ஆய்வுச் சிந்தனைகள்


திருக்குறளிள் மலர்ந்த தொல்காப்பிய மெய்ப்பாடுகள்

முன்னுரை

தமிழ் நெறியை கற்பிப்பது தொல்காப்பியம் தமிழர் நெறியை உணர வைப்பது திருக்குறள் இரண்டும் தமிழ் மக்களின் கலைக் களஞ்சியமாகும். தொல்காப்பிம் தமிழர்களின் நிதி நூல் திருக்குறள் அவாகளின் நீதி நூல் மனித வாழ்வுக்கு நிதியும் நீதியும் மிகுதியும் தேவைப்படுவதுபோல் தொல்காப்பியமும் திருக்குறளும் ஓதி உணர்ந்து வாழ்தல் மிகவும் சிறப்பைத் தரும் அதனால்தான் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் தொடர்புபடுத்தி திருக்குறளிள் மலர்ந்த மெய்ப்பாடுகள் எனக் கட்டுரை எழுத முற்பட்டேன் தொல்காப்பியம் அகண்டவானத்தினும் விசாலமானது திருக்குறள் சமுத்திரத்தினும் ஆழமுடையது அத்தனை இடங்களில் மெய்ப்பாடுகள் ஒன்றி இருப்பதை அங்கொன்று இங்கொன்றாக எடுத்து விளக்கி இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன் தொல்காப்பியத்தில் எழுத்து சொல் பொருள் இருந்தாலும் பொருளதிகாரத்தின் கோட்பாடுகளில் மெய்ப்பாடுகள் ஒன்றி இருப்பதை எடுத்து விளக்கி இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

இச்சூத்திரச் சுவையும் சுவைக் குறிப்பையும் உணர்த்துகிறது என்பார் உரையாசிரியர் இளம்பூரணர் முடியுடைவேந்தரும் குறுநில மன்னரும் முதலாமனார் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும் நாடக நூலாசிரியருக்குப் பொருட்பகுதி பதினாறாகி அடங்கும் அதில் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக வரும் எண் வகை மெய்ப்பாடாகும் அவை

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்பர்.

என்னும் நூற்பாவால் தெரிய வருனவாம் ஆக நிலைகைள் 32 சுவையும் சுவைக்குறிப்பும் 16 அல்லது மெய்ப்பாடு 8 இந்த மெய்ப்பாடுகள் எட்டும் திருக்குறளில் எங்கெங்கெ மலர்கின்றன என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

1. நகை

நகை என்பது சிரிப்பு எள்ளல் பேதைமை மடமை என்ற நான்கின் கண் இம்மெய்ப்பாடு தோன்றும் எள்ளல் என்பது இகழ்ச்சிக் குறிப்பு தான் பிறரை எள்ளி நகுதலும் பிறரால் எள்ளப்பட்ட வழி தான் நகுந்தலும் ஆகும். பேதைமை என்பது தன் மடமையால் பிறர் நகுதலும் பிறர் மடமையால் தான் நகுதலும் ஆகும். இவற்றில் இகழ்ச்சிக் குறிப்பைக் காட்டும் ஒருதிருக்குறள்

வஞ்சமனத்தான் படிற்(று) ஒழுக்கம் பூதங்கள்
ஐந்து அகத்தே நகும் (271)

என்பது வஞ்சமனம் உடையவனின் பொய்யொழுக்கத்தை அவன் உடம்பில் கலந்துள்ள ஐம்பூதங்களும் கண்டு தம்முள்ளே எள்ளிச் சிரிக்கும் என்று இகழ்ச்சியாக நகைக்கிறது.

2. அழுகை

சோகத்தால் வரும் உணர்வு-இவ்வழுகை இளிவு இழவு அசைவு வறுமை என்ற நான்கின் கண்தோன்றும் இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியவனாதல் இழவு என்பது தாய் தந்தை கற்றம் இன்பம்பயக்கும் நுகர்ச்சியை இழத்தல் அசைவு என்பது பண்டைநிலை கெட்டுச் சீரழிந்து வருந்துதல் வறுமை என்பது நுகர்வன இல்லா வறுமை நிலை தன் கண்ணும் பிறர் கண்ணும் தோன்றும். இவற்றில் வறுமை நிலையின் கொடுமை€க் காட்டும் ஒரு திருக்குறள்

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வதைத் தேய்க்கும் படை என்பது (555)

இதில் அல்லற்பட்டு அழுத கண்ணீர் என்ற வரிகள் அழுகை என்ற மெய்ப்பாட்டை உணர்த்துகிறது.

3. இளிவரல்

இழித்தல் உணர்வு என்றும் அருவருப்பு என்றும் வழங்கப்படும் மூப்பு பிணி வருத்தல் மென்மை என்ற பொருளின் கண்மெய்ப்பாடுகள் தோன்றும் மூப்பு என்பது வயது முதிர்ச்சி பிணி என்பது நோய் வருத்தம் என்பது முயற்சி மென்மை என்பது வலியின்மை அல்லது இயலாமையைக் குறிக்கும் இவற்றில் மென்மையை உணர்த்தும் மெய்ப்பாடல் ஒரு திருக்குறள்

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும் (1047)

என்பது அறத்தோடு பொருந்தாத வறுமை உடையவன் தன்னைப் பெற்று வளர்த்த தாயுங்கூட அவனை அயலானைப் பார்ப்பது போலப் பார்ப்பாள்.

