ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியர் காலத்திய திருமண முறைகள்

இல்லறமல்லது நல்லறமில்லை மனித இனம் தற்போது நாகரிகம் பெற்று சிறந்து விளங்குவதற்குக் காரணம் திருமணம். அவர்தம் வாழ்க்கை முழுமையான பயனைப் பெறுவது திருமண வாழ்விற்குப் பிறகுதான். அத்திருமண முறைகள் நாட்டுக்கு நாடு, சமயத்திற்குச் சமயம், சாதி, மொழி போன்றவற்றிற்கு ஏற்ப மாறுபடுகிறது. தலைவனும் தலைவியும் மனம் ஒன்றுபட்டு திருமண வாழ்வில் ஈடுபடும்போது அவ்வாழ்வு சிறக்கின்னறது. அறத்தோடு கூடிய இல்லற வாழ்வு இன்னும் ஒரு படி உயர்ந்து விளங்குகிறது. தொல்காப்பியர் காலத்தில் இத்தகைய இல்லற வாழ்விற்கு வழி வகுக்கும் திருமண முறைகள் எவ்வாறு இருந்தன என்பதை ஆராய்வதே இங்கு நோக்கமாகிறது.

காதல் நெறி

இயற்கை நெறியில் தலைவனும் தலைவியும் தனித்து வாழ்தல் என்பது இயலாது. மக்களினப் பெருக்கம் ஆடவரும் பெண்டிரும், கணவனும் மனைவியும் இணைந்து வாழ்தலைச் சார்ந்தது. தனித்து வாழ்ந்தால் வாழ்வின் பயன் முற்றுப் பெறாது. ஆணும் பெண்ணும் கலந்து வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பது காதல். திருமணங்கள் பலவகையில் நிகழும் காதல் திருமணமே அனைத்திலும் சிறந்தது. உயர்ந்தது. காதல் திருமணத்தில்தான் சாதி, மத, மொழி, நிறம் போன்ற வேறுபாடுகள் இருக்காது. காதல் திருமணம் நிகழும் நிலையைக் கொண்டுள்ள மக்களினம் நாகரிகத்தில் உயர்ந்தது. பண்பாட்டில் சிறந்ததாகும். எந்தவித பந்தமும் இல்லாமல் உறவு கொண்டு காதல் வயப்பட்டு உள்ளங்கலந்ததை,

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே (குறுந் 40)
என்ற குறுந்தொகை பாடல் நமக்கு அழகாக விளக்குகிறது.

தொல்காப்பியர் காலத்தில் காதல் திருமணமே வழக்கில் இருந்துள்ளது. பருவம் அடைந்த தலைவனும் தலைவியும் தம்முள் கலந்து பழகி நட்பு கொண்டு ஒழுகும் ஒழுகலாற்றைக் களவு என்று அழைத்தனர். தம் சுற்றமோ, தம்மைச் சார்ந்தவர்களோ அறியா வண்ணம் பழகுவதால் அதனைக் களவு என்றே சுட்டுகிறார் தொல்காப்பியர்.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்
கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்
காமக் கூட்டம் காணுங்காலை
மறை ஓர் தேயத்து மன்றல் எட்டனுற்
துறையமை நல்லியாழ்த் துணைமையார் இயல்பே (தொல்.கள.89)

என்ற நூற்பாவில் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் போன்ற எட்டுவகை மணங்கள் இருந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொல்காப்பியர் காலத்தில் தமிழர்க்கும் வடமொழியாளரை மறையோர் என்று குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.

தேவருலகத்திலுள்ள கந்தருவ குமாரரும் அவர் கன்னியரும் தம்முள் எதிர்பட்டுக் கண்டு மணங்கொள்வது போலத் தலைவனும் தலைவியும் சந்தித்துக் கூடுவது காந்தருவம். இக்காந்தருவ முறையே தமிழரின் காதல் முறைக்கு ஒத்துள்ளது.

