ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியம் காட்டும் தாவர மரபு

இறைவன் படைப்பின் விந்தையைச் சிந்திந்தால் சிந்தனைக்கோர் அளவில்லை. ஓரறிவு உடைய மரஞ்செடி கொடிகள் முதல் ஆறரிவு படைத்த மனிதன் வரை தொல்காப்பியத் திருநூலில் உலாவரக் காண்கிறோம். ஏன்? தேவர்களும், அசுரர்களும், இயக்கங்களும், கந்தர்வங்களுங் கூட இந்நூலில் இடம் பிடித்துள்ளனர். தேவர்களினும் மனிதனும் உயர்ந்த நிலையில் ஒளிர்வதாக ஆன்மிகச் செல்வர்கள் இயம்புவர். காரணம் தேவர்கள் நல்வினைப் பயன்களை மட்டுமே துய்ப்பவர். அழியா நிதியாகிய வீடுபேறு மனிதப் பிறவி ஒன்றால் மட்டுமே அடையமுடியும். இருவினை அகற்றி, மும்மலமறுத்து, நாற்பேறும் பெற்றுய்ய இடம் தருவது மானிடப்பிறவியே.

தொடு உணர்ச்சி ஒன்றே கொண்ட இயற்கையின் இரகசியமாம் தாவரங்களைப் பற்றிச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம் , சங்கு, நத்தை போல்வன ஈரறிவு கொண்டவை. நண்டு, தும்பி போலவன தொடு உணர்ச்சி, நா. உணர்ச்சி, மூக்குணர்ச்சி மூன்றும் கொண்டன. சிதல் எறும்பியவை இவற்றொடு கட்புலன் உணர்வும் பெற்றுத் திகழ்வன., விலங்குகளும், பறவைகளும் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐயறிவு பெற்றன.

"மக்கள் தாமே ஆறறிவினவே " என்று அறுதியிட்டுப் பேசும் தொல்காப்பியனார் "பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே "எனத் தேவர், அசுரர், இயக்கர் முதலான பிறவிகளையும் தழுவிக்கொள்கிறார்.

இவர்கள் மட்டுமோ ஆறறிவு படைத்தவர்கள். ஆணவத்திற்கு ஒரு அடி கொடுக்கிறார் தொல்காப்பியனார்" ஒரு சார் விலங்கும் உளவென மொழிப, "கிளியும், குரங்கும் யானையுங் கூட ஆறறிவு கொண்டவை என்கிறார் உரையாசிரியர். இந்தியத் திருநாட்டின் அறிவியல் அறிஞர் நோபல் பரிசு பெற்ற பெருந்தகை இத்தகு ஒரறிவு படைத்த உயிர்களை ஆராய்ந்து அவற்றின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவர், இசை கேட்டு உருகும் தன்மையும் கொண்டவை தாவரங்கள் என்று இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

புல்லும் மரமும்:
புல் என்றவுடன் அறுகம்புல், கோரைப்புல் என்பன நம் மனக் கண்ணில் தோன்றும் தென்னையோ, பனையோ, மரம் என்று மயங்குவோம். தொல்காப்பியர் கருத்துப்படி தென்னை, பனை. பாக்கு, மூங்கில், வாழை, முருங்கை போல்வன மரங்கள் ஆகா. அவை புல் இன வகையைச் சேர்ந்தனவே, புல்லுக்கும், மரத்திற்கும் வேற்றுமையை புலப்படுத்தும் தொல்காப்பியனார் கருத்துகளை சிந்திக்க வேண்டாமா?

"புறக் காழனவே புல்லெனப் படுமே
அகக் காழனவே மரமெனப் படுமே"

என்பவை தொல்காப்பியர் நூற்பாக்கள்,

உள்ளே வைரம்பாய்ந்த உள்வயிர்ப்புடையவற்றையே மரம் எனக் கருதுகிறார் ஒல்காப்புமை தொல்காப்பியனார். புல்லின் தன்மையும் சற்றே விரிவாக இயம்பியுள்ளார் தொல்காப்பியனார்.

"தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதலே பாளை என்றா"
ஈர்க்கு குலையே நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்"

தோடு, மடல், ஓரை, ஏடு இதழ், பாளை ஈர்க்கு, குலைகளை உடையவை புல் இனத்தில் பாற்படும் . இதனால் வாழை, தென்னை, ஈச்சை, பனை மரங்கள் மட்டுமின்றி தாமரை, கழுநீர் போன்ற நீர்வாழ் தாவரங்களும் புல் இன வகையைச் சாரும் என உணரலாம்.

