ஆய்வுச் சிந்தனைகள்


நகுமே தோழி! நறுந்தண் காரே

ஓதல், தூது, போர் காரணமாகவும் பொருள்தேடும் பொருட்டும் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வது வழக்கம். இவற்றுள் இல்லற வாழ்க்கை இனிதே அமையவும் விருந்தோம்பல் பொருட்டும் பொருள் தேடச் செல்லும் செலவே அதிகமாக நிகழ்ந்துள்ளன. இவ்வாறு தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் கார், கூதிர், இளவேனில் முதலான ஏதேனும் ஒரு பருவத்தைக் குறிப்பிட்டு, அப்பருவக் காலத்தில் திரும்பி வருவதாக உறுதிகூறிச் செல்வான். அவ்வாறு அவன் குறிப்பிட்ட காலத்தில் வாராதிருந்தால், அவனையே எதிர்நோக்கி இருக்கும் தலைவி அவல நிலைக்கு ஆளாவாள்; பல்வேறு எண்ணங்கள் அவளது உள்ளத்தில் எழும். இந்நிலையில் அவளை எவ்வாறு ஆற்றுவிப்பது என்ற கவலை தோழியின் உள்ளத்தையும் துன்புறுத்தும். குறுந்தொகைப் பாடல்களில் இச்சூழலில் அமைந்த கூற்றுக்களின் வாயிலாக அறியலாகும் அக்கால மகளிரின் பல்வேறு மனநிலைகளைச் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அகத்திணைப் பாடல்களில் முல்லை, நெய்தல், பாலை ஆகிய திணைகளில் அமைந்த பாடல்கள் முறையே தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வரவை எதிர்நோக்கி இருத்தல், அவனது பிரிவால் ஏங்கி இருத்தல், அவனைப் பிரிய வருந்துதல் போன்ற பிரிவுச் செய்திகளையும், அப்பிரிவால் விளையும் துயரச் செய்திகளையும் சுட்டிக்காட்டும். அவற்றுள் "பிரிவிடை பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைவியின் கூற்றாகவும் (25)", "பருவம் கண்டு அழிந்த தலைவியை ஆற்றுவிக்கும் தோழி கூற்றாகவும் (6)" வரும் குறுந்தொகைப் பாடல்கள் இக்கட்டுரைக்கு ஆதாரங்கள்.

இத்துறைசார்ந்த பாடல்களாகக் குறுந்தொகையில் முப்பத்தொன்று (பாடல் எண்: 21, 24, 65, 66, 94, 98, 103, 108, 110, 126, 148, 155, 183, 186, 194, 195, 197, 200, 216, 220, 221, 234, 251, 254, 275, 285, 287, 319, 341, 380, 382) பாடல்கள் காணக் கிடைக்கின்றன. இவற்றுள் முல்லைத் திணைப் பாடல்களே அதிகம் (22). நெய்தல் திணையில் ஐந்து பாடல்களும், பாலைத் திணையில் நான்கு பாடல்களும் இச்சூழ்நிலையில் அமைந்துள்ளன. ஓக்கூர் மாசாத்தியார், ஓதலாந்தையார், ஒளவையார், பரணர், கோவூர் கிழார், கோவர்த்தனர், இடைக்காடனார், தாயங்கண்ணனார், குறுங்கீரனார், பூதத்தேவனார் போன்ற முக்கியமான சங்கப் புலவர்கள் இப்பாடல்களைப் பாடியுள்ளனர். ஓக்கூர் மாசாத்தியார் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.

