ஆய்வுச் சிந்தனைகள்


ப. கல்பனாவின் உவர்க்களம்: தாய்மைச் சிதைவும் சுயத்தின் தேடலும்: பெண்ணிய அவத்தை

தமிழ்க் கவிதையில் புதிய வெளிகள் எல்லைகளை விரித்திருக்கின்றன. புதிய குரல்களின் சலனங்கள் உரத்து எழுகின்றன. கவிதை என்பது கலையாக, அழகாக, அறமாக, வாழ்நெறியாக, பிரசாரமாக, வழிகாட்டியாக... என்றென்னவெல்லாமாகவோ உணரப்பட்ட எல்லைகளிலிருந்து கவிதை என்பது வலியாக, அனுபவமாக, தேடலாக, சுயத்தை மீட்டெடுப்பதற்கான வாயிலாக என்றெல்லாம் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாகத் தம் தனி அடையாளங்களைத் தேடும் பெண்ணின் குரல், ஆரவாரமாக இல்லாவிட்டாலும் அழுத்தமாகத் தமிழ் கவிதை வெளியில் பரந்து ஒலிக்கிறது. காலங்காலமாக, பல்வேறு அழகியல் பூச்சுகளால், மறைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுக் காணாமற்போன பெண்ணின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. கவிதையில் பெண் கவிதை, ஆண் கவிதை என்றில்லாவிட்டாலும் கூட, பெண்ணின் சுயத்தைப் பெண்ணே தேடுவதென்பது, கவிதைக்குள் ஒரு சூரியவெளிச்சமாக விரிவடைகிறது. உமாமகேசுவரி, தேன்மொழி, சுகந்தி, திலகபாமா, ப. கல்பனா, இளம்பிறை, மாலதிமைத்ரி, ரெங்கநாயகி என்று இவர்கள் பெயர்களும், தேடல் முறைகளும் வேறுபட்டாலும் இலக்கு ஒன்றுதான். பெண்ணின் மனசுக்குள்ளான உள்ளசைவுகளை, இறுக்கங்களை, வலியை, தேடல்களை இவர்கள் பதிவு செய்வது என்பது தமிழ்க் கவிதைவெளியில் செழிப்பான சலனங்களை ஏற்படுத்துகிறது.

பெண்ணின் இருத்தலின் மீது ஒவ்வொரு புள்ளி முனையிலிருந்தும் யுத்தங்கள் தொடுக்கப்படுகின்றன. காலம் காலமாய் யுத்தம் என்று தெரியாதபடியான யுத்தம்: ஆக்கிரமிப்பு என்று தெரியாதபடியான ஆக்கிரமிப்பு. "பொதுவாகப் பெண்களின் பிரச்சனைகள் என்றவுடன் அநேகர் வரதட்சணை, பாலியல் வன்முறை போன்ற அனைவருக்கும் தெரியக்கூடிய பிரச்சனைகள் பற்றியே எழுதி வந்திருக்கின்றனர். ஆக, இந்தப் பிரச்சனைகள் இல்லாத பெண்ணின் வாழ்வு, நல்ல நிலையில் இருப்பதாகவே பொருள் கொள்ளப்பட்டு விடுகிறது. ஆனால் உண்மையில் தினசரி வாழ்வில் ஒவ்வொரு கணத்திலும் நுட்பமான, மெல்லிய அளவில் கூடப் பெண்களின் மீதான வன்முறை செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது" என்று "பார்வையிலிருந்து சொல்லுக்கு" என்னும் நூலின் முன்னுரையில் பத்மாவதி கண்ணம்மா மிகச் சரியாகக் காட்டுகிறார். "கல்பனாவின் கவிதைகளில் பாராட்டுக்குரிய அம்சம் என்னவென்றால் இவரால் தினசரி வாழ்க்கையில் பெண் மீது செலுத்தப்படும் மெல்லிய அதிகாரத்தைக்கூட உணரமுடிவதுதான்.... இவருடைய எல்லாக் கவிதைகளிலுமே வாழ்வின் நுட்பமான உணர்வுகளை இவரால் சரியாக இனங்கண்டு கொள்ள முடிகிறது. கண்டு கொண்டதை வார்த்தை அலங்காரமாகவோ, கோஷமாகவோ எழுதாமல் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டே கவிதையாக்கியிருக்கிறார்." பாசாங்கற்ற வார்த்தைகளோடும், அணுகுமுறைகளோடும், பெண்ணின் அசைவுகளை, சிதைவுகளை, வலியை அழுத்தமாகக் காட்டும் கல்பனாவின் கவிதைகளுள், "உவர்க்களம்" எனும் கவிதை, பொருளாதார, சமூக அழுத்தங்களால் உழைத்து அலுத்துப்போகும்படியாகப் பெண்ணின் மீது பிரயோகிக்கப்படும் அதிகாரம், அவளுடைய - அவளால் மட்டுமே உணர முடியும். தாய்மையின் நசிதலை மிகக் கனமான வலியுடன் எடுத்துக் (பார்வையிலிருந்து சொல்லுக்கு, ப.28) காட்டுகிறது.

