ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியத்தில் வரலாற்றுச் செய்திகள்

காலத்தால் பழமையும் கருத்தால் செழுமையும் தோன்றிய நாள் முதல் இது நாள் வரையும், இனியும் எதிர்வரும் காலங்களிலும் இளமையுடனும் வளமையுடனும், ஈடும் இணையும் இன்றித் திகழ்ந்திருக்கும் தெள்ளு தமிழ் தெய்வ நூல் நம் தொல்காப்பியம். ஒல்காப்புகழ் மிக்க இந்த நூல்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழகத்தை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

முந்நூல் கண்டு முறைப்பட எண்ணி
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

செய்யப்பட்ட ஒப்புமிக்கும் அற்ற தனிச்சிறப்பு கொண்ட பிற மொழி இடத்துக் காணப்படாத பொருள் இலக்கணம் கண்டு உலகின் நனிச்சிறந்த மொழியியல் அறிஞர் பெருமக்கள் வியப்புறும் வண்ணம் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் ஓங்கி ஒளிர்கின்ற நம் தொல்காப்பியத்தைப் பெற்ற பேறுக்காக நாம் பெருமைப்படலாம்.

இந்த நூலின் அடியொற்றி எழுந்த இலக்கண நூல்கள் பலப்பல ஆனதால் எதுவும் இதற்கு நிகரில்லை. நற்பொருள் நூல் படைத்த தமிழாசிரியர்கள் யாவரைப் பற்றியும் வழக்கமாய் எழுகின்ற கட்டுக்கதைகளைப் போல தொல்காப்பியரைப் பற்றியும் எழுந்த கதை ஒன்று உண்டு. தமிழ்மொழியைப் பொறுத்தமட்டில் அந்த ஆராய்ச்சி தேவையில்லாதது. அவர் யாராக இருந்தாலும் சரி ஆசிரியர் தொல்காப்பியர் அகத்தியம் என்னும் முதல் நூலைக் கொண்டே தொல்காப்பியம் படைத்தார் என்பது ஆராய்சியாளர் கருத்து. பனம்பாரனர் பாயிரத்துடன் உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், கல்லாடர், பேராசிரியர், தெய்வச்சிலையார் ஆகியோரின் உரைகளால் மேலும் ஒளிர்கிறது. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என விளங்கும் இந்நூல் எழுத்ததிகாரத்தின் பிறப்பியலில் முதல் செய்யுளால் எழுத்துக்கள் தோற்றரவைச் சொல்லுங் காலத்துக் கொப்பூழ் அடியாகத் தோன்றி முந்துகின்ற காற்று தலையினிடத்தும், கண்டத்தினிடத்தும் நெஞ்சின் நிலைப்பெற்றுப் பல்லும், இதழும், நாவும், மூக்கும் மேல்வாயும் உள்பட எட்டாகிய முறைமையை உடைய இடங்களில் - ஓர் உறுப்போடு ஓர் உறுப்புதம்மிற் பொருந்தி அமைதலானே அவ்வெழுத்துக்களின் பிறப்பினது வேறுவேறு புலப்பட வழங்கு தலையுடைய என்றதனால் அதனை ஆராய வேறுபாடுகள் எல்லாம் கூறுபட விளங்கும். தனியொலிகள் முப்பதும் தமிழ் நெடுங்கணக்காக அமைந்த சீர்மை உலகில் பிறமொழிகள் எதற்கும் கிடையாது என்று க.சு.பிள்ளை அவர்களால் திட்டவட்டமாய் சொல்லப்பட்ட துணிவை நாமும் பெறலாம். எழுத்ததிகாரத்தை ஆராயும் கால் அவ்வகையில் தொல்காப்பியப் பிறப்பியல் ஒலியியலை விரிவாய் ஆராய்கிறது. சொல்லென்றாலே இயற்சொல்லே. செந்தமிழ் வழக்குச்சொல் என்றதனால் செந்தமிழ் நிலத்தின் முதல் இயற்சொல் என்றும் கொள்ளலாம். இயற்சொல், திரிச்சொல், திசைச்சொல், வடசொல் என்று சொற்களை நான்காக வகைப்படுத்தியுள்ள எச்சவியலில் ஆராய பெரும் பயன் பெறலாம். பொருளதிகாரமே வரலாற்றுச்செய்திகளை அகத்தினை, புறத்தினை என்ற இரண்டினுள் அள்ளி எடுக்கலாம். நிலவியலின் பாங்கோடு அகவாழ்வு ஏழு திணைகளாகவும், புறவாழ்வு ஏழு திணைகளாகவும் இருபகுதிகளாக தொகுத்துக் கூறுகின்றது. தொல்காப்பியர் காலத்து மாந்தரின் வாழ்க்கை செய்திகள் அனைத்தும் இவ்விருதிணைகளிலேயே அடங்கிவிட்டது.