முல்லைத் திணைப் பாடல்கள் அதிகமாக இடம்பெற்றுள்ள நிலையில், முல்லைத் திணைக்குரிய கார்காலப் பருவம் இப்பாடல்களில் முக்கியமாக இடம்பெறுகின்றது. கூதிர் காலமும் இளவேனில் காலமும் ஓரிரு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கார்காலம்:-

குளிர்ந்த மழை மேகங்களின் வருகை - அக்கரிய மேகங்கள் மின்னுதல் - முழவு போன்ற ஓசையுடைய இடியேற்றினோடு மேகங்கள் முழங்குதல் - மாமழை பொழிதல் - மலர்களைச் சுமந்துவரும் அருவியின் வீழ்ச்சி - வழிந்தோடும் மழை நீரால் நிலம் சேறாதல் - வெண்ணிற முல்லைகளுடன் செந்நிற முல்லைகளும் (தளவம்) மலர்ந்து மணம் வீசுதல் - பொன்னிறக் கொன்றையும் குருந்தும் பொலிவுடன் மலர்தல் - பீர்க்கின் மலர்கள் அழகுபட இதழ் விரித்தல் - காயாம் பூக்கள் மயிலின் கழுத்தையொத்த வண்ணத்தில் பூத்துக் குலுங்குதல் - வண்டுகள் மலரிடைத் தேனுண்ண வருதல் - கார்முகில் ஓசை கேட்டுக் கானமயில்கள் இசைத்தல் - ஆண்மான்களும் பெண்மான்களும் தெளிந்த நீரைக் குடித்துத் துள்ளி விளையாடுதல் - அவை இணையாக மேய்ந்து திரிதல் - மழைக்கால மாதலால் இடைக்குல மக்கள் தங்கள் செம்மறி ஆட்டுடன் கானத்தில் தங்கிவிடுதல் - ஆண்யானைகள் பெண் யானைகளுடன் மலைகளின் உள்ளிடத்தை நாடிச் செல்லுதல் போன்ற காட்சிகள் கார்கால வரவினை உணர்த்துவனவாக இப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

கூதிர்காலம்:-

சேற்றுநிலத்தில் இரைத்தேடும் நாரைக்குத் துன்பம் தரும் வாடைக் காற்றின் வருகை - நீரிலுள்ள கருவிளை மலர்களை அசைத்தும், நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையின் மலர்களை உதிர்த்தும் வாடைக்காற்று வீசுதல் போன்ற காட்சிகளைக் காட்டி, கார்காலத்தின் பின்னே ஊதைக் காற்றின் குளிர்ச்சியோடு கூதிர்ப்பருவம் வருவதை இப்பாடல்களில் காணலாம்.

இளவேனில் காலம்:-

பசிய அரும்புகளை உடைய குராமரம் பொரி போன்ற பூக்களையுடைய புன்கு மரத்தோடு சோலையை அழகு செய்தல் - கோங்குமரக் கிளைகளில் மென்மையான அரும்புகள் இதழ் விரித்துப் பூத்தல் - வேம்பின் கரிய காம்புகளில் ஒள்ளிய மலர்கள் மலர்தல் போன்ற காட்சிகள் இளவேனில் பருவத்தின் வருகையை அறிவிக்கின்றன.

மாலைப்பொழுது:-

இணைந்திருப்போர்க்கு இன்பமும் பிரிந்திருப்போர்க்குத் துன்பமும் விளைவிப்பது மாலைக்காலம். எனவே தான் புலவர்கள் இம்மாலைப் பொழுதை இன்பமாலையென்றும் துன்பமாலையென்றும் வருணிப்பாராயினர். "பருவங்கண்டழிந்த" தலைவியர்க்குக் கார்கால மாலைப் பொழுது கடுந்துன்பம் விளைவிப்பதாகவே அமைகின்றது. "படர் சுமந்து எழுதரு பையுள் மாலை (195)" என இச்செய்தி குறிப்பிடப்படுகின்றது. பிரிந்திருக்கும் தலைவிக்குப் பருவகாலம் வந்துவிட்டால் காலையும் பகலும் மாலைப் பொழுதாகவே தோன்றித் துன்புறுத்துமாம். பெரும்புலர் விடியலும் மாலை - பகலும் மாலை - துணையிலோர்க்கே (234)" என்பது பாடல் வரிகள்.