குழந்தையை உறங்க வைப்பது என்பது எவ்வளவு அற்புதமான அனுபவம்! தாய்மைக்குத்தான் தெரியும் அதன் உன்னதம். உறங்க வைப்பதற்கான தாலாட்டில், தாயின் முழு உலகமும் ஒடுங்கி நிற்கும் அற்புதம். தாய்மை தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான பரவசக் கணங்கள் அல்லவோ அவை? யாருக்கு வெளிப்படுத்துவது? குழந்தைக்கா? இல்லை. ஒரு பெண் தனக்குள் இருக்கும் தாய்மையைத் தானே அனுபவித்துக் கொள்வதற்கான பரவசம் அது. தனக்குள் தான் வாழ்தலின் அர்த்தத்தை அறிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள, அனுபவித்துக் கொள்வதற்கான கணம் அது. ஆனால் என்ன நிகழ்கிறது?

"மகளின் அழுகையைச் சமாளித்து
அடிகொடுத்து இனிப்பு கொடுத்து
பொம்மை கொடுத்து முத்தமும் கொடுத்து
தூங்க வைத்திருக்கிறேன் இந்நடு இரவில்"

குழந்தைக்கு உறக்கம் வரவில்லை. உறக்கம் வரவில்லை என்பது பெரிய விஷயமில்லை. ஆனால் இங்கே அது ஒரு கலகம்; கலவரம்; தாய்க்கும் மகளுக்குமான - வெளித்தெரியாத ஒரு கலகயுத்தம். தாயின் அணைப்பில் மயங்கிமயங்கிக் கிறங்கிக் கிறங்கி இந்தக் குழந்தை தூங்கவில்லை; கன்னம் குழியக் கனவுகளில் சிரித்தபடி குழந்தை தூங்கவில்லை; குழந்தை தூங்க வைக்கப்பட்டிருக்கிறது. "தூங்கியது" என்பதற்கும் "தூங்க வைக்கப்பட்டிருக்கிறது" என்பதற்கும் இடையே இருக்கிறது வலியும் வேதனையும் கொந்தளிக்கும் கருத்தழுத்தம். தாலாட்டுப்பாடி, அரவணைத்து, கொஞ்சிக் கொஞ்சிக் கொடுக்கப்பட்ட தூக்கம் அல்ல இது. "அடி கொடுத்து" தரப்பட்ட தூக்கம். தாய் மகளை அடிக்க முடியுமோ? சின்னஞ்சிறு குழந்தையை வலிக்க வலிக்க அடிக்க முடியுமோ? அடித்தால் அழுகை வரும். இது இயற்கை. ஆனால் இங்கே அழுகையை நிறுத்துவதற்காக அடிவிழுகிறது. குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக அல்ல, "சமாளிப்பதற்காக" என்கிறார் கவிஞர். எதைச் சமாளிப்பது? உண்மையில் தாய், பிள்ளைக் குழந்தைக்குக் கொடுக்கும் அடி, தாய் தனக்குத்தானே அடித்துக் கொள்ளும் அடி. குழந்தை அழுவது எதற்காகவாம்? அதைத் தருவதற்குத் தன்னால் இயலவில்லையே என்ற இயலாமையால் ஆதங்கத்தால், தாய் தனக்குத்தானே அறைந்து கொள்கிற அடி இது. இந்த அடி குழந்தையின் மீதும் விழுகிறது. ஏன் இயலாமல் போய்விட்டது, குழந்தையின் அழுகைக்கான தேவை? குழந்தை கேட்டது உலகிலே கிடைக்காத, முடியாத, பொருளா என்ன? கொடுக்க முடியாமல் போவதற்கு. குழந்தை எதிர்பார்ப்பது என்னவோ, ஒரு சின்னவருடல்; சின்ன கொஞ்சுதல்; முகத்தோடு முகம் அணைத்து முகம் பூக்கிற சந்தோஷச் சிலிர்ப்புகள். சின்னச் சின்ன விஷயங்கள் தாம். ஆனால் இயலாமல் போய்விட்டதே! மனசுக்குள் நிறைந்திருக்கின்றன, அள்ள அள்ளக் குறையாமல் சுரந்து சுரந்து நிரம்பும் தன்மையோடு இருக்கின்றன.

