ஆய்வுச் சிந்தனைகள்


நின்னைச் சரணடைந்தேன்

புத்தகங்களில் கெட்ட புத்தகம், நல்ல புத்தகம் என்ற பாகுபாடு இல்லை. நன்றாக எழுதப்பட்ட புத்தகம்; மோசமாக எழுதப்பட்ட புத்தகம் என்ற இருவகைதான் உண்டு என்கிறார் ஒரு பிரபல மேனாட்டு நாவலாசிரியர். எதை எழுதினாலும் நன்றாக எழுத வேண்டும் எழுதுகிறவன் எதைத் தன் உட்கருத்தில் வைத்துக்கொண்டு சொல்கிறானோ அதையே படிப்பவனும் உணர வேண்டும். வரும் கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் ஒவ்வொருவனுடைய கற்பனைக்குள்ளும் அடங்கி எங்கோ, எப்போதோ பார்த்திருக்கக்கூடிய நிகழ்ச்சிகள் போலத் தோன்ற வேண்டும். குணச்சித்திரங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இல்லாமலும் அச்சித்திரங்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளும், சம்பவங்களும் இருக்க வேண்டும். இவையெல்லாம்தான் நல்ல கதைக்குத் தேவையான அடிப்படை ஆதாரங்கள்.

ஒரு சிறுகதையில் ஒன்று அல்லது இரண்டு உள்ளங்களில் பிரதிபலிக்கும் உலகங்களைத்தான் காணமுடியும். ஆனால், பெருங்கதையில் பலவித குணங்களைக் காண முடியும். அன்பு, பக்தி, பாசம், குரோதம், பொறாமை என்ற பலவிதமான உணர்ச்சிகள் கதாபாத்திரம் மூலம் வந்து பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு ரூபமும் வெறும் நிழலாட்டமாக இல்லாமல், உள்ளத்தில் தேங்கி மனதைச் சுழற்றினால்தான் அந்தக் கதை வலுவடைகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, ஆயிரமாயிரம் சிறுகதைகளும், நூற்றுக்கணக்கான நாவல்களும் வெளிவந்திருக்கின்றன. நாவல் இலக்கியம் பல வகையில் புத்துயிர் பெற்றிருக்கிறது. எண்ணற்ற எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் பவனி வருகிறார்கள். இவை நாவல் உலகுக்கு மணிமகுடம் வைத்தாற்போல் அமைந்துள்ளன. இன்றைய நாவல் உலகில் பெண் எழுத்தாளர்களில் ஒருவராக இருப்பவர்தான் வித்யா சுப்ரமணியம் அவர்கள். அவர் எழுதிய நாவலில் நின்னைச் சரணடைந்தேன் என்ற நாவல் இங்குத் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வித்யா சுப்ரமணியம் இந்த நாவலை ஒரு குடும்ப நாவலாகச் சித்திரித்துள்ளார். ஒரு நடுத்தர வர்க்கத்தில் ஏற்படக்கூடிய யதார்த்தமான பிரச்சனைகளை நம் கண்முன்னே படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

சிவராஜனின் முதல் மனைவிக்குப் பிறந்தவள் வீணா; இரண்டாம் மனைவிக்குப் பிறந்தவள் காயத்ரி; சித்தி என்றாலே கொடுமைப்படுத்துபவள் என்ற எண்ணத்தில் வளர்க்கப்படுகிறாள் வீணா, இதனால் அவளுக்குச் சித்தியின் மீதும் தனது தங்கை காயத்ரியின் மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. இவர்களை வேதனைப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு காயத்ரி காதலிக்கும் ஷியாமை வீணா திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால் அவளுடைய ஆணவப் போக்கின் காரணமாய்த் திருமணம் விவகாரத்தில் வந்து நிற்கிறது. வீணாவின் முதலாளி ராமதாஸ் அவளைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான்.

காயத்ரி எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராது தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறாள். காயத்ரியை ஒருதலையாய்க் காதலிக்கும் கிரிதரையும்; ஷியாம் மனம் திருந்தி மறுபடியும் ஏற்க நினைக்கும் வேளையில்; காயத்ரி இவர்கள் இருவரையும் நிராகரித்து இறந்து போன தன் தோழி ஜோதியின் இரு குழந்தைகளுக்கு நல்ல தாய் வேண்டும் என்ற நோக்குடன் ஜோதியின் கணவன் வெங்கடேஷைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள். இதுதான் நின்னைச் சரணடைந்தேன் கதையின் சுருக்கம்.

