ஆய்வுச் சிந்தனைகள்


தி.க.சி.யின் திறனாய்வுப் போக்கு

தமிழ் இலக்கிய வரலாற்றில் இன்றைய வளர்துறை திறனாய்வுத் துறையாகும். ஆங்கிலேயர் வருகைக்குப் பின் இத்துறையை வளப்படுத்தியவர்கள் பலர். அவருள் தி.க.சி. எனும் மூன்றெழுத்துகளால் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர் நெல்லையைச் சேர்ந்த தி.க. சிவசங்கரனார் ஆவார். வாழும் எழுத்தாளரான இவர் தமது பத்தாம் வயது முதலே வல்லிக்கண்ணன் நூலகம், சை.சி. நூலகங்களுக்குச் சென்று, கலை இலக்கிய அரசியல் நூல்களை ஆழ்ந்து கற்றவர். இந்துக் கல்லூரியில் பயின்றபோது கவிதைகள் எழுதியவர். வங்கிப்பணி புரிந்தபோது இவரது சிறுகதை "சரஸ்வதி" எனும் இதழில் வெளிவந்தது. விரும்பும் நூல்களை விலைக்கு வாங்கிப் படிக்கும் பழக்கம் உடையவர். "தாமரை" இதழ்ப் பொறுப்பாசிரியராய் இருந்தபோது, இலக்கிய இதழ்கள் பலவற்றில் இவரது இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகள் நாற்பதாண்டு காலமாக வெளிவந்திருப்பினும் அண்மையில்தான் அவை நூல் வடிவம் பெற்றன. நூல் வடிவமாக வந்தபின் சாகித்திய அகாதெமி பரிசும் பெற்றார். இக்காலத் தமிழ் இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளில் காணலாகும் இவரது திறனாய்வுப் போக்கினை மதிப்பிடும் முறையில் இக்கட்டுரை அமைகிறது.தேசியக்கவி பாரதியாரையும், வ.ரா. வையும் முன்னோடியாகக் கொண்டு வல்லிக்கண்ணனை ஆசானாக ஏற்றவர். ஜீவாவின் சீடர், ஆரம்பத்தில் திரைப்பட விமர்சகராக இருந்த இவரைக் கலை இலக்கியத் திறனாய்வுக்கு மாற்றியவர் பேராசிரியர் நா. வானமாமலை ஆவார். திறனாய்வில் நடுநிலை தவறாதவர். நியாயமான உணர்வுடன் செயல்பட்டவர். மனதிற்குப் பட்டதைத் துணிவோடு கூறுபவர். மார்க்சியப் பார்வையில் இலக்கியத் திறனாய்வை மேற்கொண்டவர். சோவியத் துணைத் தூதரகத்தில் இதழ்ப்பணியில் 25 ஆண்டுக்காலம் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்தவர். திறனாய்வில் தமக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர். படைப்பாளர் பலர் இவரது திறனாய்வுப் போக்கால் ஒளி பெற்றனர் "மணிக்கொடி" சிறுகதை எழுத்தாளர்களில், பி.எஸ். ராமையா, மௌனி, ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., ந. சிதம்பர சுப்பிரமணியன், ஆர். சண்முகசுந்தரம் ஆகியோரின் படைப்புகளில் புதிய சோதனை, கலைத்திறன், பாத்திரச் சித்திரிப்பு, வாழ்வியல் சிந்தனை ஆகியவற்றைத் திறனாய்வு செய்துள்ளார்.

