ஆய்வுச் சிந்தனைகள்


நெய்தல் திணைப் பாடல்களில் தலைவன்

சங்க இலக்கியப் பாடல்களுக்கு முதல், கரு, உரி என்ற முப்பொருள்களின் அடிப்படையில் திணை வகுக்கப் பெற்றுள்ளது. இம்முப்பொருள்களும் தலைவன், தலைவியர் எந்நிலத்திற்குரியவர்கள் என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. ஒவ்வொரு திணைப்பாடல்களிலும் இடம் பெற்றுள்ள தலைவியர் அந்தந்த நிலத்திற்குரியவர்களாக உள்ளனர். ஆனால் பாட்டுடைத் தலைவர்கள் இதிலிருந்து வேறுபடுகின்றனர். குறிப்பாக நெய்தல் திணைப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பாட்டுடைத் தலைவர்கள் நெய்தல் நிலத்திற்குரிய தொழில் செய்பவர்களாக இல்லை. மாறாக மருதநிலத் தலைவர்களே நெய்தல் திணைப்பாடல்களில் தலைவர்களாக வைக்கப் பெற்றுள்ளனர் என்பதை இக்கட்டுரை முன்வைக்கின்றது.

குறிஞ்சி நிலத்தவர்களின் தொழில் வேட்டையாடுதல் முதலியன. இதனடிப்படையில் குறிஞ்சி நிலத்தலைவர்களும் வேட்டைக்குச் சென்று திரும்பும் தலைவர்களாக வைக்கப் பெற்றுள்ளனர் (குறு. 376). முல்லை நிலத்தவர்களின் தொழில் கால்நடை மேய்த்தல். எனினும் முல்லை நிலத்தைச் சார்ந்த போர்வீரர்களும், சிற்றரசர்களுமே முல்லைத் திணைப் பாடல்களில் பாட்டுடைத் தலைவர்களாக உள்ளனர் (அகம். 124, 174, 334 நற். 341). மருத நிலத்தவர்களின் தொழில் வேளாண்மை செய்தல், இத்தலைவர்களும் வேளாண்மை செய்பவர்களாகக்காட்டப் பெற்றுள்ளனர் (நற். 60). பாலைத் திணைப் பாடல்களுக்கென்று தனியாகத் தலைவன் தலைவியர் சுட்டப்பெறவில்லை. பிற நிலப் பாட்டுடைத் தலைவர்களே பாலைத் திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளனர். நெய்தல் நிலத்தவர்களின் தொழில் மீன்பிடித்தல், எனினும் மீன்பிடிக்கச் சென்று திரும்பும் தலைவர்கள் நெய்தல் திணைப் பாடல்களில் இடம்பெறவில்லை.

நெய்தல் திணைப் பாட்டுடைத் தலைவர்கள் ஒருசில அடைமொழிகளோடு குறிப்பிடப் பெற்றுள்ளனர். கடல் வளத்தை உடைய தலைவன் (நற். 63), கடற்கரைத் தலைவன் (நற். 91), குறுக்குண்டு கிடக்கும் வலையைப் பரதவர்கள் பிரித்து உலர்த்தும் துறையை உடைய தலைவன் (நற்.14), நீர் நிறைந்த வலிய கடற்கரைத் தலைவன் (நற்.15), புன்னை மரக்கிளைகளில் காக்கைகள் வந்து தங்கும் கடற்துறைவன் (அகம். 10) என்பன ஒருசில சான்றுகளாகும். ஆனால் கடலுக்குள் சென்று மீன் பிடித்துவரும் தலைவன் என்று எங்குமே குறிக்கப்பெறவில்லை.

சங்க இலக்கிய அகநூல்களில் நெய்தல் திணைப் பாடல்களாக நற்றிணையில் 101 பாடல்களும், அகநானூற்றில் 40 பாடல்களும், குறுந்தொகையில் 70 பாடல்களும், ஐங்குறுநூற்றில் 98 பாடல்களும் (129,130 இவ்விரு பாடல்கள் கிடைக்கப்பெறவில்லை). நெய்தல் கலியில் 32 பாடல்களும் என மொத்தம் 341 நெய்தல் திணைப் பாடல்கள் உள்ளன. இவற்றில் ஒரு பாடலில் கூடத் தலைவன் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றதற்கான குறிப்புகள் இல்லை. தலைவியின் தந்தை மீன்பிடிக்கச் சென்றுள்ளார் (அகம். 240). தலைவியின் தமையன்மார் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர் (குறு. 123). ஆனால் தலைவன் மட்டும் மீன்பிடிக்கச் சென்றுள்ளவனாகக் காட்டப்பெறவில்லை. உப்பு விற்றல் நெய்தல் நிலத்தவர்களின் மற்றொரு தொழில் என்ற அடிப்படையிலும் கூட தலைவன் உப்பு விற்கச் சென்றவனாகச் சுட்டப்பெறவில்லை. இப்பாடல்களில் கிடைக்கப்பெற்ற ஒரு சில சான்றுகளைக் கொண்டு பார்க்கும்பொழுது, நெய்தல் திணைப் பாடல்களின் பாட்டுடைத் தலைவர்கள் மருத நிலத் தலைவர்களாகவே இருக்க வேண்டும் என்பதை அறிய முடிகின்றது.

