ஆய்வுச் சிந்தனைகள்


உண்மை வரலாற்றுக்கு ஒரு தொடக்கப்புள்ளி

தமிழ்நாட்டு வரலாற்றில் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு உத்திரமேரூர் கல்வெட்டு ஒன்றே ஒன்றுதான் கிடைக்கிறது. சோழர் காலத்தைச் சேர்ந்த அந்தக் கல்வெட்டில் பார்ப்பனர்களுக்குள் நடக்கும் தேர்தல் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. பார்ப்பனரல்லாத வேறு யாரும் அதில் கலந்து கொள்ள முடியாது. பார்ப்பனர்களிலும் கூடக் குறிப்பிட்ட சொத்து உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும். இந்த ஒரு கல்வெட்டை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதிய பலரும் தமிழ்நாட்டில் பழங்காலத்திலிருந்து பஞ்சாயத்துத் தேர்தல்முறை இருந்ததாகப் பறைசாற்றி வந்தனர். ஆனால் மனிதர்களை அவர்கள் ஆண்களாயினும் பெண்களாயினும் குழந்தைகளாயினும் வேறுபாடு பாராமல் ஆடுமாடுகளைப் போல் விற்பனை செய்ததாகக்கூறும் கல்வெட்டுகளும் பட்டயங்களும் ஓலை ஆவணங்களும் ஏராளமாகக் கிடைத்திருந்தும் தமிழகத்தில் மனிதனை அடிமையாக்கும் முறை இருந்ததாகப் பெரும்பாலோர் எழுதுவதில்லை.

குறிப்பாக இந்தியா போன்ற காலணி நாடுகளின் வரலாற்றுப் புனைவாளர்கள் வரலாற்று விபரங்களைத் தொகுத்து வெளியிடுவதைவிடத் தங்களுக்கு மரியாதைக் குறைவு ஏற்பட்டுவிடும் என்று கருதிய செய்திகளை மறைப்பதில்தான் கவனம் செலுத்தினர். இப்படி இவர்களால் மறைக்கப்படும் அல்லது மாற்றப்படும் வரலாற்றுச் செய்திகள் பல. 1) களப்பிரர் காலம். களப்பிரர்கள் அந்நியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என்பது. 2) தமிழ்நாட்டின் மீது இஸ்லாமியர்கள் படையெடுத்ததாக எழுதுவது. 3) முந்தைய காலங்களில் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர் என்று கூறுவது. 4) மக்கள் அனைவரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததாக கூறுவது. இன்னும் இது போன்ற பல செய்திகள் உள்ளன. அண்மைக்காலமாக இத்தகைய செய்திகளை நேர்மையான உணர்வு கொண்ட சிலரும் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் பலரும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டிச் செயல்படுகின்றனர். அத்தகைய எழுத்தாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களால் எழுதப்பட்ட "தமிழகத்தில் அடிமை முறை" என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு வரலாற்றாளர்கள் பலரால் ஓரங்கட்டப்பட்டுவிட்ட ஒரு பொருளைப் பற்றி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்நூல்.

சங்க காலத்திலிருந்து இன்று நாம் தினசரி பார்க்கும் "கொத்தடிமைகள்" பிரச்சினை வரையிலான விசயங்களைத் தமிழகத்தின் அடிமை முறைக்குள் கொண்டு வருகிறார் ஆசிரியர். இதனை விளக்கும் முகமாகக் கிரேக்க, ரோமானிய அடிமை முறைகளையும் அதனை எதிர்த்த ஸ்பார்ட்டகஸ் போன்றவர்களைப் பற்றியும் ஐரோப்பியப் பண்ணை அடிமைகள், அமெரிக்க நீக்ரோ அடிமைகள், இந்தியாவிலும் தமிழ்நாட்டிலிருந்தும் வெள்ளையர்களால் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் போன்ற பல விசயங்களை விளக்குகிறார். தமிழ்நாட்டின் வரலாற்றில் பதிவான சுமார் 1000 ஆண்டுக் காலத்து ஆவணங்களிலிருந்து பல செய்திகளைக் கொடுக்கிறார். அவை, திடுக்கிடும் படியாகவும், கொடூரமாகவும், அரக்கத்தனமாகவும் உள்ளதைக் காணும் நாம் உறைந்து விடுகிறோம்.

முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில் கி.பி.1088-ல் கோவிலுக்குரிய தேவரடியார்களுக்குத் தவறுதலாக அரசு முத்திரையிடப்பட்டது. கோவில் அதிகாரிகள் இது குறித்து மன்னரிடம் முறையிட்டனர். பின்னர் அவனது உத்தரவின் பேரில் அரசிலச்சினை அழிக்கப்பட்டு அக்கோவிலுக்குரிய சூலச் சின்னம் இடப்பட்டது.

தேவரடியார்களுக்கு அவர்கள் பாதங்களில் சூலச் சின்னம் பொறிக்கப்பட்டது. வைணவக் கோயில் அடியவர்களுக்குச் சக்கரச் சின்னம் பொறிக்கப்பட்டது (ப.40). இரும்பாலான முத்திரைகளைப் பழுக்கக் காய்ச்சி உடம்பில் பதிய வைப்பதுதான் இந்த முத்திரைச் சின்னம்.

கும்பகோணம் சபாபதியா பிள்ளை என்பவன் 1831-ல் வரூ பரிசப் பணம் கொடுத்துப் பெரியநாயன் கொத்தன் என்ற கள்ள சாதியைச் சேர்ந்தவரின் மகளான மீனாட்சி என்ற சிறுமியைத் திருமணம் செய்து கொண்டான். திருமணம் ஆகிய இரண்டாண்டுகள் கழித்து வேலை தேடி வேலூருக்குச் சென்றான். அப்போது அவன் மனைவி மீனாட்சிக்கு வயது ஏழு. 1842இல் தன் மனைவியை அழைத்துச் செல்ல திருவையாருக்கு வந்தான். தன் மாமனாரால் தன் மனைவி அரண்மனைக்கு விற்கப்பட்டு விட்டாள் என்ற செய்தி அவனுக்கு தெரிந்தது. ரெசிடெண்டிடம் இது குறித்து மனுக்கொடுத்தான். ரெசிடெண்டு இது குறித்து சென்னைக்கு மனுச் செய்யும்படி கூறிவிட்டார். அதன்படி 10.8.1842இல் சென்னை கவர்னரிடம் மனுக் கொடுத்தான். அம்மனுவைப் பெற்றுக் கொண்ட கவர்னர் மிக விரைவாகச் செயல்பட்டு 30.08.1842 இல் "இது குறித்து ஏதும் செய்வதற்கில்லை" என்று பதில் எழுதிவிட்டார்.

திருவையாறு பகுதியிலுள்ள அக்கட்சிப் பட்டியைச் சேர்ந்த மிராசு சிதம்பரம் பிள்ளை என்பவர் பிழைக்க வழியின்றித் தன் இருமகள்களுடன் தஞ்சாவூருக்கு வந்தார். அவர் வீட்டில் இல்லாதபோது அரண்மனைக்கு அடிமைகளைச் சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகள் அவ்விரு பெண்களையும் பிடித்துச் சென்று அரண்மனையில் அடைத்துவிட்டனர். இந்நிகழ்வு குறித்துக் கேட்பதற்காகச் சந்தித்தார். அவர்களோ அவரைக் காவலில் வைத்து உணவுக்குச் செல்ல விடாமல் தடுத்தனர். அப்பெண்களை அவரே விற்றது போல் உறுதிப்பத்திரம் தயாரித்துக் கையெழுத்து இடும்படி அவரைக் கட்டாயப்படுத்தினர். அவர் கையெழுத்திட்டால் அப்பெண்களை விடுவிப்பதாகக் கூறினர். கையெழுத்து இடாவிட்டால் அவரையும் அப்பெண்களையும் இறந்து போகும் வரை காவலில் வைப்போம் என்று கூறி அடித்துத் துன்புறுத்தினர். அடி பொறுக்க முடியாமல் பயந்து போய் கிரயச்சீட்டில் கையெழுத்து இட்டுவிட்டுக் காவலில் இருந்து சிதம்பரம்பிள்ளை விடுதலையானார்.

