ஆய்வுச் சிந்தனைகள்


நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் சிற்றிலக்கிய வகைகள்

தொல்காப்பியர் காலத்தில் வித்திட்ட இலக்கியக் கூறுகள் சங்க காலத்தில் துளிர்விட்டன. பக்தி இயக்கக் காலத்தில் சைவ வைணவ இலக்கியங்களாகத் திருமுறைகளும் ஆழ்வார் - பாசுரங்களும் தோன்றின. இலக்கியங்களுள் இலக்கியமாகப் பல இலக்கியங்கள் அரும்பின. அவ்வகையில் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் தவ்விய பிரபந்தங்களில் அமைந்துள்ள சிற்றிலக்கிய வகைகளை எடுத்துக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.

நாலாயிரத் திவ்விய பிரபந்தத்துள் பொருள், யாப்பு, எண்ணலங்கார அடிப்படையில் இலக்கியங்கள் பல அமைந்துள்ளன.

1. பொருள் - அடிப்படையில் இலக்கியங்கள் - பல்லாண்டு பள்ளியெழுச்சி, பாவை, மடல் (பெரிய திருமடல் - சிறிய திருமடல்) ஆகியன.
2. யாப்பு அடிப்படை இலக்கியங்கள் - அந்தாதி, திருவாசிரியம், திருவித்தம் தாண்டகம் என்பன.
3. எண்ணலங்காரம் - திருவெழுகூற்றிருக்கை

எனும் பகுப்பில் முழுமையான இலக்கியங்களும் இவையல்லாத இலக்கியக்கூறுகள் பலவும் காணக்கிடைக்கின்றன.

பல்லாண்டு:-

தொல்காப்பியம் வாழ்த்தியல் வகைகளைப் பேசுகிறது.

"வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்"

என்று புறநிலை வாழ்த்துக் கூறுகிறது.

சங்க நூல் புறநானூறும் அரசர்களை,

"கொண்டால் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே"

"நீலமணிமிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும நீயே"

என்ற தொடர்களால் வாழ்த்துவதைக் காணலாம்.

இறைவனுக்குப் பல்லாண்டு பாடும் மரபு இருந்தமையைப்

"பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறுபக்தர்கள்"

"நாமகளோடும் பல்லாண்டு இசைமின்"

என்ற தொடர்களால் வாழ்த்துதல் பொருளில் இசைப்பாடல்கள் இருப்பதை அறியலாம்.

பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு 12 பாசுரங்கள் கொண்டது. முதற்பாசுரம் இரண்டடிகளாகவும் ஏனைய 11 பாசுரங்கள் 4 அடிகளாகவும் விளங்குபவை. "பல்லாண்டு" என்று தொடங்கி "ஏத்துவன் பல்லாண்டே" என முடிவதுடன் பாடல்கள்தோறும் "பல்லாண்டு" என்ற சொல் இடம் பெறுகிறது. கடவுள் வாழ்த்தே பின்னர்ப் "பல்லாண்டு" எனும் இலக்கியமாக மிளிர்கிறது.

பள்ளியெழுச்சி:-

திருவரங்கப் பெருமானைத் துயில் உணர்த்தும் வகையில் தொண்டரடிப் பெரியாழ்வார் பாடியது. அரசன் துயில் எழுகையில் அவனைப் புகழ்ந்து பாடும் பாட்டாகிய துயிலெடை நிலையே பக்திக் காலத்தில் கடவுளைத் துயில் எழுப்புவதாக மாற்றம் பெற்றுத் "திருப்பள்ளியெழுச்சி" என்ற பெயருடன் திகழ்ந்தது. இக்காலகட்டத்தில் இறைவனுக்கு முதன்மை தந்து பள்ளியெழுச்சிப் பாடியவர்கள் மாணிக்கவாசகரும் தொண்டரடிப் பொடியாழ்வாருமாவார்.

