ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியப் பொருளதிகாரம்

முன்னுரை

தமிழர் நாகரிகத்தைப் படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடி தொல்காப்பியப் பொருளதிகாரம் இன்றைய முதிர்ந்த தமிழர்களின் வளர்ச்சிக்குக் காரணம் தொல்காப்பியப் பொருளதிகாரமே. அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப்பொருள் நான்கினையும் அடிப்படையாகக் கொண்டே நூல்கள் தோன்றுவனவாம். அவற்றுள் இன்பத்தை அகம் என்றும் ஏனையவற்றைப் புறம் என்றும் தமிழ்ச்சான்றோர் போற்றிக் கூறுவர். எந்தச் செய்தியைக் குறிப்பிட்டாலும் அதனை அகம், புறம் என்ற இரண்டனுள் திணை, துறை வகுத்து அடக்கிக் கூறும் வகையில் தமிழில் பொருளிலக்கணம் அமைந்துள்ளது.

தமிழ்நூலோர் மக்களை உயத்திணையென வகுத்துரைத்தனர் மக்கள் காலந்தோறும் உயர்ந்து வருவதற்குக் காரணம் மொழிப்பேறு. மொழியைப் படைத்துக் கொண்ட மக்கள் அதன் வாயிலாகவே அறிவாற்றலைப் பெருக்கி வளர்ந்துகொண்டு வருகின்றனர். மக்கள் தம் ஐம்புல வாயிலாக அகமும் அகத்தின் வாயிலாக ஆன்மாவும் ஆராத இன்பத்தைப் பெறுதலையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அதனால் அவ்வின்பத்தைப் பெறுதற்குரிய நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு அவற்றின் வழி ஒழுகும் கடப்பாட்டினை மக்கள் மேற்கொள்வாராயினர். அம்முறையான் அமைந்தவையே அகவாழ்க்கை என்னும் மனையறி நெறியும் புறவாழ்க்கை என்னும் அரசியல் சமுதாய நெறியும்.

அகவாழ்விற்குரிய பல்வேறு பொருள்களை ஆக்கலும், அடைதலும், வழங்கலும் நோக்கிக் குழுமிய மக்கட்குழுவே சமுதாயமாகும் என்று விளக்கமளிப்பார் பாவலரேறு பேராசிரியர் ச. பாலசுந்தரனார்.

தொல்காப்பியத்தின் நோக்கு தமிழிலக்கிய வரைவியலைச் சமுதாய உளவியலின் அடிப்படையில் பலப்படுத்துவதே எனலாம். நாடக வழக்கும் உலகியல் வழக்கும் விளங்கத் தொல்லோர் மரபுகளை அறிவியல் கூறுகளுக்கு ஏற்ப வனைந்து கூறுவதாகக் கொள்ளலாம்.

பொருளிலக்கண அ€ப்பு

தொல்காப்பியப் பொருளதிகாரம் தொன்னூலோர் வகுத்த எழுவகைச் செய்யுள் இலக்கியங்களைப் படைத்தற்குறிய நெறிமுறைகளைச் சுருக்கமாகக்கூறுகின்றது. திணை முதற்பொருள் கருப்பொருள், உரிப்பொருள், அகத்திணை மாந்தர், புறத்திணை மாந்தர் ஆகிய கூறுபாடுகளையும் இனிது விளக்கிச் சொல்கின்றது.

அகத்திணை

"கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப"
அவற்றுள்
"நடுவ ணைந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்தியப் பண்பே"

கைக்கிளை ஒருதலைக் காமம் பெருந்திணைப் பொருந்தாக் காமம். இடைநின்ற ஐந்துனுள் நடுவணதாகிய ஒருதிணை தவிர்ந்த ஏனைய நான்கின் பெயர்க்குறியீடுகள் கடல் சூழ்ந்த இவ்வையத்தைப் பகுத்துக் கொண்ட பண்பானே அமைந்தன எனலாம்.

ஐந்திணை அழகு

நிலத்தியல்பான நீர் திரிந்தாற் போலே தமிழ் மக்கள் வாழ்வியலும் மண்ணின் வகையாக பல்வேறு வகைப்படுவதாயிற்று. மலையும் மலை சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் குறிஞ்சி நில மக்கள் எனப் போற்றப் பெற்றனர். அவர்தம் தெய்வமாகச் சேயோனாகிய முருகன் குறிப்பிடப்படுகின்‘ர். காடும், காடு சார்ந்த பகுதியும் முல்லை நிலம் எனப் பெற்றது. அவர்தம் தெய்வமாக மாயோன் எனப்படும் திருமால் குறிப்பிடப்படுகின்றார். வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம் எனப் போற்றப்படுகிறார். கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் எனப்படும். நெய்தல் நில மக்களின் தெய்வமாக வருணம் குறிப்பிடப்படுகின்றார். பாலை நிலத் தெய்வமாகத் துர்க்கையைக் கொண்டனர். இது பிற்கால வழக்கு.

