ஆய்வுச் சிந்தனைகள்


அன்றும் இன்றும் மெய்ப்பாடுகள்

முன்னுரை:

தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆறாவது இயலாக மெய்ப்பாட்டியல் அமைந்துள்ளது. நாடகத்தில் பாடுவோரும், ஆடுவோரும் பாடலின் பொருள் வெளிப்படப் பாடி, ஆடிக் கேட்போரும், பார்ப்போரும் பாட்டின் பொருளை விளங்கிக் கொள்ளும்படி நடிக்கின்ற நடிப்பு மெய்ப்பாடு எனப்படும் அக நிகழ்வை முகம் கண்ணாடி போல் காட்டும். வள்ளுவனாரும் நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் என்றார். எனவே மனக்குறிப்பிலிருந்து பொறியுணர்வால் பிறர்க்குப் புலனாகும் வண்ணம் மெய்யின் கண் வெளிப்படுவதே மெய்ப்பாடாகும். மெய்ப்பாடென்பது பொருள் வெளிப்பாடு. மெய்ம்மயிர்ச் சிலிர்த்தலும் மெய் வியர்த்தலும், கண்ணிமைத்தலும், முகம் சுளித்தலும், உடல் நடுங்கலும் ஆகியவை மெய்யின் கண் வெளிப்பட்டுப் பிறர்க்குப் புலனாகும்படி தோன்றும் வெளிப்பாடுகளாகும்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்
றப்பா லெட்டாம் மெய்ப்பாடென்ப (தொல். மெய்)

இந்நூற்பாவினால் சுவைகள் எட்டு என்பது பெறப்படுகிறது.

1. நகை:

சிரிப்பு என்பது மனிதரோடு மனிதரை இணைக்கும் காந்தக்கல் சிரித்தபடி வாழ்வதே சிறந்த வாழ்வென்பார் சார்லஸ் டிக்கன்ஸ் " வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்பது முதுமொழி சிரிப்பு நோய் வராமல் தடுக்கும் மருந்து. கவலையை விரட்டி களிப்பூட்டும் கொழுப்பைக் குறைத்து குருதியைத் தூய்மையாக்கி சுரப்பிகளைத் தூண்டி சிறந்த முறையில் செயல்படச் செய்வது அதனால்தான் ஆசிரியர் நகைச்சுவைக்கு முதலிடம் நல்கியுள்ளார்.

நாடகம், திரைப்படம், சொற்பொழிவு மன்றம் ஆகியவை மக்களைக் கவர்வதற்கு எண் சுவையில் நகைச் சுவையையே தேர்ந்தெடுக்கின்றன. மக்களின் எதிர்பார்ப்பும் அதுவேயாகும்.

சில நாட்களுக்கு முன் சின்னதிரையில் ஒரு நகைச்சுவையரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிலே ஒரு பேராசிரியை கீழ்க்கண்டவாறு பேசி காட்சியாளர்களை கவர்ந்தார்.

இன்று மழலையர் பள்ளியில் பயிலும் பிஞ்சு மனக்குஞ்சு ஒன்று தன் அன்னையாரை நோக்கி மம்மி மம்மி - இனி உங்களை மம் என்றுதான் அழைப்பேன். சரி மம் என்றழைக்கலாம். ஆனால் உன் சிற்றன்னையை எவ்வாறழைப்பாய் என்று கேட்க அச்சிறுவன் மினி மம் என்றழைப்பேன் என்கிறான். போகட்டும் உங்க பெரியம்மாவை எவ்வாறழைப்பாய் என்று கேட்க பையன் மேக்ஸி மம் என்றழைப்பேன் என்றான். பார்வையாளர் கரவொலி அரங்கதிர வைக்கிறது அம்மழலையின் பேச்சு நம்மையும் சிரிப்பிலாழ்த்துகிறது. அந்த சிரிப்பில் நமது மம்மி, டாடி எதிர்ப்புணர்வு கூட ஏங்கி நிற்கிறது. சிரிப்பிற்கு அத்துணை ஆற்றல் ஆனால் இந்த நகைச்சுவையின் பகையாளி உவகையின் கொலையாளி எது தெரியுமா? வள்ளுவர் கூறுகிறார் சினம் நகைச்சுவையை அழித்துவிடும் உவகையை ஒழித்துக் கட்டி விடும் என்கிறார்.

"நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற" (குறள்)

நகை - முகமலர்ச்சி, உவகை- உள்ள மகிழ்ச்சி.

2. அழுகை:

நகைச் சுவையின் மறுதலைச் சுவை அழுகைச்சுவை. நம் சுற்றத்தார், நட்பினர் ஆகிய நம்மால் அன்பு செய்யப்பட்டாரது இறப்பு பற்றிக் கேட்டபோதும், நேரில் சென்று பார்க்கும்போதும் நாம் நம்மையறியாமலேயே கண்ணீர் மல்கிக் கதறி அழுகின்றோம். காரணம் அன்பிற்கும் அடைக்கும் தாழ்பாள் இல்லை. நமது புண்கண்ணீர் நமது அன்பை வெளிப்படுத்திவிடுகிறது. இளமழலைகளின் எதிரில் நாம் (பொய்யாக) அழுவதுபோல் பாவனை செய்தால் அக்குழந்தை உண்மையாகவே வாய்விட்டழுவதைக் காண்கிறோம்.

