ஆய்வுச் சிந்தனைகள்


செய்யுள் நடையில் ஒரு திறனாய்வு நூல்

உலகமகா காப்பியங்களில் மேலான இடம்பெறத்தக்க கம்பராமாயணத்தின் கவிதைச் சிறப்பில் தோயாதார் இல்லை என்றே கூறலாம். கம்பன் கையாண்டுள்ள கவிதைச் சொற்கள் மிகப் பல. அவற்றைக் கையாண்டு ஓசை நயத்தையும், பொருட் செறிவையும் மிகுவித்துள்ள உத்தி இன்று வரை பிற இலக்கியப் படைப்பாளர்களுக்கு வாய்க்கவில்லையென்றே கூறலாம். இத்தகைய சிறப்புப் பொருந்திய ஒரு காப்பியம், இலக்கியம் என்ற தளத்திலிருந்து விலக்கப்பட்டு மத நூலாகச் சிலரால் கருதப்பட்டது தமிழிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு என்றே கருதலாம். கம்பனின் இராமகாதை பல ஆய்வாளர்களால் பல இலக்கியப் பார்வைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் தமிழில் ஆராய்ச்சி நோக்குகளுக்கு வித்திட்ட பேராசிரியர் கெ.என்.சிவராஜ பிள்ளை அவர்களின் கம்பராமாயண ஆய்வை அடியொற்றியே உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் சிவராஜபிள்ளை கம்பரின் கவியில் தோய்வதற்கு அவரது குடும்பச் சூழலும் காரணமாயிருந்திருக்கிறது என்பதனை அவர்தம் வரலாற்றால் உணர்கிறோம். குடும்ப மரபிலேயே கம்பராமாயண ஆய்வனுபவத்தில் தோய்ந்தவர் பேராசிரியர் சிவராஜ பிள்ளை என்பது இதனால் தெளிவுறுகிறது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காவல்துறை அதிகாரியாகவும், பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களது பத்திரிக்கையின் துணை ஆசிரியராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகவும் திறம்படப் பணியாற்றிய காலங்களில் பேராசிரியரின் இலக்கிய ஆராய்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. புதிய ஆய்வு முறைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதற்குச் சுந்தரம் பிள்ளையவர்களின் வழிகாட்டலும் அவரது சமகாலத்து நண்பர்களாயிருந்த பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, கவிமணி, பண்டித முத்துசாமிப்பிள்ளை, இசைச் செல்வர் இலக்குமணப் பிள்ளை போன்ற தமிழ்ப் பேரறிஞர்களின் தொடர்பும் காரணமாக அமைந்தன. பேராசிரியரின் "Indian Social Idol - a reivew" என்ற 200 பக்க நூல் வர்ணாசிரம முறை இந்தியாவை எவ்வாறு பாதிக்கப்போகிறது என்பதை விளக்குவதாக அமைந்தது; இதனால் இவரைச் சமுதாயச் சீர்திருத்தவாதியாகவும் கொள்ளலாம். பேராசிரியர் சிவராஜபிள்ளை கம்பராமாயண கௌஸ்துபம்! எனும் திறனாய்வு நூலைக் கவிதையிலேயே இயற்றியிருக்கிறார். கவிதை நடையில் திறனாய்வு என்பதே ஒரு புதுமையான உத்தியாகும்.

நூல் அறிமுகம்:-

"கம்பராமாயண கௌஸ்துபம்" எனும் இத்திறனாய்வு நூல் விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டுள்ளது. புலமையில் வல்லாராகிய கம்பரின் பெருங்காப்பியத்திற்குக் கவிதையில் அமைந்த திறனாய்வு நூலிது. கௌஸ்துபம் என்பது திருமாலின் மார்பமைந்த "மணி"யாகும்.

முன்னுரைப் படலம், ஆக்கியோன் படலம், உவமைப் படலம், இயற்கை வருணனைப் படலம், கதைமக்கட் படலம், மெய்ப்பாட்டு வருணனைப் படலம், சொல் நடை வனப்புப் படலம், புலமைத்திறன் படலம், அறவுரைப் படலம், கவி இலக்கணப் படலம் எனப் பத்துப் படலங்களாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது இந்நூல்.

மொத்தம் 462 பாடல்கள் இந்நூலில் உள்ளன. செய்யுள் தொகை 422; எடுத்துக்காட்டாக எடுத்தாளப்பட்ட கம்பராமாயணப் பாடல்கள் 40 என இதனைப் பிரித்துக் காணலாம். 1927-ஆம் ஆண்டிலேயே இயற்றப்பட்டிருக்கிறது. காரைக்குடியிலிருந்து வெளிவந்த "குமரன்" எனும் இதழில் முதல் 12 பாடல்களும், "செந்தமிழ்" இதழில் 105 பாடல்களும் (3 பகுதிகள்) வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியான பாடல்களில் சில திருத்தங்களைச் செய்து மூலநூல் பதிப்பில் சேர்த்திருக்கிறார் பேராசிரியர். சில இடங்களில் சிறு மாற்றங்களைச் செய்தும் திறனாய்வுக் கவிதைகளில் பயன்படுத்தியிருக்கிறார். இவ்வேறுபாட்டைத் தெளிவாக்க ஒற்றை, இரட்டைத் தலைப்புள்ளிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆய்வு முறைகள்:-

