ஆய்வுச் சிந்தனைகள்


தொல்காப்பியத்தில் தாவரங்கள்

உலகம் தழுவிய உயர்ந்த சிந்தனைகள் பொதுமையான சிந்தனைகள் வாழ்வியல் நெறிகள் வடித்து தமிழ் வளர்த்தனர், புலவர் ஆனால் அடிமைக்கனவுகளை அறுவடை செய்வதற்கு அட்சயப் பாத்திரத்தை அடகு வைத்த கதையாய் தேர்வில் தோற்றுக் கொண்டிருக்கிறது பாடபுத்தகம் இந்நிலை மாற வேண்டும். அதற்கு பாடமும் வாழ்வும் ஒன்றாக இருக்க வேண்டும். வெற்றி மாலை சூட்டுவதற்காக ஜெயதேவதை பூச்செடிகளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உலகம் உணர வேண்டும்.

பூமி - வானம், இயற்கை - செயற்கை, அறிவியல் - வரலாறு, கலை - காலம், வாழ்க்கை - உணர்வு என்ற நிலையில் இலக்கணமும் இலக்கியமும் வாழ்க்கைக்கூறுகளை எடுத்து இயம்ப வேண்டும்.

ஐந்து பூதங்கள்

ஐந்து பொறிகள் உலகம் அனைத்திற்கும் பொது இலக்கணம் ஐந்து. நில அமைப்பு ஐந்து - தமிழுக்கே உரிய சியறப்பு ஆம் வாழ்வியல் நெறிகள் என்னும் போது மொழி அமைப்பு என வகைப்படுத்தும் போது தமிழுக்கே உரிய சிறப்பு பொருளதிகாரம் உணர்த்தும் தொல்காப்பியரின் ஐவகை நிலங்கள் பற்றிய செய்திகளே!

தட்ப வெப்பம் நில அமைப்பு மக்களின் வாழ்க்கை நெறி இவைகளின் அடிப்படையில் எச்செய்தியும் விடாது சொல்லிச் செல்வது தொல்காப்பியர் தனித்தன்மை அத்தன்மைகளில் இயற்கையோடு இயைந்து மக்களின் வாழ்வில் பெருமளவு நன்மையை உண்டாக்குவது தாவரங்கள்.

பொதுவாக தாவரங்கள் என்னும் போது புல் செடி கொடி மரம் என்ற வகைகள் இடம் பெறுகின்றன.

உயிர்த்தன்மை உடையன அனைத்தும் நகரும் தன்மை உடையன என்னும் அடிப்படையில் தாவரங்கள் உணவுக்காக இடம் நகரும் தன்மையுடையன.

கீழ்நிலைத்தாவரங்கள் பாசிகள் ஆல்ககாக்கள் கசையிழை போன்றவை வேர் பிடித்தற்காக நீர் நோக்கி நகருகின்றன. அதே போல மண் நோக்கி ஒளி நோக்கி தாவரங்கள் இயக்கம் அமைகின்றன.

அதேபோல நிறத்தின் அடிப்படையில் காலை மாலை எனப்பூக்கள் மலருகின்றன. பெரும்பாலும் வெந்நிறப்பூக்கள் காலையில் மலரும் மஞ்சள் நிறப்பூக்கள் மாலையில் மலரும் குறிப்பிட்ட திசை நோக்கி மலரும் பூக்களும் உண்டு.

உ.ம்: சூரிய காந்தி பூ. இவை போல பல நுட்ப முறைகளைக் கண்டே தொல்காப்பியர் திணை ஒழுக்கத்தைச்சுட்ட அத்திணைக்குரிய மரம் பூ முதலியவற்றை கருப்பொருளில் அடுக்கிச்செல்கிறார்.

"தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியோடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப"

தெய்வம் உணவு விலங்கு மரம் பறவை பறையென்னும் முழக்கருவி தொழில் பண் (இசை) முதலியனவும் அத்தகைய பிறவும் கருப்பொருள் என்று கூறுவர். பிறவும் என்றதனால் பூவகையும் நீரும் கருப்பொருளாகக் கொள்ளப்படும்.

நல்லாசிரியரின் இயல்பு கூறும் போது நன்னூல் ஆசிரியர் மலரின் சிறப்புப்பற்றி பேசுகிறார். ஏனெனில் தமிழர்வாழ்வில் எல்லா நிகழ்வுகளிலும் பூக்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

"மங்கலம் ஆகி இன்றியமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொளமெல்கி பொழுதின் முகமலர் உடையது பூவே" என்பார் பவணந்தி முனிவர். அத்தகைய சிறப்பு உடையதால்தான் பூ கருப்பொருளில் ஒன்றாயிருத்தல் வேண்டும்.

மலை காடு வயல் கடல் என்ற பகுப்பில் ஐந்திணை ஒழுக்கத்தை அமைத்துள்ள தொல்காப்பியர் மரங்களையும் அவ்வாறே உரையாசிரியர்கள் வரிசைப்படுத்துகிறார்.

குறிஞ்சி : வேங்கையும் கோங்கும்
முல்லை : கொன்றை, குருத்து, புதல்
பாலை : பாலை, இருப்பை, கள்ளி, சூரை
நெய்தல் : புன்னை, கைதை

பொருளதிகாரம் புறத்திணையியலில் கரந்தைத்துறைகள் பற்றி ஆசிரியர் கூறும் போது "உடல் வேந்த் அடுக்கிய உன்ன நிலையும்" எனப் பகைமன்னனது எண்ணத்தை உன்ன மரத்தோடு பொருத்திக் காண்கின்ற உன்னநிலையும் என்னும் போது உன்ன என்ற மரத்தைக் குறிப்பிடுகிறார்.

பொருளதிகாரம் மரபியலில் ஒரறிவுயிரின் சில சிறப்பு மரபுகள் என்னும் போது "புறக் காழனவே புல்லலெனப்படுமே" நூ 86

புறவுயிர்ப்பு உடையனவற்றை புல் என்று சொல்லுவர். அவை தெங்கு, பனை, கமுகு, மூங்கில் என புலியூர் கேசிகன் உரை கூறுகிறார்.

"அகக் காழனவே மரனெனப்படுமே" நூ 87
உள்ளுறுதி உடையன மரமென்றும் கூறப்பெறும். அவ்வாறாயின் மரவகையின் உறுப்புகள்

"இலையே முறியே தளிரே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்
மரனொடு வரூஉம் கிளவி யென்ப" - நூ 89

இலை, முறி, தளிர்தோடு சினை, குழை, பூ, அரும்பு, நனை என்று கூறப்படுபவை எல்லாம் மரத்தின்கண் வரும் உறுப்புச் சொற்களாம். இவைகள் மட்டுமின்றி இல்லம், எகின் போன்ற மரப்பெயர்களும் தொல்காப்பியர் கூறிச்செல்லும் மரங்களாம், அத்திப்பூ, வேப்பம்பூ, பனம்பூ காந்தள் மலர், கொடடி, தாமரை, செங்கழுநீர், மலர், வள்ளி என்று வரிசைப்படுத்தும்போது கொடி, செடி போன்றவற்றையும் நீர் வாழ்த்தாவரங்களையும் தொல்காப்பியர் எடுத்துக்காட்டுகிறார்.

முடிவுரை

மருந்தாக, உணவாக, அன்றாடம் பயன்தரு பொருளாக மரங்கள் பயன்படுகின்றன. அப்பயன்களை நாம் தொடர்ந்து பெற தொல்காப்பியர் காலம் முதல் காக்கப்படும் மரங்களை நாமும் காப்போம் நலம்பல பெறுவோம்.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link