ஆய்வுச் சிந்தனைகள்


வினைச்சொற்களின் பாகுபாடுகள்

வினைச்சொற்களின் பாகுபாடுகள் குறித்துத் தொல்காப்பியர், நன்னூலார் ஆகிய இரு இலக்கணிகளின் கருத்துக்களை இக்கட்டுரையில் காண்போம்.

வினைச்சொல்லாவது யாது?

"வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்"

இது தொல்காப்பியர் தரும் விளக்கம்.

"செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே"

இது நன்னூல் நவில்கின்ற விளக்கம். எனவே வினைச்சொல்லின் சிறப்பியல்பு காலம் காட்டுதல் என்பது இருநூலார்க்கும் உடன்பாடு.

வினைச்சொற்களின் வகை:-

வினைச்சொற்கள் இன்னவாம் என ஓதிய தொல்காப்பியர், அவை இத்துணைய அல்லது இவ்வகையினை என்பதைப் பகரும் நூற்பா வருமாறு:

"குறிப்பினும் வினையினும் நெறிப்பட தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன உரிமையும்
அம்மூவுருபின் தோன்ற லாறே" எனக் கூறுவார்.

இதனுள்,

"குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்"

எனக் குறிப்பிடும் தொல்காப்பியர் கருத்து, நம்மவரால் தெளிவாகப் புரியவியலாது போகின்றது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். எனினும், காலம் குறிப்பாகப் புலப்படுதலையும், தெளிவாகப் புலப்படுதலையும் தொல்காப்பியர் ஏற்றுக் கொள்கிறார் என்பதில் ஐயமில்லை. எனவே, இங்கு குறிப்பு வினை எனத் தொல்காப்பியரால் குறிக்கப் பெறுவன, நன்னூலார் வினைச்சொற்களைத் தெரிநிலை வினை, வினைக் குறிப்பு எனப் பாகுபடுத்துவதில் பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டும் என்பது ஒருதலை. தொல்காப்பியர் இவ்வாறு வருகின்ற வினைச் சொற்களை மூவகைப்படுத்துவர் அவையாவன:

1. உயர்திணைக்குரிய வினைச்சொற்கள்
2. அஃறிணைக்குரிய வினைச்சொற்கள்
3. ஆயிரு திணைக்கும் சொன்ன உரிமைய

(எ.டு) உண்டான், கரியன்; சென்றது, செய்யது, வந்தனை, வெளியை.,

இவ்வாறு, திணையடிப்படையில் வினைச்சொற்களை பாகுபடுத்திய தொல்காப்பியர், இடவரையறை கொண்டு, உயர்திணை வினைச்சொற்களைப் பலவகையாக்குவர் என்பது அவரது நூற்பாக்களால் அறியலாகும் உண்மையாகும். உயர்திணையில், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களுக்கு ஒருமை, பன்மை வினை ஈறுகளை எடுத்தோதும் முகத்தான் இப்பாகுபாடுகள் அறியக் கிடைக்கின்றன. உயர்திணை வினைகளில், தன்மைப் பன்மை ஈறுகளாக அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், ரும் ஆகியவற்றையும் தன்மை, ஒருமை, வினைமுற்று ஈறுகளாக அள், ஆன், அள், ஆள் என்பனவற்றையும், படர்க்கைப் பன்மை வினைமுற்றுக்களாக, அர், ஆர், ப என வரூஉம் மூன்றையும் குறித்துச் செல்வதன்மூலம் அக்கருத்தினைப்பெற வைத்தார் எனலாம். இஃதே போல், அஃறிணைப் பன்மை வினைமுற்று ஈறுகளாக அ, ஆ வ என்பவற்றையும் ஒருமை வினைமுற்று ஈறுகளாக, த,ற,ட, ஊர்ந்த, குற்றியலுகரத்தையும் குறிப்பிடுவர்.

குறிப்பு வினைமுற்று:-

தொல்காப்பியர், குறிப்பு வினைமுற்று, என்றொரு பாகுபாட்டை அப்பெயர் கொடுத்துச் செய்யவில்லையாயினும், அப்பாகுபாட்டைப் பற்றிய யாதொரு குறிப்பையும், குறிப்பிடாது சென்றாரிலர் குறிப்பாகக் காலம் புலப்படும் வினைச் சொற்களைக் கூற புகுந்த தொல்காப்பியர்,

"அதுசொல் வேற்றுமை உடைமையானுங்
கண்ணென் வேற்றுமை நிலத்தினானும்
ஒப்பினானும பண்பினானு மென்று
அப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும்"

என உரைப்பர். மேற்கண்ட பொருட் பகுதிகளில் காலம் குறிப்பாகத் தோன்றுமேயொழிய வெளிப்பட நில்லாது என்பது பெறப்பட்டது.

