ஆய்வுச் சிந்தனைகள்


சிறுகதைகளில் பெண்ணியம்

பெண்களின் சிக்கல்களைப் படைப்பிலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அதன் மூலம் பெண்களின் நிலையைச் சமூகத்திற்கு எடுத்துக்காட்டி அவர்களை உய்விக்கும் வகையில் படைப்பிலக்கியத் துறையில் பல படைப்பாளர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வந்துள்ளனர். தமிழ்நாட்டில் வெளியான இதழ்களும் சமூக அக்கறையில் இந்தப் பணிகளை மேற்கொண்டன. இந்த வகையில் கல்கி தீபாவளி மலர்களில் வெளியான சிறுகதைகளில் "பெண்ணியம் தொடர்பான சிந்தனைகளில், பெண் தனித்து வாழ்வதில் சிக்கல்கள், மாமியார் மருமகள் உறவுச் சிக்கல்கள்" இடம்பெற்றுள்ள பாங்கினை எடுத்துக் கொண்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

தனித்து வாழ்வதில் சிக்கல்கள்:-

பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வதில் சிக்கல்கள் உள்ளன. அவ்வாறு வாழும் பெண்களுக்குச் சமூக மதிப்புக் கிடையாது என்பதை ராஜேந்திரகுமாரின் "இந்தக் கதையே வேறே!" என்னும் சிறுகதை விளக்குகின்றது. பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ முடியாது என்றும், அவர்கள் சமூகத்தின் விமர்சனப் பார்வையிலிருந்து தப்ப முடியாது என்றும் எடுத்துரைக்கின்றது. இந்தச் சிறுகதைகளில் வரும் சுரேஷ், ரம்யா ரங்கதுரை என்ற புனை பெயரில் கதை எழுதும் ஒரு கதாசிரியர்; அவன் அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றுகின்றான். அவனுடைய மனைவி தனியார் அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கின்றாள். "பரிமளம்" இதழாசிரியர் விவாகரத்திற்கான காரணங்கள் பற்றி இதழில் வெளியிட ஒரு கட்டுரை கேட்கின்றார். உடனே ரமேஷ் வக்கீல் அர்த்தநாரிக்குப் போன் பண்ணுகின்றான். பயந்துபோன அவன் மனைவி மீரா உடனே தன் வேலையை ராஜினாமா செய்துவிடுகின்றாள்; அவளின் தந்தையும் ரமேஷைச் சமாதானப் படுத்துகின்றார்.

"எத்தனை நாளைக்குத்தான் இப்படி அவதிப்படறது. இப்பவே வக்கீல் அர்த்தநாரிக்கு ஃபோன் போடறேன். நேரே போறேன். டைவர்ஸீக்கான காரணங்களை விலாவாரியா கேட்டு எழுதியே கொடுத்துடறேன். "என்னங்க இது" என்ற மீராவை ஒதுக்கிவிட்டு... அர்த்தநாரி சார் நான் சுரேஷ் பேசறேன். டைவர்ஸ் வாங்க என்னென்ன காரணம் சொல்லலாம்? புரசீஜர்ஸ் எப்படி? அவசரமாகத் தெரியணும். கல்யாணமாகி ஏழு வருஷம் குழந்தை இல்லாத காரணமே போதுமா? சரி நேரிலே வாரேன்" இவ்வாறு இந்தச் சிறுகதை திருமணமான பெண்கள், விவாகரத்துச் செய்து கொண்டால் அவர்களின் சமூக மதிப்புக் குறையுமென்றும், அவர்களால் தனித்து வாழ முடியாது என்றும் எடுத்துரைக்கின்றது.

அலுவல் மகளிராக இருந்தாலும் அவர்களின் சமூக மதிப்பு திருமணத்திலே அடங்கியுள்ளது. பிரபஞ்சன் எழுதிய "வாசனை" என்னும் சிறுகதை, பெண்கள் பேராசிரியை போன்ற உயர் பதவிகளில் இருந்தாலும் கூட, அவர்களின் சமூக மதிப்பு அப்பதவிகளினால் வருவதன்று; அவர்கள் திருமணம் செய்து கொள்வதிலேயே அடங்கியுள்ளது எனப் பேசுகின்றது. இந்தச் சிறுகதையில் வரும் செண்பக ராஜலெட்சுமி முப்பத்தாறு வயது நிரம்பியவள். தமிழ் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவள்; அரசுக் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராக இருக்கின்றாள். அனைத்து வசதிகள் இருந்தும் தஞ்சாவூரிலிருந்து வரும் அவளுடைய சித்தி அவள் வாழ்க்கையைச் சாமியார் வாழ்க்கை என்று விமர்சனம் செய்கின்றாள். அவளுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர் வீட்டுக்காரர்.