ஆனால் எடுத்துக் கொடுக்கத்தான் நேரமில்லாமல் போய்விட்டது! நவீன பெண்ணின் வாழ்தலை இந்த நேரமின்மைதான் எப்படிச் சத்தமில்லாமல் கொள்ளையடித்துவிட்டது? படித்து, கல்வியில் உயர்ந்து, திறமைகளில் செழித்துப் பொருளீட்டும் வலிமையுடன் வேலைக்குச் சென்று..... எல்லாம் சரிதான்; பொருள் வளம் பெருகியது; சமூக அந்தஸ்து பெருகியது; தன் சுய வலிமை உறுதி பெற்றது; ஆணுக்குச் சமமாக வாழும் வாழ்தல் மிக நேர்த்தியாக வடிவம் பெற்றது; எல்லாம் சரிதான். ஆனால் ஆணுக்கில்லாத ஓர் அவஸ்தை, பெண்ணுக்குப் பெண்ணால் மட்டுமே உணரப்படும் இந்த அவஸ்தையை யார் கொடுத்தது? வாழ்தலின் பரவசக் கணங்கள் காணாமல் போய், மீட்டெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்த அவஸ்தைக்கு, இந்தக் கணங்களை இழந்து தேடிக் குவித்து வந்த பணமும், பொருளும், அதிகாரமும், சமூக அந்தஸ்தும் மாற்றாக மருந்து தந்துவிட முடியுமோ? குழந்தைக்குத் தருவதற்காக, இந்தப் பொருள் வளத்தால், இனிப்பு வாங்க முடிந்தது; பொம்மை வாங்க முடிந்தது; இனிப்பு கொடுத்தும், பொம்மை கொடுத்தும்.... என்ன செய்தும் குழந்தை தூங்கவில்லை. கடைசியாக முத்தமும் கொடுத்தாகிவிட்டது. ஆனால் அது உயிர்ப்பில்லாத முத்தம் என்பது குழந்தைக்குத் தெரியும். ஓய்வில்லாத உழைப்பால், சலித்துப்போன உடலோடும் உணர்வோடும் தந்த உயிரில்லாத நிழல் முத்தம் என்று அதற்குத் தெரியும். முகத்தில் இருக்கும் சலிப்பும், சடங்கும், ஏமாற்றும் நடிப்பும் குழந்தைக்குத் தெரியும். உதடுகள் சேரும் தசைச் சேர்க்கை தானே தவிர, பரவசச் சுழிப்புகள் நிகழும் அன்பின் சாத்திய முத்திரை அது அல்ல என்பது குழந்தைக்குத் தெரியும். அது எதிர்பார்க்கிற முத்தம் அல்ல அது எனவே அது தூங்கவில்லை; அழுது அழுது ஓய்கிறது; பிடிவாதமாக அழுது அழுது கரைகிறது; தூங்காமல் விழித்தபடி காத்துக் காத்து ஏமாற்றமடைந்து சோர்கிறது. விழித்தபடி பிடிவாதமாக.... நடு இரவு வரை. ஒரு வழியாகத் தூங்குகிறது நடு இரவில். இல்லையில்லை அது உறக்கம் இல்லை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கி ஏங்கி சோர்ந்து விழுந்த மயக்கம் அது. தூங்குவது போல மயங்கிக் கிடக்கிறது குழந்தை. இயலாமையில் மூச்சிமுட்டப் புதைந்து கொண்டிருக்கும் தாய்மைக்குப் புரிகிறது இந்த நிஜம்.

"மனம் கேட்காமல்
வருடிக் கொண்டிருக்கிறது
விரல் பதிந்த முதுகை"

தாயின் இயலாமை, குழந்தையின் முதுகில் தழும்பாகிச் சிவந்து விழுந்து கிடக்கிறது; அடித்த அடியின் வலியைக் காட்டிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் அடையாளம். வருடி வருடி அதை அணைக்கமுடியுமோ? தழும்பின் அடையாளங்களை அழிக்க முடியுமோ? முடியாதென்பது தெரியும். இருந்தாலும் மனம் கேட்காமல் வருடிக்கொண்டிருக்கிறது விரல் பதிந்த முதுகை. விரலால் வருடுவது அல்ல; மனம் வருடுகிறது. மனம் வருடி வருடிக் கரைகிறது. இந்த வலியும் வேதனையும் உடம்பால் அனுபவிக்கப்படுவதல்ல, மனதால் அனுபவிக்கப்படுபவை. இந்த வேதனையின் வேர்கள் முதுகில் பதிந்துள்ள தழும்புகளில் இல்லை. பகலில் நிகழ்ந்த வேறொரு நிகழ்தலில் வேர் பிடித்திருக்கின்ற நெருப்பு இது,

"பகலில் வேறொரு குழந்தையின்
அம்மாவைப் பிடித்துக் கொண்டு
அழுததாகக்
காப்பகத்தின் ஆயா சொன்னாள்...
இதே நிறப்புடவை
உடுத்தியிருந்தாளாம்
அந்தப்பெண்ணும்"

தன்னுடைய தாயின் புடவையைப் போன்ற அதே நிறத்தில் புடவையை அணிந்து கொண்டிருக்கும் வேறொரு பெண்ணைத் தன் தாயாகத் தவறுதலாகப் புரிந்து கொண்டு குழந்தை அணைத்துக் கொள்கிறது. இது சாதாரண நிகழ்வுதான். சட்டென்று பார்த்தால் வேடிக்கையாகச் சிரிக்கத் தோன்றும் நிகழ்வுதான். சரிதான், குழந்தைத்தனம் என்று ஒதுக்கிவிட்டு மேல் நகரும் நிகழ்வுதான்.