சிவராஜனின் மனைவிக்கு வீணா பிறந்த ஆறாம் மாதம் புத்திசுவாதீனமில்லாமல் போய்க் கிணற்றில் குதித்து இறந்தவுடன் சிவராஜனின் மறுமணம் கஸ்தூரியுடன் நிச்சயிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் வீணாவின் தாய்வழித் தாத்தாவுக்குப் புத்தி வேறுவிதமாய் எண்ணத் தொடங்கியது. இரண்டாம் மனைவி வந்துவிட்டால் தன் பேத்தி சித்தி கொடுமைக்கு ஆளாகி பரிதவிக்குமோ என்ற நினைப்பே ஒரு குடும்பத்தினை அசைத்துப் பார்க்கும் ஆணிவேராக அமைகிறது. வீணாவின் பேருக்கு அனைத்துச் சொத்துக்களையும் எழுதி வைத்துச் சிவராஜனை "கார்டியன்" என்ற ஸ்தானத்தில் வைப்பது பிழைக்கு அஸ்திவாரமாக அமைகிறது.

எழுப்பப்படும் அஸ்திவாரம் சரியில்லாதபோது அதன் மீதும் எழும் கட்டடம் ஆட்டம் காண்பது இயல்பு அதன்படி குரோதம், பொறாமை, ஆணவம் என்ற அனைத்துக் கூடா இயல்புகளுக்கு மொத்த உருவமாக வீணாவின் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு வீணாவின் கதாபாத்திரம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்தக் கதையின் நாயகனாக வரும் ஷியாம் பிரஸாத்! தந்தையின் வளர்ப்பில் வளரும் ஷியாம். சிறுவயதில் பெற்றவளை இழந்தவன்; உடன்பிறப்பு எதுவும் இல்லாதவன். இந்தக் காரணத்தினாலேயே கட்டுப்பாடு என்ற வளையத்துக்குள் வராமல் வாழ்க்கையைப் பலவிதமாக அனுபவிக்கத் துடிக்கும் எண்ணம் இருப்பவனாகவும்; கற்பு என்பது இருபாலருக்கும் பொது என்ற கொள்கையில் உடன்பாடில்லாமல் இருப்பவனாகவும் ஷியாமின் குணநலனைச் சித்திரித்துள்ளார் ஆசிரியர்.

ஷியாமின் நண்பனாக வரும் கிரிதரன். நட்பு என்றால் எப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணத்திற்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளான். இதுபோன்ற பாத்திரங்கள் வாயிலாக வாழ்வியல் நிகழ்வுகளைத்தான் பாத்திரம் படைப்புகளாகக் கொண்டு வருகிறோம் என்று ஒவ்வொரு நாவலாசிரியர்களும் பெருமிதம் கொள்ளலாம். ஏனெனில் கிரிதரன் போன்ற நடுத்தரவர்க்கத்தில் உள்ளவர்களிடம் ஷியாம் போன்ற உயர் வகுப்புக் குடும்பத்தில் இருப்பவர் நட்பு பாராட்டுவது அந்த நட்பு நெருங்கிய நட்பு என்றும்; நட்பின் நலன்விழையும் சூழ்நிலைகளை உருவாக்கி அதை எளிமையாய்க் காட்டுவது ஆசிரியரின் சிறந்த எண்ணப் போக்குக்கு உதாரணமாய்க் கூறலாம். நட்புக்காக எதையும் இழக்கலாம் என்பது கிரிதரன் பாத்திரத்தின் வாயிலாக அறியப்படும் செய்தி.

கதையின் நாயகியாகக் காட்டப்படும் காயத்ரி! தன்னுடைய அக்கா வீணாவின் குரோத குணத்துக்கு அடி பணிந்து அல்லல்படும் தன் தாய், தந்தையை நல்ல நிலைக்குக் கொண்டு வந்து அன்பாய்; நேசமாய்க் கவனிக்கத் துடிக்கும் மனநிலையை நடுத்தரவர்க்கம் படும் அல்லல்களையும், எத்தனையோ துயரங்களுக்கு நடுவில் காயத்ரி தன் பட்டப்படிப்பை உதவித்தொகை பெற்று முடிப்பதும், இதர தொழில்நுட்ப அறிவினைப் பெறுவது; எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டால் எதையும் சாதிக்கமுடியும் என்ற கருத்தையும் வித்யா சுப்ரமணியம் காயத்ரியின் மூலம் வாசகர்களுக்கு உணர்த்துகிறார்.

வீணாவின் அலட்சியத்துக்கும், ஆணவத்துக்கும் முன் கம்பீரமாக வாழத் துடிக்கும் உணர்வுகள்; குமுறல்கள் இயல்பாக வெளிப்படுவதாக அமைந்துள்ளன. மேலும் தன்னம்பிக்கையும்; தன்மானமும் அமையப்பெற்ற ஒரு பெண்ணுடைய உணர்வுக் குமுறல்களை இந்தப் பாத்திரம் நிறைவு செய்கிறது.