புறவயிர்ப்பும், உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரன இவ்வகைப்பட்ட உறுப்பு பெயருடையதாகி இவையும் புல்லெனப்படும் எனப்பகர்ந்து வாழை, ஈந்து, தாமரை, கழுநீர் என்பனவற்றை எடுத்துக்காட்டாக இயம்புகிறார் இளம்பூரணர்.

மரத்தின் உறுப்புகளை.த தொல்காப்பியர் நூலின் வழிக் காண்பதும் சாலச் சிறந்தது.

"இலையே முறிவே தளிரே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்
மரனொடு வரூ உம் கிளவி என்ப."

"காயே பழமே தோலே செதிளே
வீழோ டென்றாங் கவையும் அன்ன"

உரையாசிரியர் தரும் சில விளக்கங்களை ஈண்டு நம் சிந்தனைக்கு கொணர்வோம். புறவயிர்ப்பும், உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரன இவ்வுறுப்புப் பெயர் உடையதாகி மரமெனப்படும் என்று கூறி முருக்கு தணக்கு என்பனவற்றை உதாரணங் காட்டுகிறார். தாழை பூ உடைத்தாகலானும், கோடுடைத் தாகலானும், புறவயிர்ப்பின்மையானும் மரமெனப்படுமாயினும் புல் என்றல் பெரும்பான்மை என்று கூறுவதும் நம் சி\ந்தனைக்குரியது.

பேராசிரியர் பகர்வார்: "புறக்காழன எனவே அவ்வழி வெளிறென்பது அறியப்படும். அவை பனையும், தெங்கும், கமுகும் முதலாயின புல் எனப்படும். இங்ஙனம் வரையறை கூறிப்பயந்த தெண்னை? புறத்தும், அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பின்றியும், அதில் மரம் போல்வன இடையிடை பொய்பட்டும் புல்லும் மரமும் வருவன உள".

திணைப் பாகுபாடு:
தொல்காப்பியர் நிலம் வகுத்த பாங்கே (முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல், பாலை) இயற்கையோடு இயைந்த வாழ்வைக் காட்டுகிறது. மரம், செடி, கொடிகளால் திணைப்பெயர் வகுத்த ஆசிரியர் கருப்பொருளில் உணவு (உணா) மரம் போல்வனவற்றையும் இயம்புகிறார் பூ முதலியவற்றையு சிந்திக்கச் செய்கிறார்.

"தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்த யாழின் பகுதியோடு தொகை இ
அவ்வகைப்பிறவும் கருயெவன மொழிப" புறத்திணை
"வெட்சி தானே குறஞ்சியது புறனே
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே"

"வாகை தானே பாலையது புறனே
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே"

வெட்சி, தும்மை, வாகை, காஞ்சி போன்ற மலர்களின் சிறப்பினைச் சிந்தனையில் தேக்குகிறார். இவை மட்டுமா?

போரிடை மலர்கள்

மன்னர்கள் அடையாளம் கருதித் தம்முள் அறம் நிறை அரும்போர் புரிந்த வரலாற்றை இன்றைய அறிவியல் உலக அழிவுப் போரோடு ஒப்பிட்டால் நெஞ்சங்குமுறும்,

உறுபகை

"வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெரும் தானையர் மலைந்த பூவும்"

என்ற நூற்பாவின் தொடரால் போந்தை, வேம்பு, ஆத்தி மலர்களின் அரும்புகழையும், அவற்றைப் புனை வேந்தரையும் புனைவதற்கான காரணத்தையும் இயம்புவது நம் சிந்தனைக்கு உரியது. போர்க்கள காட்சியில் " ஏரோர் களவழி "மாண்பையும் புலப்படுத்துகிறார்.

இளமைப் பெயர்கள்
"மாற்றரும் சிறப்பின் மரபியல் கிளப்பின்
பார்ப்பும் பறனும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்(று)
ஒன்பதும் குழவியோ டிளமைப்பெயரே"

ஒன்பதில் ஒரு நான்கு ஓரறிவு உயிர்க்கு அதையும் என்கிறார்.

