ஆய்வுச் சிந்தனைகள்


கம்பராமாயணத்தில் பறவைகள்

இலக்கியம் காலக்கண்ணாடி என்பது மட்டுமல்லாமல், அது உளநூல் அறிவை விளக்கும் பெட்டகம் என்றும் சொல்லலாம். கம்பர் காட்டும் உவமைகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன. அனுமனைக் கண்ணுற்ற வானரங்களின் மகிழ்ச்சி தாய்ப்பறவையைக் கண்ட குரங்குகள் போல விளங்கியது. இதனை,

"பறவை பார்ப்புத் தாய்வரக் கண்டதன்ன உவகையின் தளிர்த்தார்"

என்ற கம்பராமாயணத் தொடரால் அறியலாம். மற்றொரு நிகழ்ச்சியும் நினைவுகூரத்தக்கது. இராவணனின் கொடுஞ்சொல் கேட்ட சீதை மிக்க துயருருகிறார். இத்துயர் நிகழ்ச்சி, தாய்பறவை நெருப்பில் வீழ்வதைக் கண்ணுற்ற குஞ்சு அடைந்த துன்ப நிலைக்கு ஒப்பாகக் காட்டுகின்றார் கம்பர். இவ்வாறு உளவியல் நிலையை விளக்குவதற்குப் பறவைகளின் பண்புகள் உதவுவதைக் காணலாம்.

அன்னம்:-

மாதர்களின் மென்னடைக்குக் கவிஞர்களால் அன்னம் உவமையாக உவமிக்கப்படும் சிறப்பு வாய்ந்தது. பாலில் நீர் கலந்திருப்பதால் அதைப் பிரித்துப் பாலைமட்டும் தனியாக உண்ணும் இயல்பினது அன்னம் என்று கம்பரும் மற்ற கவிஞர்களும் உரைத்துள்ளார்கள். இத்தன்மையைக் கம்பர் விபீடணன் மூலம் நன்கு விளக்குகிறார். குரங்குப்படையின் ஊடே சில அரக்கர்படையினைச் சேர்ந்த ஒற்றர்கள் புகுந்துள்ளனர். இதனை விபீடணன் நீரைப் பிரித்துப் பாலை உண்ணும் அன்னம்போல் ஒற்றர்களைப் பிரித்துணர்ந்தான் என்று கம்பர் சுட்டுகின்றார். இதனை,

"சோர்வுறு பாலின் வேலைச் சிறுதுளி தெளித்த வேனும்
நீரினை வேறு செய்யு மன்னத்தின் நீர் னானான்" (கம்ப-யுத்-709)

எனும் கம்பராமாயணத் தொடரால் அறியலாம்.

கம்பர் சீதையின் மென்னடைக்கு, அன்னத்தின் நடையை உவமையாக்குகிறார். இதனை அழகாக,

"ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையளாகும்
சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்" எனக் கம்பர் கூறியுள்ளார்.

சிரல்:-

இலக்கியங்களில் சிரல் என வழங்கப்படும் இப்பறவை€யே மீன் கொத்தியாகும். இது வெகு விரைவில் அம்புபோல் பாய்ந்து மீனைக் கொத்தி எடுத்து வந்து உண்ணும் தன்மையாதலால் இதற்கு அப்பெயர் அமைந்துள்ளது. கம்பர் இச்சிரல் பறவையின் பாயும் வேகத்தை ஓரிடத்தில் உவமையாகக் கையாண்டுள்ளார் சீதையைக் கவர்ந்து செல்கிறான் இராவணன். வழியில் எதிர்ப்பட்ட சடாயு எனும் கழுகின் வேந்தன் இராவணனின் தோளின் மேலும், மார்பு மேலும் சிரல் பறவைபோல் பாய்ந்தான் எனக் கம்பர் அப்பறவையின் வேகத்தை உவமைப்படுத்தியுள்ளார்.

மயில்:-

அழகுமிக்க பறவை மயில் தோகை விரித்தாடும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். ஆண்மயிலே தோகை விரித்தாடும் இயல்புடையது. மயிற்பீலி மென்மையானதும் பாரம் மிகக் குறைவானதுமாகும்.

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்"

என வள்ளுவர் இதன் தன்மையைக் குறிப்பிட்டுள்ளார்.

முனிவர்கள் குண்டலம் வளர்த்து வேள்வி செய்வது அவர்களுடைய முக்கிய செயல்களில் ஒன்றாகும். அவ்வாறு அவர்கள் வளர்த்த குண்டலங்களிலுள்ள நெருப்புகள் புகைந்து அணையத் தொடங்கும். நெருப்பு அணைந்திடாமல் இருக்கும் பொருட்டு, காற்றுவீசி நெருப்பைக் கொழுந்து விட்டு எரியச் செய்வது முனிவர்களின் செயலாகும். இதைக்கண்ணுற்ற மயிலொன்று, அணையும் நேரத்தில் குண்டலத்தின் அருகே சென்று, தன் கூந்தல் போன்ற மெல்லிய தோகையை விரித்து விசிறி காற்றினைச் செலுத்தி நெருப்பினை எரியச் செய்கின்றது இதனை,

"ஏந்து நான்மணி மார்பின் ராகுதிக் கியையக்
கூந்தல் மென்மயில் குறுகின நெடுஞ்சிறை கோலிக்
காந்து குண்டலத்தி லடங்கெரி யெழுப்புவ காணாய்" எனும் பாடலால் அறியலாம்.

