ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியம் வெளிப்படுத்தும் தமிழ்க்காதல்

காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது வினோதமான நெருப்பு
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது. - மிர்ஸா காலிப்

காதல், வீரம் இரண்டும் தமிழர்களுடைய இரண்டு கண்கள். தொல் தமிழன் தொல்காப்பியர் தமிழர்களுடைய காதலை எவ்வாறு தொல்காப்பியத்தில் பதிவு செய்துள்ளார் என்பதைத் தொல்காப்பியத்தை உற்று நோக்குவதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

தமிழனின் காதல் வாழ்க்கையின் இரு பகுதிகளாகக் களவும் கற்பும் அமையும். தமிழனின் களவு வாழ்க்கையும், கற்பு வாழ்க்கையும் நெறி உடையது. களவு என்பது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். கற்பு என்பது, பிறர் நன்கு அறியும்படி நிகழும். களவு நெறியைத் தொல் தமிழர்கள் தவறு என்று கருதிலர். களவில் ஈடுபடும் காதலர்கள் இப்பிறவியில் மட்டுமின்றி இனிவரும் பிறவிகளிலும் இணைந்து வாழ்வர் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

காதலை வெளிப்படுத்தும் முறை

காதலியைக் காணும் காதல், காதலியின் உள்ளக்கருத்தை அறிந்து கொள்வதே முதல் செயல். காதலியின் உள்ளக்கருத்தை அறியாது காதலை வெளிப்படுத்துவது தமிழ் மரபு இல்லை. காதலனும் காதலியும் தம்தமக்குள்ள காதலை அறிந்து கொள்வதற்கு, அவர்களுக்குத் துணை புரிவது அவர்களுடைய கண்களே. வேட்கையினால் அந்நான்கு கண்களும், ஒருவருக்கொருவர் காதல் குறிப்பு உரைக்கும். இதுகுறித்துத் தொல்காப்பியர்,

குறிப்பே குறித்து கொள்ளுமாயின்
ஆங்கவை நிகழும் என்மனார் புலவர் (தொல்-களவியல்.6)
என்று குறிப்பிடுகிறார்.

கண்வழியே காதலைத் தெரிவிப்பதும், கண்வழியே ஒருவரை ஒருவர் கவர்ந்து கொள்ளுதலும் தமிழனின் காதல் கலையாகும். மேலும்,

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடிவரையின்றே

(தொல்-களவியல்.2) என்று குறிப்பிடுகிறார்.

"ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் காண்ப" என்று கூறியது, தனக்குச் சிறந்தவராக ஒருவரையொருவர் காணுதல் பொருட்டு வெளிப்படுத்துவர் என்கிறார் தொல்காப்பியர்,

தமிழ்காதலர்களுக்குரிய பண்புகள்

பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் இப்பத்துப் பண்புகளிலும் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமாக அமையும் காதலர்களே சிறந்த காதலர்கள் என்பது தொல்காப்பியரின் காதல் சிந்தனை ஆகும்.

தமிழ்காதலர்க்கு ஆகாத பண்புகள்:

நிலம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி

வன்சொற் பொச்சாப்பு, மடிமை, குடிமை இன்புறல், ஏழைமை, மறப்பு, ஒப்புமை முதலியன தமிழ்க்காதலர்க்கு ஆகாத பண்புகாளகக் கருதப்பட்டன. இதனைத் தொல்காப்பியர்,

நிலம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடு ஒப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர். (தொல்-மெய்ப்பாட்டியல் :26)
என்கிறார்.

தமிழ்க்காதலர்க்குரிய இயல்புகள்:

காதலன் சிறந்த பண்புகளுடையவராக இருத்தல் வேண்டும், என்பதைத் தொல்காப்பியம்,

பெருமையும் உரனும் ஆடூ உமேன (தொல் - களவியல்:7) என்று குறிக்கிறது.

காதலன் தன்னைத்தான் கொண்டொழுகும் பெருமையும், சென்ற இடங்களில் மனத்தைத் தீமையின்பால் செல்லவிடாது நீக்கி, நன்றின்பால் உய்க்கும் நல்லறிவும் காதலன் இயல்பாம்.

அச்சம் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப
(தொல்-களவியல்:8)

இப்பண்புகளால் புணர்ச்சிக்கு இசையாது நின்று, மணம் எய்திய பின்னே காதலனைக் கூடுவாள் தமிழ்ப்பெண் என்று தொல்காப்பியம் காதலியைச் சிறப்பிப்பதைத் தெளியலாம்.

தமிழ்க் காதலர்க்குரிய அவத்தைகள்:

காதலன், காதலி மீது தீராதக்காதல் உடையவனாக இருக்கிறான். அங்ஙனமே காதலியும், காதலன் மீது பேரன்பு உடையவளாக இருக்கிறாள்.

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
சிறப்புடைய மரபி€வை களவென மொழிப (தொல்-களவியல்:9)

இவ்வாறு பத்துவகை அவத்தையுடையவராய்க் காதலர் உள்ளனர். இதில் காதலிக்கே அதிகமாய் அவத்தைகள் உள்ளன எனலாம். ஒருவர் ஒருவரைக்காணும் முதல் காட்சியிலேயே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படாது, வேட்கை முதல் சாக்காடு ஈறாக இங்குச் சொல்லப்பட்ட உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்த பின்னரே மெய்யுறு புணர்ச்சி நிகழும். உள்ளப்புணர்ச்சியே மெய்யுறு புணர்ச்சிக்கு நிமித்தமாகும்.