வெளியே வந்தபின் ரெசிடெண்ட்டாக இருந்த கிண்டர்லே என்ற வெள்ளையனிடம் இந்நிகழ்வுகள் குறித்து இருமுறை சிதம்பரம் பிள்ளை வாக்குமூலம் அளித்தார். அத்துடன் சென்னையிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கும் மனு எழுதி அனுப்பினார். சிதம்பரம் பிள்ளையின் இருமகள்களையும் விட்டுவிடும்படி ரெசிடெண்ட்டுக்கு சென்னையிலிருந்த வெள்ளை அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் ரெசிடெண்ட் அதை நிறைவேற்றாமல் சிதம்பரம் பிள்ளையை வரவழைத்து அடித்து, அவரே தன்மகள்களை விற்றது போல் கையெழுத்து வாங்கினான். இந்நிகழ்ச்சி குறித்துக் கடிதம் எழுதி அதைச் சென்னைக்கு அனுப்புவதற்காகச் சிதம்பரம்பிள்ளை அஞ்சல் நிலையம் சென்றார். அவர் அனுப்பும் கடிதத்தை வாங்க வேண்டாமென்று அரண்மனையில் உத்தரவு போட்டுள்ளார்கள் என்றும் அரண்மனை உத்தரவு கொடுத்தால் கடிதத்தை வாங்கிக்கொள்வதாகவும் அஞ்சல் நிலையத்தில் கூறினார்கள். எனவே சபாபதிப் பிள்ளை கும்பகோணம் சென்று சென்னைக்குக் கடிதம் அனுப்பினார் (பக். 54,55).

பண்ணையாளர்கள் வீடுகளின் முகப்பில் எப்பொழுதும் தொங்கிக் கொண்டிருக்கும் திரிக்கைவால் சவுக்கை எடுத்து மயக்கம் வரும் அளவிற்கு அடிப்பார்கள். மயங்கிக் கீழே விழுந்த பிறகும் அவர்கள் விடுவதில்லை. மாட்டுச் சாணத்தைக் கரைத்து மாட்டுக்கு மருந்து புகட்டும் மூங்கில் கொட்டத்தில் நிரப்பிச் சாணிப்பாலை பருகிடச் செய்வார்கள்.

சவுக்கடியால், உடம்பில் கசிந்து வழியும் செங்குருதியும் அதனால் ஏற்படும் வேதனையும் சாணிப்பாலைப் பருகுவது தவிர வேறு வழியில்லாமல் செய்துவிடும். அப்படியே அவன் மறுத்தாலும் மீண்டும் சவுக்கடி விழும். இது மட்டுமா? கொக்குப் பிடிக்கும் தண்டனையும் அந்த மனிதாபிமானிகள் மண்ணின் மைந்தர்களுக்குக் கொடுக்கத் தவறுவதில்லை. கொக்குப் பிடிப்பது என்றால் என்ன? இது யாருக்கும் புரியாத தண்டனைதான். ஒரு காலைத் தூக்கிக் கொண்டு சுடுமணலில் நெடுநேரம் நிற்க வேண்டும்.

கால்களுக்கு கிட்டிப்போடும் தண்டனையும் அளித்தார்கள். ரத்த நாளங்கள் விண்விண் என்று தெறிக்க வலிபொறுக்க மாட்டாமல் மரம் வெட்டிச் சாய்ந்தது போல் கீழே விழும் காட்சியைக் கண்டு அந்த நிலப்பிரபுக்கள் வாய்விட்டுச் சிரிப்பார்கள். இன்னும் எத்தனைக் கொடுமைகள்? ஒரு மரக்கிளையில் அந்த உழைக்கும் மகனைத் தொங்கச் செய்து தரையில் கத்தாழை முள்ளையும் எழுத்தாணியையும் கீழே பரப்பி வைப்பார்கள். தொங்குகின்ற அந்த மனிதன் வலி பொறுக்கமாட்டாமல் கையைவிட்டால் கீழே பரப்பியுள்ள முள்ளாலும் எழுத்தாணியாலும் குத்தப்படுவான்.

