ஆய்வுச் சிந்தனைகள்


உயிர் சார்ந்ததன் வண்ணம் என்பதைச் சில தமிழ் எழுத்துக்கள் உணர்த்துமாறு

நம் உயிர்போல் இயங்குதலின் தமிழ் "அ" முதல் "ஒள" வரையுள்ள எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் எனப்பட்டன. நம் மெய்போல் இயங்குதலின் "க்" முதல் "ன்" வரையுள்ள பதினெட்டெழுத்துக்களும் மெய்யெழுத்துக்கள் எனப்பட்டன.

நம் உயிர் உடம்பை விட்டுத் தனித்து இயங்குவதும், மெய்யொடு சேர்ந்து அதையியக்குவதும் செய்கிறது. அதுபோல, உயிர் எழுத்துக்கள் மொழிக்கு முதலில் தனித்தும் மெய்யெழுத்துடன் சேர்ந்து அதை மொழிக்குச் சேர்த்து இயக்கியும் வரும்.

நம் மெய்யானது, தனித்து இயங்காமையோடு, உயிருடன் சேர்ந்து அது இயக்க இயங்கும். அதுபோல, மெய்யெழுத்துகளும் மொழிக்கு முதலில் தனித்து வாராமையோடு உயிரொடு சேர்ந்து உயிர்மெய்யெனப் பெற்று மொழியில் வரும்.

எனவே, தமிழ் எழுத்துக்கள் உயிர் மெய் எனப் பெயர் பெற்றது உவமையாகு பெயராய்க் காரணப் பெயராயின. "அ" முதல் "ஒள" வரையுள்ளவற்றுக்குப் பெயராதலின் உயிர் என்பது பொதுப்பெயர். "க்" முதல் "ன்" வரையுள்ளவற்றுக்கு மெய் என்பது பொதுப் பெயர்.

இகர ஐகாரம்:-

இனி உயிர் எழுத்துகளுள் இகர ஐகாரங்கள் பற்றிக் காணலாம். இவ்விரண்டும் எழுத்துகளாயினும் விகுதி எனும் தகுதி பெற்று இடைச் சொற்களாகவும் வரும்.

உண்டி, உண்டனை என்பனவற்றில் இகரமும் ஐகாரமும் விகுதிகள்; முன்னிலை விகுதிகள் எனப்படும்.

உயிர் சார்ந்ததன் வண்ணம் என்பர். அழுவார் கூட்டம் சாரின் அழுவதும், சிரிப்பார் கூட்டம் சாரின் சிரிப்பதும் உயிர்க்குணம். இகர விகுதியானது "அலரி" என்பதில், அலர்வது அலரி எனக் கருத்தாப் பொருளில் வந்தது (கருத்தாப்பொருள்).

"மண்வெட்டி" என்பதில் வெட்டுவதற்குக் கருவியாக இருப்பது எனும் பொருளில் வந்தது (கருவிப்பொருள்).

"தீனி" என்பதில் தின்னப்படுவது தீனி எனச் செயப்படுபொருளில் வந்தது (செயப்படுபொருள்).

எனவே, இகர எழுத்துத் தான் சார்ந்த சொற்பொருளுக்கேற்பத் தன்பொருளும் மாறுபட்டது.

ஐகார எழுத்தானது "தடை" என்பதில் தடுப்பது தடை எனக் கருத்தாப் பொருளில் வந்தது.

"படை" என்பதில் படுப்பது (அழிப்பது) படை எனப் படுத்தற்குக் கருவி என்ற நிலையில் கருவிப் பொருளில் வந்தது.

"விடை" என்பதில் விடுக்கப்படுவது விடை எனச் செயப்படுபொருளில் வந்தது.

எனவே, ஐகார எழுத்துத் தான் சார்ந்த சொற்பொருளுக்கேற்பத் தன்பொருளும் மாறுபட்டது.