"பிள்ளை குழவி கன்றே போத்தெனக்
கொள்ளவும் அமையும் ஓரறி உயிர்க்கே"

உம்மை எதிர்மறையாகலின் கன்றென்பது பெரும்பான்மை என்பார் உரையாசிரியர். தெங்கம், பிள்ளை, கமுகங்கன்று கருப்பப்போத்து என உதாரணம் தந்து குழவி வந்த வழிக் கண்டுகொள்க என இயம்புவதால் அவர் காலத்து குழவி என்பது வழக்கிழந்தமை உணரலாம்.

(எ.டு) தென்னம்பிள்ளை மாங்கன்று

தொல்காப்பியர் காட்டிய இளமைப்பெயர்கள் நான்கும் நெல்லுக்கும், புல்லுக்கும் பொருந்தாது என்பதை" நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே" என்ற நூற்பாவால் அறியலாம். இந்த இடத்தில் புல் என்பது தென்னை, பனை, கழுகு முதலியவற்றைக் குறிப்பிடாமல் அறுகு, கோரை போன்ற புற்களுக்கே பொருந்தும் எனவும் அறிதல் கடனாம்.

ஓரறிவு உயிர்க்கு மனம் உண்டா?
ஒன்று முதல் ஐந்து ஈறாகிய பொறியுணர்வு மனமின்றியும் பிறப்பனபோல வேறு கூறியது என்னை யெனின் ஓரறி உயிர்க்கு மனம் இன்மையின் அங்ஙனம் கூறுனார் என்பார் போராசிரியர். இக்கருத்து அறிவியறிஞர்கள் மேலும் சிந்திக்க இடம் கொடுக்கிறது. ஊனமும், செவிடும், குருடும் என அவயவத்தான் குறைவுபட்டாரை குறைந்த வகை அறிந்து அவ்வப்பிறப்பினுள் சேர்த்துக் கொள்க, என்ற போராசிரியர் உரை ஆய்வுக்கு உரியதென்றே எண்ணுகிறேன். அறிவியல் அறிஞர் J.C போஸ் போன்றவர்கள் ஆய்வும், சித்தர்கள் சிந்தனையும், தொட்டால் சிணுங்கி போன்ற தாவரங்களின் செயல்பாடும் சிந்தித்தால் ஒரறியுவ உயிர்க்கும் மனம் உண்டென உறுதியாக நம்பலாம். தொல்காப்பியர் ஆறாம் உயிரே பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே" என்ற நூற்பா வழங்கியுள்ளது ஒன்று முதல் ஐயறிவு உடைய உயிர்களுக்கு மனம் இல்ல என்று உறுதிப்படுத்துவதாகத் தோன்றலாம்.

மனம் இருப்பது வேறு, மனம் செயல்படுவது வேறு. சிந்திக்கும் மனப்பாங்கு, நல்லது கெட்டது ஆயும் திறன், எதிர்கால விளைவை அறியும் பாங்கு மனிதர்க்கு உரியது என்று மட்டுமே கொள்ளல் தரும். ஆறாம் அறிவாகிய மன அறிவு படைத்த நாம் சிந்தித்துத் தெளிந்து உண்மைப் பொருளை உள்ளத்தால் பற்றிப்பிடித்து அதனில் கரைந்தது போதலே வாழ்வின் முழுப்பயன் என்று உணர்வோமாக. தொல்காப்பியத்துள் கோட்டுப் பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ நான்கும் இடம் பெற்றுள்ளன.

செயற்கை வாழ்வில் முற்றும் திழைத்து இயற்கையை வேர் அறுக்க முயலும் இக்காலத்தில் தொல்காப்பிய மு‘முனிவர் வாழ்ந்த பழங்காலத்தில் மக்கள் யாவரும் இயற்கை வாழ்வில் ஒன்றி நுண்மாண்நுழைபுலமும், சிந்தனைச் செல்வமும், சீரியவாழ்வும் கொண்டு சிறப்புற்று விளங்கினர் என்றால் மிகையாகாது. சொல் வேறு, செயல் வேறாய் வாழும் நாம் எல்லா உயிர்க்கும் பசிப்பிணியும், உடற்பணியும் உளப்பிணியும் தீர்த்து ஆன்ம தாகத்தைத் தணிக்கும் மரம், செடி, கொடி, வகைகளைப் போற்றிப் காப்போம்! வளம் பெறுவோம்!

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link