பி.எஸ். ராமையாவின் "கார்னிவல்" சிறுகதை 1936-ல் மணிக்கொடியில் வெளிவந்தது. 1965-ல் "எழுத்து" பத்திரிக்கையில் தி.க.சி. தமது திறனாய்வைக் கட்டுரையாக வடித்தார். "பி.எஸ்.ராமையாவின் "கார்னிவல்" வீணை இசையில் தன்னை மறக்கும் நிலை பெற்ற ஒரு தாசியை ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை ஒர் இரவில் ஆட்டி வைக்கும் கதை" என 18 பக்கக் கதையை ஒரு வாக்கியத்தில் சுருக்கிக் கூறுகிறார். தி.க.சி.. பின்னர்க் கதை நிகழ்ச்சிகளையும் பாத்திரத்தின் சிந்தனை ஓட்டத்தினையும் விளக்குகிறார். டால்ஸ்டாய் படைத்த அன்னாகிரினாவை, பி.எஸ். ராமையாவின் வனஜாவுடன் ஒப்பிடுகிறார். ஊருசியச் சிறுகதைப் போக்குடன் இணைத்துக் காண்கிறார். "தமிழகத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே டால்ஸ்டாய், செஹாவ், மாக்ஸிம் கார்க்கி ஆகியோருக்கு நிகராகக் கதை எழுத வல்லவர்கள் தோன்றி விட்டார்கள். அத்தகைய மேதாவிலாசம் படைத்த கலைஞர்களில் பி.எஸ்.ராமையாவும் ஒருவர் என்பதில் எனக்கு ஐயமில்லை" என்று தி.க.சி கூறுகிறார். மார்க்சியப் பார்வையில் திறனாய்வு செய்வதை இக்கூற்று மெய்பிக்கிறது.

ஓர் எழுத்தாளனிடம் சுவைக்கு அப்பால் தத்துவார்த்த சிந்தனை ஒன்றுண்டு. அதன் அடிப்படையில் திறனாய்வை மேற்கொள்ள வேண்டும் எனக் கருதுபவர் தி.க.சி. சமத்துவம், சகோதரத்தை வளர்க்கும் முற்போக்குப் பார்வையே கலை இலக்கியப் பார்வை சிந்தனை எனும் அமைப்பை அறிமுகப்படுத்தி இன்றும் நடத்தி வருபவர். மார்க்சிய அழகியல் திறனாய்வை மதித்துப் போற்றுபவர் புத்திலக்கியங்களை மட்டும் திறனாய்ந்து கூறியவர். சிறுகதை எழுத்தாளர் மௌனியின் பாத்திரங்கள் மனநோயாளிகள் என்று திறனாய்வாளர் சி.சு. செல்லப்பா கூறியிருக்க, தி.க.சி.யோ படைப்பாளியையே மனநோயாளி எனத் துணிந்து மனத்திறப்ட்டவாறு மதிப்பீடு செய்கிறார். மனித உழைப்பைப் பரிகசித்துச் சிறுமைப்படுத்தும் தத்துவப் பார்வையே மௌனியிடம் இருப்பதாகச் தி.க.சி. வெளிப்படுத்துகிறார். மௌனியின் "அழியாச் சடர்" சிறுகதைத் தொகுதியில் உள்ள குடும்பத்தேர், சுந்தரி, இந்நேரம், நினைவுச்சுவடு, மிஸ்டேக் ஆகிய ஐந்தும் தத்துவ முடிச்சு இல்லாத எளிய கதைகள் எனக் கூறும் தி.க.சி. ஏனைய பத்தும் அசாதாரண (abnormal) மனநிலையில் படைக்கப்பட்டவை எனத் தெளிவுபடுத்துகிறார்.

சோதனைகள் பல செய்தவர்களில் மௌனியைப் போல நன்கறியப் பட்டவர் ந. பிச்சமூர்த்தி. எனினும் வாழ்க்கையைக் கலை அழகுடனும் உயிர்த்துடிப்புடனும் சொல்லில் செதுக்கிய சிற்பியாக ந. பிச்சமூர்த்தியைக் கருதுகிறார் தி.க.சி., ந. பிச்சமூர்த்தியின் "மாங்காய்த்தலை" சிறுகதைத் தொகுதியிலுள்ள 25 கதைகளை ஆறு, பத்தொன்பது எனப் பகுத்துத் தரத்தை மதிப்பிடுகிறார். 19-ல் 14 கதைகள் கலைத்திறன் வாய்ந்தவை என மதிப்புரை தருகின்றார். மதிப்புரையில் கதைச் சுருக்கமும் இறுதியில் ஒரே வாக்கியத்தில் திறனாய்வு உரையும் இடம் பெறுகின்றன. 14 கதைகளின் விளக்கங்கள் முடிந்தபின் ந.பிச்சமூர்த்தியின் தனித்தன்மைகளைப் பிற எழுத்தாளருடன் ஒப்பிட்டுக் கருத்துரை தருகிறார். ந. பிச்சமூர்த்தியின் தன்னடக்கமும் மனிதநேயமும் வெற்றியை அளித்துள்ளன என்றும் இக்குணங்கள் இல்லாமையால் கலை உள்ளம் படைத்த க.நா.சு. படைப்புகள் சிறக்கவில்லை என்றும் தி.க.சி. கருதுகிறார். உழவர் பெருங்குடி மக்கள் வாழ்வியலை ந. பிச்சமூர்த்தி பிழைப்பு, விதைநெல் கதைகளில் சித்திரித்துள்ளார். மௌனியோ, க.நா.சு.வோ கிராம மக்கள் வாழ்க்கை ஆழத்தைக் காட்டவில்லை எனக் கூறி ஒப்பிட்டிருக்கிறார் தி.க.சி. ஓர் எழுத்தாளன் மக்களுக்காக எழுத வேண்டும் என்பதே தி.க.சி.யின் கருத்து.

