ஆய்வுச் சிந்தனைகள்


நாலடியாரும் மனுநெறித்திருநூலும்

தமிழ் இலக்கியப் பரப்பில் அறநூல்கள் கணிசமான அளவு இடத்தைப் பெற்றுள்ளன. வாழ்வியல் அறங்களைப் பிறவகை இலக்கியங்கள் இலைமறை காய்போலக் கூறிச் செல்கின்றன. எனினும் அறம் கூறுவதனையே மையக் கருத்தாகக் கொண்ட பனுவல்கள் தமிழில் மிகுதி எனலாம். தமிழில் அறநூல்கள் காலந்தோறும் தோன்றியுள்ளமைக்கான காரணத்தைச் சுட்ட வந்த முனைவர் ஆ. வேலுப்பிள்ளை, இலக்கியம் என்ற தமிழ்ச் சொல் லட்சியம் என்ற வடசொல்லின் திரிபென்பர். அறநூல்கள் போதிக்கும் வாழ்க்கைமுறை உயர்ந்த இலட்சியம் என்று கருதிப் போலும் தமிழர் அறநூல்களை இலக்கியங்களாகப் போற்றினர் (தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், ப.39) என்று கூறுவர். இங்கு நாலடியார் என்னும் அற இலக்கியம் கூறும் சில அறங்களை 19-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகளின் மனுநெறித்திருநூலின் சில அறங்களுடன் இணைத்துக் காணும் முயற்சியில் இக்கட்டுரை அமைகின்றது.

கல்வி அழகே அழகு:-

கல்வி இன்றேல் ஒரு சமுதாயம் வளர்ச்சியுறாது. ஆண் பெண் இருபாலரும் கல்வி நலம் வாய்க்கப் பெற்றால்தான் ஒரு நாடு முன்னேற்றமடையும். இதனை உணர்ந்த நாலடியார் வெண்பா ஒன்று உடம்பில் செய்யப்படும் புற அழகுகள் யாவுமே அழகென்று கூறப்பட்டாலும் உண்மையான அழகு என்பது கல்வியால் வரும் அழகுதான் என்று வலியுறுத்தும். அவ்வெண்பா வருமாறு:

"குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு" (நாலடியார், 131)

இன்று இருபாலரும் கல்வி கற்றவராக இருந்தால்தான் வாழ்க்கையைச் செம்மையாகவும் சீராகவும் நடத்த முடியும் என்னும் நிலை. இதனை நன்குணர்ந்த வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள் நாலடியின் வழியில்,

"கல்வி அழகமையாக் காளையரும் கன்னியரும்
வல்விருகத் தாண்பெண் வகை" (மனுநெறித் திருநூல், 16:10)

என்று வலியுறுத்தினார். கல்வி இல்லையேல் அவர்களை விலங்கோடு வைத்து எண்ணுதல் வேண்டும் என்று அவர் சாடுவர்.

அருட் பேரறிவு:-

அறிவு அற்றம் காக்கும் கருவியாகும். அறிவு இல்லாதவரை எல்லோரும் இகழ்வர். உலகில் பிறந்த எல்லோரும் இயல்பாக அறிவுள்ளவரே! எனினும் சூழ்நிலையால், தன் முயற்சியால், தூண்டுதலால் ஒருவனுடைய அறிவு வளர்ந்து மேன்மை பெறுகிறது. அறிவுள்ளவர் நன்மை தீமை இரண்டையும் ஒப்பவே நோக்கி மகிழ்வர். இதனை மனுநெறித் திருநூலாசிரியர் தண்டபாணிசுவாமிகள்,

"அறிவுள்ளார்க் கின்னலும்பே ரானந்த மாமால்
பிறிதுரைப்ப தேனோ பிரித்து" (மனுநெறித் திருநூல், 31:7)

என்று மொழிவார். எல்லாவகைத் திருவினும் பெருந்திரு ஈடு இணையில்லாத பேரறிவே என்பது சுவாமிகளின் கருத்து. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்துத் தரும் வகையில் அமைவது நாலடியாரில் வரும் வெண்பா ஒன்று.

"நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்ந்து நிற்பானும் தன்னைத்
தலையாச் செய்வானும் தான்" (நாலடியார், 248)

என்பது அவ்வெண்பா. வாழ்க்கை ஓட்டத்தில் அறிவின் தளம் அசைதல் கூடாது; நடுவுநிலையில் இயங்குதல் வேண்டும் என்ற அறச்சிந்தனை இன்றைய தேவையை உணர்த்துகின்றது.

சுற்றம் தழுவுதல்:-

"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்பது தொன்றுதொட்டு வழங்கி வரும் இலக்கியத் தொடர். சுற்றத்தினரைத் தழுவிக் கொண்டு வாழும் வாழ்க்கையே சிறந்தது. அப்படிப்பட்ட தாய்மனங் கொண்டவரை இந்த உலகம் போற்றுமே தவிர எள்ளி நகைக்காது. குற்றத்தையும் குணமாகப் பொறுத்துக் கொண்டு வாழ்வார்தம் புகழ் ஓங்கும். இதனை உணர்த்த எண்ணிய தண்டபாணிசுவாமிகள்,

"சுற்றம் முழுதினையும் தூய்தாக்க நாடுமனம்
உற்றவனை எள்ளா துலகு" (மனுநெறித் திருநூல், 48:4)

"குலத்தொருவன் தாழ்ந்து குடியோட நாடில்
தலத்தமைப்பார் நல்லசுற்றத் தார்" (மனுநெறித் திருநூல், 48:6)

என அறமுறைப்பார். இவ்வாறு சுவாமிகள் எடுத்துரைக்கும் அறத்திற்கு நாலடியாரில் வரும் வெண்பா அடிப்படையாக அமைகிறது எனலாம்.

"இன்னர் இளையர் எமர்பிறர் என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்க ளாகற்பா லார்" (நாலடியார், 205)

என்பதே அவ்வெண்பா.

நல்ல நட்பு:-

இம்மண்ணில் பிறந்தவர்கள் நட்புணர்வுடன் வாழ்வதே சிறப்பு. நட்பு ஆழ்ந்த நட்பாக விளங்குமானால் அந்நட்பினரை எத்துன்பமும் துன்புறுத்தமாட்டா. உறவு கொண்டவர்தம் பிழையை - துன்பத்தை நீக்குவது நல்ல நட்பினர்க்கு அடையாளம் ஆகும். அப்படி உதவாதான் நட்பு உறவுக்குள் ஏற்பட்ட உட்பகையாகும். இதனை,

"உறவர் பிழைதீர நாளும் முயலாதான்
உட்பகைஉற் றார்களை யொக்கும்" (மனுநெறித் திருநூல், 49:10)

என்று சுவாமிகள் சுட்டுவதனுடன் நாலடியார் நவிலும் பாடலை இணைத்துக் காண்பது நன்று. அப்பாடல் வருமாறு:

"நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு" (நாலடியார், 221)

"நட்பிற் பிழை பொறுத்தல்" என்று நாலடியார் அதிகாரத் தலைப்பை விரித்துக் கூறும். ஆயின் மனுநெறித்திருநூல் "நட்பர்" என்றே சுருக்கியுரைக்கும். இரு நூல்களும் கூடா நட்புக் குறித்து அறிவுறுத்துவதனையும் காண்கின்றோம்.

பிறன்மனை நயத்தல்:-

மற்றொருவனுக்கு உரிய ஒருத்தியை விரும்புதல் தவறு என்று உணர்வது பகுத்தறிவாகும். விலங்குகளிடம் தான் எந்த ஆண் விலங்கும் எந்தப் பெண் விலங்கையும் விரும்பும் இணைவிழைச்சு நிகழும். அறிவு பெற்ற மனிதன் உணர்வால் விலங்கினின்றும் உயர்நிலையை எய்தியவன். எனவே இவ்வுயர் ஒழுக்க நிலையை உணர்ந்து வாழ்வது மனித இனத்தின் கடமையாகும். அப்படியிருக்கப் பிறன் மனைவியை விரும்புதல் என்பது விலங்கின் வாழ்வியலைப் போன்றது. இத்தகாத செயலால் நாகரிக வளர்ச்சியடைந்த மனிதன் விலங்கு நிலைக்குக் கீழிறங்கி விடுகிறான் என்பதுறுதி. எனவேதான் சமுதாய ஒழுங்கும் குடும்ப ஒழுங்கும் சீராக இருக்க வேண்டியதன் தேவையை - இன்றியமையாமையை உணர்ந்த நம் தமிழ் அறநூலார் இச்செயலைக் கடிந்து பேசினர்; இவ்விழி செயலை ஒரு பெருங்குற்றமெனக் கருதினார். இதனை வலியுறுத்த எண்ணிய நாலடியார்,

"அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென்று
அச்சத்தோ டிந்நாற் பொருள்" (நாலடியார், 82)

என்று பேசுகின்றது. இது பிறன் மனைவியை விரும்பியவனிடம் ஏற்படும் இழப்பைக் குறித்துப் பேசுகின்றது. இவ்விழி நிலையால் அறம், புகழ், கேண்மை, பெருமை, ஆகிய நான்கும் அவனை விட்டு விலகிவிடும். மாறாகப் பகையும், பழியும், பாவமும், அச்சமும் அவனுக்கு வந்து சேரும் என்று எச்சரிக்கை தரக் காண்கின்றோம். இவ்விழி நிலையை நன்கு உணர்ந்த வண்ணச்சரபர்,

"மற்றொருவன் இல்லை வணங்கும் குலத்துதித்த
பொற்றொடியை வேண்டும்மன்சீர் போம்" (மனுநெறித் திருநூல், 64:2) என்று வலியுறுத்துவார்.

துறவு மேற்கொள்ளல்:-

உலகப் பற்றுக்களை நீக்கிவிட்டு இறைவன் திருவடியைத் திருவருளை அடையும் நிலைக்குத் துறவறம் ஒரு படிநிலையாகும். அதற்கு ஐம்பொறிகளையும் அடக்குதல் வேண்டும். ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் வேண்டும் என்பது வள்ளுவம். உண்மை நிலையை உணர்ந்து ஐம்புல வேட்கையை அடக்கிச் சிந்தனையை இறைவன்பாற் செலுத்துதலே சிறந்த தவம் ஆகும். வண்ணச்சரபர் நாய் போன்று உழல்தல் கூடாது என்று அறிவுறுத்துவார். அவர் கூற்று இதோ:

"நித்தி உழல்பொறிப்பின் நாய்போன் றுழலாமல்
சத்தியத்தை நாடல் தவம்" (மனுநெறித் திருநூல், 37:6)

இவ்வாறு ஐம்புலன்களையும் அடக்கி ஆள்கின்ற துறவினர் ஆனேற்றை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்கு நிகராவர் என்று சுவாமிகள் எடுத்துரைப்பதனால் துறவின் மேன்மை நன்கு புலப்படும்.

"வானிடத்தில் உள்ளம் வருந்தித் தவமுயல்வார்
ஆனிடத்தூர் வானைஅனை யார்" (மனுநெறித் திருநூல், 37:3)

என்பதே அவர் வாக்கு. இதுவும் பண்டை அறநூல்வழிப் பெற்றது என்று கருதலாம். நாலடியார் நவிலும்,

"மெய்வாய்கண் மூக்குச் செவியெனப்பேர் பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்" (நாலடியார், 59)

என்னும் வெண்பாவுடன் இணைத்துக் காணலாம். இப்படிப் பற்பல அறங்களைப் பண்டை மரபுத்தடத்தில் நின்று அடுக்கிக் கூறும் வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள் புதுமையறங்களைக் காலத்திற்கு ஏற்றவாறு கூறியுள்ளார் என்பதும் இவண் குறிப்பிடத்தக்கதாகும்.

மனித இனம் தம் இயல்பான வாழ்வியலை மறந்து ஒழுக்கங்களைப் புறந்தள்ளுகிறபோது அறநூல்கள் தோன்றுதல் இயல்பு. அவ்வகையில் தோன்றிய நாலடியார் கூறும் பல அறங்களை ஏற்றுக் கொண்ட வண்ணச்சரபர் காலத்துக்கு ஏற்ற வகையில் வேண்டும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு அறக்கருத்துக்களை வழங்கியுள்ளார் என்பது இதனால் போதரும்.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link