ஆய்வுச் சிந்தனைகள்


தேம்பாவணி உணர்த்தும் அறத்தின் மாண்பு

நில்லாவுலகில் நிலையற்ற மனிதன் நிலையான பேரின்ப வீட்டினைப் பெற அறங்கள் புரிதல் வேண்டும் என்று இலக்கியங்கள் பல எடுத்தியம்புகின்றன. அவற்றுள் தேம்பாவணியும் தனித்ததோர் இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. தத்துவப் போதக சுவாமி, தைரியநாத சுவாமி என்றெல்லாம் அழைக்கப்படும் வீரமாமுனிவர் தமிழ், இலத்தீன், பாரசீக மொழிகள் ஆகியவற்றில் புலமை மிக்கவர். பன்மொழிப் புலவரும், ஐரோப்பிய உரோமன் கத்தோலிக்க மதக்குருவுமாகிய இவர் கிறித்துவ மதத்தைப் போதிக்கத் தமிழை நன்கு கற்று எண்ணற்ற தமிழ் இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவர் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய வளனாரின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் "தேம்பாவணி"க் காப்பியத்தைக் காப்பிய மரபு குன்றாமல் தமிழில் படைத்துள்ளார். "தேன் சொட்டும் தேம்பாவணி", "தேன் போன்ற பாக்களால் ஆன மாலை" என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் இக்காப்பியத்தில் அறன் வலியுறுத்தப்படும் பாங்கினை ஆய்வது இவண் நோக்கமாகிறது.

அறன் வலியுறுத்தல்:-

இறை துணை என்றும் வேண்டின் அறம் செய்க, என்னும் கருத்தினைக் காப்பியத்தின் பல இடங்களில் ஆசிரியர் சுட்டிச் செல்கிறார். அறத்தின் இன்றியமையாமையினை உணர்த்தும் நோக்கில் காப்பியத்தின் பாயிரத்திலேயே "அறம் முதல் விளங்கச் சொல்வோம்" - (பாயிரம் - 1) எனக் குறிப்பிடுகின்றார். அறம் இன்பத்தைத் தரும். இன்னல்களையும் இடையூறுகளையும் வெல்லும் ஆற்றலைத் தரும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி உயர் குறிக்கோளை நாடவைக்கும். இத்தகு அறத்தினைக் காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும் என அற இலக்கியங்கள் வலியுறுத்துவதனை,

"இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம் என்றுஎண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்" - (நாலடியார் - 36)

என்பதாலும், "அறத்தான் வருவதே இன்பம்" - (திருக்குறள் - 39), அன்றறிவாம் என்னாது அறம் செய்க (மேலது 36) என்பதாலும் உணரலாம். வீரமாமுனிவரும் அறத்தின் மாண்பினையும், அது தரும் பயனையும் புலப்படுத்தி அறத்தை வலியுறுத்துகின்றார்.

வளனைப் பெற்றெடுத்த தாய், "கற்றோர் அருந்தொடைப்பா ஓசைமிக்க அறத்தொகையின் பீடத்து உயர் வளர்க" (வளன் சனித்த படலம் - 55) என்று வாழ்த்தி, "இத்தோன்றல் அறத்து அல்லின் வேந்தன் என வளர்வதற்கு ஆசியருள்க" (மேலது - 56) என்று இறைவன்தாள் பணிந்தாள் என்றும், "ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பாவணியாவான்" (மேலது - 57) என வானவன் ஆசி வழங்கினான் என்றும் வீரமாமுனிவர் கூறுவதன் வழி மக்கள் அறவாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது விருப்பத்தினை அறியலாம்.

அறத்தின் மாண்பு:-

அறத்தின் மாட்சியிணையும், அறம் செய்வதின் பயனையும், அறநெறி நடப்பதன் பலனையும் தேம்பாவணிக் காப்பியம் தெளிவாக விளக்கி நிற்றலைக் காணலாம். சிறுவனாகிய வளனுக்கு, வானவர், "முடியின் ஒப்பு எனச் சூட்டினார் அறம்" (பாலமாட்சிப் படலம் - 2) என்றும், "அறத்துணை பெற்றால் பெற்றது அழிவுண்டோ" (காசை சேர் படலம் - 25) எனவே குற்றமற்ற உணர்வு என்னும் ஏரினைக் கொண்டு,

"மண் தக உழுது சீலம் மலியறம் வித்தியாரும் விண்தக வீட்டின் ஆக்கம் விளைவது பேணல் நன்றே" (ஞாபகப் படலம் - 10) என்றும் கூறி வீடுபேறுலகத்தைத் தரும் அறம் நாடுக எனத் தூண்டுகின்றார்.

அறத்தின் வழி நடக்கின்றவருக்கு எத்தகு தீங்கும் வராது. அவர்கள் நஞ்சினையே உண்டாலும் அது சாவா மருந்தாகிய அமுதமாக மாறிவிடும். மாறாக அந்நெறி பிறழ்ந்து வாழ்ந்தால் அமுதமும் நஞ்சாய் மாறி உயிர் வவ்வும் என்பதனை,

"அண்டமீ வரை நெற்றியிற் பனியிலை அறமே
மண்ட வாழ்பவர் மருள ஓர்கேடிலை அன்னார்
உண்ட நஞ்சும் அவ்வுயிர்க்கு அமுதாகி மற்றும் அமிர்தம்
கொண்ட தீயவர்க்கு அஃதுயிர் கொலும் விடமாம் ஆல்" (வேதக்கெழுமைப் படலம் - 100)

என விளக்குகின்றது தேம்பாவணி.

மேலும் மின்னல் போன்று கணப்பொழுதில் ஒளி தந்து அழிந்து போவது போன்ற செல்வத்தினால் கிடைக்கும் புகழை வெறுத்து, "அறம் கொண்டு நின்றியேல் நின் நிழல் என இறைவன் நீங்கிலாது இன்னிழல் இயற்றி நீ இனிதில் வாழ்க" (மேலது - 123) எனவும்,

"பொய் மறந்து இன்னா தெல்லாம் போக்கி நல்லறமே பூண்டு
மைமறம் தவிர்ந்தீராகில் வானின் மேற்குலமாய் வாழ்வீர்" (மீட்சிப் படலம் - 137)

எனவும் அறத்தின் மாண்புதனைத் தேம்பாவணிக் காப்பியம் தௌவுபடுத்துகின்றது.

தொகுப்புரை:-

அறத்தை வலியுறுத்துவதும் காப்பியத்தின் நோக்கமாகிறது. அதனால் அறத்தின் மாண்பு காப்பியம் முழுவதும் பலவாறாகப் புலப்படுத்தப்படுகிறது. அறத்தின் வழி நடப்போருக்கு இறைவனோடு உறவாடும் வானுலகப் பேரின்பம் கிட்டும். எனவே இறை துணை வேண்டின் அறம் செய்க. அதுவும் இன்றே செய்க என வலியுறுத்தப்படுகின்றது.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link