"கல்யாணம் பண்ணிக்காதவர்க்கும் விதவைக்கும் வீடு கிடையாதா? ஆனா ஒரு தனியா இருக்கிற பெண்ணுக்கு எப்படின்னுதான் யோசிக்கிறேன்" என்று வீடு தர மறுக்கின்றார். அவளுடன் பணியாற்றும் மதன கல்யாணியிடம் செண்பகம்,

"மதனா! பெண்ணைத் தாயாக, மகளாக, மனைவியாக மட்டுமே சமூகம் பார்க்கிறது. தாயாக இருந்தால் மகனோடு, மகளாக இருந்தால் பெற்றோர்களோடு, மனைவியாக இருந்தால் ஒரு புருஷனோடு சேர்த்துப் பார்த்தே பழகவிட்டார்கள். தனியாக ஒருத்தி வாழமுடியும் என்பதை ஏற்க அவர்களுக்குச் சங்கடமாக இருக்கிறது" என்கிறாள். சமூகம் அவளைப் பின்வருமாறு விமர்சனம் செய்கின்றது.

"பார்த்தா பந்தயக் குதிரை மாதிரி இருக்கா. துணை இல்லாம எப்படி?" "கல்யாணம் கட்டிக்கிட்டா ஒரு புருஷன் தானே?", இவ்வாறு இந்தச் சிறுகதை, அலுவல் மகளிரின் சமூக மதிப்பு அவர்களின் திருமணத்திலேயே அடங்கியுள்ளது என எடுத்துரைக்கின்றது. இச்சிந்தனை ஆணாதிக்கச் சமூகத்தின் பிற்போக்குத் தன்மையைச் சுட்டிக்காட்டுகின்றது எனலாம்.

ஜோதிர்லதா கிரிஜாவின் "உயிர்கள்" என்னும் சிறுகதையும், இந்த அடிக்கருத்தினையே வலியுறுத்துகின்றது. ஆனால் இந்தச் சிறுகதையில் வருபவள் மருத்துவத் தொழில் புரிபவள்; டாக்டர் மனோகரி கருத்தடைச் சிகிச்சைகள் செய்வதிலும் ஆலோசனைகள் வழங்குவதிலும் வல்லுநர். அவள் தாய் காந்திமதிக்கு அவள் தொழில் பிடிக்கவில்லை; அதைவிட முக்கியமாக அவள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லையே என்று வருந்துகின்றாள்.

"மனோகரி நில்லு. லவ்கிவ்னு ஏதானும்னா மனசுவிட்டுச் சொல்லிடு. அவன் எந்த ஜாதியா இருந்தாலும் பரவாயில்லேடி. எந்த மதமா இருந்தாலும் கூடப் பரவாயில்லே. கல்யாணம்னு ஒண்ணை நீ பண்ணிண்டியானா அதுவே எனக்குப் போதும்" என்கிறாள். இவ்வாறு இந்த சிறுகதை பெண்ணின் சமூக மதிப்பு அவள் திருமணத்திலேயே அடங்கியுள்ளது என்பதை எடுத்துரைக்கின்றது.

மாமியார் மருமகள் உறவுச் சிக்கல்கள்:-

மாமியார் மருமகள் உறவுச் சிக்கல்கள் குறித்த புதிய பரிணாம வளர்ச்சி நிலையினையும் கல்கி தீபாவளி மலர்ச் சிறுகதை சுட்டிக் காட்டுகின்றது. உஷா சுப்பிரமணியன் எழுதிய "பெண் மனுஷியாகும் போது" என்னும் சிறுகதை, மாமியார் - மருமகள் உறவு பற்றியும், பெண்கள் விடுதலை பெற வேண்டியது ஆண் ஆதிக்கத்திலிருந்தா? பெண் ஆதிக்கத்திலிருந்தா? என்பது பற்றியும், குடும்பம் அமைதியடைய கணவன் முதலில் மனைவியை மனுஷியாக மதித்து அன்பு செலுத்த வேண்டும் என்பது பற்றியும் ஆழமான சமுதாயவியல் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்துகின்றது. இந்தச் சிறுகதையில் சுதா - விவேக் புதுமணத் தம்பதியர். திருமணமாகி நாற்பத்தெட்டு மணி நேரமே ஆகியிருந்தது. சுதாவின் மாமியார் டாக்டர் காத்திகா நடு இரவில் சென்று பிரசவம் பார்ப்பவள். சுதா தன் மாமியார் தன் மீது அதிகாரம் செலுத்தும் போக்கு இல்லாதது கண்டு வியந்தாள். சுதாவின் மாமியார் சுதாவிடம்,