இவை மட்டும் தானோ?

உழைக்கும் வர்க்கத்தை உருவாக்கிடும் பெண்ணினத்தைப் பண்ணையடிமைகளான தாழ்த்தப்பட்ட குலத்தின் தாயை எவ்வளவு மோசமாக நடத்தினார்கள்? எத்தகைய கொடுமையான தண்டனை அளித்தார்கள் என்பதைச் சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. அந்தத் தாயின் மார்பகத்தைக் கிட்டியால் முறுக்கி கசக்கிப் பிழிந்து ரத்தச் சேறாக்கி வேதனையில் அலறித்துடிக்கச் செய்யும் அலங்கோலத்தைக் கண்டு ரசித்தார்கள் (பக். 80,81)

எடுத்துக்காட்டாக ஒரு சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளேன். இத்தகைய பல செய்திகள் நூலில் நிறைந்து இருக்கின்றன.

கிரேக்க, ரோமானிய அடிமைகளில் படித்தவர்கள், தொழிற்நுட்பம் அறிந்தவர்கள், போர் மல்லர்கள் என்று பல வகையினர் உண்டு. தமிழகத்தில் காணப்படும் அடிமைகள் குறித்த செய்திகளில் இத்தகையோர்களைப் பற்றி யாதொரு குறிப்பும் இல்லை. பெரும்பான்மையான அடிமை விற்பனை சாசனங்கள் சைவ வைணவக் கோயில்களில் தான் கிடைக்கின்றன. பெரும்பாலும் தேவரடியார்கள் என்று குறிக்கப்படும் பெண்கள் தான் அடிமைகள் ஆக்கப்பட்டு உள்ளனர். இதனைத் தமிழ்நாட்டு வரலாற்றாளர்கள் பலர் கலாச்சாரமாகவும் பண்பாடாகவும்தான் பார்த்து உள்ளனர். உண்மையில் இது அரசியல், பொருளாதாரம் சார்ந்த விசயமாகும். தமிழகத்துக் கோயில்கள் பெரும்பான்மையும் தமிழ்நாட்டின் நிலங்களை உடமையாகக் கொண்டிருந்தன. இந்த நிலங்களின் மீதான உரிமை என்பது பொதுவாகப் புனிதத் தெய்வங்களின் உடைமையாகச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் உண்மையில் அந்தக் கோவில் நிர்வாகிகளான பார்ப்பனர்களும் மேல்நிலைச் சூத்திரர்களும் சில ஊர்களில் பெரும் தனவணிகர்களும்தான் இதன் உரிமையை அனுபவித்தனர். இது மட்டுமல்லாது குறிப்பிட்ட கோவிலைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் சிவில் நிர்வாகமும் இவர்களிடம்தான் இருந்தது. வழக்குகளில் மரணதண்டனை விதிக்கும் அதிகாரமும் இவர்கள் கொண்டிருந்தனர். சுருக்கமாகக் கூறினால் தமிழ்நாட்டின் பெரும்பாலான நிலங்களின் உரிமையும் உள்ளூர் மக்கள் மீது ஆட்சி செலுத்தும் உரிமையும் இவர்களிடம் தான் இருந்தது. சோழர்காலம், பாண்டியர் காலம், நாயக்கர் காலம், மராட்டியர்கள், நவாபுகள் என்று சுமார் 1200 ஆண்டுகள் இவர்களுடைய அதிகாரம் செயல்பட்டே வந்தது. 14ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களால் இந்த அதிகாரம் கலைக்கப்பட்டாலும் மீண்டும் அதனை நாய்க்கர்களுடனும் மராட்டியர்களுடனும் நவாபுகளுடனும் கூட்டடித்துத் தக்க வைத்துக்கொண்டனர். பார்ப்பன, சூத்திர, வணிக மேலாண்மைக் கும்பலின் காம வெறியாட்டங்களுக்குத்தான் தேவதாசி முறை உருவாக்கப்பட்டது.

