ஆய்வுச் சிந்தனைகள்


மரபியல் காட்டும் நூல்மரபு

தமிழ் மொழி வரலாற்றில் தொல்காப்பியம் இன்று நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் காலத்தால் பழமையானதும், முதன்மைச் சிறப்புடையதும் ஆகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடையது. இதில் பொருளதிகாரம் தமிழர் தம் வாழ்வியல் நிலைகளை மரபியலோடு ஒட்டி அமைந்துள்ளது.

இலக்கிய மரபு

மரபின் அடிப்படை பழமை பாராட்டுவது என்று கருதப்படுகிறது. எனவே இலக்கியமும் மரபுகளை ஒட்டி நிலைத்திருக்கும் ஒரு கலை எனக்கூறலாம். இலக்கிய மரபு பற்றி

நாடக வழக்கினும் உலகியல் வழக்கிலும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்

என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கண மரபு

ஒரு மொழி பற்றிய நூல் அம்மொழியின் இலக்கண அமைப்பைப் பற்றி பேசுவதுடன் அம்மரபுகளைப் பற்றியும் மொழி பேசும் இனத்தாரின் பிற பண்பாட்டு கூறுகளைப் பற்றியும் பேசுவது பொருத்தமானதாகும். இதனை உணர்ந்த தொல்காப்பியர் எழுத்து சொல்லுடன் பொருளையும் சேர்த்திருப்பது இலக்கணமரபின் தனிச்சிறப்பாகும்.

தொல்காப்பிய மரபுகள்:

தமிழில் மிகத் தொன்மை வாய்ந்த இலக்கண நூல் தொல்காப்பியமாகும். தொல்காப்பியர் தொல்காப்பியத்தை எழுத்து (1) என மங்கலச் சொல்லால் தொடங்கி நூல் (1610) என மங்கலச் சொல்லால் முடிகின்றார். பிற்காலத்துப் பாட்டியல் நூல்களின் ஆணைக்கு ஏற்பத் தொடக்கமும் முடிவும் இருந்ததால் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து இத்தகைய நூல் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

நூல்

நுவலப் பெறுவது நூல் என்று சான்றோர்கள் குறிப்பிடுவர் புலவன் தனது உணர்வு மாட்சியிற் பிண்டம், படலம் ஒத்துச் சூத்திரம் என்னம் யாப்பு நடைப்படக்கோத்தல் ஆயிற்று. நூற்கப்படுதலின் நூல் எனப்பட்டது. நூல் என்ற சொல்லுக்கு இறையனார் களவியல் பொருள் கூறுங்கால்,

தந்திரமென்னும் வடமொழி நூலென்று
வழங்குவது தமழ் வழக்கெனக் கொள்க

என்ற விளக்கம் அளிக்கின்றது. நம்பி ஆசிரியரும் இக்கருத்திற்கு உடன்படுகிறார். நூல் என்பது இடுகுறி பெயர் அல்ல காரணப்பெயர் (நுவலப்படும் காரணத்தினால் நூல்) ஆகும். நூல் யாத்தற்குரிய பா நூற்பா என்பது போல, நுவலப்படும் இலக்கணம் நூல் எனப்படும் எனலாம்.

நூலின் இலக்கணம்

உரை எழுபவர் நிலையில் நூற்பாக்கள் எழுதல் வேண்டும். சுருக்கமாக உரையெழுதிய காண்டிகையும் பத்து வகைக் குற்றங்கள் இன்றி நுண் பொருளாகிய முப்பத்திரண்டு வகை உத்தியோடு பொருந்தி வந்தால் நூல் என்று கூறுவர்.

ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
மெய்ப்படக்கிளத்த வகையதாகி
ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத்திருவகை உத்தியொடு புணரின்
நூலென மொழிப நநுணங்கு மொழிப்புலவர் ( தொல். பொ. மரபு - 97)

என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம்.

பாயிரம்

நூலுக்கு இன்றியமையாத சிறப்பினை கொடுப்பது பாயிரமாகும்.

ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே (இலக்கண விளக்கம்)

என்று குறிப்பிடும் இத்துணைச் சிறப்பினையுடைய நூற்குப் பாயிரம் வரையும் மரபு தொல்காப்பியரால் கையாளப் பெறவில்லை. தொல்காப்பியர் நூலின் இலக்கணம் கூறும் போது பாயிரத்தின் இன்றிமையாமையை எடுத்துரைக்கவில்லை. பாயிரம் என்ற சொல்லும் தொல்காப்பியரால் கையாளப் பெறவில்லை.

