ஆய்வுச் சிந்தனைகள்


அகத்துறைத் தலைவனின் அளப்பருந் தகுதிகள்

சங்க காலத் தலைவன் தன்னிகரில்லாதவன் பெருமையும் உரனும் உயர்தகுதிகளாகக் கொண்டனர். தலைவனது தகுதியைத் தொல்காப்பியர் பெருமையும் உரனும் ஆடுஉ மேன என்று கூறுகிறார். இந்நூற்பாவில் பெருமை என்பதற்கு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் தரும்போது தலைவனுக்குரிய தகுதிகளாக அறிவு, ஆற்றல், புகழ், கொடை, ஆராய்தலாகிய பண்பு, நட்பு, பழி பாவம் அஞ்சுதல் ஆகியன அமைந்துள்ளனவாகக் கூறுகிறார். இவ்வியல்புகள், தலைவனிடம் விளங்கும் முறை பற்றிய விளக்கமாக இக்கட்டுரை அமைகிறது.

தலைவனுக்குரிய அறிவு

அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் திருவள்ளுவர். தலைவன் இயல்பாக அறிவுத்திறன் மிக்கவனாக விளங்குகிறான் தலைவன் தன் உடல் வலிமையின் அடிப்படையில் போர்க்களத்திற்குச் சென்றாலும், தன்வலிமை, பிறன் வலிமை, துணை வலிமையினை அறிந்து செயல்படுவதற்கு அறிவே கருவியாக அமைகிறது. அதனால்தான் போர்வயிற் பிரிவை மேற்கொள்ளும் தலைவன் உடல் வலிமையோடு அறிவையும் பயன்படுத்தி வெற்றி பெறுகிறான். தலைவன் இயல்பைத் தொல்காப்பியர் அவன் அறிவு ஆற்றல் அறியும் என்று கூறுவதன் மூலம் தலைவனின் அறிவுடைமையும் அவ்வறிவாற்றலைப் புரிந்து கொண்டு செயல்படும் தலைவியின் சிறப்பும் ஒரு சேர உணர்த்தப் படுகின்றது.

ஆற்றல்

தலைவனுக்கு உடல் வலிமையாகிய ஆற்றல் மிகப் பெருஞ்செல்வமாகும். இவ்வாற்றல் புறவாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மட்டுமின்றி அகவாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் காரணமாக அமைகிறது. போர்க்காலத்திலும் பொருள் தேடுவதிலும் தலைவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாக செயல்படுகிறான். அரசனின் ஆணை ஏற்று போர்க்களத்தில் திறன் காட்டும் தலைவன் அன்பிற்குரிய தலைவியோடு நிறைவாக வாழ்வதற்கு வருவாய் ஈட்ட இடம் பெயர்ந்து பொருள் தேடுகிறான். வழியில் பாலை நிலக் கொடுமைகளை எதிர்கொள்கிறான். ஆறலைக் கள்வர்களின் அலைக்கழிப்பை புறந்தள்ளுகிறான். தலைவியை இரவுக் குறியில் காண வரும் போது வழியிடைக் காட்டுப் பகுதியில் கொடிய விலங்குகளால் ஏற்படும் துன்பங்களைப் பொருட்படுத்தாத ஆற்றல் தலைவனின் பெருமைக்குரிய தகுதியாக அமைகிறது.

புகழ்

"தோன்றிற் புகழோடு தோன்றுக" என்னும் நன்மொழிக்கேற்ப தலைவனின் செயல்பாடுகள் சமூகத்தில் போற்றிக் கொண்டாடப்படும் நிகழ்வுகளாக அமைகின்றன. பிறப்பு, குடிமை, ஆண்மை, தோற்றம், செல்வம் என்று பல தகுதிகளால் காண்போரும், கேட்போரும் புகழ்ந்துரைக்கும் சிறப்போடு தலைவன் விளங்குகிறான். இருபெரு வேந்தர்களிடையே வேறுபாட்டினை நீக்கி ஒற்றுமை ஏற்படுத்தும் தூதிற் பிரிவு தலைவனின் அறிவாற்றலை வெளிப்படுத்தி அனைவரின் புகழ்ச்சிக்கும் உரியதாகின்றது. ஊரைப் பாதுகாக்கும் கடமையைத் தலைவன் மேற்கொள்ளும் காவற் பிரிவும் உயர் தகுதி மிக்க தலைவனின் உன்னதமான புகழுக்குக் காரணமாக அமைகிறது.

கொடை

வள்ளண்மைத் தன்மையாகிய கொடையும் தன்னிகரில்லாத் தலைவனின் மற்றொரு தகுதியாகும். அறவோர்க்கு அளித்தலும் அந்தணரைப் பாதுகாத்தலும் துறவிகளுக்குத் தானம் தருதலும் என்று பலவகையான கொடைப் பண்புகளைத் தலைவி மேற்கொள்கிறாள். இத்தகைய தலையின் செயல்பாடுகளுக்குத் தலைவனின் துணை நிற்கும் பண்பே பெருங்காரணமாக அமைகிறது. தலைவிக்குப் புதல்வன் பிறந்த காலத்து தலைவன் தானம் வழங்குவது அவனது கொடைப் பண்பினை எடுத்துக்காட்டும் மற்றொரு நிகழ்வாகும். கோவலன் புதல்வியாகிய மணிமேகலை பிறந்தபோது அறவோர்க்கும் வறியோருக்கும் தானம் வழங்கியதையும், அவன் "இல்லோர் செம்மல்" என்று புகழப்பட்டதையும் இங்கு சான்றுகளாகக் கொள்ளலாம்.

