ஆய்வுச் சிந்தனைகள்


இளம்பூரணரின் உரை மரபுகள்

தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு உரை கண்ட சான்றோர்களுள் இளம்பூரணர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை கண்ட இவர் பன்னூற் புலமையும், பன்மொழிப் புலமையும் மிக்கவர். இயற்கை சார்ந்த வாழ்வியல் நெறியாளராகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கிய இவர் கண்ட தொல்காப்பிய உரை தமிழ் மக்களின் வாழ்வியல் நோக்கை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. எனவே எழுத்து மற்றும் சொல் தவிர்த்து, பொருளதிகாரம் மட்டும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வகையில் இளம்பூரணர் பல உரை மரபுகளைப் பின்பற்றி மூல ஆசிரியரின் கருத்தை விளக்கும் வகையில் இவரது உரைமரபுகளின் சிறப்புக்கள் இவ்வாய்வில் விளக்கப்படுகின்றன.

இயல் - உரை

உரையாசிரியர்கள் பெரும்பாலும் உரை எழுதும் முன்பு அந்த நூலைப் பற்றி பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது வழக்கம். இவ்வகையில் இளம்பூரணரிடம் இந்த வகையான உரை மரபு அமைந்துள்ளது. தொடக்கத்திலேயே நூற்பாக்களுக்கு உரை தரும் அளவில் நில்லாமல் உரை எழுதும் நூலின் முழுமையையும் கருத்தில் கொண்டு பொதுவான விளக்கம் அளிப்பது இவரின் உரை மரபாகும். "இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின், பொருளதிகாரம் என்னும் பெயர்த்து. இது பொருள் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். நிறுத்த முறையானே எழுத்தும் சொல்லும் உணர்த்தினர். இனி, பொருள் உணர்த்த வேண்டுதலின் இவ்வதிகாரம் பிற்கூறப்பட்டது." (பொருள். ப-1) மேற்கூறிய முறையில் அமைந்துள்ள ஒன்பது இயல்களும் அந்த இயல் கூறும் செய்தியினை முன்னுரையாகக் கூறி, இளம்பூரணர் உரை வகுத்துள்ளார் எனலாம்.

இளம்பூரணர் ஒரு இயலின் முதலில் உள்ள நூற்பாவைத் "தலைச்சூத்திரம்" என்று கூறி உரை எழுதுகின்ற பாங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவ்வகையான உரை மரபு கற்பியல், மெய்ப்பாட்டியல் தவிர மற்ற ஏழு இயல்களிலும் பின்பற்றப்பட்டுள்ளது. "தலைச்சூத்திரம்" என்று கூறி உரை எழுதுகின்ற பாங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவ்வகையான மரபு மற்ற உரையாசிரியர்களிடம் காணப்படாத புதிய உரை மரபாக அமைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக "இத்தலைசூத்திரம் என் நுதலிற்றோ எனின், அகப்பொருள் இத்துணை என வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று" (அகத்.ப.1) இவ்வாறு இயலின் தலைச்சூத்திரத்தை இயலின் முழுமையையும் உரைக்கின்ற முதற்சூத்திர உரை அறிமுகப்படுத்தும் மரபை இளம்பூரணரின் உரையில் காணமுடிகிறது.

சான்று காட்டி உரை கூறுதல்

உரை கூறும் போது இலக்கண இலக்கியங்களில் இருந்து சான்று காட்டி உரை விளக்கம் தருவது உரையாசிரியர்களிடம் காணப்படுகின்ற பொழுது மரபாகும். இவ்வகையான உரைமரபு, இளம்பூரணரின் பொருளதிகார உரையில் காணப்படுகிறது.

