ஆய்வுச் சிந்தனைகள்


பல்லியல் கவிஞர் மோட்சக்கண் அவர்களின் வாழ்வும்...

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்தவர் பல்லியல் கவிஞர் மோட்சக்கண். இவர் தமிழகத்தின் தென்கோடியிலுள்ள குமரி மாவட்டம் மேலச்சந்தையடி என்னும் ஊரில் சாலமோன் ஐயருக்கும் கன்னிமரியம்மைக்கும் மகனாக 22.2.1899 ஆண்டு தோன்றினார். இவரைப் போன்றே இவருடைய தந்தையாரும் கல்வியறிவு பெற்றுப் பல்துறை அறிவுடையவராகத் திகழ்ந்தார். வேதசிந்தாமணி, பிராணநாதர், தியாகமாலை, அஸ்தான் அரசாணிமாலை, பிரசங்கப் பொக்கிஷம் போன்ற நூற்களை எழுதியுள்ளார். "புலி எட்டடிப் பாய்ந்தால் புலிக்குட்டி பதினாறு அடி பாயும் என்பர்" அதைப் போன்றே இவரும் தந்தையைவிடச் சிறந்த புலவராகத் திகழ்ந்தார். இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும் ஆற்றல் வாய்ந்தவர். ஆசிரியர் பயிற்சியும் இசைப் பயிற்சியும் மிக்கவர். இவர் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆசிரியராகப் பணி ஆற்றியுள்ளார். இவர் சிறந்த இசைமேதையாகவும் வயலின் வித்தகராகவும் செயல்பட்டவர். இவர் இயற்றிய தனிப்பாடல்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவையாகும். அவையனைத்தும் இறைவழிபாட்டிலும் சமயச்சடங்குகளிலும் பாடப்பட்டு வருகின்றன. கதாப்பிரசங்கம் நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். இராமகிருஷ்ண பரமஹம்ச சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க "மஞ்சமுனிவன்" சரிதத்தை நடத்தி அனைவரின் பாராட்டையும் சொந்தமாக்கிக் கொண்டவர். இவருடைய கதாகாலட்சேபங்களில் யோனா, நாகமான், எலியா, கிறிஸ்து பிறப்பு, நல்ல சமாரியன், தாலந்தின் உவமை, மனந்திருந்திய மைந்தன் போன்றவை அதிக அளவில் மக்களின் வரவேற்பைப் பெற்றவையாகும். அத்தகைய இவரது படைப்புகள் ஆராயப்படுகின்றன.

படைப்புகள்:-

சங்க காலத்திற்குப் பின் அறநூல்களும், காப்பியங்களும், பக்தி இலக்கியங்களும் தமிழின் சிறப்பைப் பறைசாற்றுகின்றன. இவ்வரிசையில் குறிப்பிடத்தக்கவை சிற்றிலக்கியங்களாகும். இவரது படைப்புகளில் பலவும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தவையாகும். வேத இருசொல் அலங்காரம், வேத முப்பொருள் விளக்கு, வேதவிடுகதா மஞ்சரி, அற்புதக்கோவை, உன்னதன் உபயோசித்த உவமானங்கள், சிலுவைநாதர் திருச்சரிதம், சிலுவைத் திருமொழிப்பதிகம், சிலுவைத் திருமொழி விளக்கம், சிலுவைக்கொலு, கொள்கை பேத விளக்கம், பரிசுத்த பவுலின் பிரயாணங்கள், கிறிஸ்தவதாரக்கும்மி, கண்டிடுவீர் கண்ணி கண்டிடுவீர் (கும்மி), மறுஜென்மக் கும்மி, ஞானப்பிள்ளைக் கும்மி, திருச்சபைக்கனி மரம் (கும்மி), கிரே பிரசங்கம் (கும்மி), வெறுப்பாம் நெருப்பு (அந்தாதி) ஆகிய பதினெட்டும் குறிப்பிடத்தக்கவையாகும்.

சிற்றிலக்கியங்கள்:-

தமிழில் சிற்றிலக்கியங்களை பிரபந்தங்கள் என்று வழங்கப்படுகின்றன. பன்னிருபாட்டியல் அறுபத்திரண்டாகவும், வெண்பாப் பாட்டியல் ஐம்பத்தைந்து எனவும், நவநீதப் பாட்டியல் ஐம்பத்து மூன்றாகவும், சிதம்பரப் பாட்டியல் அறுபத்துமூன்று எனவும், முத்து விரியப்பாட்டியல் தொண்ணூறாகவும், பிரபந்தத் தீபிகை, பிரபந்த மரபியல், சதுரகராதி, தொன்னூல் விளக்கம் முதலியவை தொண்ணூற்றாறு என்றும் குறிப்பிடுகின்றன (தமிழண்ணல்: 215). ஆய்வாளர்கள் கருத்துப்படி இவை முன்னூறுக்கும் மேற்பட்டவையாகும் (மு. சண்முகம் : 4) சங்க காலத்தில் தோன்றிய இத்தகைய இலக்கிய வடிவங்கள் பக்தி இலக்கியக் காலத்தில் வளர்ச்சியடைந்து ஐரோப்பியர் வருகைக்குபின் அதிகரித்தன. சிற்றிலக்கிய வளர்ச்சியில் கிறிஸ்தவர்களின் பங்கு குறிப்பிடத் தக்கவையாகும்.

