ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியத்தில் மகளிர் நிலை

இலக்கணம் என்பது தனக்கு முன்னும் பின்னும் நிகழ்கின்ற மரபுகளைச் சுடடிக்காட்டி நிற்பது. தொல்காப்பியர் மனிதனின் வாழ்க்கை இலக்கணத்தை அகம், புறம் என பாகுபடுத்தினர். இயல்பு நிலையில் மாறிய கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றையும் சுட்டிக் காட்டினார். அன்பின் ஐந்திணையோடு மடலேறுதல், ஒருதலைக்காமம், பொருந்தாக்காமம், மக்கட்பாற்காஞ்சி ஆகியவற்றையும் படைத்தார்.

பழைய கற்காலத்திலும், புதிய கற்காலத்தின் தொடக்கத்திலும், பெண்களின் நிலை, இயல்பாகவே அமைந்திருக்கிறது. தாய்மையின் கூர்தலமே மனிதனை€யும் விலங்குகளையும் வேறுபடுத்தியது என்பது வரலாற்று உண்மை.

"தாய்மை என்றும் உணர்ச்சியே விலங்கினின்றும் மனிதன்

தோன்றியதன் முதல்படி எனக்கூறலாம்"

என்பார் சாந்திசச்சிதானந்தம். மனித இனங்களில் தாய்வழித்தலைமையும், தந்தை வழித்தலைமையும் இடம் பெற்றன. தனிச் சொத்துடைமை, உழைப்பு விலக்கு, குழந்தைப் பேறு, மாதவிடாய் விலக்கு ஆகிய தாய்வழித்தலைமையை மாற்றின. தன்னால்தான் பிள்ளைப் பேறு ஏற்படுகின்றது என்ற ஆணாதிக்க உணர்வு தலைதூக்கியபின் தந்தைவழிச் சமூகங்கள் பெருகின. தொல்காப்பியர் காலத்தில் மகளிரின் நிலை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

பெண்மை

பெண்களுக்கு இயல்பாக அமைந்துள்ள அல்லது அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட பண்புநலன்களே பெண்மை ஆகும். இதனைத் திரு.வி.க.,

"பெண்மையாவது யாது? அடக்கம்,
பொறுமை, தியாகம், பரநலம், இரக்கம்,
அழகு, ஒப்புரவு, தொண்டு முதலியன
அமைந்த ஒன்று பெண்மை எனப்படும்"

என்று வரையறுத்தார். இது குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர்,

கற்புங் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலுஞ் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

என்று தெளிவுறுத்தியுள்ளது அறிதற்குரியதாகும். மேலும் அவர், மகளிர் தம் குடிபெருமை காப்பதை

"அவன் சோர்பு காத்தல் கடனெனப்படுதலின்
மகன் தாய் உயர்புந் தன்னுயர் பாகுஞ்
செல்வன் பணிமொழி இயல்பாக லான


என்ற நூற்பா மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பெண்மைப் பண்புகளுக்கு ஏற்பக் கணவனின் பரத்தைப் பிரிவையும் தலைவி மன்னித்து ஏற்கின்ற நிலையையும்,

"தாய்போற் கழறித் தழீஇக் கோடல்
ஆய்மனைக் கிழத்திற்கும் உரித்தென

என்ற நூற்பாவால் தொல்காப்பியர் உணர்த்துகிறார். தலைவனின் கொடுமைகளைத் தானே உரைப்பாளே தவிர, பிறர் கூற அனுமதிக்கமாட்டாள் என்று கூறப்படுவதால், தலைவனின் புகழுக்கு இழுக்கு வராமல் பாதுகாப்பவளாகவும் பெண் இருந்திருக்கிறாள் என அறிகிறோம்.

"மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை
தம்முள ஆதல் வாயில் கட் கில்லை

என்ற கூற்று, அன்புக்கு மகளிர் அடிமைப்பட்டதைக் காட்டுகிறது. ஆடவனின் கொடுமையை மட்டுமின்றித் தனது உண்மையான ஆசையையும் வெளியே சொல்ல முடி€யாதவளாகத் தலைவி இருந்ததை,

"தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங்காலைக் கிழத்திற்கு இல்லை"

என்ற நூற்பாவால் அறியலாம்.

பெண்ணியல்பு

பெண்ணின் எண்ணங்களும், செயற்பாடுகளும் பெண்ணியல்பு எனப்படும். இதனைத் தொல்காப்பியம்,

"அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப"

என்றும்,

"காமத் தினையிற் கண்ணின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மையவாகலின்
குறிப்பினும் இடத்தினிமல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள் வயினான்"

என்றும் வெளிப்படுத்துகிறது. உயிரைவிட நாணமும், நாணத்தை விடக் கற்பும் சிறந்தது என்று அகஒழுக்கத்திற்குத் தொல்காப்பியர் எல்லை வகுக்கிறார். இருந்தாலும் அறிவில் சிறந்த மகளிர்களையும் கோடிட்டு காட்டத் தொல்காப்பியம் தவறவில்லை.

"செறியும் நிறையுஞ் செம்மையுஞ் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன"

என்ற நூற்பாவில் மகளிர் நிலையை உயர்த்திப் புதுவழி படைத்துள்ளார்.