1. படைப்பாளனை மட்டும் சார்ந்து இலக்கியத்தை ஆராயாமல், "வாசகர் பற்றியும் இலக்கியத்தின் பொருண்மையும் புலமையும் வெளிப்படும் என உரைக்கின்ற ஆய்வு முறையைப் பேராசிரியர் கெ.என். சிவராஜ பிள்ளையிடம் கண்டு அதிசயிக்கிறோம். "சிறந்த காவியங்கள் அமைய வேண்டுமாயின் அவற்றிற்குத் தக்க கருத்துச் செறிவும் மிகுதியாக விருத்தல் வேண்டும். கருத்துச் செல்வம் உண்டாவது சமுதாயத்தாரது பலதிறப்பட்ட அநுபவ முதிர்ச்சியைப் பொறுத்திருக்கிறது. அநுபவ முதிர்ச்சியென்பது அறிவு முதிர்ச்சியே. ஆதலால் அறிவு முதிர்ச்சியில்லாத அஞ்ஞானம் எனும் இருளிற்கிடந்து தத்தளிக்கும் மனிதர்களிடையிற் பெருங்காவியங்கள் உதிப்பது அருமை", எனப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். ("தமிழ்வாணருக்கு ஒரு விண்ணப்பம்", தமிழாய்வு - 9, 1970, பக். 8) கம்பராமாயண கௌஸ்துபத்தில் முதற்பகுதியில் இதனை வலியுறுத்துகிறார் பேராசிரியர். தற்காலத்தில் சிறந்த காவியங்கள் தோன்றாததன் காரணம் சொல்லப் போந்த அவர்,

"நாமகள் அருள் நண்ணும் வரகவி
ஹோமர் வர்ஜில் மில்ற்ற னென் றோதுவர்
வாமமார் வடதேச வான்மீகி தென்
சீமையத் தமிழ்க் கம்பன் தெரிகிலார்" (க.கௌ.15)

என்கிறார்.

2. அளவு கடந்த மதப்பற்றுக் கொண்டு காவியம் புனைவார் "நற்கலையுணர்ச்சிகளை விருத்தி செய்யுமாறு கவிபுனையாது மதவுணர்ச்சியை மட்டிலும் விருத்தி செய்யக்கூடிய செய்யுட்களை இயற்றியிருக்கின்றனர். இதற்குப் பெரியபுராணம், கந்தபுராணம் முதலிய புராணங்களே சான்றாகும் என்கிறார். இவைகள் உண்மைக் கவியின்பம் தரத்தக்கவையல்ல; துளசிதாசரின் காவியம் போலன்றிக் கம்பரது காவியம் கவிச்சுவை" என்கிறார் பேராசிரியர் ("த.வா.ஒ.வி" தமிழாய்வு - 9, ப.9) இதனை வலியுறுத்துவனவாக இருபாடல்கள் கௌஸ்துபத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

"வீறெடுத்த காவிய மெனுங் கரும்பின்கான் விசித்துசூ
சாறெடுத்து லகர்க்கொரு காப்பியம் சமைத்தான்;
சேறெடுத்த மண் டூகம்போற் றேறலுண் ணாதே
மாறெ டுத்ததம் மதமுரை நூலென்றும் மருண்டார்" (கம்.கௌஸ்-40)

"சமைய நோக்கமே தலைக் கொண்டார் ராமன்றன் னாமம்
அமைய வந்திடும் ஐந்தோடெட் டெழுத்தென அறைவர்;
உமையின் கேள்வனை இலக்குமி காந்தனை ஒருவிக்
கமை கொள் மூலமாப் பொருட்பெயர் அஃதெனக் காட்டா" (க.கௌஸ்-41)

எனும் பாடல்கள் அமைந்துள்ளன.

காவிய உருவ அமைப்பு:-

"ஜனங்களிடையே வழங்குகின்ற சொற்களையும் சொற்றொடர்களையும், சொற்றொடர் முறைகளையும் அநுசரித்தே காவியம் புனைதல் உசிதமாகும் என்கிறார் பேராசிரியர் (தமிழாய்வு - 9; பக். 12-13).

கவியை அலங்கரிக்கும் அணிகள் புதியனவாகவும், பொருத்தமுடையனவாகவும், மனதிற்கு இன்பம் தரத்தக்கனவாகவுமிருத்தல் வேண்டும். தெள்ளிய நடை அமைதல் வேண்டும். கவியினது பொருள் வாசிப்போர் மனதில் எளிதிற் பதியத் தக்கதாகவிருத்தல் வேண்டும். இந்தத் தெளிவு என்னும் கவியின் உத்தம குணத்தைக் கம்பர் பல இடங்களிலும் அழுத்திக் கூறுகிறார்.

