ஆய்வுச் சிந்தனைகள்


புதிய ஏற்பாட்டில் அத்வைதச் சிந்தனைகள்

மதத்தின் பெயரால் மக்களைச் சுயாதீனமிழக்கச் செய்து அவர்களின் பலவீனங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களைச் சுரண்டி சுகபோக வாழ்க்கை நடத்திய கபட பக்தர்களான புரோகிதர்களின் போலித்தனத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதற்காகத் தம்மையே அர்ப்பணித்தவர் பரமன் இயேசு. மானுட விடுதலைக்கு வேண்டி அவர் நடத்திய போராட்டம், புரோகிதர்களுக்கு எதிராக நடத்திய போராட்டத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. போராட்டத்திற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் அன்பு. அன்பைத் தம் வாழ்வின் ஆதார சுருதியாகக் கொள்ளும் ஒருவர் அத்வைதியாகத் தான் இருக்கஇயலும்.

அத்வைதம்:-

கிறிஸ்துவுக்குப் பின் ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஆதிசங்கரரால் உலகுக்கு உணர்த்தப்பட்டதே அத்வைத தத்துவம். வேதங்களின் தத்துவங்களை அலசி ஆராய்ந்த உபநிடதங்களின் அடிநிலைக் கொள்கைகளை உள்ளடக்கியனவாகத் திகழும் மகாவாக்கியங்களை ஆதாரங்களாகக் கொண்டு சங்கரரால் உருவாக்கப்பட்டதே இத்தத்துவம். மகாவாக்கியங்களுக்கு விளக்கம் நல்க சமயவாதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டபோது முரண்பாட்டை நீக்கி ஏக இறைவழிபாட்டை நிலை நிறுத்துவதற்காக அத்வைத சித்தாந்தத்தை உருவாக்கினார் என்பர் பெரியோர்.

இறைவனைப் புரிந்து கொள்ள உதவி புரியும் ஞான மார்க்கத்தை முற்றும் ஒதுக்கிவிட்டு அதே நேரத்தில் அவனுக்கு வழிபாடு நடத்தும் கர்மங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கை நடத்தியவர்களிடம் இறை உண்மைகளை எடுத்துரைக்க உருவாக்கப்பட்டதே இத்தத்துவம். பூசைகளுக்கு முக்கியத்துவம் நல்கி அதன் மூலம் மக்களது பொருளாதாரத்தைச் சுரண்டிய புரோகித வர்க்கத்தினருக்கு ஒருவகையில் இத்தத்துவம் எதிராகவே அமைந்துவிட்டது என்றால் அது மிகையாகாது.

"இறைவன் ஒருவனே; அந்தப் பிரம்ம சொரூபமான கடவுளே எல்லா உயிர்களிடத்தும் வீற்றிருக்கிறான்" என்பதே அத்வைத தத்துவம். அதாவது இறைவனும் பிற உயிரினங்களும் வெவ்வேறல்ல; ஒன்றே என்பது தான் இதன் பொருள். இந்தப் பிரபஞ்சமும் அதில் உள்ள அனைத்தும் பிரம்மமாகும். இதை உணர்ந்து கொள்வதுதான் உண்மையான அறிவு. இந்த அறிவு கிடைக்கப்பெற்ற சமூகத்தில் சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, பொருளாதாரத்தின் பெயராலோ ஒருவர் மற்றொருவர் மேல் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருக்காது. மதங்கள் உரைக்கும் "இறையரசு" அங்கு நிலவும். "ஆடற்பருந்தும் மாதர் அருகூட்டும் பைங்கிளியும் ஒரு கூட்டில் அங்கு வாழும்".