(எ.டு) கச்சினன் கழலினன்
இல்லத்தன், புறத்தன்
பொன்னன்னன், புலிபோல்வன்
கரியன், செய்யன்

மேலும் தொல்காப்பியர்,

"அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியுங் குறிப்பே காலம்"

என ஓதிச் செல்வர். எனவே காலம் வெளிப்பட தோன்றாதிருத்தலும் வினைச்சொற்களில் உண்டு என்பதைக் கூறிப்போகும் தொல்காப்பியர், வினைக் குறிப்பு என்றொரு பாகுபாட்டைச் செய்யாராயினும், குறிப்பு, குறிப்பு என்று கூறி, அப்பாகுபாட்டினைக் குறிப்பாகப் புலப்படுத்தி வினைக் குறிப்புச் சொற்களாக, இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல, பண்புகொள் கிளவிகள், உள என் கிளவி, பண்பின் ஆகிய சினைமுதற்கிளவி ஒப்பொடு வரூஉம் கிளவிகள் ஆகிய பத்தினையும் பகர்வர்.

விரவுவினைகள்:-

உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைகளுக்கும் ஓரன்ன உரிமையவாகிய வினைச் சொற்களை விரவு வினைகள் என்று குறிப்பர். அவை முன்னிலை, வியங்கோள், வினையெஞ்சு கிளவி, இன்மை செப்பல், வேறு, செய்ம்மன், செய்யும், செய்த எனும் வாய்ப்பாட்டுக் கிளவிகள் ஆகிய எண்கிளவிகளும் விரவு வினைகளாக அமையும்.

நன்னூலார், தெரிநிலை வினை, குறிப்புவினை என வினைமுற்றுக்களை இருபெரும் பிரிவுக்குள் அடக்குவர்.

"பொருண் முதலாறினுந் தோற்றி முன்னாறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக் குறிப்பே" என்று கூறுவர்.

வினைச் சொற்கள்:-

முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி
ஒன்றற் குரியவும் பொதுவு மாகும்"

என வகைப்படுத்துவர் நன்னூலார்.

முற்றுவினை:-

"பொதுவியல் பாறையும் தோற்றிப் பொருட்பெயர்
முதலறு பெயரல தேற்பில முற்றே என்பர்."

ஆகவே, இம்முற்றுவினையுள் தெரிநிலைவினை, குறிப்புவினை, ஆகிய இரண்டும் அடங்கும்.

விரவு வினைகள்:-

தொல்காப்பியர் குறிப்பிடும் விரவுவினைகள் என்ற பாகுபாடு (ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமைய) நன்னூலார்க்கும் உடன்பாடு.

"தன்மை முன்னிலை வியங்கோள் வேறில்லை
உண்டீ ரெச்ச மிருதிணைப் பொதுவினை"

என நன்னூலார் பகர்வர். இதனுள் "உண்டு" எனும் வினை நன்னூலாரால் குறிப்பிடப் பெறுகின்ற புதிய ஒன்று.

நன்னூலாரும், தொல்காப்பியரும் பெயரெச்ச வினையெச்சங்களை ஓதிச் செல்வர்.

"தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது நினையெச் சம்மே".

என்பது நன்னூலார் தரும் விளக்கமாகும்.

(எ.கா) வந்து சென்றான்
சென்று திரும்பினாள்

இவ்வாறு வினைச்சொற்களைப் பாகுபடுத்துவதில் நன்னூலாருக்கும், தொல்காப்பியருக்கும் அதிக வேற்றுமைகள் இல்லை என்பது இக்கட்டுரையில் கூறப்பட்டது. தொல்காப்பியர், குறிப்பு என்று பலவிடங்களிலும் கூறிச் சென்றதையே நன்னூலார் குறிப்பு வினை என்று பாகுபடுத்தியிருக்க வேண்டும் என்பது தெளிவு.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link