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனர் புலவர் (தொ.பொ.அக.6)

என்பதிலிருந்து தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே திருந்திய செந்தமிழ் நூல்கள் இருந்தன என்பது பெறப்படுகிறது. இதுதான் முதன்மையான வரலாற்றுச்செய்தி. இதைப் போல் தமிழகத்தைப் பற்றி ஆசிரியர் சொல்லுகின்ற போது, தமிழகம் கடலால் சூழப்பட்ட மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்த செய்தியை (தொ.பொ.பொ.52) அறிய முடிகிறது. நிலவியல் வானியல் வாழ்வியலை முறை சிறந்தனவாகக் கண்டறிந்து கூறும் உலகலாவிய அறிவு படைத்தவர்களாய் தொல்காப்பியக் காலத்தவர்களும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் திகழ்ந்தனர் என்பது (தொ.பொ.அக.30) செய்யுளினால் உணர்த்தப்படுகிறது. மெய்யுணர்வால் அவர்கள் புவியியலை குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என (ஐந்தாக பாலை நீங்கலாக) உலகையே நானிலம் எனச் சொன்னார்கள். பாலை என்பது தமிழகத்தில் தனி நிலமாய் இல்லை என்கிற நுட்பமான செய்தியை அளிப்பது அருமையிலும் அருமை. வானியலை மிகவும் எளிதாக அதே நேரத்தில் தெளிவாக கண்டறிந்து பயன்பாட்டை சீராக்கிக் கொண்ட அறிவு நுட்பத்தை எண்ணும்போது உள்ளம் வியப்படைகின்றது. வெய்யிற்காலத்தை இளவேனில், முதுவேனில் என்றும் பனிப்பொழிவின் சுழற்சியை முன்பனி, பின்பனி என்றும் காற்று வீசுவதை தென்றல் வாடை என்றும், இலையுதிர்வதையும் கார்காலம் தோன்றி மழை பொழிவதையும் மழை ஓய்ந்து குளிர்படர்வதையும் ஊன்றி உணர்ந்து உணர்த்தியதன் மூலம் தொல்காப்பிய மாந்தர் வானியலை ஆராய்ந்த திறத்தை அறிந்து உள்ளம் அவர்களைப் போற்றி மகிழ்கிறது.

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி கூதிர்யாமம் என்னும் வரிகள் ஆண்டை ஆறு கூறாக்கி அவற்றிற்கு கார்காலம், கூதிர்காலம், முதுவேனிற்காலம் என எழிற் பெயரிட்டு அதனினும் நாட்காலத்தை சிறுபொழுது, பெரும்பொழுது என இரு கூறாக்கி சிறு பொழுதையும், பெரும் பொழுதையும் ஆணு நுனுகி உலகில் காலத்தை கணித்த முதல் மனிதன் தமிழன் என்ற உண்மைச் செய்தியை உணர்த்துகின்றது தொல்காப்பியம். காலத்தை கணித்து வானிலையைத் தொகுத்து நிலத்தை பகுத்து நானிலத்திலும் காலூன்றிய தமிழன் ஒவ்வொரு நிலத்திலும் நிலமக்கள் தலைமக்கள் என்று கண்ணியமான இருவகைப் பெருங்குடிமக்களாய் தகுதி அடிப்படையில் தரம் பிரித்துக் கொண்டனர். அவர்களிலும் வேறுபட்ட பல தொழில்களையும் தமதாய் கொண்ட குடிகளும் இருந்தன என்பதோடு, எதுவும் அன்று சாதியின் அடிப்படையில் அமையவில்லை என்கிற தகவலை நாம் சிறப்புச் செய்தியாய் அறியலாம். அந்தணர் பார்ப்பார் வேறு வேறானவர்கள் என்று எண்ணுவதற்கு அவர்களின் அடையாளங்கள் தொழில்கள் உறுதுணையாகின்றது.

