ஆய்வுச் சிந்தனைகள்


செய்யுளியல் சுட்டும் மொழிநடை

தமிழில் முதன் முதலில் தோன்றிய நூலாகக் கருதப்படுவது அகத்தியர் எழுதிய அகத்தியம் எனும் இலக்கண நூலே ஆகும். அடுத்துத் தோன்றி இன்றும் பெருமையுடன் உலாவரும் இலக்கண நூல் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம். இது எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டு விளங்கும் பழமையான நூல்.

நடை என்பது பாடுவோன், பாடுபொருள், பாடப்படும் காலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. தமிழில் குறிப்பிட்ட கால கட்டங்களில் வடிவங்களும், யாப்பும் சிறப்பிடம் பெற்றிருக்கக் காணலாம். நடை பற்றிய தொல்காப்பியத்தில் காணப்படும் பொருளதிகாரத்தில் செய்யுள் இயல் நடை மட்டும் ஆராய்வதற்கு எடுத்தாளப்பட்டுள்ளன.

தொல்காப்பியத்தின் இயல்களும் இருபத்து ஏழு, செய்யுள் இயலின் உறுப்புக்களும் இருபத்துஏழு. இந்த இருபத்துஏழு உறுப்புக்களுக்கும் உரிய வரையறைகளையும், இருபத்துஏழு இயல்களுக்கு உரிய விளக்கங்களையும் செய்யுள் இயல் கூறி இருக்கிறது.

நடை பற்றிய பல்வேறு அறிஞர்களின் விளக்கங்கள் கூறப்படுகின்றன. புலவரின் உள்ளத்தில் உண்மையும் உறுதியும் சிறந்து விளங்கினால் அவருடைய நடை திட்பமும் நுட்பமும் அமைந்ததாக இருக்கும். அவருடைய உள்ளத்தில் ஆர்வம் மிகுதியானால் நடையில் ஆற்றல் மிகுதியாகும் என்பார் மு. வரதராசனார்.

தமிழின் தனித்தன்மையை அறிந்த தொல்காப்பியர் தம்கால இலக்கியத்தின் பாடுபொருள், பின்புலம், கதைமாந்தர், யாப்பு ஆகிய மரபுகளைத் தெளிவாக வரையறுத்துள்ளார். இத்தகைய கட்டுப்பாட்டுக்குள் தொல்காப்பியர் தனித் தன்மையைக் காட்டிச் சில நெறிமுறைகளை வகுக்கின்றார்.

நடையின் மிக இன்றியமையாத கூறுகள் இரண்டு என்பர்.
அவையாவன,
1. சுருங்கச் சொல்லல் (Precision)
2. விளங்க வைத்தல் (Crystallization) என்பனவாகும்.

மொழியானது எளிமைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அம்மொழி மக்களைச் சென்று சேரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மொழி அமைப்பை ஆராய்வதற்கு அமைப்பியல் அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.

தொல்காப்பியரின் நடையியற் கூறுகள்

இலக்கண மொழியினை ஆய்வு செய்வதற்குச் சில நடையியற்கூறுகள் (Stylistic features) எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தொல்காப்பியரின் மொழி நடை எடுத்து விளக்கும் கருத்துக்களைத் தொடர்புபடுத்தி இதன் மொழி நடை இங்கு விளக்கப்பட்டுள்ளது. நடையியற் கூறுகளான சொல்லமைப்பு, தொடரமைப்பு, சொற்பயன்பாடு, யாப்பமைதி, மொழிக் கட்டமைப்பு போன்றவை இடம் பெற்றுள்ள நிலையினைத் தெளிவாக எடுத்துக்காட்டி தொல்காப்பியரின் மொழி நடை விளக்கப்பட்டுள்ளது.

சொற்பயன்பாடு

ஒரு மொழியின் அமைப்பில் சொல்லமைப்பும், தொடரமைப்பும் முக்கியமான அமைப்புகளாகக் கருதப்படுகின்றன. அவ்வமைப்புகளில் பயன்படுத்தப்படும் சொற்பயன்பாடு உரையாசிரியர்களால் பல்வேறு சூழ்நிலைகளில் எடுத்துக்காட்டாக கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மொழி அமைப்பில் சிறப்பான பொருள் விளக்கத்திற்கும் சொற்பயன்பாடு இன்றியமையாததாகிறது.

தொல்காப்பியர் நடையில் சொற்பயன்பாடு பற்றிக் கூறும்பொழுது,
"உரை வகை நடையே" "ஆசிரிய நடைத்தே" "வெண்பா நடைத்தே" என்று உரையையும் செய்யுளையும் கருதுவது நோக்கத்தக்கது.