இறைவழிபாடு அறிவின் அடித்தளத்திலிருந்து தொடங்கப்படவேண்டும் என வலியுறுத்தும் இந்தத் தத்துவத்தின் பேராற்றலை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் பாரதி, "அத்வைத நிலைகண்டால் மரண முண்டோ"? என்கிறார். "அறிவில்லாதவன் சிவனைக் காணான்" எனக் கூறிய அவர், "எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்", "மண்ணுலகில் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ"? எனப்பாடி அத்வைத தத்துவத்தை மிகவும் எளிமையாக விளக்குகிறார். "நானே கடவுள்" என உரைத்த பல ஆன்மீகவாதிகளுக்கும் சக்தியை நல்கியது இத்தத்துவமே.

புதிய ஏற்பாட்டில் அத்வைதச் சிந்தனைகள்:-

இயேசு பெருமானின் போதனைகளை உள்ளடக்கிய பரிசுத்த மறையாகத் திகழ்கிறது புதிய ஏற்பாடு. இதில் உரைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பல அத்வைத சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. சங்கரருக்கு முன்பே இத்தத்துவம் கிறிஸ்துவாலும் வேறு பல ஆன்மீகப் பெரியவர்களாலும் கூறப்பட்டுள்ளதெனினும் சங்கரரைப் போன்று இத்தத்துவத்திற்குப் பெயர் சூட்டி முறையான விளக்கம் நல்க அவர்கள் முனையவில்லை. மண்மேல் மனிதன் சிறப்பான வாழ்க்கை நடத்தி மேன்மை அடையவேண்டும் என்ற நோக்கில்தான் மதங்கள் உருவாக்கப்பட்டன. அன்பையும் கருணையையும் குறித்துப் பேசாத மதங்கள் இருக்க இயலாது. இவற்றைக் குறித்து எந்த மதம் பேசுகிறதோ அந்த மதத்தால் அத்வைத சிந்தனையிலிருந்து ஒதுங்கிவிட இயலாது.

மதங்களின் பெயரால் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பிய புரோகிதர்கள் புனித நூல்களுக்குத் தங்கள் வசதிக்கு ஏற்ப விரும்பிய வண்ணம் விளக்கம் நல்கியதோடு உண்மைகளை மறைக்கத் தலைப்பட்டனர். மக்களின் சிந்தனைகட்குத் தடைபோடும் வண்ணம் தங்களின் வர்க்க மேம்பாட்டைக் கருதி புதிய கருத்துக்களையும் உட்புகுத்திவிட்டனர். தங்களது சூழ்ச்சியால் உண்மைக் கருத்துக்களை மக்கள் உணர இயலா வண்ணம் இவர்கள் ஆக்கிவிடுகின்றனர். இதில்தான் அவர்களது வெற்றி அமைந்துள்ளது. இவர்களது நயவஞ்சகத்தனமான நரித்தனத்தை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் பிரெஞ்சு தத்துவ ஞானியான வால்டர், "உலகின் முதல் போதகன் முதல் வஞ்சகனாகவே இருந்துள்ளான்" என்கிறார். கிறிஸ்துவின் போதனைகளும் இப்படிப்பட்ட புரோகிதர்களின் கையில் சிக்குண்டு தவிக்கின்ற காரணத்தால் தான் இன்றைய கிறிஸ்தவ மதம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