நூலே கரகம் முக்கால் மனையே
ஆயுங் காலை அந்தணர்குரிய (தொ.பொ.மர.660)

என்று அந்தணர் அடையாளமும்,

தோழியே தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப (தொ.பெ.செய.181,182)

என்கிற பாடல் வரிகளாலும் மற்றும் (மர.52.கற்பு.360) ஆகிய செய்யுள்களின் வாயிலாக அந்தணரும் பார்ப்பாரும் வேறுவேறானவர்கள் என்றாலும் அவர்கள் இருவரும் தமிழரே என்னும் செய்தியை நாம் மனதிற் கொள்ள வேண்டும். கற்பெனப்படுவது பெண்மக்களின் தனியுடமை என்று அன்றே எழுதப்பட்ட சட்டமாகவே நிலைபெற்றிருந்தது என்பதனை தொல்.பொ.களவு.23 கற்பு11 என்கிற தொடர்களாலும் பிறவற்றாலும் அறியக்கூடுகின்றது. மேலும் இசசெய்யுள் வரிகளால் அன்றும் பெண்கள் பெரும் பொறுப்புகளை சுமந்திருந்தனர் என்பதையும் உணரமுடிகின்றது. கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் வழக்கமும் அதைத் தடுக்கும் பழக்கமும் இருந்ததென்கிற விரும்பத்தகாத செய்தியை சொல்வது (தொ.பெ.புற.19) ஆவது பாடல் வரிகள் தொல்காப்பியர் காலத்துச் சமுதாயத்தில் பிறப்பால் உயர்வு தாழ்வு என்பது எங்கேயும் சுட்டப்படவில்லை. தகுதியால் மற்றும் செல்வத்தால் என்பதோடு அந்த செல்வந்தன் கொடை குணம் உள்ளவனாய் கொடுப்பவனாய் இருத்தல் வேண்டும். இல்லையெனில் பழிப்புக்குரியவனாய் விடுவான் என்பதும் சொல்லப்பட்டிருக்கின்றது. தொன்மை நலம் வாய்ந்த தமிழர்கள் புகழுடனும், மானத்துடனும் வாழவே ஆசைப்பட்டனர், என்பதை மாராயம் பெற்ற நெடு மொழியானும் (தொ.பொ.புற.7) கலைச்சிறப்பில் உலகின் முதல் மக்கள் என்பதை (தொ.பொ.புற.8.30) செய்யுள் தொடர்களால் அறியலாம். தொல்காப்பியர் காலத்திலும் பொன்னே சிறந்த உலோகப் பொருளாய் கண்டறியப்பட்டது. (கள4 மெய்14) வரிகளால் அறியக்கிடக்கின்றது. இன்னும் எண்ணிலடங்கா வரலாற்று செய்திகளை தன்னுள் கொண்டு திகழ்கின்றது. இந்த அழியாத தெய்வத்தன்மை பொருந்திய நூல் தங்கள் வாழ்வில் மொழிக்கு முதலிடம் தந்து தமிழ் இன்றளவும் இளமை மாறாமல் வாழக் காரணமாய் நின்றவர்கள் தொல்காப்பிய தமிழர்களே என்றால் மிகையாகாது.

நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link