கவிதைக்கு உயிர்நாடி உணர்ச்சிப்பெருக்கு என்பர். கிறிஸ்தவச் சிற்றிலக்கியங்கள் உணர்ச்சிப் பிரவாகத்தால் தோன்றியவையாகும். பக்தியில் திளைத்த கிறிஸ்தவக் கவிஞர்கள் தெவிட்டாத தெள்ளமுதாம் இயேசு பெருமானைக் கண்ட கோலத்தின் வடிவங்களாக இச்சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றன (கிரெஸ் செல்வராஜ் : 63). மோட்சக்கண்ணின் படைப்புகளில் அற்புதக்கோவை, வெறுப்பாம் நெருப்பு அந்தாதி, வேதவிடுகதா மஞ்சரி போன்றவை பக்தி உணர்வுமிக்க, இலக்கிய நயமிக்கப் படைப்புகளாகும்.

அற்புதக்கோவை:-

களவு, கற்பு போன்ற அகத்திணை ஒழுக்கத்திணை நானூறு கட்டளைக் கலித்துறை, அகப்பாட்டு உறுப்புகளால் பாடப்படுவதைக் கோவை என்பர். இதனின்று வேறுபட்டு, இறையுணர்வு மிக்கதாக இவரது அற்புதக்கோவை இடம்பெறுகிறது. இயேசுநாதர் செய்த முதல் அற்புதக்கதை,

"கானா மண வீட்டிலாறு
கற்சாடி நின்ற நீரை
தேனார் மதுர சமாக்கியது
சீரார் முதலற் புதமாம்"

எனவரும் பாடலிலிருந்து அறியமுடிகிறது.

வேதவிடுகதா மஞ்சரி:-

மஞ்சரி என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று (Tamil lexcim V. 3009.) மதக்களிற்றை அடக்கியவரைப் பாடுதலைப் பிரபந்தத் தீபிகை, முத்து வீரியம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்றவை குறிப்பிடுகின்றன (முத்துச் சண்முகம்: 28). இவரது விடுகதா மஞ்சரி நூற்றியொரு விடுகதைகளை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு விடுகதையும் செய்யுள் நடையில் சொற்சுருக்கத்துடன் அமைந்து படிப்பவரின் சிந்தனைத்திறனை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இதனை,

"ஆடு மலை ஆடு
ஐயன் பார்த்த ஆடு
கோடு கிளை யூடு
கொண்ட தெவர்க்கீடு?"

எனவரும் பாடலிலிருந்து அறிய முடிகிறது.

வெறுப்பாம் நெருப்பு (அந்தாதி):-

அந்தாதி என்பது ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றுள் ஒன்று அதற்கடுத்த பாடலோடு ஒன்றி வருமாறு பாடப்படுவதாகும். இயேசுபெருமானுக்கும் சீயோன் குமாரத்திக்கும் இடையே தோன்றிய காதலை "ஞான அந்தாதி" குறிப்பிடுவதைப் போன்று வெறுப்பாம் நெருப்பு அந்தாதியும் கிறிஸ்தவ இறையியலைத் தெளிவுபடுத்துகிறது. இதனை,

"சின்ன வெறுப்பாம் நெருப்பு
சிந்தையில் புகுந்துவிட்டால்
மன்னிப்பெனும் நீராவதை
மாய்த்திடில் பிழைப்பாயப்பா",

எனவும்,

"மாய்த்திடாது உன்னி ஊதின்
மருவும் குறைக் கந்தை சேர
பேய்த் தனமாம் பகைப் புகைகள்
பிற உட்பகை வளரும்"

எனவும் வரும் பாடல்களால் அறிய முடிகின்றது.

சிலுவைத் திருமொழிப்பதிகம்:-

தெய்வத்தைப் பற்றிப் பத்துச் செய்யுட்களால் பாடப்படும் பிரபந்தம் "பதிகம்" ஆகும். காரைக்காலம்மையாரின் மூத்தத் திருப்பதிகங்கள் ஒவ்வொன்றும் பதினொரு பாடல்களைக் கொண்டதாகும். பத்து அல்லது அதற்குக் குறைவாகவும் அல்லது சிறிது கூடுதலாக வந்தாலும் அவை பதிகம் எனப்படும். "சிலுவைத் திருமொழிப்பதிகம்" என்னும் இந்நூல் சிலுவைப் பொன்மொழிகள் ஏழினையும் குறித்துப் பாடப்பட்டவையாகும். இறையாற்றலை,

"அன்புருவாய நேயன் அம்புலி தாழ்வில் வாழ்வு
நன்குறும் நாட்ட மூட்ட நண்பினில் இன்பமுன்ன
வன்குரு சின்னல் தன்னில் மாண்புறும் ஞானவாணன்
பொன்னடிப் பாலே நூலைப் போற்றியே சான்றினேனே"

என வரும் பாடலடிகள் தெரிவிக்கின்றன.