பொதுவாகச் சங்க இலக்கியப் பாடல்களில் பிரிந்து சென்று திரும்பும் தலைவர்கள் தேரில் திரும்புவதாகக் குறிப்பிடப் பெற்றுள்ளனர். பொருள்வயிற் பிரிவைக் காட்டிலும் போர்வயிற் பிரிந்து சென்று திரும்பும் தலைவர்களைச் சுட்டும் பாடல்களில் இக்குறிப்புகள் மிகுதியாகக் காணப் பெறுகின்றன. நெய்தல் திணைப்பாடல்களிலும் இதனைக் காணலாம். நற்றிணையில் 28 பாடல்களிலும், ஐங்குறுநூற்றில் 7 பாடல்களிலும், நெய்தல் கலியில் 5 பாடல்களிலும் தேரில் வரும் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். பெரும்பாலும் குதிரை பூட்டிய தேரில் வரும் தலைவர்களே சுட்டப் பெற்றுள்ளனர். இருபாடல்களில் மட்டும் (அகம். 350, நற். 278). கோவேறு கழுதை பூட்டிய தேரில் வரும் தலைவர்கள் குறிக்கப் பெற்றுள்ளனர். தேரில் வரும் தலைவன் வீரர்கள் புடை சூழவும் (நற். 307), ஏவலாளர்கள் புடைசூழவும் (ஐங். 200) வருவதைக் காண முடிகிறது. இவ்வாறு வரும் தலைவர் மருத நிலத்தவர்களே எனலாம்.

தலைவன் ஒருவன், தன்னுடைய மனசு தலைவி வயப்பட்டதைக் குறிப்பிடும் பொழுது, குதிரை மேலிருந்து போர் புரியும் என்னை, இந்தப் பரதவப் பெண் தடுமாற வைத்துவிட்டாள் என்று குறிப்பிட்டுள்ளான் (நெய். கலி. 24). மற்றொரு தலைவன் அனைவரும் வணங்குவதற்குரியவன் எனச் சுட்டப்பட்டுள்ளான் (அகம். 310). இவர்கள் போர் மறவர்களே என்பது வெளிப்படை.

தலைவி, தோழி உரையாடல் போன்று அமைந்திருக்கும் பாடல்களில் இடம்பெற்றுள்ள குறிப்புகளும் தலைவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்பவர்கள் இல்லை என்பதை விளக்கி நிற்கின்றன. தலைவி ஒருத்தி தலைவனுக்காக இரவில் காத்திருக்கிறாள். தலைவன் வாராத நிலையில் இனி விடியும் நேரம் வந்துவிட்டது. என் தமையன்மார் படகுகள் வந்துவிடும் என வருத்தமடைகின்றாள் (குறு. 123). இதே போன்று தலைவனை எதிர்பார்த்திருக்கும் தலைவி, என் தந்தை, தமையன்மாரை அழைத்துக்கொண்டு மீன்பிடித் தொழிலைக் கற்றுக்கொடுப்பதற்காகக் கடலுள் சென்றுவிட்டார். தாயும் உப்பு விற்கச் சென்றுவிட்டாள். இச்சமயத்தில் தலைவன் வரின் நலம் பயக்கும் எனக் கூறுகின்றாள் (அகம். 240). பாட்டுடைத் தலைவனும் நெய்தல் நிலத்தொழில் செய்யும் தலைவனாக இருந்திருப்பின், அவனும் மீன்பிடிக்கச் சென்றதாகக் காட்டப்பெற்றிருக்க வேண்டும். தலைவனைப் பிரிந்து வாழும் தலைவி, தோழி கூற்றுப் பாடல்களில் அவ்வாறான குறிப்புகள் காணப் பெறவில்லை.

தன்னைத் தேடிவரும் தலைவனை அடையாளப்படுத்தும் தலைவியொருத்தி நெடிய கொடிகள் காற்றால் அசைந்து நுடங்கும் நியமம் என்னும் மூதூர் இடத்தே செல்லுகின்ற தேரை உடையவனும் மிகுந்த செல்வத்தை உடையவனுமான மன்னனின் அன்பு மகன் எனக் குறிப்பிடுகின்றாள்.

"நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே" (நற். 45)

என்பன அப்பாடலடிகளாகும். மற்றொரு பாடலில் (நற். 263) மருத நிலத்திலிருக்கும் பெட்டை நாரைக்குக் கடல் மீன்களைக் கொண்டு போய் கொடுக்கும் தலைவன் எனப் பாட்டுடைத் தலைவன் குறிப்பிடப் பெறுகின்றான்.

இச்சான்றுகளை எல்லாம் கொண்டு பார்க்கும் பொழுது, மருத நிலத்திலிருந்து நெய்தல் நிலைத்தை ஆட்சி செலுத்திய மன்னர்களும், வீரர்களுமே நெய்தல் திணைப் பாடல்களில் தலைவர்களாக வைக்கப் பெற்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. நெய்தல் நிலத்தில் விரைவான பொருளாதாரப் பெருக்கம் இல்லாத காரணத்தால் முல்லை, மருத நிலங்களில் தோன்றியது போன்ற இனக்குழுத் தலைமையோ அரசு என்ற நிறுவனமோ தோற்றம் கொள்ள முடியாமல் போய்விட்டது. எனவே கடலோரப் பகுதிகள் மருத நில ஆட்சியாளர்களால் அரசாட்சி செலுத்தப்பட்டு வந்துள்ளது. எனவே தான் நெய்தல் திணைப் பாடல்களில் குறிக்கப்பெற்றுள்ள தலைவர்கள் கடற்கரைத் துறைவன் என்பது போன்று சுட்டப்பெற்றுள்ளனர். இதன் காரணமாகத் தான் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் தலைவர்களாக அவர்கள் காட்டப்பெறவில்லை எனலாம். இக்கருத்தை விளக்குவது போன்றே நெய்தல் திணைப் பாடல்களும் அமைந்துள்ளன.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link