இயேசுகிறிஸ்து ஒரு மதத்தைத் தோற்றுவிக்க ஒருபோதும் முனைந்ததில்லை; ஒரு போதகராக இருக்க விரும்பியதுமில்லை. யூதமதப் புரோகிதர்கள் தங்கள் நலனை மனதில் எண்ணிக் கடவுளின் பெயரால் மக்களிடம் பாவபலி, சமாதானபலி, தகனபலி எனப் பலவிதமான பலிகளை நடத்தத் தூண்டியதோடு கூடுதலான காணிக்கைகளையும் வரிகளையும் வசூலிக்கச் சட்டமியற்றினர். சட்டதிட்டங்களைப் பின்பற்றாதவர்கள் ஈவிரக்கமற்ற தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். கடவுளின் பெயரில் உள்ள நம்பிக்கையால் எந்தச் சிந்தனையுமின்றி இவற்றையெல்லாம் முறையாகச் செய்த யூதகுலத்தினர் அனுபவித்த பொருளாதாரப் பிரச்சனைகட்கு அளவில்லை. அதே நேரத்தில் புரோகிதவர்க்கம் செல்வச் செழிப்பில் திளைத்தது. இதைக் கண்ணுற்ற இயேசு "சுமப்பதற்கு அரிய சுமையை" மக்கள் மேல் புரோகிதர்கள் ஏற்றுகின்றனர் எனக் கவலைப்பட்டார். யூதமதத் தத்துவங்கள் எதையும் இயேசு எதிர்க்கவில்லை. ஆனால் அத்தத்துவங்கள் முறைகேடாகத் திரித்து கூறப்படுவதை எதிர்த்தார். அதற்கு எதிராகத் தம் புரட்சியை ஆரம்பித்தார். புரோகிதர்களை இயேசு மாயக்காரர், குருடரான வழிகாட்டிகள், மதிகேடர், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள், சர்ப்பங்கள், விரியன் பாம்புக்குட்டிகள் எனக் கூறுவதிலிருந்து இவர்கள் எப்படிப்பட்ட கெடுமதி படைத்தவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

முறையான ஒரு அத்வைதி பலிகளிலும் காணிக்கைகளிலும் நம்பிக்கை கொள்வதில்லை. அவனை எந்தப் புரோகிதனாலும் சுரண்டலுக்கு உள்ளாக்க இயலாது. காணும் உயிர்களில் இறைவனை உணரும் ஓர் அத்வைதியால் எவ்வாறு புரோகிதனை ஏற்க இயலும்? கடவுளோடு தொடர்பு கொள்ள இடைத்தரகர் ஒருவர் தேவை என்பதையும் அத்வைதியால் ஏற்க இயலாது. இயேசு தாம் வாழ்ந்த நாட்களில் இத்தகைய சிந்தனைகளை உடையவராக விளங்கியதோடு புரோகிதவர்க்கத்தின் கீழ்த்தரமான செயல்களைத் தெருவுக்கும் கொணர்ந்தார். கடவுளின் பிரதிநிதிகள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் புரோகிதர்களால் இயேசுவை எப்படி அங்கிகரிக்க முடியும்? எனவே அவர்கள் இயேசுவைக் கொல்வதில் தங்களுக்கு இடையே இருந்த வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுசேர்ந்தனர்.

எல்லா உயிர்களிலும் உறைந்திருப்பவன் இறைவனே என்ற கருத்தினை வெளிப்படுத்தும் வண்ணம் புதிய ஏற்பாட்டில் பல திருவசனங்கள் அமைந்துள்ளன. "உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்கிறான். என்னை ஏற்றுக் கொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்கிறான்" (மத்.10:40) என்ற திருவசனம் மனிதனை ஏற்பவன் இறைவனை ஏற்கிறான் என்ற உண்மையை வெளிப்படுத்துவதாகத் தானே அமைந்துள்ளது. "மிகவும் சிறியராகிய என் சகோதரனான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்" (மத்.25:40) என்ற திருவசனம் மக்களுக்குத் தொண்டு புரிபவன் இறைவனுக்குத் தொண்டு புரிகின்றான் என்பதைத்தானே உணர்த்துகின்றது.

பவுல் என்ற சவுல் கிறிஸ்தவ வழியைப் பின்பற்றுபவர்களைக் கொடுமையாகத் துன்பப்படுத்தும் பழக்கத்தை மேற்கொண்டவன். அவ்வாறு துன்பப்படுத்தும்போது ஒரு தடவை அசரீரி ஒன்றைக் கேட்கிறான். அந்த அசரீரி நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் எனக் கேட்டது. அதற்குப் பவுல் "ஆண்டவரே நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர், நீ துன்பப்படுத்துகிற யேசு நானே என்றார்" (அப்.9:4,5) இதைவிட அத்வைதம் அல்லது ஏகாத்மவாதத்தை எவ்வாறு விலக்கிட இயலும்?