இவ்வுதாரணங்களால் இகர ஐகாரங்கள் உயிர் என்பதற்கேற்பச் சார்ந்ததன் வண்ணமாக அதாவது சார்ந்ததன் பொருளாக வந்தன என்க.

குற்றியலுகரம்:-

குற்றியலுகரம் வருமொழி முதலில் உயிர்வரின் மெய்விட்டோடும் என்பர் நன்னூலார். தொல்காப்பியர் உயிர் ஏறத்தான் இடம் கொடுக்கும் என்றார். இருவர்க்கும் உதாரணம் நாகு + அரிது - நாகரிது என்பது போல்வனவாகும். தொல்காப்பிய உரையாசிரியராகிய இளம்பூரணர் நாகரிது என்பதில் குற்றியலுகரம் கெடாமல் அகர வுயிர் ஏற இடம் கொடுத்தது என்பர். கெடும் என்பாரை மறுப்பதும் செய்தார்.

இடம் கொடுத்தலாவது தன் இடத்தைவிட்டு நீங்கி இடம் கொடுத்தலும், தன்னிடத்திலேயே இடம் கொடுத்தலும் என இருவகைப்படும். குற்றியலுகரம் கெட்டு வருமொழி உயிர் ஏற இடம் கொடுக்கும் என்பர் நன்னூலார். இளம்பூரணர் கெடாமல் தன் ஒலியடங்கி வரும் உயிரொலி வெளிப்படுமாறு இடம் கொடுக்கும் என்பர். தொல்காப்பியர் "குற்றியலுகரமும் அற்றென மொழிப" என்றார். இதற்கு உரை வேறுபாடுகள் உண்டு. இளம்பூரணர் குற்றியலுகரம் உயிர் ஏற இடம் கொடுக்கும் அத்தன்மைத்து என உரை கூறினார். இடங்கொடுத்தலாவது தானிருந்தே இடம் கொடுத்தலாம்.

நாகு + யாது - நாகியாது. இதில் குற்றியலுகரம் யகரம் வர இகரம் சேர்ந்து தன்னொடு இடங்கொடுத்ததாகக் கூறுவர் இளம்பூரணர்.

நச்சினார்க்கினியரும் இக்கொள்கையினரே.

"நகரிது என்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர்
உயிரோசையும் பெற்று அவ்விரண்டும் கூடி நின்றல்லது
அப்பொருள் உணர்த்தலாகாமையின், இஃது (உகரம்)
உயிரொடும் கூடி நிற்கும் என்றார்"

என்பர் நச்சினார்க்கினியர்.

இங்கே நமக்கோர் ஐயம் எழுகிறது. உயிரும் உயிரும் கூடி நிற்குமா என்பது அது.

பேய் பிடித்தவர் செயல் பேயின் செயலாகச் சிற்சில சமயங்களில் இருத்தலைக் காணலாம். பேய் பிடித்தவனின் உயிர் அப்பேய்க்கு இடம் கொடுத்துத் தான் அடங்கிக் கிடத்தலும் அப்பேயின் ஆட்சி அடங்கின் தான் செயல்படலும் காண்கிறோம். அதுபோலவே குற்றியலுகரமும் தன் ஒலி சிறிது கொண்டு அதாவது வெளிப்படையாகத் தெரியாதபடி வரும் உயிர்க்கு அதன் ஒலி வெளிப்படும்படி இடம் கொடுக்கும் எனலாம்.

இதுவரை உயிர் சார்ந்ததன் வண்ணம் ஆம் என்பதை இகர ஐகார வுயிர்கள் அறிவிக்கும் என்பதும், பேய் பிடித்தவரின் உயிர் பேய்க்கு இடம் கொடுத்துத் தானும் இருத்தல் போலக் குற்றியலுகரம் வருமொழி முதல் உயிர்க்கு ஏற இடம் கொடுத்துத்தானும் கெடாது இருக்கும் என்பதும் கூறப்பட்டன.