தனிச்சொல் அமைப்பு

மொழி நடையை விளக்கிச் சொல்லும்போது தக்க இடங்களில் தக்க சொற்கள் என்று ஸ்விஃப்ட் குறிப்பிடுகிறார். ஒரு செய்யுளின் சிறப்பிற்கு அதனுள் பயன்படுத்தப்படும் சொற்களும் இன்றியமையாத காரணங்களாகின்றன. குறிப்பிட்ட இடத்தில் எந்தச் சொல் அமையவேண்டுமோ அச்சொல் அமைவதாலேயே படைப்பாளி தன்னுடைய கருத்தை / தன்னையே முழுக்க வெளிப்படுத்த முடிகிறது.

மாத்திரை, எழுத்து இயல், ஆசைவகை, ஏனா அ,
யாத்தசீரே, அடி, யாப்பு, ஏனாஅ.................
.......................................................................
வல்லிதிற் கூறி வகுத்து உரைத்தனரே (பொருள்-க)

இங்ஙனம் ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல் வெவ்வேறாக வருகின்றது. அவ்வரியின் பொருளைச் சரியாக வெளிப்படுத்த ஒவ்வொரு தனிச்சொல்லையும் வெவ்வேறாகப் படைக்கிறார் தொல்காப்பியர்.

ஒலி அ€ப்பு

நடையியல் நினைவாற்றலுக்குத் துணையாக எதுகை, மோனை போன்ற உத்திகள் கையாளப்படுவதைப் போன்றே, தொடர் நிலையிலும் சில தொடர்கள் ஒலி நயத்தையே கையாளப்படுகின்றன.

செய்யுளியல் முப்பத்து நான்கு உறுப்புகளைத் தொல்காப்பியர் கூறுகிறார். அவற்றுள்
மாத்திரை எழுத்து அசை சீர்
அடி யாப்பு மரபு தூக்கு
தொடை நோக்கு பா அளவியல்

இந்த பனிரெண்டு உறுப்புகளும் யாப்பு வரையறையை விளக்குகின்றன. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பாவகைக்கு ஒலி நயமே அடிப்படையாக அமைந்துள்ளது. அந்த ஒலி நயத்தை அடையும் வழிகளாகவே இவ்வுறுப்புகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஓசைநயம்

ஒரு மொழியிலுள்ள கருத்துக்களை மற்றொரு மொழியில் மாற்றும் பொழுது மூல மொழியில் காணப்படும் பொருள், சுவை தன்மை போன்றவை சிறிதும் மாறாமலும் பெயர்க்கப்படும் மொழியின் அமைப்பு மற்றும் தன்மைக்கேற்பவும் அமைக்கப்படும் முறையாகும். தொல்காப்பியர் வாசகனுக்குச் சேரும் முறையில் மூல மொழியினை ஓசைநயத்தோடு அமைத்துள்ளார்.

இவற்றுள், வண்ணம் என்ற செய்யுள் உறுப்பு இருபது வகைப்படும். இவை ஓசைநயத்தை காட்டுவனவாகும். அவை பாஅ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒருஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம்.

நிலைபேறாக்கம்

நிலைபேறாக்கம் என்பது மூன்று கொள்கைகளை அடிப்படையாக கொண்டதாகும். மொழிப்பொதுமை (efficiency) எடுத்தாளும் எளிமை (easy adoptability) என்ற மூன்றும் நிலைபேறாக்கக் கொள்கைகளாகக் கருதப்படுகின்றது. தொல்காப்பியர் நிலைபேறாக்கத்தின் இன்றியமையாமை உணர்ந்த நிலையிலேதான் அவர் காலத்திய வழக்குச் சொற்களையும், இலக்கணக்கூறுகளையும் நிலைபேறாக்கம் செய்து கொள்ள முடிகின்றது.

வனப்பு, பற்றித் தொல்காப்பியர் எட்டு வகையாக இணைத்துக் கூறியுள்ளார். அவை அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு, இச்சொற்கள் அனைத்தும் நிலைபேறாக்கம் பெற்றுவிட்ட நிலையிலும் காண்கிறோம். இறுதியாக மொழி நடையைக் காண்பது மொழியியலாரின் பணியாகவும், ஏனைய நடையைக் காண்பது இலக்கியத் திறனாய்வாளரின் பணியாகவும் அமைந்துள்ளன. இவ்விரண்டையும் வேறுபடுத்தி உணராமல் மொழி நடையைக் காணமுடியாது. தொல்காப்பியர் எடுத்தாண்டுள்ள மொழி நடையில் மொழிக்கூறுகள் புதுப்பொருளையும் புதுச்சுவையும் தரும் நிலையில் அமைந்திருக்கக் காண்கிறோம்.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link