ஆராய்தல்

தலைவன் ஆராய்ந்து அறிதலாகிய இயல்பில் சிறந்து விளங்குகின்றான். தலைவியோடு கொண்ட களவு வாழ்வில் இவ்வியல்பு தலைவனிடம் நன்கு வெளிப்படுகிறது. தலைவியைக் காட்சி என்னும் துறையில் காணும் தலைவன் அவளைத் தன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்கிறான். அதே வேளையில் தலைவியின் மனதில் தன்னைப் பற்றித் தோன்றும் கருத்தினைத் தெரிந்து கொள்ள முயல்கிறான். தலைவியிடம் நேரடியாகப் பேசாமல் அவள் கேட்குமாறு வண்டை முன்னிலைப்படுத்தித் தன் காதலுணர்வினை வெளிப்படுத்துகிறான். இதனைக் கேட்கும் தலைவி அவனது எண்ணத்திற்கு இசைவுடையவளானால், குறிப்பாகவேனும் தன் காதலை வெளிப்படுத்துவாள், மேலும் களவு வாழ்வில் தடைகள் ஏற்படும் போதெல்லாம் அவற்றை நீக்க தோழன், தோழியரைத் துணை கொள்ளும் பாங்கிலும் தலைவனின் ஆராய்தலாகிய இயல்பினைக் காணமுடிகிறது. புறக் கடமைகளை ஆற்றும் போது சிறப்பாகச் செயல்பட்டு செய்வினை முடித்த செம்மலாக தலைவன் விளங்குவதற்கும் ஆராய்தலாகிய இயல்பு பெரிதும் துணை புரிகிறது.

பண்பு

பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதலாகும் இடமறிந்து செயல்பட்டு எந்நிலையிலும் சிறப்போடு விளங்குதலை பண்பென்று கூறுவர். தலைவன் தன் காதல் வாழ்விலும் புற வாழ்விலும் போற்றுதலுக்குரியவனாகத் திகழ்கிறான். தன்னிகரில்லாதவனாக தலைவன் பெருமை பெறுவதற்கு அவனது அறிவாற்றலும் உடல் வலிமையும் தோற்றச் சிறப்பும் மட்டுமின்றி பண்பாட்டுச் சிறப்பும் காரணமாகிறது.

நட்பு

ஒருவருக்கு ஆற்றல் அதிகமாயினும், துணை வலிமையின் பயன்பாடு, எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு பெருந்துணையாக அமைகிறது. களவு வாழ்வில் தலைவனுடைய நண்பனாகிய தோழன் இன்றியமையாத பாத்திரமாக அமைகிறான். இயற்கைப் புணர்ச்சியிலும் இடந்தலைப்பாட்டிலும் தலைவியோடு மகிழும் தலைவன் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளால் அவளைச் சந்திக்க இயலாது வாட்டம் அடைகிறான். அப்போது தோழன் துணை புரிகிறான். பாலைவனக் கொடுமையில் தவித்தவருக்குச் சுகம் தரும் சோலை நிழல் தருபவனாக தோழன் அமைகிறான். தலைவனையும் தலைவியையும் இணைத்து வைக்கும் தோழனின் எண்ணத்தைக் கூறி அதனை நிறைவேற்றி வைக்கும் அளவிற்குத் தோழன் செயல்பட அவனிடம் கொண்ட நட்பின் ஆழமே காரணமாக அமைகிறது. "எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப" என்று தன் நண்பனை தலைவன் அழைப்பதில் அவனது நட்பினைப் போற்றும் இயல்பு நன்கு உணர்த்தப்படுகிறது.

பழிபாவம் அஞ்சுதல்

தலைவன் தன் கடமையினை முடித்து மீண்டு வரும்போது வழியிடைக் காணும் காட்சிகளில் விலங்குகளும், பறவைகளும் இணை இணைகளாக இன்பம் துய்ப்பதைக் காண்கிறான். தலைவியோடு காணும் இன்பத்தில் பெரிதுவந்தவனாதலால் இன்ப வாழ்விற்கும் ஏற்படும் இடையூறு அடையக்கூடாது என்று எண்ணும் நன்மனம் கொண்டவனாகத் தலைவன் விளங்குகிறான். ஆதலால் அவன் அமர்ந்து செல்லும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளின் மணிஓசை இடையூறு ஏற்படுத்தும் என்று கருதி மணிகளை அகற்றச் செய்கிறான். இந்நிகழ்வு தலைவன் பழிபாவத்திற்கு அஞ்சுகின்ற மனித நேயப் பண்பாளனாக விளங்குவதை உணர்த்துகிறது.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாகத் தலைவன் காட்சி படுவதற்கு மேலே கண்ட இயல்புகள் பெருங் காரணிகளாக அமைகின்றன. தொல்காப்பியர் காட்டும் தலைவன், ஆண்மையின் அடையாளமாக பெருமை என்னும் சொல்லிற்கு உயிர்ச்சாட்சியாக விளங்கி, பழங்கால அகப்புற வாழ்வு நிலைகளுக்குச் சிறப்பு சேர்க்கும் செம்மையான பாத்திரமாகத் திகழ்கிறான் என்று உறுதியாகக் கூறலாம்.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link