கும்மி:-

நாட்டுப்புற ஆட்டப் பாடல்களின் வகையைச் சார்ந்தவை கும்மிப் பாடல்களாகும். சமுதாய சமயச் செய்திகள் அடங்கியதாக இப்பாடல்கள் அமைகின்றன. பெண்கள் கைகொட்டிப் பாடும்போது பயன்படுத்தும் பாட்டைக் கும்மிப்பாட்டு என்று குறிப்பிடுகின்றனர் (சண்முக சுந்தரம்: 213).

கும்மிப்பாடல்களில் ஈற்றில் கும்மியடியுங்கடி, வாருங்கடி, பாருங்கடி போன்ற தொடர்களில் ஏதாவதொன்று இடம் பெறுவதுண்டு, சாஸ்திரியாரின் பாடல்களில் கேளடி, பாரடி, பாடடி, சொல்லடி ஞானப் பெண்ணே போன்ற தொடர்களும் இடம்பெறுகின்றன (ஏ. பாக்கியமணி: 154). இவரது கும்மிப் பாடல்களில் இத்தகைய சொற்கள் இடம்பெறவில்லை. ஞானப்பிள்ளைக் கும்மியின் ஒவ்வொரு பாடலின் இறுதியும் "ஞானப்பிள்ளையாய்" என்று முடிவடைகிறது.

இவரது கும்மிப்பாடல்கள் உலகம் யாவையும் படைத்த தந்தையையும், பாவத்தினின்று மீட்ட குமாரனையும், ஞானவரமளிக்கும் தூயாவியையும் இணைத்துக் கூறுகின்றன. உலகவாழ்வுக்குப் பின் மீண்டும் மறுமை வாழ்வு உண்டு என்பது கிறிஸ்துவ நம்பிக்கையாகும். அவர்கள் மறுமை வாழ்வு பெற நற்பண்பு உடையவர்களாக வாழ வேண்டும் என்பதை,

"கேடுறு மாந்தரைக் கேண்மையினாண்டவர்
வீடுறு மேன்மையில் மேவிக்கவே
ஈடுறும் கிருபை எழிலுடன் படிக்கையை
பாடுற ஆற்றினர் நீடிடவே"

என்று "மறுஜென்மக்கும்மி" குறிப்பிடுகிறது.

தனித்தன்மை:-

கிறிஸ்தவத் திருமறையின் பழைய ஏற்பாட்டில் இடம்பெறும் நாயகன், நாயகி பாவமரபு புதிய ஏற்பாட்டிலும் தொடர்ந்து இடம் பெறுகிறது. புதிய ஏற்பாடு கிறிஸ்துவப் பெருமானைக் காதலனாகவும், திருச்சபையைக் காதலியாகவும் உருவகப்படுத்துகிறது. திருமறைச் சார்ந்து எழுதப்படும் கிறிஸ்தவக் கவிதைகளிலும் இம்மரபு வலுப்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது (த. இயேசுதாஸ்: 4). மோட்சக்கண் அவர்களின் படைப்புகளில் உவமை, உருவகம், தொடை நயம், அணி, கற்பனை, ஓசை, மெய்ப்பாடு போன்றவையும் சிறப்பாக இடம் பெறுகின்றன. தந்தையின் முகம் மறைந்ததால் குமாரன் கலங்குகின்ற நிலையை மிகவும் சிறப்பாக உருவகித்துள்ளார். இவ்வாறு இலக்கியநயமிக்கச் செய்திகள் பல காணப்படுகின்றன.

பல்லியல் கவிஞர் மோட்சக்கண் அவர்கள் திருமறையின் கருத்துக்கள் முழுவதையும் கவிதையாக்கியுள்ளார். இவரது படைப்புகளில் உலகின் படைப்பு முதல் உலகின் முடிவு வரையுள்ள செய்திகளும் இடம் பெற்றுள்ளன. தவறிழைத்த மனிதர்கள் திருந்தி விண்ணுலக வாழ்வை அடைவதற்கான நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. இவரது தனிப்பாடல்களும் காலட்சேபங்களும் இன்றும் தொழுகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மரபுவழிப்பட்ட இவரது படைப்புகளில் காணப்படும் செய்திகள் விரிவான ஆய்வுக்குட்பட்டவையாகும்.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link