ஆய்வுச் சிந்தனைகள்


அம்பை நோக்கில் சீதாயணம்

நவீன தமிழ் இலக்கியத் துறையில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் அம்பை என்று பரவலாக அறியப்படும் சி.எஸ். லஷ்மி. சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.

பழைய இலக்கியங்களை மறுவாசிப்பிற்குட்படுத்தும் முயற்சியைத் தமிழ் இலக்கியவாதிகள் அவ்வப்போது மேற்கொண்டுள்ளனர். பாரதிதாசன், வ.ரா. புதுமைப்பித்தன், சு. சமுத்திரம், திலகவதி ஆகியோர் இத்தகைய முயற்சியை நிகழ்த்தியுள்ளனர். அம்பை "அடவி" என்ற சிறுகதையில் தற்காலச் சூழலுக்கு ஏற்ப இராமாயணத்தை எவ்வாறு மீட்டுருவாக்கம் செய்துள்ளார் என்பதை அணுகும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

மீட்டுருவாக்கம் - சில விளக்கங்கள்:-

ஒரு படைப்பின் அடிக்கருத்தியல் எப்போதும் நிலைபேறுடையதாக இருப்பதில்லை. "பழைய மரபில் வளர்க்கப்பட்டுள்ள படிமங்கள் பிற்காலப் படைப்பாளிகளின் கண்ணோட்டங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். ஒரு காலத்தில் தோன்றிய கலைமரபு, பின் வரலாற்றுகாலச் சூழலுக்கேற்ப, சமுதாயத் தேவைக்கேற்பத் தனது வளர்ச்சிக்கேற்ற கலாச்சாரத்தை எடுத்துக்கொள்கிறது" என்பார், கைலாசபதி. இத்தகைய சிந்தனையை மீட்டுருவாக்கம் எனலாம். இந்தியச் சிந்தனை மரபில் கற்புக்கரசியரின் வரிசையில் முதலிடத்தைப் பெற்ற சீதை என்ற பிம்பத்தைக் ("சீதா திரௌபதி அகல்யா தாரா மண்டோதரி; பஞ்சமாதர் ஸ்மரே நித்யம் சர்வ பாப வினாஸனம்") கட்டுடைத்து நவீன சீதையை முன்னிறுத்துகிறது "அடவி" சிறுகதை.

கதை கூறும் உத்தி:-

நடப்பியல் உலகில் செந்திரு என்ற கதைத் தலைவியையும் இதிகாச உலகின் சீதையையும் இணைவரையறை பாத்திரங்களாகக் கொண்டு கதை இயங்குகிறது. கதைக்குள் கதை கூறும் உத்தியை அம்பை கையாள்கிறார்.

சீதை, நவீன சீதை, சீதாயண சீதை

என்ற முப்பரிமாண அடிப்படையில் இக்கதை நகர்கிறது.

நவீன சீதை:-

கதை நிகழ்களம் பம்பாய். நவீன சீதையாகச் செந்திருவைப் படைத்துக் காட்டுகிறார். காதலனொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்தவள் செந்திரு. தோல் பொருள்கள், மசாலா பொடி, துணி, ஆயத்த ஆடை வகைகள் என்று கணவனின் தொழிலைப் பன்முகமாய்ப் பெருக்கி அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவு முன்னேறச் செய்கிறாள். ஆனால், சொன்னபடி தொழில் கூட்டாளியாகும் வாய்ப்பு அவளுக்கு மறுக்கப்படுகிறது. ஆணின் உழைப்பே சமூக உழைப்பென்று வரையறை செய்யப்பட்ட சமூகத்தில் இத்தகைய வாய்ப்புச் செந்திருவுக்கு மறுக்கப்படுவது வியப்பிற்குரியதன்று. கணவனிடம் காட்டிற்குச் செல்வதாகக் கூறி வன இலாக்கா அதிகாரி அனுமதி பெற்று காட்டிற்குச் செல்கிறாள். காட்டிற்கு வந்த நிலையிலும் மனச்சுமையை உணரும் அவள், அங்கு ஓர் ஆசிரமத்தில் வசிக்கும் பாபா ஒருவரின் ருத்ரவீணை வாசிப்பைக் கேட்டு மன அமைதி பெறுகிறாள்.