"புன்கவியெனத் தெளிவின்றி" என்கிறார் ஒரு பாடலில். பம்பை வருணனையில் அந்நீர் நிலையின் தெளிவையும் ஆழத்தினையும் வியந்து "கற்பக மனையவக் கவிஞர் நாட்டிய சொற்பொருள்" போல என உவமிக்கிறார். கோதாவரியைச் "சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமுந் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்" என்கிறார் கம்பர். (க.கௌ. - உவமைப்படலம்).

"வாசிப்போனது நாத் தடையுறா வண்ணம் ஆற்றொழுக்குப் போலக் கவியோடிச் செல்லும்" ஒழுகிடை நடையினவாகக் கவிகள் இருத்தல் வேண்டும், எனக்கூறி இப்பாடலை எடுத்துக்காட்டாக்குகிறார்.

"வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
வையோவிவன் வடிவென்பதோ ரழியா வழகுடையான்"

பாடல் நடை:-

பாவின் நடை சந்தர்ப்பத்திற்குத் தக்கதாயிருத்தல் வேண்டும். வல்லின, மெல்லின எழுத்துக்களைப் பயன்படுத்தும் வண்ணங்கள், குறிப்பிற்கேற்ற சந்த ஒலி அமைப்புக்கள் ஆகியவற்றைக் கம்பர் பயன்படுத்தியுள்ளமை பேராசிரியரால் "சொல், நடை, வனப்புப் படலத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது (க.கௌ. 278-320).

"கவியினது நடை அதனை இயற்றும் கவிஞனுக்கே உரித்தான விசேஷ வனப்பு வாய்ந்த நடையாக இருத்தல் வேண்டும் (Individuality of Style). இது கம்பரின் காவியத்தில் மிகப் பொருந்தி அமைந்துள்ளது" என எடுத்துக்காட்டுகிறார்.

"பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்சையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்" (க.கௌ. 279;3)

எனச் சூர்ப்பனகையின் வரவைப் பற்றிக் கூறுவது எடுத்துக்காட்டப்படுகிறது.

பேராசிரியர் கெ.என். சிவராஜபிள்ளை அவர்களின் ஆய்வுமுறை அவரது காலத்தில் அதிசயிக்கத்தக்கதாயிருந்தது. பாராட்டுமுறைத் தினாய்வாகவும் முன்னோர் சொன்னதை எடுத்து மொழியும் கூற்றாகவும் பிறரது திறனாய்வு நோக்குகள் இருந்த காலத்தில், ஒப்பியல் ஆய்வுகளுக்கும், கோட்பாடு ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்திருந்தது பேராசிரியரின் ஆய்வு முறை, பேராசிரியரின் ஆய்வுப் போக்கை ஆய்வாளர்கள் பின்வருமாறு பாகுபாடு செய்துள்ளனர் (தமிழாய்வு - 9, 1979, பக். 24)

1. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி நன்கு அறிந்து தெளிதல்.
2. முதல் தரச் சான்றுகள், இரண்டாம் தரச் சான்றுகள் என ஆய்வுக்குரிய பொருளின் இலக்கியச் சான்றுகள் முழுவதையும் திரட்டித் தருதல்.
3. ஆய்வுக்குரிய பொருளோடு தொடர்புடைய பிற கருத்துக்களை ஆராய்தல்.
4. வரலாற்றுக் கண்ணோட்டத்துடன், வரலாற்று ஆசிரியர்கள் குறிப்புகளைப் பயன்படுத்தி ஆராய்தல்.
5. கால ஆராய்ச்சி செய்தல்.
6. சான்றுகளை முதலாவது, இரண்டாவது என வகுத்தும் தொகுத்தும் தருதல்.
7. தம்முடைய முடிவை முதலிலேயே கூறிவிட்டுப் பின்னர் அதற்குச் சான்றுகள் காட்டி நிறுவுதல்.
8. மாறுபாடுடைய கருத்துக்களைச் சான்றுகளுடன் மறுத்துத் தம் கருத்தை நிறுவுதல்.
9. இலக்கியங்களில் காணப்படும் குறைகளை ஆழ்ந்து நோக்குதல்.
10. அறிவியல் கண்கொண்டு இலக்கிய ஆராய்ச்சி செய்தல்.

கம்பராமாயணம் பற்றிப் பேராசிரியர் இத்திறனாய்வு நோக்குகளின் அடிப்படையில் ஆராய்வதற்கு முன்னரே பல ஆய்வுகளைச் செய்திருக்கிறார்.

கம்பராமாயண கௌஸ்துபம் எனும் இத்திறனாய்வு நூல் "எங்குமெங்குமினிமை இனிமையே" என்று பாடி முடிகிறது. பேராசிரியரின் மொழி ஆராய்ச்சியில் காணப்படுகின்ற கடுமையும், எள்ளல் தொனியும் இந்நூலில் இல்லை. எனினும் சிறந்த இலக்கியங்கள் எவை, அல்லாதன எவை என அறுதியிடும்போது எவ்விதச் சார்புமின்றித் தம் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இன்றைய திறனாய்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் இன்றைய இலக்கியப் படைப்பாளிகளுக்கும் ஒரு சீரிய வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.

நன்றி: ஆய்வுக்கோவை.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link