கடவுளின் பெயரால் காமத்தை நுகரும் இத்தகைய வெறியர்களின் போக்கு இன்று வரை நீடிப்பதை நாம் அண்மைக்காலக் காஞ்சிமடத்தின் வழியாகப் புரிந்து கொள்கிறோம். இந்தக் கும்பல்கள் தங்கள் அதிகாரம் ஆபத்துக்குள்ளாகும் நேரங்களில் தங்கள் நாட்டுப் பெண்களையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு விற்கவும் பரிசு கொடுக்கவும் அடமானம் வைக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதை போர்த்துகீசியர்கள் இஸ்லாமியர்கள் போன்றவர்களின பதிவுகளைச் சார்ந்து நம்மை புரிந்துகொள்ள வைக்கிறார் ஆசிரியர். அடிமை முறையின் மீது அருவறுப்புக் கொண்டு ஆங்கிலேயர்கள் அதனை அகற்றிய பிறகும் தங்களின் காம இச்சைக்காக இந்தப் பாதகர்கள் பால்மணம் மாறாத பெண் பிள்ளைகளை விற்பனை செய்வதும் வாங்குவதுமாக இருந்தனர் என்பதை (ப.52) ஆசிரியர் விவரிக்கிறார். இவர்களுடைய இத்தகைய கொடூரச் செயல்கள் மறைந்து விடவில்லை என்பது அபலைப் பெண்கள், நடிகைகள், ஆதரவற்ற பெண்கள் போன்றவர்களின் நிலைகுறித்து வரும் பத்திரிகைச் செய்திகள் புலப்படுத்துகின்றன. கோவில், கோவில் சார்ந்த அதிகாரம், நிலவுடைமை ஆகியவற்றுக்கும் அடிமை முறைக்கும் இருந்த தொடர்பு குறித்து ஆசிரியர் இன்னும் விரிவாக விளக்கியிருப்பின் தகவல்கள் மட்டுமல்லாமல், சிறப்பான ஆய்வுப்பார்வை கொண்டதாகவும் இந்நூல் உருப்பெற்றிருக்கும்.

சாதிகளாகப் பிளவுண்டு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று சிதறுண்டு பழமையான பழக்க வழக்கங்களில் கட்டுண்டும் இருக்கும் உழைக்கும் மக்கள் சரியான கல்வியறிவின்மையால் தெளிவற்று, செய்தி ஊடகங்களால் கைப்பாவைகளாக்கப்பட்டும் ஜனநாயகம் என்பதைத் தங்களுடைய உரிமை சம்பந்தப்பட்ட விசயமென்றும் புரிந்து கொள்ளாத மந்தைகளான மக்கள் நிறைந்துள்ள சமூகத்தில் இத்தகைய நூல்கள் சிறிது வெளிச்சத்தை உண்டாக்கக் கூடும்.

இந்நூல் தொகுத்துத் தரும் தகவல்களைப் போல மேலும் ஏராளமானவற்றைச் சேகரிக்க இன்னும் வாய்ப்பிருக்கிறது. மோடி ஆவணங்களில் 90 விழுக்காட்டுக்கும் மேலானவை அச்சில் வரவில்லை. மொத்தமுள்ள 25,000க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் 8,000 கல்வெட்டுகள் மட்டும் தான் பதிப்பிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் இரா. நாகசாமி (நேர்காணல், தீராநதி, ஜீன் 2005 ப.6) கூறுகிறார். தமிழகத்தைப் பற்றி எழுதிய வெளிநாட்டார் குறிப்புகள் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்பட்டு தமிழில் வரவில்லை. இவையெல்லாம் அச்சில் கொண்டுவரப்பட்டால் தமிழகத்தில் அடிமை முறை குறித்து மிகப்பெரிய நூல் ஒன்றை உருவாக்க முடியும். அது தமிழகத்தின் அறியப்பட்ட வரலாற்றையே புரட்டும் வலுக்கொண்டதாக அமையும். அவ்வகையில் ஆ. சிவசுப்பிரமணியனின் இந்நூல் அழுத்தமான ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.

நன்றி: புதுவிசை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link