ஒரே நிலத்தைச் சார்ந்த தலைவனும் தலைவியுமோ வெவ்வேறு நிலத்தைச் சார்ந்த தலைவனும் தலைவியுமோ ஊழின் துணையால் சந்திப்பது உண்டு. ஆனால் சாதி, மதம் முதலிய வேறுபாடுகள் நிலைத்திருக்க வேண்டும் என்று கருதுபவர்கள் காதல் திருமணத்தால் அவை அழிந்துவிடுமோ என்று அஞ்சியே காதல் திருமணத்தை வெறுக்கின்றனர். சாதி, மத, நிற, வேறுபாடுகளைக் கொள்ளாத தொல்காப்பியர் காலத் தமிழினம் காதல் மணத்தைப் போற்றியது. இலக்கியத்திலும் காதல் தமிழினம் காதல் மணத்தைப் போற்றியது. இலக்கியத்திலும் காதல் மணமே காணப் பெறுதல் வேண்டும் என்று கருதினார் தொல்காப்பியர். காதல் திருமணமே நாகரிகத்தின் உச்ச நிலையாகும்.

கற்பெனப்பட்டது திருமணமே

களவு வெளிப்பட்டுவிட்டால் கற்பு நிலையை எய்துதல் வேண்டும். அதாவது இருவருக்கும் திருமணம் நிகழ்தல் வேண்டும் காந்தருவம் கற்பின்றி அமையும். களவு கற்பின்றி அமையாது என்பார் நச்சினார்க்கினியர். கற்பு என்பது பெண்களுக்குரிய தனிமைப் பண்பு என்று கருதப்படுகிறது. தான் மணந்து கொண்ட ஆடவன் ஒருவனையன்றி வேறு ஒருவனை உள்ளத்தாலும் விரும்பாத இயல்புதான் கற்பாகும் என்பர்.

திருமணத்திற்கு வரைதல் என்ற பெயருமுண்டு. வரைதல் என்றால் வரையறுத்துக் கொள்ளுதல் என்று பொருள்படும். பலர்க்கும் உரியவளாம் தகுதி வாய்ந்த ஒருத்தியைத் தனக்கே உரிமையாக்கிப் பிறர் உரிமையினின்றும் நீக்கிக் கொள்ளுதல் தான் திருமணம். மணமற்ற வாழ்வு பிண வாழ்வு என்று கருதிய நாடுகளும் உண்டு. மணவாழ்வினையே தொல்காப்பியர் கற்பு என்கிறார். இதனை,

கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே

என்ற நூற்பாவியன் வழி அறியலாம்.

தலைவன் தலைவியைக் கொள்ளுவதற்குரிய முறைமைப்படி கொடுப்பதற்குரியவர் காரணத்துடன் பெற்றுக் கொள்வதாகும்.

காதலிக்கும் ஒருவன் காதல் மகளை மணந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுமேல் தமரின்றியும் மணந்து கொள்வான். இதனை,

கொடுப்போரின்றியும் கரணமுண்டே
புணர்த்துடன் போகிய காலை யானே (தொல்-கற்.141)
என்பதன் மூலம் உணரலாம்.

திருமண முறையில் சாதி வேறுபாடு என்பது இல்லாதிருந்தது. வருண வேறுபாடு புகுந்த பின்னர் சாதிகள் நிலைத்த பின்னர் வருணத்துக்கு ஒரு முறையும் சாதிக்கு ஒரு பழக்க வழக்கமும் ஏற்பட்டு விட்டன. இவை ஏற்பட்ட பின்னர்,

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர் காகிய காலமும் உண்டே

என்ற நூற்பா இடைச் செருகலாகப் புகுத்தப்பட்டுள்ளது.

கரணம் தோன்றக் காரணம்

கரணம் என்பதனை வதுவைச் சடங்கு என்று கட்டுகிறார் இளம்பூரணர். கரணம் என்பது ஊர்க்கணக்கு எழுதுவோரைக் குறிப்பதும் உண்டு. பழங்கால முறைப்படி திருமணம் கொள்வோர் திருமணத்துக்கு முன்னால் மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டாரும் மனமகள் வீட்டில் கூடி எழுதி உறுதிப்படுத்திக்கொள்வதைக் காணலாம். இந்நிகழ்ச்சியை மணவோலை எழுதுதல் என்றும் வெற்றிலைப்பாக்கு மாற்றுதல் என்றும் அழைப்பர். தொல்காப்பியர் கால வழக்கமே இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது என்றால் குற்றம் ஏதேனும் உண்டோ?