முல்லை மலர்கள் மலர்கின்ற நேரம் - புல்லை உண்ட பசுக்கள் ஊரை வந்தடையும் நேரம் - காலையில் விதைக்கச் சென்ற உழவர்கள் வீடு திரும்பும் நேரம் - வெம்மை குறைந்த கதிரவன் மேற்கு மலையை அடைகின்ற நேரம் - சூரியன் மறைந்து சென்ற ஒளியற்ற பொழுது என்றெல்லாம் மாலை நேரத்தின் வருகை வருணிக்கப்படுகின்றது.

மகளிர் நிலை:-

குறித்த பருவத்தில் தலைவன் திரும்ப வராததால் தலைவியர் மனம் வருந்தி, உடல்மெலிந்து, பசலையுற்றுப் பல்வேறு நிலைகளில் தங்கள் துயரத்தை வெளிப்படுத்துகின்ற தன்மையை இப்பாடல்களில் காணலாம். அவ்வெளிப்பாடுகள் பின்வருமாறு:

ஏக்கம்:-

* தலைவன் உடனிருந்தபோது உடம்பைத் தடவிச் சென்ற காற்று, இப்போது புலிபோல் பாய்ந்து பரவுகின்றதே! (195)

* தலைவன் உடன் உறையும்போது நட்பாய் இருந்த கார்காலம் அவரைப் பிரிந்திருக்கும் காலத்தில் பகையாய் வருந்துகின்றதே! (194).

* ஊர்மக்களுக்குப் பாலைத் தந்து உணவைப் பெற்றுச் செல்லும் இடைமகனுக்குத் தலையில் முல்லை சூடியுள்ளான். ஆயின் தனக்கு அவ்வாய்ப்புக் கிட்டவில்லையே! (221).

* முல்லைக்காட்டில் இணையாக மேயும் இளமான்களைத் தலைவர் காண்பாரா! அவ்வாறு கண்டு பருவம் உணர்ந்து திரும்பி வருவாரா! (183).

* பருவம் வந்தபின்னும் தலைவரின் தேர் வரும் செய்திகூட வரவில்லையே! (155, 254).

சோகம்:-

* என்னைப் போன்று தலைவனைப் பிரிந்து வாழ்வோர்க்கு விடியற் பொழுதும் பகற்பொழுதும் மாலைப்பொழுதுதான் (234).

* "பொன்னேர் மேனி நல்நலம் சிதைத்தோர் இன்னும் வாராயின் என்னாம் தோழி நம் இன்னுயிர் நிலையே" (319).

* அவர் திரும்பி வராததால் நான் உயிர் வாழேன் (103, 108).

* யாம் பசலையுற்ற செய்தியை யாரேனும் அவருக்கு எடுத்துரைக்க மாட்டார்கள்! (98).

பழியச்சம்:-

* குறித்த காலத்தில் அவர் வராதது தனக்குத் துன்பத்தைத் தந்தாலும், அவரது அச்செய்கையால் பிறர் கூறும் "அலர்மொழி" அதைவிட அதிக துன்பத்தைத் தருகின்றது (24).

* "குறித்த காலத்தில் வராத தலைவனை நினைத்து வருந்தி உறைதல் எற்றுக்கு" எனக் கார்காலம் கேட்கின்றது.

* கார்காலத்தில் மலர்ந்த முல்லை மொட்டுக்கள் நம்மைப் பார்த்து ஏளனத்தோடு நகும் (126, 186).

* இவள் இரங்கத்தக்கவள் என மழைமேகம் இடித்து மின்னும் 216).

* கூதிர்கால வரவு தன்னைக் கொல்வதைப் போல் வருகின்றது (197).