கிளி:-

மனைக்கு அரசியாக விளங்கும் மங்கையர்களின் இனிமைக்கு இலக்காகத் திகழ்வது கிளி. கிளி மக்களோடு பழகிப் பேசும் ஆற்றலுடையது. இதனை "சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை" என்ற சொற்றொடரிலிந்து உணர்ந்து கொள்ளலாம். பறவையை வைத்து, சிறந்ததொரு உலகியல் பண்பைக் கம்பர் உணர்த்தியுள்ளார். பழுத்த மரத்தை நாடிச் செல்லும் இயல்பு பறவைகளுக்குண்டு, பழங்கள் அற்றபின் மரத்தைவிட்டுப் பிரிந்து செல்லும் இயல்புடையன. இப்பண்பை வைத்து உலகியல் நிலையை உணரலாம். செல்வம் உளள ஒருவரைப் பலர் சூழ்ந்து கொண்டு அன்பராய் இருத்தலும், செல்வம் நீங்கியவழி அன்பின்றி, நன்றியுமில்லாமல் அவரைக் கைவிட்டுச் செல்லும் நிலையையும் காணலாம்.

இவ்வுலகியல் நிகழ்ச்சியைக் கம்பர் பறவைகளின் பண்பை வைத்து மறைவாக உணர்த்திவிடுகிறார். இதனை,

"திணிநெடு மரமென் றாழி வாண்மழுத் தாக்கச் சிந்திப்
பனை நெடு முதலு நீங்கப் பாங்குறும் பறவை போல"

எனும் பாடலால் அறியலாம்.

நீண்ட வலிய ஒரு மரத்தைக் கோடாரி கொண்டு தாக்க, அதன் கிளைகளும், அடிமரமும் உட்பட பறவைகளும் சாய்ந்துவிடுகின்றன. அவ்வாறு மரம் சாய்ந்துவிட அங்கு வாழ்ந்த பறவைகளும் அம்மரத்தை விட்டு நீங்கிவிடுகின்றன. இது போல்தான் உலகியலும் என்பதைக் கம்பர் மறைமுகமாக விளக்கிவிடுகிறார். இல்லத்தலைவியாக விளங்கும் சில மாதர்கள், தங்களின் கணவன் பெயரைக் கிளிக்குக் கற்றுக்கொடுத்து, அதனை அக்கிளிகள் திருப்பிச் சொல்லுமாறு செய்தல் உண்டு. இதனை,

"விரைசெய்பூஞ் சேக்கையாந் தெப்ப மீமிசைக்
கரை செயா வாசையங் கடலு ளாளொரு
பிலைசமென் குதலையாள் கொழுநன் பேரெலாம்
உரை செயுங் கிள்ளையை யுவந்து புல்லினாள்" (கம்ப-பால-1066)

எனும் பாடலால் அறியலாம்.

பூமெத்தைப் படுக்கையின்மேல் படுத்துள்ளாள் ஒரு மங்கை நல்லாள். தேன்போன்ற இனிமையான மொழியுடையாள். அவள் ஆசைக்கடலுள் ஆழ்ந்துள்ள நேரம், அந்நேரம் பார்த்தறிந்த கிளி, அவளுடைய கணவனின் பேரைச் சொல்கின்றது. அவ்வாறு தன் கணவனின் பேரைச் சொல்லும் கிளியை அவள் தழுவி சுகம் மகிழ்கின்றாள். இவ்வாறு பறவைகளின் செயல்களை விளக்கிக்காட்டி அவற்றின்மூலம் உலகியல்புகளைக் கம்பர் தெற்றென விளக்கியுள்ள திறம் வியந்து போற்றுதற்குரியதாகும்.

அன்றில்:-

பனைமரத்தில் கூடுகட்டி என்றும் இணைபிரியாது வாழும் தன்மையுடையது அன்றில் பறவை. இதில் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்தால்கூட உயிர்வாழாது இறந்துபடும் என்று கூறுவர். தலைவனைப் பிரிந்து தலைவி வருந்தும் நிலைக்கு அன்றில் பறவையின் பிரிவுத் துன்பத்தை உவமை கூறுவது தமிழிலக்கியங்களில் பெருவழக்காகும். இதன் தலையில் சிவந்த கொண்டை ஒன்று இருப்பதைச் "செந்தலை அன்றில்" எனச் சிறப்பிக்கப்படுவதால் அறியலாம். இந்திரசித்தி படையைப் பிளவுபட்ட வாயினை உடைய அனறில் வடிவம் போல் அணிவகுத்து நிறுத்தினான் என்று கம்பர் குறிப்பிட்டுள்ளதால், அதன் அலகின் வடிவு பற்றி நாம் உய்த்துணர முடிகின்றது.

நீர்காகம்:-

நீர்காகத்தின் முக்கிய உணவு மீனாகும். சிறுகுட்டைகளில் மூழ்கி அங்குள்ள மீன்களைப் பிடித்து உண்ணும் இயல்பினது, இதனை,

"குழுவு மீன்வளர் குட்டமெனக் கொளா
எழுவு பாட விமிழ் கருப் பேற்றி திரத்
தொழுகு காற்றகன் கூனையி னூழ்முறை
முழகி நீர்க்கருங் காக்கை முளைக்குமே" (கம்ப-கிட்கிந்தா-914)

என்கின்றார் கம்பர்.

கரும்பாலை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் ஒலி இனிய பாடல் போன்று ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கருப்பஞ்சாறு, "மிடா" எனும் வாயகன்ற கலத்தில் நிரம்பிக் கொண்டிருக்கின்றது. கருப்பஞ்சாறு, "மிடா" எனும் பாத்திரத்தைச் சிறுகுட்டை என நினைத்து அதில் மூழ்கி எழுகின்றது நீர்காக்கை. இதிலிருந்து அக்கால உழவர்கள் எவ்வளவு வளத்தோடு வாழ்ந்தார்கள் என்பதை நாம் கம்பரின் கூற்றின் மூலம் உணர்கிறோம்.

நன்றி: ஆய்வுக்கோவை

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link