பின்வந்த சமண சமயத்தைச் சேர்ந்தோரும். புத்த மதத்தோரும் ஐவகை நிலப் பகுப்பையும் அந்நிலத்துறை மக்களின் தெய்வங்களையும் மாற்றாது வழி மொழிந்தனர் என்பது ஆராய்ந்துணரத்தக்கது. ஐவகை நிலத்தில் பாலைத்திணையை நடுவுநிலைத்திணை எனச் சுட்டி முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் எவை என ஐவகை நிலத்திற்கு விளக்கிச் செல்கின்றனர்.

புறத்திணையியல்

அக ஒழுக்கத்திற்குத் துணையாய் அதன் மறுதலையாகப் புறத்தே நிகழும் ஒழுகலாறு பற்றிய இலக்கணங்களைக் கூறுவது வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்று புறத்திணைகளும் அகத்திணை போல் ஏழுவகையாக எடுத்தோதப்படுகின்றது.

அகத்திணை மருக்கின் அரில்தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின்
வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரத்
தோன்றும் ஈரேழ் துறைத்தே

என்று தொல்காப்பியம் புறத்திணைப் பற்றிய விளக்கங்களை நுவலும்.

களவியல்

களவென்றது தலைவன் தலைவி ஒழுகலாற்றினைத் தாயாரும் தம் ஐயரும் அறியாவாறு மறைத்தலாகிய அவ்வளவேயாம். இது அகத்திணையியலொடு தொடர்புடையதாகும் இதன் கண் விளபேலுறும் செய்திகள் யாவும் இன்றளவும் தமிழ் இன மக்கள் மாட்டு நிகழ்வன என்பதை உய்த்துணரலாகும்.

கற்பியல்

கற்பாவது உயிரினும் சிறந்ததாகக் குறிக் கொண்டொழுகும் குலமகளிரது மனத்திண்மையாகும். இதனைப்

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்"

என வரும் வள்ளுவர் வாக்காலும் உணரலாம்.

"கற்பெனப் படுவரு கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுமே"
என்பர் தொல்காப்பியர்.

பொருளியல்

முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் ஆகிய மூன்றினையும் அடிப்படையாகக் கொண்டு கருப்பொருள் ஒரு கூறாகிய மாந்தர்பால் நிகழும் ஒழுக்கலாறாகும் என உணரலாம்.

மெய்ப்பாட்டியல்

அகத்திணை புறத்திணைக்குரிய மாந்தர்களின் ஒழுகலாறு காரணமாகப் புலப்படும் அவர்தம் உணர்வுகளைச் செய்யுள் வாயிலாக அறிதற்குரிய மெய்ப்பாடு பற்றிக் கூறும் இயல் மெய்ப்பாட்டியலாகும்.

உவமயியல்

"உள்ளுறை யுவமம் ஏனை யுவமமெனத்
தள்ளாதாகும் திணையுணர் வகையே" அகம் - 50
என உவமத்தினைப் பொருளைப் புலப்படுத்தும் கருவியாகத் தொல்காப்பியனார் கூறினார்.

செய்யுளியல்

எழுத்து, அசை, சீர், அடி, தொடை, பா முதலிய பல்வேறு வகையான செய்யுள் உறுப்புக்களைத் தொல்காப்பியச் செய்யுளியல் இனிது விளக்குகின்றது.

மரபியல்

மரபாவது இருதிணைப் பொருளையும் இருவகை வழக்கினும் சான்றோர் தொன்று தொட்டு வழங்கி வரும் முறைமையாகும். தமிழர் வாழ்வியல் மரபுகளைத் தொல்காப்பியர் வழிநின்று தமிழ் மக்கள் அறிந்து மகிழ்வார்களாக.

நிறைவுரை

தொல்காப்பியம் தமிழர்களின் பூர்வீகச் சொத்து அவர்தம் அகவாழ்வு புறவாழ்வு பற்றியச் செய்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. களவியல், கற்பியல் நெறிகள் முறைப்படுத்தி காட்டப் பெறுகின்றது. மெய்ப்பாடு உணர்வுகள் தொய்வின்றி காட்டப்பெறுகின்றது. உவமவியல் செய்யுளியல், மரபியல் கூறுகள் முறையாக விளக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் கற்றுணர்ந்து மகிழ்வார்களாக.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link