பெண்களைப் பொறுத்தவரை எதைச் செய்யறதுன்னு திட்டம் போட்டு, இலக்கு வைப்பதுதான் கஷ்டம். அதன் பிறகு அதை அடையறது கஷ்டமில்லை. டெல்மீ மேலே படிக்க விரும்பினாப் படி இல்லை சங்கீதம், டான்ஸ், ஆர்ட் எது இஷ்டமோ சொல், இல்லை விவேக்குக்கு பிஸினஸில் உதவுவதானாலும் அல்லது நீயே ஏதாவது துவங்கினாலும் சரி" என்கிறாள். பெண் விடுதலை இயக்கத்தின் முன்னோடியான க்ளோரியா ஸ்டீயனம் போல இதழியல் துறையில் முன்னேற விரும்பிய சுதா இதழியல் துறையைத் தேர்வு செய்கின்றாள். அவள் ஒரு பத்திரிகை நிருபராகத் துணிகரமாகச் செயல்படத் தொடங்கினாள். அவள் கணவன் விவேக், "இன்னைக்கு ஈவினிங் நீ ப்ரியா இருப்பயா சுதா? என் ப்ரெண்ட் ஷ்யாம் வீட்டுக்கு நீ வருவாயா என மதித்துக் கேட்டான். மனைவியிடம் எல்லா கணவரும்தான் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அதே மனைவியைக் கணவன் மனுஷியாக மதிக்கும்போது இல்வாழ்க்கை எவ்வளவு கம்பீரமாக மாறிவிடுகின்றது." சுதா பெருமைப்பட்டாள். அன்று பிரதமரின் சென்னை வருகை; விமான நிலையத்தில் பேட்டி காண்பதில் காலங்கழிந்து சுதா வீட்டிற்கு வருகின்றாள். அவள் கணவன் விவேக்கும் மாமியார் டாக்டர் கிருத்திகாவும் அவளைச் சந்தேகப்படுகின்றனர். அவள் கணவன், "என்ன திமிராப் பதில் பேசறே. நடுராத்திரி ஒரு ஆணுடன் ஆட்டோவில் வந்து இறங்கறது உனக்குச் சரின்னு படறதா" என்கிறான்.

சுதா, "அது சரி விவேக். ஆனா ஒண்ணை மறந்துட்டீங்களே. டாக்டரா, டீச்சரா, ஜெர்னலிஸ்டா என்கிறது. இப்போ பிரச்சனையில்லை. பிரச்சனை ஒரு பெண் நேரங்கழித்து வெளியே செல்வது பற்றி, பெண்கள் மேன்சைஸ்ட் (Mansized) தொழில்களைச் செய்யணும்னா, ஆம்பிள்ளைகள் எடுக்கிற ரிஸ்க்கையும் எடுத்துத்தான் ஆகணும்னு எனக்கு நீங்க செய்த போதனையை நான் மறக்கலை. எந்தப் பெண்ணாலும், ஆண்கள் அளவு தங்களைக் காத்துக் கொள்ள முடியுங்கற நம்பிக்கை எல்லோருக்கும் வரணும், தன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய துணிவு எனக்கு உங்கம்மாவுக்கு எல்லோருக்கும் இருக்கு..." என்கிறாள். இவ்வாறு இந்தச் சிறுகதை மாமியார் - மருமகள் உறவையும், கணவன் மனைவியர் உறவையும், பெண்கள், ஆண்கள் செய்யும் தொழில்களைச் செய்வதிலுள்ள இடர்பாடுகளையும் எடுத்துரைக்கின்றன.

இந்தச் சிறுகதையைப் போன்றே கணவன் - மனைவி உறவில் விரிசல், மாமியார் - மருமகள் உறவு, குழந்தை பாதுகாப்பு ஆகிய பிரச்சனைகள் பற்றியும், அலுவல் மகளிர் அவற்றை எதிர்க்கொள்ளும் விதம் பற்றியும் வாஸந்தியின் "திரிசங்கு" என்னும் சிறுகதை எடுத்தியம்புகிறது. அனுராதாவிற்குத் தலைவலி; அவள் இதழியல் துறை ஊழியை; ஆசிரியர் சுரேஷ் கூப்பிட்டவுடன் சென்றாள். அவள் பத்திரிகை ஆசிரியரிடம் தனக்கு ஐந்து வயதுக் குழந்தை இருப்பது பற்றியும், மாமியார் எரிச்சல் அடைவது பற்றியும் சொல்ல முடியாது.