பொருளியலில் இலக்கண இலக்கியங்களில் இருந்து அறுபத்தொன்பது இடங்களில் மேற்கோள்கள் காட்டியுள்ளார். அகநானூறு, பதினோறு இடங்களிலும், நாலடியார் ஒரு இடத்திலும் நற்றிணை ஏழு இடங்களிலும் திருக்குறள் பதின்மூன்று இடங்களிலும், கலித்தொகை இருபத்தியிரண்டு இடங்களிலும், குறுந்தொகை ஏழு இடங்களிலும் திணை மாலை நூற்றைம்பது ஒரு இடத்திலும் எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. பொருளியலில் அறுபத்தொன்பது இடங்களில் இலக்கண இலக்கியச் சான்றுகளை மேற்கோளாகக் காட்டியுள்ளது போலவே மற்ற எட்டு இயலுக்கும் இலக்கண இலக்கிய மேற்கோளைக் கையாண்டுள்ளார். இவ்வகையான உரைத்திறன் மூலம் இளம்பூரணரின் பன்னூற் புலமையும், சான்றுகாட்டி விளக்கும். ஆய்வுப் பார்வையும் வெளிப்படுகிறது.

வினாவிடைப்பாங்கு

ஒரு கருத்தைத் தெளிவுபடுத்துவதற்கு அக்கருத்தோடு தொடர்புடைய வினாக்களை எழுப்பி அவ்வினாக்களுக்கு உரிய விடைகளை விளக்கமாகக் கூறுவது வினாவிடை.ப்பாங்கு ஆகும். இவ்வகை முறை, உரையாசிரியர்களிடம் காணப்படுகிறது. குறிப்பாக இளம்பூரணரிடம் இவ்வகையான உரை மரபு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கருத்தை அரண் செய்யும் வகையில் "இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் களவியல் பெயர்த்து, களவொழுக்கம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர் (களவு.ப.5) இப்பகுதியில் இந்த அதிகாரம் என்ன உணர்த்துகிறது? என்ற வினாவை எழுப்பி, இதற்கு விடையாகக் களவியல் என்னும் பெயர் நுதலிற்று என்பதாகும்.

இளம்பூரணரிடம் காரணம் காட்டிப் பொருள் விளக்கம் தரும் மரபு காணப்படுகிறது. மூல ஆசிரியர் சில இடங்களில் பயன்படுத்திய சொற்களுக்குப் பொருள் கூறுகின்ற தன்மையில், இது இந்தக் காரணத்தால், இவ்வாறு வைக்கப்பட்டு, இன்னபொருளைக்கொண்டு உணர்த்தப்படுகிறது எனக் காரண காரியத்தை ஆய்ந்து விளக்கும் மரபும், இளம்பூரணரிடம் அமைந்துள்ளது. பொருளதிகாரம் களவியல் முதல் நூற்பாவில் அறம், பொருளும் அறனும் என்றாங்கு" என்று நூற்பாவைத் தொடங்கியுள்ளார். இதற்கு உரை வகுத்த இளம்பூரணர் காரணம் காட்டிப் பொருள் விளக்கம் தருவது இளம்பூரணரின் உரை விளக்கத்திற்கு முக்கிய சான்றாகும்.

"அறனும் பொருளும் இன்பமும் என்னாது" இன்பமும் பொருளும் அறனும் என்றது என்னையெனில், பலவகை உயிர்கட்கும் வரும் இன்பம் இருவகைப்படும். அவையாவன போகம் நுகர்தலும் வீடுபெறுதலும் என அவற்றுள் வீடு பேறு துறவறத்தில் நின்றார்க்கல்லது எய்தல் அரிதாயிற்று. போக நுகர்தல் மனையறத்தார்க் கெய்துவது அவரெய்தும் இன்பமும் அவ்வின்பத்திற்குக் காரணம் காரியம் காட்டி இளம்பூரணர் உரை விளக்கம் தருகிறார்.