க.நா.சு வின் "குழந்தைச் சாமியார்" எனும் கதை இளவயதில் ஊரை விட்டு ஒருத்தியுடன் ஓடிப் போனவன் 21 வயதைத் தாண்டிய பருவத்தில் சாமியாராகித் தத்துவம் பேசுபவனைப் பற்றியதாகும். இதனை வறட்டுத் தத்துவ வேதனைக் கதை என்று தி.க.சி மதிப்பீடு செய்கிறார்.

நா. சிதம்பர சுப்ரமணியனின் "சூரியகாந்தி" சிறுகதைத் தொகுதித் திறனாய்வில் அதில் உள்ள 14 சிறுகதைத் தலைப்புகளைத் தந்துவிட்டு அவற்றுள் ஐந்தினை மட்டும் தேர்ந்து கதைச் சுருக்கம் தந்து திறனாய்வுரையை ஓரிரு வாக்கியங்களில் கூறி கதைகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டியவை எனக் கருத்துக் கூறுகிறார். நிகழ்ச்சி அமைப்புக்கு (Plot Construction) முக்கியத்துவம் தருபவர் ந. சிதம்பர சுப்ரமணியன் என்று கூறிக் கல்கியுடன் உத்திமுறையை ஒப்பிட்டு விளக்குகிறார். அழுத்தமான பாத்திரப் படைப்பை ந. சிதம்பர சுப்ரமணியனின் படைப்பில் காண முடியவில்லை என வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறார் தி.க.சி. "பிச்சமூர்த்தியைப் பிரம்மபுத்திரா நதிக்கு ஒப்பிட்டால் இவரை ஒரு நீரோடைக்குத்தான் ஒப்பிட இயலும்" என்று தி.க.சி. உவமை மூலம் தமது கருத்துக்கு அழுத்தம் சேர்க்கிறார்.

ஆர். சண்முகசுந்தரத்தின் "மனமயக்கம்" தொகுதியில் உள்ள 22 கதைகளில் 7 கதைகளைத் தேர்ந்து படைப்பாளியை மதிப்பிடுகிறார். 7-ல் "திரும்பிய உயிர்" 5 பக்கக் கதை எனினும் உணர்ச்சி பூர்வமானது என்பதற்குப் பாத்திரக் கூற்றைச் சான்றாக்குகிறார். "மங்கிலியத்தை விற்றாலும் மாட்டை விற்கக் கூடாது என்று உறுதியாக நிற்கும் கிராமியப் பெண் தங்கம், ஓர் அற்புதமான குணச்சித்திரம்" தந்தை சீதனமாகத் தந்த காளைமாடு வேளாண் தொழிலுக்கு உதவக்கூடியது. அதுவே சமூக மதிப்பிற்குரியது என எண்ணுகிறாள் தங்கம் "ஓட்டமும் ஓய்வும்" எனும் கதை வாங்கிய கடனைச் செலுத்த முடியாது உயிரை மாய்த்துக் கொள்ளும் மணியகாரனுடையது. கொங்குநாட்டு கிராமிய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