வேலைக்குச் செல்லும் இடத்தில் தன்னுடைய முதலாளி ஷியாம் தன்னிடம் காட்டும் காதல் உண்மை என்ற உணர்வில் ஷியாமை உண்மையாகக் காதலித்தாலும், ஷியாம் ஏழையின் காதல் பணம் பார்த்துத்தான் வரும் என்று அவள் காதலை இழிவாக எண்ணி காயத்ரியின் அக்கா வீணாவின் அழகில் மயங்கி மணமுடித்துக் கொள்ளும் போதும் ஷியாம், வீணாவின் முன் பலவீனப்பட்டுப் போய் விடக்கூடாது என்று வைராக்கியமாய் ஒரு யோகியைப் போல் அடிமனதில் நீறுபூத்த நெருப்பாய்த் தன் துயரத்தை மறைத்து அந்தச் சாம்பல் கவிழ்ந்த தணலின் மீது ரோஜாக்களைக் கொட்டி மூடி வளைய வரும்போதும் ஒரு புதுமைப் பெண்ணாய் நம் கண்முன் தெரிகிறாள்.

இதுபோல் பல கதாபாத்திரங்கள்; ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாய்க் காணப்படுகின்றன. அதில் தோழியாக வரும் ஜோதியின் மூலம் எந்தச் சூழ்நிலையிலும் தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்து வாழ வேண்டும் என்ற உணர்வு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வீணா பணிபுரியும் நிறுவனத்தின் பங்குதாரனாக வரும் ராமதாஸ் வீணாவை எப்படியாவது அடையத் துடிப்பது - ஒரு கெட்ட உருவகத்துக்கு ராமதாஸின் பாத்திரம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கெட்ட எண்ணம் உண்டானால் எப்பொழுதும் வெற்றி பெற முடியாது என்பதை ஆசிரியர் ராமதாஸ் மூலம் நன்கு உணர்த்தியுள்ளார். வீணாவை அடையத் துடித்து அவளுக்கும் ஷியாமுக்கும் இடையே பிரிவினை ஏற்படுத்தி வீணாவைத் தன் வலைக்குள் சிக்க வைக்கும் ராமதாஸின் குறுக்குப் புத்தி ஒரு ஆண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. முடிவில் ராமதாஸின் கெட்ட எண்ணத்தைப் புரிந்து கொண்டு ஷியாமுடன் இணைகிறாள் வீணா.

வீணா காயத்ரியைப் பழிவாங்கும் நோக்கோடு ஷியாமை மணந்தாலும் அவளின் ஆணவப் போக்கால் தம்பதியர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுத் திருமணம் விவாகரத்து வரை வருகிறது. இந்தச் சூழ்நிலையில் காயத்ரியை ஷியாம் மணம் செய்ய நினைப்பதும்; ஷியாம் காயத்ரியைத் திரும்ப ஏற்றுக்கொள்ள நினைப்பதும் தெரிந்து காயத்ரி மீது உள்ள தன் ஒருதலைக் காதலைக் கிரிதரன் துறக்கிறான். ஒரு காலக்கட்டத்தில் வீணா திருந்தி மனம்மாறி வரும்போது அவளைத் தன் குழந்தைக்காக ஷியாம் ஏற்றுக் கொள்கிறான். கிரிதரனைக் காயத்ரிக்கு மணமுடிக்க சிவராஜன் நினைக்கும்போது காயத்ரி அந்த எண்ணத்தை நிராகரிக்கிறாள்.

தன்னுடைய தோழி ஜோதி மரணமடைந்ததும் அவளுடைய இரு குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாய் தேவை என்றும் ஜோதியின் கணவன் வெங்கடேசைத் திருமணம் செய்யப் போவதாகவும் முன் முடிவைக் கூறுவதாய் இந்தக் கதை நிறைவடைகிறது.

எந்த ஒரு கதாபாத்திரத்தின் முடிவுக்கும் ஒரு நியாயம் (Poetic Justice) இருக்க வேண்டும். அதுவே நன்றாக எழுதப்பட்ட புத்தகம் என்ற அங்கீகாரத்தைப் பெறுகிறது. அதுபோல காயத்ரியின் முடிவிலும் நியாயம் இருப்பதால் நாவல் நிறைவு பெறுகிறது.

ஆசிரியர் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். கதைக்குத் தொடர்பில்லாத திடீர் திருப்பங்களை உண்டாக்கி, வாசகர்களின் உள்ளங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் நோக்கோடு கதையைப் பின்னவில்லை.

இந்தக் கதையில் தோன்றும் குணச்சித்திரங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இல்லாமலும், அந்தப் பாத்திரங்களுக்கு ஏற்ற நிகழ்வுகளுடனும் இடம் பெற்றுள்ளன. சொல்லப்போனால் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு வளையம். அவை பல வளையங்களாகி ஒரு சங்கிலியாக இணைந்து கதை முடிவடைகின்ற இவையெல்லாம் ஒரு நல்ல கதைக்குத் தேவையான அடிப்படை ஆதாரங்கள். இதனை "நின்னைச் சரணடைந்தேன்" என்ற புதினத்தின் வாயிலாக வித்யா சுப்ரமணியம் நிறைவு செய்துள்ளார்.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link