நூல் வகைப்பாடு

தொல்காப்பியல் நூலினை இரண்டு வகையாகப் பிரிப்பர்.
இதனை,

மரபு நிலை திரியா மாட்சிய வாகி
யுரை படு நூலா மிருவகை யியல
முதலும் வழியுமென நுதலிய நெறியின்

என்ற நூற்பா விளக்கியுள்ளது. மரவு நிலை திரியாமல் அனைவராலும் உரைக்கப்படும் நூல் முதல் நூல், வழி நூல் என இருவகைப்படும்.

இலக்கண நூல் மரபுதிரியின் பொருளுணர்வு பிரிதாகுமாதலின் மரபுநிலைதிரியா மரபு பற்றிச் செய்யுங்காலும் சிறந்தது விளக்கி எதிரது போற்றி ஆக்கமுறச் செய்தல் வேண்டுமென்பதன் மாட்சியவாகி என்றும் கூறியுள்ளது.

தொல்காப்பியத்திற்குப் பின்னர் வந்த நன்னூல் போன்ற இலக்கண நூல்கள், அவை முதல்நூல், வழிநூல், சார்புநூல் என்னும் மூன்று வகையாக பகுத்துள்ளது. ஆனால் தொல்காப்பியர் சார்புநூல் பற்றி குறிப்பிடவில்லை.

முதல்நூல்

இறைவன் சொன்னது முதல் நூல் எனப்படும். இதனை தொல்காப்பியர்,

"வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூலாகும்"

என்று குறிப்பிட்டுள்ளார். இதனை நன்னூலாரும் குறிப்பிடுகின்றார்.

முனைவன் என்ற சொல் முன்னோர் என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம். இன்று வழக்கில் முன்னோர்களைக் கடவுளாக நினைத்து வழிபடுதலைக்காணலாம். இதன் காரணமாக இறைவனால் செய்யப் பெற்றது முதல்நூல் என்ற கருத்து நிலவி வருகிறது.

தொல்காப்பியர் தன்னூலை முதல் நூல் என்று குறிப்பிடவில்லை. அவர்தம் நூல் என்மனார் என்ப என்று குறிப்பிடுவதால் முதல் நூலாக தொல்காப்பியம் இருந்திராது. எனினும், தொல்காப்பியத்திற்கு முந்தைய நூல்கள் யாதும் காண கிடைக்காமையால் இது முதல் நூல் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

வழிநூல்

வழிநூல் என்பது முதல் நூலைத் தழுவி சில வேறுபாடுகளை அமைத்து கூறுதலாகும். இதனை தொல்காப்பியர்,

வழியெனப்படுவது அதன் வழித்தாகும் (தொ. பொ.ம.94) என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னோர் நூலில் உள்ளவற்றை தொகுத்தும் விரித்தும் அவ்விரு நெறியையும் அமையக்கூறலும் செந்தமிழ் நூல்களின் திறனறிந்து பயன் கொள்ள முதனூலை அவர்தம் மொழியின் பெயர்த்து கூறுவது வழிநூலின் வகை மரபின்வாகும்.

சூத்திரம்

சூத்திரம் என்பது சுருங்கக் கூறி விளங்கவைப்பதாகும். நூலுக்குரிய இலக்கணமாக அடுத்துக் கூறப்பெறுவது சூத்திரமாகும். சூத்திர வகையாதிக் குற்றமின்றி உத்தியோடு புணரின் நூல் என மொழிப தொல்காப்பியர். இதனை,

சூத்திரந்தானே ஆடிநிழலின் அறியத்தோன்றி
நாடுதலின்றிப் பொருள் தனி விளங்க
யாப்பினும் போன்ற யாத்தமைப்பதுவே

எனசெய்யுளியலுள் கூறிய இலக்கண நெறியும் (தொல். பொ. மரபு.99) எனப் பின்னர் ஓதப் பெறும்.

நூலுக்குரிய குற்றம், அழகு

ஓதப் பெற்ற மரபியல்களின்றி வலிய எல்லாம் குற்றமென்பது தானே பெறப்பட்டுள்ளது. தொல்காப்பியர் இன்ன காரணத்தால் என விளக்கிக் கொள்ளுதற் பொருட்டும் வழிநூல் செய்வார். அவ்வகைக் குற்றங்கள் செய்யாமற் இருத்தற் பொருட்டும் இங்ஙனம் வகுத்துக் கூறியுள்ளார். அத்துடன் குற்றங்களுக்கு மறுமொழியாக எதிமறையான பண்புகளை உணருமிடத்து நூலுக்குரிய அழகாக விவரித்துள்ளார்.

முடிவுரை

தொல்காப்பியத்தில் நூல் மரபுகளாக நூலின் வகை, நூல் அமைக்கும் முறை, நூலின் குற்றம், நூலின் அழகு ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link