கணவனும் மனைவியும் காதலால் கூடுதல் வேண்டும். காதலால் கூடிய ஆடவரும் மகளிரும் கணவன் மனைவியாக இணைந்து என்றென்றும் வாழ வேண்டும். மறைவாகக் காதல் பூண்டு ஒழுகி மகளிர் நலம் துய்த்து விட்டப் பின்னர் மகளிரைக் கைவிடும் ஆடவரும் இருந்திருப்பர். பல பூக்களை நாடும் வண்டினைப் போல பிற பெண்களை ஆசை வார்த்தைக் கூறி அடிப்படுத்தும் ஆடவர்கட்கெல்லாம் பொய்யும் வழுவும் நிகழாமல் தடுத்தபொருட்டும் காதலிப்போர், பலரும் அறியக் கடிமணம் புரிய வேண்டும் என்ற விதியினைப் பழங்கால முன்னோர் விதித்தனர்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (தொல்-கற்-143)

என்னும் தொல்காப்பிய நூற்பா மணவினைச் சடங்கு உருவான காரணத்தைக் குறிக்கிறது. கரணம் என்பதற்கு வேள்விச் சடங்கு என்பது நெருப்புக் கடவுள் சான்றாகப் புரோகிதர் முன் நின்று நடத்தும் முறையைக் குறிப்பிடுகின்றது. இது தொல்காப்பியர் காலத்திற்குப் பொருந்தாததாகும். இருப்பினும் கரணத்திற்குச் சான்றாக அகநானூற்றுப்பாடல் ஒன்று இருப்பதைக் காணலாம்.

உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ் சோற் றமலை நிற்ப நிரைகால் (அகம்-86)

இதில் திருமண முறையாக, திங்களும் உரோகிணியும் கூடிய நல்ல நாளில் திருமணம் நிகழ்ந்தது. வைகறைப் பொழுதில் மணவினை நடந்தது. பந்தலமைத்துப் புது மணல் பரப்பினர். விளக்குகளை ஏற்றினர். மாலைகளைத் தொங்கவிட்டு இல்லத்தை அழகுபடுத்தினர். உழுந்து பெய்த கொழுந்துவை அடிசில் கொடுக்கப்பட்டது போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.

மைப்புறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி (அகம்.136)

என்ற அகநூற்றுப் பாடலில் மணவினைச் சடங்கின்போது வெண்ணூலில் வாகை இலையையும், அறுகம் புல்லையும் சேர்த்துக் கட்டி காப்பாகப் பெண்ணுக்கு அணிவித்ததையும் தூய உடை உடுத்தியதையும் போன்ற செய்திகளைத் தருகின்றது. மேலும் சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் மணம் மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட நடந்ததும், மணமக்கள் தீவலம் வந்ததையும் அறியலாம். நாச்சியார் திருமொழியில் தன் மணம் குறித்துக் கண்ட கனவினை எடுத்துரைக்கையில் மணச் சடங்குகள் பல குறிப்பிடுகின்றன.

தொல்காப்பியர் தாம் அறிந்த வடநாட்டு முறைகளுடன் தமிழ்நாட்டு மணமுறையை ஒப்பிட்டார். வடநாட்டு முறைகளுடன் தமிழ்நாட்டில் அன்று இடம் பெறவுமில்லை. அவற்றைத் தழுவி வேண்டுமென்று அவர் கூறவுமில்லை. தமிழ் நாட்டிலுள்ள காதல் முறையைக் குறிப்பிட்டு அம்முறைதான் இலக்கியத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று விதித்துள்ளார். வாழ்வில் எப்படி இருந்தாலும் இலக்கியத்தில் வடநாட்டு மணமுறைகளைத் தழுவினால் என்ன என்றுவினவலாம். வாழ்க்கை தான் இலக்கியத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும் என்று கருதிய தொல்காப்பியர் தமிழகக் காதல் முறையையே விரித்துச் சொல்லி இலக்கிய யாப்புக்கு வழி காட்டியுள்ளார். எனவே, தொல்காப்பியர் திருமண முறைகள் என்று தனித்தனியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் அவர்காலத்தோடு நெருங்கிய காலகட்டத்திலும் சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் போன்றவற்றில் குறிப்பிடும் திருமண முறைகள் இன்றைக்கும் நடைபெறும் திருமண முறைகளோடு ஒத்துப் போவதை அறியலாம். சடங்கு என்பது காலந்தோறும் மாறுபட்டாலும் ஒத்த தலைவியும் தலைவனும் சேர்ந்து வாழ்வதற்குக் கரணம் என்ற சடங்கு தேவை என்பதைத் தொல்காப்பியர் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link