இயேசுகிறிஸ்து தம் சீடர்களிடம், "உங்களுக்குச் செவி கொடுக்கிறவன் எனக்குச் செவி கொடுக்கிறான். உங்களை அசட்டை பண்ணுகிறவன் என்னை அசட்டை பண்ணுகிறான். என்னை அசட்டை பண்ணுகிறவனும் என்னை அனுப்பினவரை அசட்டை பண்ணுகிறான்" (லூக்.10:16) எனக் கூறியதும் அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசேயர்களுக்கு எழுதிய நிரூபத்தில், "அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றும் இல்லை, விருத்தசேதனமுள்ளவனென்னும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை. புறஜாதியனென்றும், புறதேசத்தானென்றும் இல்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்" (கொலோ. 3.11) என உரைப்பதும் சுத்த அத்வைதச் சிந்தனைகள் அல்லவா? இதே பவுல் கொரிந்தியர்களிடம் நம்பிக்கையைப் பற்றிப் பேசும்போது, "இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களை நீங்களே அறிவீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறிவீர்கள்" (11 கொரி. 13.15) என்கிறார்.

புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் இத்தகைய அத்வைத சிந்தனைகளை எந்தப் புரோகிதனும் மக்களுக்கு விளக்குவது இல்லை. மக்கள் இவற்றின் பொருளை உணர்ந்து கொண்டால் புரோகிதவர்க்கம் வளம்பெற இயலுமா? எனவே அவர்கள் திட்டமிட்டு இவற்றை மறைக்கின்றனர். "எல்லா உயிர்களிலும் எவன் என்னைக் காண்பானோ அல்லது என்னில் எவன் எல்லா உயிர்களையும் காண்பானோ அவனே உண்மையில் காட்சியுடையவனாக இருக்கிறான்" என்ற கீதையின் கருத்துக்கும் மேற்கூறப்பட்ட கருத்துக்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதைக் கற்றோர் உணர்வர். "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞாலத்தின் ஆரம்பம்" என்ற திருவசனத்தை எண்ணிப்பார்ப்பது இவ்விடத்தில் சாலப்பொருந்தும்.

"சத்"தாகவும் "சித்"தாகவும், "ஆனந்த"மாகவும் இருப்பது பிரம்மம் என்கிறது அத்வைதம். இதைச் சச்சிதானந்தம் என்பர். பிரம்மத்தைக் குறித்த இக்கருத்து விவிலியத்தோடு ஒத்துச்செல்கிறது என்கிறார் பேராசிரியர் ஆபிரகாம். "கடவுள் அன்பாகவே இருக்கிறார்" என்கிறது விவிலியம். கலப்படமில்லாத அன்பினால் அல்லவா உண்மையான ஆனந்தத்தை நல்க இயலும். அந்த ஆனந்த மயமாக இறைவன் இருக்கிறார் என்பது தானே விவிலியம் கூறும் உண்மை. இறைவன் அறிவு வடிவமானவன் என்பதும் விவிலியத்திற்கு உடன்பாடே. ஆத்மாவிற்கு மட்டுமே உண்மை, ஞானம் ஆகியவற்றைக் கொண்டு விளங்க இயலும். "தேவன் ஆவியாக இருக்கிறார்" என்ற வேத வசனம் இக்கருத்தையே வலியுறுத்துகின்றது. "அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான்" என்ற யோவானின் கூற்று அத்வைதத்தைக் கிறிஸ்தவம் விலியுறுத்துகின்றது என்பதை உணர்ந்து கொள்ள உதவி புரிகின்றது.

உலகில் இதுவரை ஏற்பட்ட போர்களால் கொல்லப்பட்ட உயிர்களைவிட மதங்களின் பெயரால் ஏற்பட்ட சண்டைகளால் கொல்லப்பட்ட உயிர்கள் அதிகம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இத்தகைய கொடூரம் நிகழாவண்ணம் தடுக்க உதவி புரிவது அத்வைத தத்துவம்.

நன்றி: ஆய்வுக்கோவை
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link