தம்முள் அளவொத்து, நான்கடிகளால் ஆன எண்சீர் விருத்தங்களுடன் பத்துப்பாடல்கள் கொண்டது. பாடல்தோறும் (அரங்கத்தம்மா/அரங்கா/எம்பெருமானே) "பள்ளியெழுந்தருளாயே" என்ற இறுதிகொண்டு முடிகிறது. காலை இயற்கை வருணனை, இறைவனின் அருட்செயல், அடியவர் வரவு, தலைவன் பெருமை என்பன பாடுபொருளாகப் பாடல்களில் திகழ்கின்றன.

பாவை:-

மார்கழித்திங்களில் கன்னிப் பெண்கள் கண்ணனை அடையும் பொருட்டு நோன்பு நோற்பதனை மையமாகக் கொண்டது. மழை பெய்ய வேண்டும் என்ற பொதுநலமும், கண்ணனை அடைதல்வேண்டும் என்ற தன்னலநோக்கமும் கொண்ட பாடல்கள். முப்பது பாசுரங்களும் "ஏலோரெம்பாவாய்" என்று முடிகின்றன. ஒருவரையொருவர் துயில் எழுப்புதல், மார்கழி நீராடல், மார்கழி நோன்பு, திருமால்பெருமை, ஆயர் வாழ்க்கை ஆகியன பாடுபொருள்களாக அமைகின்றன.

மடல்:-

தமிழ் அக இலக்கியங்களில் "மடல்" ஒரு துறையாக இருப்பினும் பக்திக் காலத்தில் தனி இலக்கிய வகையாக வளர்ந்தது. திருமங்கையாழ்வார் பாடிய "சிறிய திருமடல்", "பெரிய திருமடல்" ஆகிய இரண்டும் மடல் இலக்கியங்களில் முதல் நூல்களாக அமைகின்றன. அக இலக்கியங்களில் தலைவன் தலைவியை அடையும் பொருட்டு மடலேறுவதாகக் கூறுவான். மடலூர்தல் என்பது இழிந்த ஒன்றாகக் கருதப்பட்டது.

தலைவியை அடையும்பொருட்டுத் தலைவன் மடலேறினான் என்று கலித்தொகைப் பாடல்கள் பாடுகின்றன. மகளிர் மடலேறுதல் இல்லை என்பதனைக்,

"கடலன்ன காம முழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்"

எனும் குறள் சுட்டுகிறது.

தலைவியை அடைதற் பொருட்டுத் தலைவன் மடலேறலாம் என்ற பழம்மரபுக்கு மாறாகத் திருமால் மீது மையல் கொண்ட தலைவி, அவனை அடையமுடியாத நிலையில் மடேலறத் துணிந்ததாக இரு மடல்களிலும் திருமங்கையாழ்வார் கூறுகிறார். தலைவி கூற்றாக,

"அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டறிவதுண்டு,
அதனை யாம் தெளியோம்"

என்று பெரிய திருமடல் பாடுகிறது.

பன்னிரு பாட்டியல் இலக்கண நூலும்:-

"மடன்மாப் பெண்டிர் ஏறார்; ஏறுவர்
கடவுளர் தலைவராய் வருங்காலே"

என்று இலக்கணம் கூறுகிறது.

"மகளிர் மடலேறார்" என்ற மரபுமீறி தலைவியொருத்தி மடலேறப் போவதாகக் கூறுவது புதிய மரபாகும். இரு திருமடல்களும் கலிவெண்பா யாப்பில் அமைந்துள்ளன. பாட்டுடைத் தலைவனது இயற்பெயருக்கு ஏற்ப நூல் முழுவதும் ஒரே எதுகை வரப் பாடியுள்ளார்.

மாலை:-

ஒரு பொருள் குறித்துப் பல செய்யுள் பாடுவது "மாலை" இலக்கியமாகும். தொண்டரடிப் பெரியாழ்வார் பாடிய திருமாலை 45 பாசுரங்கள் கொண்டது. "திருமாலை யறியாதவன் பெருமானை யறியான்" என்ற பழமொழியால் மாலை இலக்கியத்தின் சிறப்பினை அறியலாம்.