சீதை:-

அடவி சென்ற செந்திரு சீதையின் கதையை எழுதத் தொடங்குகிறாள். அவதார புருஷனான ராமனால் புறக்கணிக்கப்பட்டவள் சீதை, லவகுசர்களுடன் வனத்தில் வாழ்கிறாள். இதுவரை நாம் அறிந்த இதிகாச கதை இதுவே. சீதை வால்மிகியிடம் சீதையின் அயணம் எழுதப்போவதாகக் கூறுகிறாள். இருவருக்குமிடையேயான உரையாடல் இப்படி அமைகிறது.

"நான் எழுதிய ராமாயணம் ஒன்று போதாதா?"

"இல்லை இனிவரும் யுகங்களில் பல ராமன்கள் பல சீதைகள்"

"நான் எழுதாத சீதையா?"

"நான் அனுபவித்தவள், பலவிதமான அனுபவங்களை உள்வாங்குபவள்; என் மொழி வேறு"

என்றாள் சீதை. சீதை தன் அனுபவங்களைத் தன் மொழியில் எழுதத் தொடங்குகிறாள்.

சீதாயணச் சீதை:-

லவகுசர்களுடன் காட்டில் வாழும் சீதை தன் மனப்போராட்டங்களை எழுத்தோவியமாக்குகிறாள். ராமனை முதன்முதலில் சந்தித்தது; தனக்காக அன்றி அவன் குலப்பெருமையைக் காக்கவே ராமன் சீதையை மீட்டான். இலங்கைச் சிறையிலிருந்து மீட்கப்பட்ட பிறகு ராமனின் சகோதரி ராவணனின் ஓவியத்தை வரையச் சொல்லி அதன் காரணமாக மீண்டும் காட்டுக்குத் துரத்தப்படுகிறாள் சீதை. மீண்டும் ராமன் வனத்துக்கு வந்தபோது லவகுசர்கள் ராஜ்யம் இருக்கும் தந்தையுடன் சேர்ந்து கொள்கின்றனர். பலர் வற்புறுத்தியும் ராமனுடன் செல்ல மறுத்துவிட்ட சீதை, அனைவரையும் துறந்து வனத்தில் இலக்கில்லாப் பயணம் மேற்கொள்கிறாள். இலங்கைப் போரில் கிளி உருவில் தந்திரமாகத் தப்பிவிட்ட ராவணன் தபஸ்வியாகி வனத்தில் வசிக்கிறான். ராவணனைக் குருவாக ஏற்ற சீதை, வீணை கற்றுத்தரும்படி வேண்டுகிறாள். இராவணனும் இசைக்கிறான். "பல கைகள் பந்தாடிய வாழ்க்கை அதை நானாகவே என் கையில் எடுத்துக் கொள்கிறேன்" என்று மடியில் வைத்துக் கொள்கிறாள். கதை முடிவடைகிறது. இதிகாசம் தன்மீது ஏற்றியிருக்கும் புனிதப் புனைவைச் சீதாயணச் சீதை கழற்றி எறிகிறாள்.