மென்மையில் வன்மை:

தலைவனை நம்பி மடம் உடையவளாகத் தலைவி இருந்தாலும், தலைவனின் தவறுகளைத் தோழி சுட்டிக் காட்டுவதை

"பரத்தமை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி
மடத்தகு கிழமை உடைமையானும்
அன்பிலை கொடியை என்றலும் உரியள்"

என்பதால் அறியலாம். மேலும் தலைவி வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் உள்ளத்திற்குள் தலைவன் மீது தலைவிக்குச் சினம் இருப்பதை,

"கற்பு வழிப்பட்டவள் பரத்தை ஏத்தினும்
உள்ளத் தூடலுண்டெனமொழிப"

என்ற நுட்பமாக தொல்காப்பியர் காட்டுகிறார். மென்மையான ஆண் எதிர்ப்பு இருந்ததையும் இந்நூற்பாவின் மூலம் தெளியலாம்.

பொது மகளிர் நிலை

தொல்காப்பியர் காலத்தில் இன்பப் பொருளாகவும், ஆணுக்கு அடிமைப்பட்ட துணைப் பொருளாகவும் மகளிர் இருந்திருப்பதாகத் தோன்றுகிறது. ஏனெனில் இல்லக்கிழத்தி (மகளிர்) தவிர காமக்கிழத்தி, விலைமாதர், பொருட்பெண்டிர், கணிகையர், பொதுமகளிர், வரைவின்மகளிர் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் பரத்தையர் நிலை, பல நூற்பாக்களில் காணப்படுகின்றன.

"பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற்கண்ணும்
கொடுமை ஒழுக்கங்கோடல் வேண்டி"
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு
அகன்ற கிழவனை"

ஆகிய நூற்பாக்கள் பொதுமகளிரைக் குறிக்கின்றன. தலைவியிடம் இன்பம் துய்ப்பதற்குத் கூடத் தலைமகன் விருந்தாளி போல வரவழைக்கப்பட்டதை,

"பூப்பின் புறப்பா டீராறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலையான"

என்று தொல்காப்பியம் காட்டுகிறது.

மகளிரைப் பிணிக்கும் கட்டுப்பாடுகள்:

பிரிவை அடிப்பை€யாக வைத்து சிலகட்டுப்பாடுகள் மகளிருக்கு விதிக்கப்பட்டன.

"முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை"
"கொண்டுதலைக் கழியினும் பிரிந்தவ ணிரங்கினும்
உண்டென மொழிப ஓரிடத்தான"
எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரர்"

என்பதிலிருந்து இல்லற மகளிர், வெளியே செல்லாத நிலையும், உழைக்கும் மகளிர் கடமைக்காக வெளியே சென்ற நிலையும் அக்காலத்தில காணப்பட்டதை அறியலாம். மகளிர் பாசறைக்குச் செல்லல், பாசறையில் வீரர்களுக்கு மதுவார்த்துக் கொடுத்தல், நடனமாடுதல் ஆகிய செயல்களை மகளிர் செய்ததாக தொல்காப்பியத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன. செல்வ மகளிர், உழைக்கும் மகளிர் என்ற இருவேறுபட்ட மகளிரின் வாழ்க்கை நிலையை தொல்காப்பியம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆண்கள் இருதார மணம் புரிந்து கொண்டாலும் மனையுறை மகளிர், காமக்கிழத்தியின் நலம் பாராட்டுபவர்களாகவே இருந்திருக்கிறாகள். இத்தகைய இழிநிலைக்கு,

"காமக்கிழத்தியர் நலம் பாராட்டி"

என்று தொல்காப்பியம் சான்று பகர்கிறது.

மனவலிமை

தொல்காப்பியர் கால மகளிர், எதையும் தாங்கும் இதயம் பெற்றிருந்ததைப் புறத்திணைப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. போர்க்களத்தில் எல்லாக் காட்சிகளையும் கண்டு இடிதாங்கிகளாக இருந்திருக்கிறார்கள். இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண், கணவன் இறந்த பின் விதவைக் கோலம் பூண்ட பெண், போர்க்களத்தில் இறந்த தனது கணவனின் உடலைத் தேடி மடியில் வைத்து அழும் பெண், விழுப்புண் பட்டு இறந்த தன் மகனைக் கண்டு மகிழ்ந்ததாய், புறமுதுகு இட்ட மகனைக் கண்டு தற்கொலை செய்து கொள்ளும் தாய் என்று பல்வேறு தரப்பட்ட வீரமகளிர்களைத் தொல்காப்பியம் காட்டுகிறது. தாய், மனைவி, மகள், தலைமகள், தோழி, பொது மகளிர் என்று பல வேடங்களிர் செயலாற்றினாலும் அனைத்திலும் செம்மையானவளாக தடுமாற்றம் இல்லாதவளாக பெண் வாழ்ந்திருக்கிறாள். இந்த பெண் இன்றும் நாம் நினைத்துப் பெருமைப்படத் தக்கவள்.

முடிவுரை

இன்றைக்கு மகளிரியல் பெரிதும் வளர்ந்துள்ளது. பெண்ணியக் கோட்பாடுகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையை இரண்டாயிரமாண்டு காலத்திற்கு முற்பட்ட ஒரு நூலில் நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. ஆனால் தன் காலத்திற்குக் கட்டுப்பட்டுப் பெண் பற்றிய சில சிறப்பான கருத்துகளைத் தொல்காப்பியம் வெளிப்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இப்பின்னணியில் பார்க்கும் போது தொன்மைக்காலத் தமிழ்ப் பெண்மையை அறிந்து கொள்வதற்குரிய சமூகவியல் ஆவணமாகத் தொல்காப்பியம் திகழ்கிறது எனலாம்.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link