இன்ன இளமைப்பெயர், ஆண்பாற்பெயர், பெண்பாற் பெயர்களே வழங்கப்படும் என்ற வரையறை பழங்காலத்தில் இருந்தமை புலனாகின்றது. மக்களின் இளமையைக் குறித்ததற்குக் குழவி, மக என்னும் இரண்டு பெயர்களே, தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. இதனால் இக்காலத்தில் மக்களின் இளமை குறித்து வழங்கி வரும் பிள்ளை என்னும் சொல்லினைத் தொல்காப்பியனார் காலத்தில் கூறும் வழக்கம் இல்லை எனக் கொள்ளலாம். ஆட்டின் ஆண்பாலினை அப்பர் என்றும் குதிரையின் ஆண்பாலினைச் சேவல் என்றும், நாய், நரி, பன்றி இவற்றின் பெண்பாலினைப் பாட்டி என்றும் தொல்காப்பியனார் கூறியுள்ளார். இவ்வழக்குகள் சங்க இலக்கியங்களிலும், பிற்கால நூல்களிலும் காணப்படவில்லை. இதனால் தொல்காப்பியனார் காலத்தில் இருந்த இலக்கியங்களிலும் இவை வழக்கில் இருந்து, பின்பு வழக்கு ஒழிந்தன என்பது புலப்படும்.

மேலும் மரபியலில் வைரம் உடைய தென்னை, பனை, கமுகு, முதலியவற்றைப் புல் வகை என்று கூறியுள்ளார். உள்ளே வைரம் உடைய தேக்கு, மா, பலா, முதலியவற்றை மரம் என்றும் கூறவேண்டும் இவ்வியலில் கூறப்பட்டுள்ளது. இதனை

"புறக்காழனவே புல்லெனப்படுமே" என்றும் 630

"அகக்கா ழனவே மரமெனப்படுமே" என்றும் 631
என்றும் கூறியுள்ளார்.

மேலும் புல் என்று கூறப்படும் தென்னை, பனை முதலியவற்றின் உறுப்புகளைப் பற்றி

"தோடே மடலே ஓலை என்றா
ஏடெ இதழே பாளை என்றா
ஈர்க்கே குலையே நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்"
என்றும்

மா, பலா, முதலிய மரங்களின் உறுப்புக்களை

"இலையே முறியே தளிரே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையே உள்ளுறுர் னையவை யெல்லாம்
மரனொடு வருஉங்கிளவி என்ப"
என்றும்

முறைப்படுத்தியுள்ளார். இவ்வாறு பெயர்களைச் சொல்லியவுடனேயே, அப்பெயர்களுக்கு உரிய பொருள்களின் வேறுபாடுகளை ஓரளவு உணர்தற்கு உயரிய முறையில் பெயர்களை நுட்பமாக வரையறுத்து வழங்குதல் பண்டை மக்களின் மரபு என்பது உணர்ந்து இன்புறுவதற்கு உரியது.

இவ்விலக்கணத்தினை நோக்கும் போது தொல்காப்பியனார் காலத்தில் பனையின் பூவினைப் பூ என வழங்குதல் மரபு அன்று என்றும், அப்பூவினைப் பாளை என வழங்குதலே மரபு என்பதும் தெளிவாகின்றது,

எனவே எவ்வளவு வரையறை கூறினாலும்,

"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே"

என்பது தெற்றென புலனாகின்றது.

மேலும் மரபியலில் மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளால் பற்றப்படும் ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலி ஆகிய புலன்களுடன் மன உணர்வினையும் சேர்த்து, உயிரினங்களைத் தொல்காப்பியனார் ஆறுவகையினாற் பிரித்துள்ளார்.

அவையாவன:

"ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே,
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே!
நேரிதின் உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே"

என்று கூறியுள்ளார். உணர்வுகள் படிப்படியே தோன்றும் வளர்ச்சி நிலை பற்றி உயிர்களை இவ்வாறு ஆறு பிரிவாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார். இம்மரபியலில் உயர்தினைச் சாதிகள் நான்கனைப் பற்றியும் உத்தி முதலியன பற்றியும் கூறப்பட்டுள்ளன. இவ்வியலில் தொல்காப்பியனார் சில பெயர்களுக்கு மட்டும் மரபு வரையறை கூறியுள்ளார். தொல்காப்பியர் சுருக்கமாக வரையறுத்துக் கூறுவதற்குத் தகுந்தவாறு அமைந்த பெயர் மரபுகளை மட்டும் எடுத்துக்கூறி. விரிந்த நிலையில் வரும் மரபுடையவற்றைப் பொது விதிகளால் கொள்ள வைத்தார் என்பது தெரிகிறது.

தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள், ஆகியவற்றின் இலக்கணங்கள் அனைத்தையும் முன்னையோர் வழங்கிய மரபு பிறழாமல் கூறியுள்ளார். முன்னைய ஆசிரியர்களைத் தொல்காப்பியர், என்மனார் புலவர்" என்ப என்ற தொடர்களால் குறிப்பிடுவதும்.

"மரவு நிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும் என்ப"

"மரவுநிலை திரியிற் பிறிது பிறிதாகும்"

போன்ற நூற்பாக்களை அமைத்திருத்தலும் சான்றாக அமைகின்றன. முன்னையோர் மேற்கொண்ட மரபே தொல்காப்பியத்துக்கு முதலிலிருந்து இறுதிவரை அரண் செய்வதும் வழிகாட்டுவதும் ஆகும் என்பதும் மரபுகளை மேற்கொள்வதில் தொல்காப்பியரும் வல்லவர் என்பதும் தெளிவாகின்றது.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link