தன் குழந்தைக்கு, அது விரும்பியபடியான அணைப்பை வருடலைத் தரமுடியாத ஒரு தாயின் சோகத்தையும், வலியையும் வெளிக்காட்டுவது இக்கவிதை என்று புரிதல் மேலோட்டமானது மட்டுமே. உண்மையில், ஒரு பெண் மீதான சமூகத்தின் காலத்தின் ஆக்கிரமிப்பை, ஆரவாரமில்லாமல் காட்டும் அழுத்தமான கவிதை இது. மாறிவரும் நவீன உலகில் ஆணுடன் பெண் சரிசமமாகக் கல்வி கற்கிறாள்; வேலைக்குச் செல்கிறாள்; பொருளீட்டுகிறாள்; அவள் அசைவதற்கான வெளி விரிவடைந்துள்ளது. ஆனாலும் வீட்டிற்குள் அடைபட்டபோது சுமந்திருந்த சுமைகளைவிட இப்போது கூடுதலாகவும் சுமக்க வேண்டியுள்ளது. வெளியிலே ஆண் போல எல்லாம் செய்தாலும், குழந்தைக்கு அவள்தானே தாயாக நின்று வருடலைத் தர வேண்டியுள்ளது? இந்த வருடலும் அசைவும் அவளிடம் இருக்கிறது என்பதை உணராமலேயே, சமூகம், ஆண்போல அவளை பொருளீட்டும் உழைப்பில் சமம் ஆக்கும்போது, ஆக்கிரமித்துவிடுகிறதே! வேலைக்குச் செல்லும், உழைக்கும் பெண்ணின் தனித்துவமான சுயத்தை அழிப்பதல்லவா இது? இந்த வலியை ஓர் ஆணின் கவிதை எவ்வாறு பதிவு செய்யமுடியும்? இந்த வலியைக் கூட ஆரவாரத்துடன் முழக்கமிட முடியாதபடி இருக்கிறதே! கவிதைக்குள் பெண்ணின் குரல் என்பது பெண்ணுக்கான முழக்கத்தை முழங்குவது மட்டுமல்ல, பெண்ணின் வலியை, வேதனையுடன் அனுபவிப்பதும் கூடத்தான். "பெண்ணின் உளைச்சல்களை, ஆறாத ரணங்களை, குமுறல்களை, கொதிப்புகளை, எத்தனிப்புகளை வெடிப்புறப் பேசுகின்றன கல்பனாவின் கவிதைகள்" என்று எழுதும் பாரதிபுத்திரன், "கவிதைகள் விசேஷமான சொற்களைத் தேடிச் செல்லாமையும், வாசகர்களுடன் நேரடியாகப் பேசும் குரலும், கருத்துக்களைவிட மன உணர்வுகளுக்கே முதன்மை தருவதும் ஆரவாரமற்ற ஆழ்ந்த வெளிப்பாட்டின் கவனம் குவிப்பதும் இவருடைய பலங்கள்" என்று மதிப்பீடு செய்கிறார். கல்பனாவின் "உவர்க்களம்" என்னும் கவிதை, எவ்விதப் பாசாங்குமற்ற இயல்பான மொழி அசைவில் ஒரு கனமான அதிர்ச்சியான சோகத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. சோகத்தைச் சோகம் என்று பிரகடனப்படுத்துவது கூட, வலியை வலி என்று பிரகடனப்படுத்துவது கூட, இயலாதபடியாக அதிகாரத்திற்குள் ஆட்படுத்தப்படும் வேதனையைக் கவிதை வெளிப்படுத்துகிறது. தன் குழந்தைக்குத் தன் வருடலைக் கொடுக்கமுடியாத ஒரு தனியாளான தாயின் சோகம் மட்டுமல்ல, பெண் என்பவள் எத்தனை பரிமாணங்களில் மாறுதல்களை வளர்ச்சியை, சமப் பொறுப்புகளைச் சந்தித்தாலும் அவளுடைய பெண்ணியச் சுயத்தின் மீது அதிகாரம் ஏதோ ஒருவகையில் செலுத்தப்படும் கொடுமையையும் இக்கவிதை உள்ளீடாகப் பதிவு செய்கிறது.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link