ஒரு படைப்பில் கலை அழகு (Artistic Beauty), உலகளாவிய மனிதகுலநேயம் (Universal Humaniam), சமூக நோக்கு (Social Outlook) ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும் என்பது தி.க.சி.யின் கருத்து. கலை சம்பந்தமான பொறுப்புணர்வும், சமுதாயப் பொறுப்பும் படைப்பாளிக்கு அவசியம் தேவை. பிற மொழிகளுக்கு நிகரான வளர்ச்சி தமிழில் புதினத்திலும், சிறுகதைகளிலும் அமைந்துள்ளன. நாடகம், மரபுக்கவிதை, மொழிபெயர்ப்பு ஆகியன பின் தங்கியே உள்ளன என்றும் தி.க.சி கருதுகிறார். தி.க.சி.யின் திறனாய்வினை 1960-க்கு முன், 1960 முதல் 1975 வரை. 1975-க்குப் பின் என மூன்று காலகட்டங்களாகப் பகுத்து, அய்வு செய்த பா. செயப்பிரகாசம் "எந்தத் திறனாய்வாளனும் தனது கருத்தை மறுபரிசீலனை செய்யலாம். முந்தைய முடிவை மாற்றிக் கொள்ளலாம்" எனும் தி.க.சி. கூற்றையே அரணாக்கித் தி.க.சி. யின் கணிப்பீடு மாற்றத்திற்குள்ளானதையும் அதற்குரிய காரணிகளையும் விளக்கியுள்ளார்.

திறனாய்வுக்கு வரும் நூல்களையும், இதழ்களையும் பன்முறை வாசிக்கும் பழக்கம் உடையவர் தி.க.சி. இலக்கியத் திறனாய்வைத் தொடங்கும் காலத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கொடிகட்டி பறந்து கொண்டிருந்ததால் அவர்களது படைப்புகளைத் திறனாய்ந்தார். படைப்பாளர்களின் கலைத் திறனைச் சமகாலத்தினருடன் ஒப்பீடு செய்து தரத்தை மதிப்பிடுவார். தாம் படித்த பிறமொழி இலக்கிய வகைகளோடு ஒப்பாய்வு மனத்தளவில் நிகழ்த்தி பிறமொழிப் படைப்பாளருடன் தமிழ்ப் புத்திலக்கியப் படைப்பாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எழுதுவார். உருசிய, வங்காள இலக்கிய படைப்பாளர் பலர் இவர்தம் திறனாய்வு முடிவுகளில் இடம் பெறுகின்றனர். திறனாய்வாளனுக்குப் பரந்துபட்ட பன்னூற் பயிற்சி தேவை என்பதை நன்குணர்ந்தவர் தி.க.சி. படைப்பாளனின் கருத்துக்கள் சராசரி மனிதனைக் கூடச் சென்றடைய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர் தி.க.சி. கலை வாழ்க்கைக்காக எனும் கருத்துடையவர் அதற்கேற்பத் திறனாய்வுப் போக்கினை அமைத்துக் கொள்கிறார்.

இது என் கருத்து என உறுதியிட்டுத் திறனாய்வு செய்பவர். ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால் என விளக்கம் தருவதிலும் முதலாவதாக, இரண்டாவதாக என எண்ணிட்டுத் தருபவர். தருக்க முறையைப் பின்பற்றுபவர். பகுத்துக் கூறியதைத் தொகுத்துக் கூறச் "சுருங்கச் சொன்னால்" எனும் சொற்றொடரை அடிக்கடிப் பயன்படுத்துகிறார். தொல்காப்பியர் மரபியலில் கூறும் கருத்துக்கள் திறனாய்விற்கும் பொருந்தும். "இறுதியாகச் செம்மையாகத் தொகுத்துக் கூறுதல். முறைப்படுத்தி உண்மையை உறுதிப்படுத்துதல்". (கலைஞர் உரை, தொல்காப்பியப் பூங்கா, ப. 523) "வகுத்தும் தொகுத்தும் வரையறுத்தல். எதிர் கருத்தை மறுத்து தன் கருத்தின் வலிமையை நிலை நாட்டுதல்" (மேற்படி. ப. 524) என்பன இங்கு ஒப்பு நோக்கத்தக்க உத்திகள். குறித்த மரபியல் கருத்துகளில் திறனாய்வு முறைகளுக்கும் பொருந்தும் விதிகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைத் தி.க.சி.யின் திறனாய்வில் காண இயலும்.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link