4. மருட்கை

இது வியப்பு எனினும் அற்புதம் என்னும் ஒக்கும் -புதுமை பெருமை சிறுமை ஆக்கம் ஆகியவைக் கண்தோன்றும் புதுமை என்பது புதியதாய் தோன்றுவது பெருமை என்பது பெருமைக்குரியது சிறுமை என்பது சிறுமைக்குரியது ஆக்கம் என்பது ஒன்று ஒன்றாய் திரிவது. இவற்றில்புதுமை என்ற பொருளை உணர்த்தும் ஒரு திருக்குறள்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. (1081)

என்பது கனங்குழை அணிந்த இவள் தெய்வப்பெண்þண்‘ இறைவன் ஆய்ந்து படைத்த ஒரு சிறப்பான மயிலோ மனிதப் பெண் தானோ என் மனம் இவளை இன்னாள் என்றுஅறியாது மயங்கிறது என்று வியந்த தலைவனின் மெய்ப்பாடாகக் கூறப்படுகிறது.

5. அச்சம்

ஒன்றைக் கண்டு பயப்படுவது. அணங்கு விலங்கு கள்வர் இறை என்ற பொருளில் அச்சம் தோன்றும். அணங்கு என்பது பேய்பூதம் காலன் போன்றவைகளாலும் விலங்கு என்பது புலி சிங்கம் கரடியைக் கண்டலாலும். அஞ்சுவது கள்வர்களைக் கண்டு அஞ்சுவதும் இறை என்பது (பலவகை தண்டனைகளைக் கொடுக்கும் அதிகாரம் படைத்த) அரசனைப் பார்த்து அஞ்சுவதும் ஆகும் அவற்றில் இறை என்ற பொருளில் தோன்றும் மெய்ப்பாட்டிற்கு ஒரு திருக்குறள்,

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் (550)

என்பது இக்குறட்பாவில் கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் என்ற வரிகள் அச்சத்தைத் தரும் என்பதாகக் கூறப்பட்டுள்ளது.

6. பெருமிதம்

வீறுதரும் செருக்கு இம்மெய்ப்பாடு கல்வி தறுக்கண்மை புகழ்மை கொடை என்ற நான்கின்கண் தோன்றும் கல்வி என்பது சொல் வல்லார்முன் வல்லவனாகி வெல்லல் தறுகண்மை என்பது அஞ்சத்தக்கன கண்ட விடத்தும் அஞ்சாமை புகழ்மை என்பது புகழ்மிகும் செயல் மேலான தென்று சான்றோர் ஒருவரை புகழ்தல் கொடை என்பது மேம்பட்ட கொடையால் வரும் பெருமிதம் இவற்றில் தறுகண்மையை விளக்கும் ஒரு திருக்குறள்,

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் (774)

என்பது கையிலிருந்த வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு வருகின்ற வேறு யானையைத் தாக்கத் தன் மார்பில் தைத்திருந்த எதிரியின் வேலைக் கண்டு பறித்துச் சிரித்து எய்பவன் வீரன் என்ற பெருமித உணர்வு தோன்றக் கூறுவது.

7. வெகுளி

சினம் இம்மெய்ப்பாடு உறுபறை குடிகோள் அவை கொலை எனும் நான்கின்கண் எனபது தாரம் சுற்றம் குடிப்பிறப்பு முதலானவற்றின்கண் கேடு சூழ்தல் அலை என்பது தன் சினத்தால் பெற்ற வெற்றியுடன் வந்தும் அவ்வலை பூண்டதனை நினைந்து சினங்கொள்ளுதல் கொலை என்பது அறிவும் புகழும் முதலானவற்றைக் கொன்றுரைத்தல். (இவையேறியன்றி ஊடலிடத்துத் தோன்றும் உணர்வு) இவற்றில் அலை என்பதைக் கூறும் ஒரு திருக்குறள் சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பிற் பட்டுப்பாடு ஊன்றும் களிறு என்று வெகுளியி மெய்ப்பாடு தோன்றுவதாக அமைந்துள்ளது.

8. உவகை

செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்ற நான்கின் கண் இம்மெய்ப்பாடு தோன்றும்செல்வம் என்பது நுகர்ச்சி புலன் என்பது ஐம்புலன்களால் பெறும் இன்பம் புணர்வு என்பது காமப்புணர்ச்சி. விளையாட்டு என்பது ஆறு சோலைகளில் புகுந்து விளையாடதல் போன்றவைகளால் உவகை தோன்றும் இவற்றில் ஐம்புலன்களால் பெறும் இன்பம் பற்றி ஒரு திருக்குறள்.

கண்டுகேட்டு உண்டு உய்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள (1101)

என்பதில் உவகை உறுதலால் புலன்கண் தோன்றியது.

முடிவுரை

இதுவரை தொல்காப்பியர் மெய்ப்பாடுகள் அம்மெய்ப் பாடுகள் திருக்குறளில் மலர்ந்திருப்பதைப் பார்த்தோம் தொல்காப்பியமும் திருக்குறளும் வாழ்க்கை தத்துவ நூல்கள் தொல்காப்பியத்தில் வந்துள்ள மெய்ப்பாடுகள் கலைகளின் தாய் கற்பனையின் ஆசிரியா பண்பாட்டின் பாவலர் தொல்காப்பிய நெறிகள் திருக்குறள் வரிகள் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக சமுதாயத்திற்கே வழிகாட்டி என்றும் புதுமை பூக்கும் பொன்னேடுகள் என்றும் போற்றப் படத்தக்கவை.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link