ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியர் காட்டும் திருமண முறைகள்

திருமணம் என்பது பழங்காலந் தொட்டே இருந்து வருகின்ற ஒன்று. இத்திருமணம் பற்றித் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியத்திற்கு முந்தைய காலகட்டத்தில் திருமணம் என்று ஒன்று இருந்ததா? ஓர் ஆணும் பெண்ணும் எங்ஙனம் வாழத்தலைப்பட்டனர்? தொல்காப்பியர் காலத்திருமண முறைகள் யாவை? இன்று அவை எங்ஙனம் மாற்றம் அடைந்துள்ளன என்பன பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திருமணம்

சமூகத்தில் உறவு முறைகளில் பல்வேறான நிலைகள் காணப்படினும் அவற்றுள் மிக முக்கியமான கூறு கணவன்-மனைவி எனும் உறவு முறையாகும். "வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலரறிய செய்து கொள்ளும் ஒப்பந்தம்" என்று பெரியார் ஈ.வே.இராமசாமி (Periyar E.V.Ramasamy) கூறுகிறார்.

திருமணம் என்பது வளர்ச்சியடைந்த மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பல சடங்குகளில் ஒன்றாகும். "குடும்பத்தில் ஆணின் ஆட்சி நிலைப்பெறுவதும், தனதே எனக்கூடிய குழந்தைகளைப் பெறுவதும் தனது சொத்துக்கு வாரிசாக வர விதியுள்ளவர்களைப் பெறுவதும் இத்திருமணத்தின் இலட்சியங்கள்" என்று எங்கெல்ஸ் கூறுகிறார். இந்த ஆணிற்கு உரிமையானவள் இந்தப்பெண் அல்லது இந்தப் பெண்ணிற்கு உரிமையானவன் இந்த ஆண் எனும் செய்தியை அனைவருக்கும் தெரிவிப்பதே திருமணம் ஆகும்.

தொல்காப்பியத்திற்கு முந்தைய நிலை

திருமணம் என்பதனைத் தொல்காப்பியம் கரணம் என்கிறது தொல்காப்பியத்தில்
"பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப"
என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இதற்கு இளம்பூரணர் "பொய் கூறலும்வழூஉப்பட ஒழுகலும் தோன்றிய பின்னர் கரணத்தைக் கட்டினர் என்று சொல்வர்" என்று குறிப்பிடுகிறார்.

இக்கருத்திலிருந்து அதற்கு முந்தைய காலப்பகுதியில் திருமணம் என்ற ஒன்று இல்லை என்றே தெரிகின்றது. திருமணம் இல்லாமல் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்ந்துள்ளமை தெரிய வருகின்றது. நெறி தவறிய காலத்தே இத்திருமண முறை தோன்றியுள்ளது.

தொல்காப்பியர் சுட்டும் திருமணம்

கரணம், மன்றல், வரைவு இவையெல்லாம் ஒரு பொருள் உணர்த்தும் பல சொற்கள். தொல்காப்பியம்(Tholkappiyam) கற்பியலில் கரணத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இன்றைய காலச்சூழலில் கற்பு என்பதற்கு தெளிவான விளக்கம் இல்லை.

ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கற்பு என்பதற்குத் தொல்காப்பியம் அளிக்கின்ற விளக்கம் என்பது சிந்திக்கத்தக்கது. "கற்பு என்று சொல்லப்படுவது கரணத்தோடு பொருந்திக் கொள்ளுதற்குரிய மரபினை உடைய கிழவன், கொள்ளுதற்குரிய மரபினை உடையார் கொடுப்பக் கொள்வது" என தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இயம் பூரணர் சுட்டுகிறார்.

"கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்கியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே"
என்பது தொல்காப்பியம்.

அங்ஙனமாயின் பெரியோர்கள் கொடாமல் கிழவன் கிழத்தியினது திருமணம் நடைபெறாதா? என்ற ஐயம்(Doubt) எழலாம். ஏனெனில் சங்க இலக்கியங்களை நோக்குமிடத்து உடன்போக்கு என்ற ஒன்று காணப்படுகின்றது. அங்ஙனம் செல்வது மேற்சுட்டிய நெரியின்பாற்படாதா? என்ற ஐயத்திணைப் போக்குவது போன்று தொல்காப்பியம் அடுத்த செய்தியினை அளிக்கின்றது.

"கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான"
என்பதன் வாயிலாக உடன்போக்கு செல்லினும் அதுவும் கற்பின்பாற்படும் கரணமாகும்.

திருமணத்திற்குரியோர்

அந்தணர், அரசர், வணிகர், எனும் மூன்று வர்ணத்தாருக்கும் உரிய கரணம் கீழோர் ஆகிய வேளாண் மாந்தருக்கும் உரிய காலமுண்டு என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இதற்கு இளம்பூரணர் அளிக்கின்ற விளக்கமே இங்கு விவாதத்திற்குரியதாகின்றது. அதாவது "முற்காலத்துக் கரணம் பொதுப்பட நிகழ்தலின் எல்லோருக்கும் ஆம் என்பதும் பிற்காலத்து வேளாண் மாந்தருக்குத் தவிர்ந்ததெனவும் கூறியவாறு போலும், அஃதாமாறு தருமசாத்திரம் வல்லாரைக் கொண்டுணர்க" என்கிறார்.

இதிலிருந்து வேளாண் மக்கள் கரணம் என்ற ஒன்றைக் கைவிட்டதாகத் தெரிகின்றது. இது எதன் பொருட்டு எனின் என்னும் வினாவிற்கு விடையளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கரணம் என்பதனைப் பிற்காலத்தில் அந்தணர், அரசர், வணிகர் என்ற மூன்று வருணத்தார் மட்டுமே கடைபிடித்து வேளாளர் கைவிட்டனர் என்றமைக்கு விடையளிக்கத் தொல்காப்பியரையே துணைக்கு அழைக்க வேண்டியதாயுள்ளது.

எப்பொழுது பொய் கூறுவதும் முறை தவறி ஒழுகுவதும் தோன்றியதோ அப்பொழுதான் கரணம் என்ற ஒன்று உருவானது. இங்கு வேளாளர் கரணத்தைக் கைவிட்டதற்கும் அந்தணர், அரசர், வணிகர் போன்றோர் கட்டுப்பாடின்றியும் ஒழுங்கின்றியும் இருந்ததனால் கரணத்தினைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தனர். வேளாளர் பொய்கூறாது முறை தவறி ஒழுகாது இருந்ததனால் கரத்தினைக் கைவிட்டனர்.

ஒத்த பண்புகள்:

களவுக்காலத்திற்கும் உரிய தலைவன் தலைவியின் கீழ்க்கண்ட ஒத்த பண்பினைப் பெற்றிருக்க வேண்டும் என்பார் தொல்காப்பியர்
"பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு திரு என
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"

இன்றைய சூழலில் தொல்காப்பியர் சுட்டும் திருமணமுறை என்பதும் இல்லாது வேறு திசையை நோக்கித் திருமணமுறைகள், வாழ்க்கை முறைகள் என்பன பயணித்துக் கொண்டிருந்தன.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link