கூறியது கூறல் இன்மை

இளம்பூரணர் சில நூற்பாக்களுக்கு உரை கூறும் போது, உதாரணம் எதுவும் கூறாது பொருளை மட்டும் கூறிச்செல்வது மரபாகும். நூற்பாவிற்கான உரையைக் கூறிவிட்டு "உதாரணம்" மேற்காட்டப்பட்டது" (களவு. ப. 93) "உதாரணம் வந்த வழிக் காண்க" (கற்பு ப.151) உதாரணம் முன்னர்க்காட்டுவதும்" (செய்யு.ப.77) "உதாரணம் களவியலுள் காட்டப்பட்டன வுள்ளுங்காண்க" (பொரு.ப.188) என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தி திரும்பத் திரும்பக் கூறும் முறையினைத் தவிர்த்துள்ளார். கூறியது கூறல் என்ற குற்றத்தை தவிர்க்கவே இவ்வாறு கூறுகிறார். இவ்வகையான உரைமரபின் மூலம் இளம்பூரணரின் நுட்பமான ஆய்வு சிந்தனை வெளிப்படுத்தப்படுகிறது. ஒரு இடத்தில் கூறிய உதாரணம் அல்லது மேற்கோள் இயலின் மற்றொரு இடத்தில் கூற நேருமாயின் அவ்விடத்தில் முன் கூறியதைக்கூறாது கூறியவிடத்தை அடையாளம் காட்டுவது இளம்பூரணரின் சிறந்த உரைவளத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

உவமைக் காட்டிப் பொருள் விளக்கவும், சொற்களை விளக்கிப் பொருள் கூறவும் உவமைகளைப் பயன்படுத்தும் மரபினை உடையவர். இதன்படி, "புதுமை என்ற சொல்லுக்குத் தரும் விளக்கம் புதுமை ஆவது யாதொன்றாயினும் எவ்விடத்தினும் எக்காலத்தினுங் தோன்றாதோர் பொருள் தோன்றிய வழி வியத்தல், அது கந்திருவர் அந்தரம் போவது கண்டு வியத்தல் போல்வன" (மெய்ப்பாடு ப.122) என்பதாகும்.

இளம்பூரணரின் உரை சிறு சிறு வாக்கிய அமைப்புகளைக் கொண்டது என்பதற்கு மெய்ப்பாட்டியல் முதல் நூற்பாவின் உரையைக் கொண்டு அறியலாம்.

வியப்பெனின் அற்புதமெனினும் ஒக்கும். காமமெனினுஞ் சிங்காரமெனினும் ஒக்கும். அவலம் எனினும் கருணையெனினும் ஒக்கும். உருத்திரம் எனினும் வெகுளியெனினும் ஒக்கும். நடுவுநிலைமை எனினும் மத்திமம் எனினும் சாந்தம் எனினும் ஒக்கும். (பக்.5-6) என்பதின் மூலம் இவரது நடை எளிய சுருக்கமான சிறு சிறு வாக்கிய அமைப்புகளைக் கொண்டு விளங்கும் தடையாகத் திகழ்வதை அறிய முடிகிறது. இது இவரது நடைத்திறனைப் புலப்படுத்துவதாக அமைவதாகும்.

இளம்பூரணர் சில நூற்பாக்களுக்கு எதுவும் சொல்லாமல் தொடர்ந்து உரையை மட்டும் கூறுவார். இம்முறை, இவரது உரை கூறும் மரபுகளில் ஒன்று எனலாம். பொருளதிகாரத்தில் மரபியலில் 36 ஆம் நூற்பாவில் இருந்து தொடர்ந்து உரையை 68 ஆம் நூற்பா முடிய வெறும் உரைவிளக்கம் மட்டும் கூறுகிறார். இவ்வகையான உரைப்போக்கு மற்ற இயல்களை விட, மரபியலில் மிகுதியாக வந்துள்ளது. இம்மரபு, தெரிந்ததற்கு விளக்கம் தேவையில்லை என்பதற்கும் விரிவான விளக்கம் குழப்பமான பகுதிகளுக்கே அவசியம் என உணர்ந்தும் ஆய்வு நோக்குடன் அணுகி உரை கூறியுள்ளார் எனலாம்.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link