கோபம்:-

* குறித்த பருவத்தில் வராத தலைவர் இனிமேல் "வந்த போதிலும் வராது விடினும் நமக்கு எத்தகைய உறவினர் (110)

அன்பின் மிகுதி:-

* பருவம் வந்தபின்னும் அவர் வராததால் அவர் நம்மை நிச்சயமாக மறந்திருக்க வேண்டும். ஆயின் நாம் அவரை ஒருபோதும் மறக்க மாட்டோம் (200).

* அவரது வருகையை எதிர்பார்த்து இனிமேலும் வாழ விருப்பமில்லை. எனினும் தறுகண்மையால் உயிரோடு இருக்கின்றேன் (341).

நம்பிக்கை:-

* இப்போது வந்திருப்பது உண்மையான கார்காலம் அல்ல. உண்மையாக இருந்தால் எம் தலைவன் நிச்சயமாக வந்திருப்பான் (21). இயற்கை பொய்க்காலம்; தலைவன் எப்போதும் பொய்க்க மாட்டான்.

சங்க காலப் பெண்கள் தங்கள் தலைவர்களிடம் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றாள் இக்குறுந்தொகைத் தலைவி.

இதற்கு மாறான ஒரு தலைவியையும் காணமுடிகின்றது. கார்காலம் வந்துவிட்டது. தலைவர் வரவில்லை. "இது பருவமன்று வம்பு" எனத் தலைவியை ஆற்றுப்படுத்துகின்றாள் தோழி. அதைக்கேட்ட தலைவி, "இத்தகைய கார்காலத்தைக் கார்காலம் அன்று என்று நீ கூறுவாயாகில் யான் காணும் காட்சி கனவோ?" என வினவுகின்றாள் (148).

கடமை உணர்வு:-

வந்திருப்பது கார்ப்பருவத்தின் அடையாளம் என நான் மயக்கம் கொள்ளவில்லை; தலைவன் இதனை உண்மையென நம்பி, என்மீது கொண்ட ஆசையால் வினை முடிக்காமல் மீண்டு விடுவானோ என்றுதான் அஞ்சுகிறேன் (94).

"இளமை பாரார் வளம் நசைஇச் சான்றோர் (126)" எனப் பருவம் கண்டு கலங்கும் குறுந்தொகைத் தலைவியரிடையே இத்தலைவி தனித்து நிற்கின்றாள் என்றே கூற வேண்டும்.

தோழி கூற்று:-

தோழி கூற்றாக வரும் ஆறு பாடல்களில் மூன்று பாடல்கள் (66, 251, 382) "பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளை நோக்கி, தலைவியே! இது பருவமன்று - வம்பு" என வற்புறுத்துவதாக அமைகின்றன.

"வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று
காரிது பருவம் ஆயின்
வாராரோ நம் காதலோரே" (382)

என்றெல்லாம் அவளது மொழி அமைகின்றது. பிற மூன்று பாடல்களும் முறையே, அவரில்லாமல் யாம் என் செய்வது என்று வருந்துவதாகவும் (380), அவர் வருவார் என ஆறுதல் கூறுவதாகவும் (287), நல்நிமித்தம் கூறி அவர் வருவார் என உறுதி கூறுவதாகவும் (275) அமைகின்றன.

குறித்த காலத்தில் தலைவன் திரும்பிவராத காரணத்தால் தலைவிக்கு ஏற்படுகின்ற ஏக்கத்தின் - சோகத்தின் - அச்சத்தின் - அவநம்பிக்கையின் வெளிப்பாடாக இப்பாடல்கள் அமைகின்றன. ஒரே சூழ்நிலையில் பல்வேறு மனநிலைகளை அடையும் வேறுபட்ட தலைவியரை இப்பாடல்களில் காண்கின்றோம். இந்நிலையில் பிற சங்கப்பாடல்களையும் கூற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி ஆராய முற்பட்டால் அக்கால மக்களின் பண்புநலன்களை மேலும் அறிய இயலும்.

நன்றி: ஆய்வுக்கோவை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link