அடவி குறியீடு:-

"அடவி" என்ற பதமே குறியீட்டுக் கிளவியாகிறது. பசுமையானது; முடிவற்றது; இருள் செறிந்தது; இரகசியங்கள் நிறைந்தது; மௌன மொழி பேசுவது; இங்கு பசுமை - பச்சை, பயணம் தொடர்வதற்கான இசைவு (Signal). முடிவு புதியதொரு ஆரம்பமாகிறது; இருளிலிருந்து வெளிச்சப்பாதை தென்படுகிறது. இரகசியங்கள் உடைபடுகின்றன. மௌனம் உரத்தக் குரலில் பேசுகிறது. இதை நவயுக சீதைகள் நிகழ்த்திக் காட்டுகின்றனர். பகடைக்காயாக உருட்டப்பட்ட தன் வாழ்வை இராவணனுடன் புதியதொரு நட்பை ஏற்படுத்திக் கொள்வதன் வாயிலாகப் புதுப்பித்துக் கொள்கிறாள் சீதை. விதிவிட்ட வழியில் செல்லும் நொய்மையான காகுத்தன் மனைவியாக அல்லாமல் இனி தனக்கென ஒரு வாழ்வைத் தேடும் சீதையின் மன ஓட்டங்களை நுட்பமாகப் பதிவு செய்கிறார் அம்பை. உரிமைகள் மறுக்கப்பட்டுத் திருமலையின் அணைப்பில் அடங்கிய மனைவியாக அல்லாமல் சராசரி பெண்களுக்கான இலக்கணங்களை மீறிய செந்திரு; இடையில் நாமறிந்த சீதை என்று முப்பரிமாணக் கோணத்தில் கதைக்குச் செறிவூட்டுகிறார் படைப்பாளி. "இனிவரும் யுகங்களில் பல ராமன்கள்; பல சீதைகள்" என்ற வரிகள் பொருள் பொதிந்தவை. இதிகாச ராமன், சீதை வார்ப்பாகவே காலந்தோறும், ஆண் பெண்கள் உலா வருகிறார்கள். இத்தகைய மரபான வார்ப்பைச் செந்திரு பாத்திரம் கட்டுடைக்கிறது.

"மீட்டுருவாக்கப் பார்வை மட்டுமன்றிப் பெண்ணிய பார்வைக்கும் இச்சிறுகதை இடம் தருகிறது. இலக்கியத்தில் ஒரே மாதிரியாகப் பெண் படைக்கப்படுவதிலுள்ள ஆணாதிக்க அரசியலை வெளிக்கொணர்வது, இலக்கியக் கொள்கைகள், மரபுகள், மொழிகள், எடுத்துரைப்புகள் ஆகியவற்றிலுள்ள ஆண் சொல்லாடலை மறுபார்வைக்கு உட்படுத்துவது; பழைய இலக்கியப் படைப்புகளைப் பெண்நிலை நோக்கில் அணுகுவது இவையே பெண்ணியத் திறனாய்வின் அடிப்படை என்பர் (க. பஞ்சாங்கம், பெண்ணியக் கட்டுரைகள், ப.75). இக்கூற்றுடன் முற்றிலும் பொருத்தமாக அமைகிறது அடவி சிறுகதை. "புராணப் பெண்கள்கூடக் கணவனுடன்தான் காட்டிற்குச் சென்றிருக்கிறார்கள்; அல்லது தண்டனையாக வந்திருக்கிறார்கள்" என்று திருமலை வாதாடுகிறான். இதிகாசத்தை மாற்றி எழுத வேண்டிய காலம் வந்தாகிவிட்டது என்கிறாள் செந்திரு. தளைகளற்ற வாழ்வே சீதைகளின் தேடலாக உள்ளது. தேடலுக்கான வழியைச் செந்திருவும், செந்திரு படைக்கும் சீதையும் கண்டடைகின்றனர்.

பெண் மொழியை உருவாக்கல், தொன்மத்தைக் கையாளல், மீட்டுருவாக்கம் என்ற மூன்று தளங்களில் இக்கதை இயங்குகிறது எனலாம். பல பெண் படைப்பாளிகள் மரபுச் சங்கிலிகளால் பிணிப்புண்டு நலியும் பெண்களின் சோகத்தை மட்டும் வெளிக்காட்டிய நிலையில் மீட்டுருவாக்க கோட்பாட்டைக் கையாண்டு பெண் மொழியை உருவாக்கும் முயற்சியில் அம்பை வெற்றி பெற்றுள்ளார் எனலாம்.

நன்றி: ஆய்வுக்கோவை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link