இறைவனின் திருநாமப்பெருமை, திருவரங்கச் சிறப்பு, மேனி எழில், யோகநிலை ஆகியன பாடுபொருளாக மாலையில் அமைந்துள்ளன. பிரபந்தங்களின் பதிகங்களின் ஈற்றில் மாலை என்று குறிக்கப்பெறுவதால் ஆழ்வார பாசுரங்கள் "செய்ய தமிழ்மாலைகள்" என்று போற்றப்படுகின்றன. வைணவர்கள் உரைநடையில் அமைந்த நூல்களையும் மாலை என்று சிறப்புடன் கூறுவர்.

யாப்பு அடிப்படை:-

அந்தாதி:

திவ்விய பிரபந்தத்தில் அந்தாதி இலக்கியங்கள் மிகுதியும் உள்ளன. திருவாய்மொழி என்னும் ஒரு நூலில் 1000-க்கும் மேற்பட்ட பாடல்கள் அந்தாதியாகப் பாடியுள்ளார் நம்மாழ்வார். வைணவ அந்தாதிகள் பல தோன்றியுள்ளன.

திருவாசிரியம்:

ஆசிரிய யாப்பினால் பாடப்பெற்று, அவ் யாப்பினாலே பெயர் பெற்ற முதல் நூல் திருவாசிரியம் - ஆசிரியர் நம்மாழ்வார்.

திருவிருத்தம்:

கட்டளைக் கலித்துறையால் ஆனது. ஆசிரியர் மேலவரே.

தாண்டகம்:

திருமங்கையாழ்வார் பாடிய திருத்தாண்டகங்கள் பாவின் சிறுமை, பெருமை கருதி குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம் என்று பெயர்பெற்று விளங்குகின்றன. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் இருபது கொண்டது குறுந்தாண்டகம்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் முப்பது உடையது - நெடுந்தாண்டகம்.

திருநாவுக்கரசர் தாண்டக யாப்பில் பாடல்களைப் பாடுவதில் சிறப்பானவர் என்பதால் "தாண்டகவேந்தர்" என்றே போற்றப்படுகிறார்.

எண்ணலங்காரம்:-

எழுகூற்றிருக்கை:

எண்ணுப் பெயர்களைச் சுவைபட அடுக்கிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்களைப் பின்பற்றி எண்ணலங்காரமாகத் திருமங்கையாழ்வார் "எழுகூற்றிருக்கை" பாடியுள்ளார். 46 அடிகள் கொண்டது. எண் 1 முதல் 7 எண் வரை ஒவ்வொரு எண் உடன்சேர ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் பாடல் அமைகிறது.

பிரபஞ்சப் படைப்பு, பிரம்மாவின் தோற்றம், நீலவண்ணனின் தசாவதாரங்கள் ஆகியன கூறும் வகையில் ஒன்று முதல் ஏழு எண்கள் ஏறு/இறங்கு நிலையில் பாடப்பட்டுள்ளன.

பொருள், யாப்பு, எண் எனும் பகுப்பில் அமைந்துள்ள இலக்கிய வகை நூல்களன்றி, பல்வேறு இலக்கிய வகைகளுக்கான கூறுகளையும் திவ்விய பிரபந்தத்தில் காணமுடிகின்றது. அவை தாலாட்டு, பிள்ளைத் தமிழ், தூது, உலா, குறம், ஊடல், புலம்பல், சாழல், பூசல் முதலான சிற்றிலக்கியக் கூறுகளாகும்.

தொல்காப்பியத்தில் வித்திட்ட இலக்கியக் கூறுகள் பக்தி இயக்கக் காலத்தில் பல்வேறு இலக்கிய வகைகளாகப் பரிணமித்தன - பரிணாமடைந்தன.

நன்றி: ஆய்வுக்கோவை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link