செய்கு என் வாய்பாடு:-

"உண்கு வந்தேன்" என்பதில் "உண்கு" என்பது உண்பேன் என்னும் பொருளது. அதாவது வினைமுற்றுப் பொருளது. வந்தேன் என்னும் வினைச்சொல்லுடன் தொடர்ந்த போதும். அப்பொருளிலேயே வரும் "உண்பேன் வந்தேன்" என்னும் பொருளில் வரும்.

"உண்பேன் வந்தேன்" என்றால் உண்பேன் என்னும் தன்மையொருமை வினைமுற்று, "வந்தேன்" என்ற வினை கொண்டது. கொண்டாலும் தான் வினைமுற்றாகவேயில்லாமல் உண்பேனாகியயான் என வினையாலணையும் பெயராகவோ அல்லது "உண்ண வந்தேன்" என வினையெச்சப் பொருளாகவோ வரும். எனவே, உண்பேன் என்பது தொடரும்போது தன் தன்மை திரியும்.

"உண்கு வந்தேன்" என்றால் உண்பேன் வந்தேன் என வினை முற்றாகவே இருக்குமேயன்றித் திரியாது. உண்கு என்பது பெயர்த் தன்மையோ எச்சத்தன்மையோ அடையாது; தன்முற்று நிலையில் திரியாது.

"செய்கு" என்னும் வாய்பாட்டு வினையெச்சம் தான் பெயரொடு தொடர்ந்தாலும் வினையொடு தொடர்ந்தாலும் முற்றாகவே இருக்குமேயன்றித் தன்நிலை திரியாது. "செய்கு" என்னும் வாய்ப்பாட்டு இறுதிக்குகரம் அத்தகையது. இதுவும் உயிர்க்குணம் ஒன்றையறிவிக்கும்.

உண்மைத் துறவிகள் எச்சார்பாலும் தம் துறவொழுக்கத்தில் திரியார் என்பது அது. பேரூர்ச் சாந்தலிங்க அடிகளார் மாணவர்க்குத் துறவு பற்றி விளக்கி வந்தார். ஒருநாள் மாணவர் இருவர் "நம் குருநாதர் துறவி; ஆனால் தம் மனைவி ஞானாம்பிகையம்மையாருடன் இல்லறம் நடத்துகிறாரே" என்று பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் பாடம் கேட்க வந்தபோது, அடிகளார் அவர்களை அமரச் செய்து, தம் மனைவி ஞானாம்பிகையாரை அழைத்துத் தம் மடிமீதமர்த்திப் பாடம் சொல்லத் தொடங்கினார். கண்ட மாணவர்க்கு அவர் உமையொருபாக வடிவினராகத் தோற்றம் அளித்தார் என்பது வரலாறு. அடிகளார் துறவியாய் இருந்தாலும் மனைவியாருடன் இல்லறம் நடத்தினாலும் தம் துறவற நிலையில் தவறாதவரானார் என்பது கருதத்தக்கது. எனவே, உயிர் துறவறத்தை உண்மையாக மேற்கொள்ளுமாயின் பெண்ணுடன் இருந்தாலும் தன் துறவு நிலையில் தவறாது என்பது புலப்படும். அந்த உண்மையைச் "செய்கு" என்ற தன்மையொருமை வாய்பாட்டு வினைமுற்றுப் பெயருடன் தொடர்தல் விதியாயிருக்க, மாறாக வினையுடன் தொடர்ந்தாலும் தன்முற்று நிலையில் திரியாது என்க.

"உண்பேன்" என்பதை உண்பேனாகிய யான் என்றோ உன்பேனாய் என்றோ உண்ண என்றோ திரித்தல் போல, "உண்கு" என்பதை உண்கேனாகிய யான் என்றோ உண்ண என்றோ திரித்தல் இயலாது. உண்பேனை, உண்பேனால் என வேற்றுமை உருபுகள் பெறுதல் போல உண்கேனை உண்கேனால் எனப் பெறுதலும் இல்லை.

நன்றி: ஆய்வுக்கோவை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link