3. இளிவரல்:

அதாவது இழிவுச் சுவை - ஒரு பிணத்தையோ தொழு நோயாளனையோ காணும்போது உள்ளத்தில் அருவருப்பு உண்டாவதால் உடலில் முகம் சுளித்தலும் கண்மூடலும் மெய்ம்மயிர்ச் சிலிர்த்தலும் ஆகியவை வெளிப்பட்டு இழிவு என்ற சுவையைத் தோற்றுவிக்கின்றன.

4. மருட்கை:

அதாவது வியப்பு புதுமையான பொருளைக் கண்டு தன்னிடத்துண்டான புதுமையான பொருளைக் கண்டு தன்னிடத்துண்டான புதுமையை வியப்பது தன் கண் தோன்றிய பெருமை பற்றி சிறுமை பற்றி வியப்பது.

5. அச்சம்:

அடுத்ததாக - பாம்பு, இடி, பெருந்தீ பேரிருள் கண்டஞ்சுதல்

"அணங்கே விலங்கே கள்வர்தம் இறையென
பிணங்கல் சாலா அச்சம் நான்கே" (தொல் மெய்)

6. பெருமிதம்:

புகழ் இன்பமும் பொருளும் மிகுதியாக உண்டாயினும் பழிக்கத் தகுவன செய்யாமை கல்வியாலோ, அஞ்சாமையாலோ புகழ் - கொடை முதலியவற்றாலே வெளிப்படுவது பெருமிதம் என்னும் சுவையாகும் பெருமிதம் - வீரம் பகைவரைப்பார்த்தவுடன் அல்லது பகைவரைப்பற்றிக் கேட்டவுடன் மனவெழுகியாகிய வீரவுணர்வு உள்ளத்தே நிகழ தோள்கள் துடிக்கின்றன. இமைகள் இமைக்க மறுக்கின்றன. கண்கள் சிவக்கின்றன. புன்சிரிப்பு வெளிப்படுகின்றது இவையனைத்தும் வீரச்சுவையை விளக்கி நிற்பனவாகும்.

7. வெகுளிச்சுவை:

இது வீரத்தினால் பிறக்கும் சுவையாதலின் பெருமிதத்தை அடுத்துக் கூறப்பட்டுள்ளது. வெகுளில் பொருள் நான்கு

"உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே" (தொல் - மெய்)

1. உறுப்பறை: என்பது உறுப்பைக் குறத்தலாகும் கை குறைத்தல், கண்குத்துதல் முதலியன ( இன்றைய பட்டாக்கத்திப் பண்பாடு)

2. குடிகோள்: என்பது மனைவி, சுற்றம் குடிபிறப்பு முதலியவற்றிற்குக் கேடு சூழ்வது அதாவது குடியைக் கெடுப்பது (ஆள்கடத்தல் இதனைச்சாரும்)

3. அலை: கோல் கொண்டு அலைத்தல் - ஒன்று ஒன்றற்கு இடையூறு செய்வது (உருட்டுக்கட்டை செயல்பாடு)

4. கொலை: கொன்று விடுவது ( தீர்த்துக்கட்டுதல்) இவை அனைத்தும் வெகுளியால் விளைவன.

8. உவகைச் சுவை:

வி€ளாயட்டைப் பார்ப்பது நற்செய்தியைக் கேட்பது ஆகியவற்றால் மனமகிழ்ச்சியாகிய உள்ளக் குறிப்பு சிறு நகை, முகமலர்தல் ஆகிய மெய்வேறுபாடாகப் புலனாவதே உவகைச்சுவை. இது செல்வம், புலன், புணர்வு விளையாட்டு என்ற நான்கும் உவகைப் பொருளாம். செல்வப் பொருளை நுகர்வதாலும் கல்விப்பயனாகிய அறிவுடைமையாலும் காமப்புணர்ச்சி, நட்பு ஆகியவற்றாலும் ஆறும் குளமும் காலும் ஆடி வருதலாலும் உவகையைப் பெறலாம்.

மேலே கூறப்பட்ட எண்வகைச் சுவையும் (மெய்ப்பாடு) அகம் புறப் பொருள் சார்பின்றி பொதுவாக அனைத்து மாந்தரிடத்தும் இயல்பாக நிகழும் மெய்ப்பாடுகளாகும்.

நிறைவுரை:

இது காணும் கூறியவற்றுள் தொல்காப்பியர் கூறும் அனைவர்க்கும் பொதுவான எட்டுவகை சுவைகள் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link