"இந்தக் கதையெல்லாம் எங்கிட்டே சொல்லக்கூடாது. ஆணுக்குச் சமனா வேலை வேணும்; உரிமை வேணும் என்கறீங்க. இந்த வேலையிலே ஓர் ஆண் இருந்தான்னா எவ்வளவு சம்பளம் கொடுப்பேனோ அதைத்தான் உனக்கும் கொடுக்கறேன். அவன்கிட்ட எப்படிப்பட்ட உழைப்பை எதிர்பார்ப்பேனோ அப்படிப்பட்ட உழைப்பைத்தான் உங்கிட்டேயும் எதிர்பார்ப்பேன். ராத்திரியெல்லாம் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும்" என்று எடிட்டர் சுரேஷ் முதல்நாளே கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். திருமணமாகி ஒரு குழந்தை பிறக்கும் வரை அவளுக்கு எந்தப் பிரச்சனையும் எழவில்லை. அவள் கணவன் அருண் நவயுகத்தைச் சேர்ந்தவன். பத்திரிகைத் தொழிலில் பெண்களைப் பொறுத்தவரை மாமியார், குழந்தை, கணவன் என்கிற காரணங்கள் பத்தாம் பசலிக் காரணங்கள்.

"எத்தனை படிச்சிருந்தாலும் எத்தனை பெரிய உத்தியோகம் பார்த்தாலும் பெண்களுடைய பத்தாம் பசலித்தனம் போகாது என்பார்கள். இதெல்லாம் நம்ம வளர்ப்பினாலே வர்றது. பிறப்பினாலே நாம இரண்டாம் பட்சமானவர்கள் என்கிறதாலே இல்லே என்கிற சமூகவியல் தத்துவ விளக்கம் சொல்வார்கள் அலுவலகத் தோழிகள்" பள்ளி ஆசிரியை ஒரு குறிப்பு எழுதி அனுப்பினாள். உங்கள் மகள் சரியாகப் படிப்பதில்லை; வீட்டில் யாரும் கவனிப்பதில்லையா? என்று கேட்டு, இதைக் கண்ட அனுராதாவின் கணவன் அருண் தன் மனைவியை வேலையை விட்டுவிடும்படி கூறுகின்றான். அவள் மறுத்தபோது,

"இந்த பெண்ணுரிமைப் பேச்செல்லாம் எனக்கு வேண்டாம். உன்னுடைய சுதந்திரத்துக்காக நான் என்னுடைய தேவைகளைத் தியாகம் செய்ய முடியும். ஆனா குழந்தையையும் தியாகம் செய்யணும்னு நீ எதிர்பார்க்க முடியாது" என்கிறான். அவள் ஒரு பெண், ஒரு தாய் என்பதனால்தான் ஒரு பிரச்சனை தோன்றியதுமே வேலையை விட்டுவிடு என்கிறான். உலகத்தின் நியதி அது. ஆண் சம்பாதிக்கப் பெண் குடும்பத்தை பேண வேண்டும். இந்தப் பிரச்சனை விவாகரத்தில் முடியும் எனக் கருதிய அனுராதா வேலையை விட்டுவிடுகின்றாள். நவயுகத்தில் இந்தியாவில் படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை "திரிசங்கு" தான் என்பதை இந்தச் சிறுகதை எடுத்துரைக்கின்றது.

மதிப்பீடு:-

பெண்களின் சமூக மதிப்பு அவர்களின் கல்வி, அரசுப் பணி, உயர் பதவி ஆகியவற்றில் இல்லை; அவர்களின் திருமண வாழ்க்கையிலேயே உள்ளது என்னும் சிந்தனை ஆண் ஆதிக்கச் சமுதாயத்தின் பிற்போக்குத் தன்மையைக் காட்டுகின்றது. கணவன் தன் மனைவியை மதிக்கும்போதுதான், பெண்ணின் சமுதாய மதிப்பு உயரும். பெண்களின் சிக்கல்கள் தொடர்பான சிறுகதைகளைப் பெண் எழுத்தாளர்களே எழுதியிருப்பது சிறுகதைகளின் நம்பகத் தன்மையையும், உயிர்த் துடிப்பையும் உயர்த்திக் காட்டுகின்றன. இதன் மூலம் பெண்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காணமுடியும்.

நன்றி: ஆய்வுக்கோவை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link