காதலன், தான் காதலித்த காதலியை அடைவதற்குக் காதலியின் உடன்பாடு இருந்தாலும், பெற்றோர் முதலியோரால் தடை நிகழும் வழி, காதலன் மடல் ஏறுவான். மடல் ஏறுதல் என்பது, தான் காதலித்த காதலியின் வடிவத்தைப் படமாக வரைந்து, அதில் காதலியின் பெயரோடு தன் பெயரையும் இணைத்து எழுதின பனை மடலால் அமைத்த குதிரையில் அமர்ந்து ஊர்சுற்றி வருதலாகும். (மடல் ஏறுவேன் எனக் கூறுதல் அகத்திணைக்கும், மடலேறுதல் பெருந்திணைக்கும் உரியவாம்)

மகளிர் காதல் காரணமாக மடல் ஏறி மண் கொள்ளும் மரபு தமிழ்க்காதலில் இல்லை.

எத்துணை மருங்கினும் மகடூஉ மடல் மேற்
பொற்புடை நெறிமை இன்மையான (தொல்-அகத்திதணை:35)
என்கிறார்.

மடலேறுவேன் என எண்ணுதல், சொல்லுதல், மடல் ஏறுதல் ஆகிய மூன்று நிலைகளும் பெண்களுக்கு இல்லை. அது அவர்களுக்கு ஏற்புடைய நெறியன்று என்பது தமிழ் மரபு.

இவ்வாறு காதலன், தான் காதலித்த காதலியைக் கைப்பிடிப்பதற்கு மறுப்பு ஏற்படுமாயின், மடல் ஏறியாயினும் கைப்பிடிப்பேன் என்று உறுதி ஏற்பதைத் தமிழ்க் காதலில் காணமுடியும்.

களவு தமிழ்க்காதலின் சிறப்பி:

களவு, இயற்கை நெறிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. களவில் ஈடுபடும் காதலர்கள் அறம், பொருள் இன்பங்களில் வழுவாமல் கற்பு நெறிபின்பற்றும் நோக்கோடே விளங்குவர். இதனை,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை (தொல்-களவியல்:1)

என்னும் நூற்பா தெளிவாக்குகின்றது. தமிழன் கண்ட களவு, கற்பில் முடிகிறது. அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், கற்பின் தொடக்கமே களவு. களவில் மெய்யிறு புணர்ச்சி நிகழ்வது உண்டு. மனிதன் சூழ்நிலைக்கு ஏற்ப இயங்குபவன். சூழ்நிலை வாய்த்தால் இன்பம் பெற விழைவது எல்லா உயிர்க்கும் இயல்வு. மெய்யுறு புணர்ச்சி, காதலர்கள் விரைந்து திருமணம் செய்து கொள்ள உதவுகிறது. இம்மெய்யுறு புணர்ச்சியைத் தமிழ் இலக்கிய, இலக்கண நெறிகள் மறைவாக ஆதரித்து உள்ளன. காதலில் கட்டுண்ட காதலர்கள், தம் களவுக் காதலைப் பிறர் அறிய வெளிப்படுத்துவது, அலரின் அடிப்படையான நோக்கம். இதனை அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்துதலின் என்ற நூற்பாவின் வழி உணர முடிகின்றது.

ஆய்வுரை:

* தொல்காப்பியம் காட்டும் காதலர்கள், உலக வாழ்க்கையோடு ஒட்டியவர்கள் என்றாலும், மிக உயர்ந்த பண்பாடு உடையவர்கள்.

* அன்பும், அறனும், கற்பும், பண்பும் எக்காலத்தும் சிறிதும் தவறாதவர்கள். இம்மை மாறி மறுமையாயினும் இணைந்தே வாழ வேண்டும் என்று எண்ணுபவர்கள்.

* களவில் தொடங்கிய காதலைக் கற்பில் முடிக்கும் உறுதி உடையவர்கள்.

* தமிழரின் காதல் நெறி தனிச்சிறப்பி உடையது.

* அறத்தோடு நிற்றல் தமிழரின் பண்பட்ட காதல் நெறியாகும்.

* களவுக்காலத்தில் காதலர்கள் தம் உள்ளம் தடுமாறும் சூழல்கள் ஏற்படும் பொழுது, அவர்களுக்கு நல்வழி காட்டி, ஆற்றுப்படுத்தி உதவுபவர்களாகப் பாங்கனும் தோழியும் உள்ளனர்.

* களவினை வெளிப்படுத்துவதின் வழியே களவு வாழ்கை மேற்கொண்ட காதலர்கள், கற்பு வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர். இது தமிழ்க்காதலின் மிகவும் பண்பட்ட அம்சமாகத் திகழ்கிறது.

* வரையாது பிரிதல் கிழவோற்கில்லை என்ற அழகிய தமிழ்க்காதல், வாழ்க்கையை இன்பக் காதலாய் முறைப்படுத்தித் தொல்காப்பியம் உரைப்பது போற்றுதற்குரியதாகும்.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link