ஆய்வுச் சிந்தனைகள்


நா. பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள் பெயர்ப் பொருத்தம்

தியாகமும், தேசபக்தியும் சராசரி இந்தியனின் விரதமாக மாறிய சுதந்திர வேள்வித் தீயில் கலந்து, அதன் பின் அதையடுத்த பதவிகளின் பரபரப்பான காலத்தில் தனியே விலகி வாழ்ந்த ஒரு தேசபக்தனின் கதை இந்த ஆத்மாவின் ராகங்கள் என்ற நாவல்.

உலகறிய, ஊரறிய நாட்டுக்குத் தியாகம் செய்த ஒருவரும், உலகறியாமல், ஊரறியாமல் அந்தரங்கமாக அவருக்காகத் தியாகம் செய்த ஒருத்தியும் அவர்களுடைய ஆத்ம ராகங்களும் இந்த நாவல் முழுவதும் சுருதி சுத்தமாக ஒலிப்பதை நாம் அறிய முடிகின்றது.

உடம்பை விடப் புலன்கள் உயர்ந்தவை, புலன்களைவிட மனம் உயர்ந்தது, உடம்பு, புலன்கள் மனம் எல்லாவற்றையும் விட ஆத்மா மிக உயர்ந்தது. மிகப் பரிசுத்தமானது - என்கிறது பழைய வேதவாக்கியம். அவ்வகையில் நா. பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள் என்ற நாவலில் அதன் பெயர் பொருத்தத்தைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

ஆத்மாவின் ராகங்கள் பொருள்:-

ராஜாராமன், திலகர் வாசகசாலையின் மொட்டை மாடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அதிகாலையில் அவனது காலில் ஏதோ ஒன்று விழுந்தது. இரண்டு நாட்கள் இதே போன்று நடந்தது. அவனுக்குக் கோபம் வந்தது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்தான் தூக்கி எறிகிறார்கள் என்பதை அறிகிறான். பக்கத்து வீட்டில் இருந்து வந்த அந்தப் பூச்சரம் வாசனையை அள்ளித் தெளித்தது. ஆனால் வாடி இருந்தது. தொடர்ந்து அந்த வீட்டில் இருந்து பூபாளராகம் இசைக்கும் வீணை ஒலியைக் கேட்கிறான். வாடிய பூச்சரம் வாசனையைக் கொடுத்தது போல அவனுடைய தியாக வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அவள் மதுரம் என்ற மதுரவல்லி, பூச்சரம் வாடியதைப் போல வாடிவிடும் தன்மையை எடுத்துக் காட்டுவதே இந்த ஆத்மாவின் ராகங்களின் பெருளாக அமைகிறது.

ராஜாராமன், மதுரம் இருவரும் மதுரை மீனாட்சியம்மன் பொற்றாமரைக் குளத்தருகிலும், மீண்டும் அம்மன் சந்நிதியிலும் சந்தித்துக் கொள்கிறார்கள். அந்நியத் துணி மறியலில் கலந்து கொண்டதினால் ராஜாராமனை போலீஸ் கைது செய்து இழுத்துச் செல்கின்றது. அப்பொழுது அங்கு வரும் மதுரம் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கண்கள் கலங்கிய நிலையில் நிற்கிறாள். மதுரம் தன்னைப் பார்த்து கண்கள் கலங்குவதை ராஜாராமன் கவனித்து விடுகிறான்.

மதுரம் பற்றி அறிதல்:-

ராஜாராமன் வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அவனைப் பரோலில் அழைத்துப் போக ரத்தினவேல் பத்தர் வருகிறார். ஆனால் ராஜராமன் பரோலில் செல்ல மறுத்து விடுகிறார். அப்பொழுது பத்தர் ராஜாராமனிடம் அந்தப் பெண்ணுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா? என்று கேட்கிறார். இந்த செயல்தான் ராஜாராமன் மதுரம் இருவரையும் ஒன்று சேர்க்கும் முதல் தொடராக அமைந்தது எனலாம். இதற்கு முன் நடந்தவற்றில் அவளைப் பற்றிய செயல்களை எல்லாம் அவன் நினைவுப்படுத்திப் பார்க்கிறான். வேலூர்ச் சிறையில் இருந்த ராஜாராமன் விடுதலை பெற்று வெளியே வருகிறான். வாசகசாலை விரிவுபடுத்தப்பட்டு மிகுந்த வசதியுடன் இருப்பதைப் பார்க்கிறான். யார் பண உதவி செய்தார்கள் என்று பத்தரிடம் கேட்கிறான். மதுரம்தான் உதவினாள் என்ற செய்தியை அறிகிறான். தவறான வழியில் கிடைத்த பணத்தினால் நமக்கு அவள் ஒரு உதவியும் செய்ய வேண்டாம் என்று அவன் ஆரம்பிக்கும் போதே, பத்தர் இடைமறித்து, காந்தியையும், அகிம்சையையும், சத்தியத்தையும், நம்புவோர் இப்படி உதாசீனமாகப் பேசக்கூடாது என்று கூறுகிறார். மேலும் கடவுள் மனிதனைப் படைத்தான் - மனிதனோ சாதிகளைப் படைத்துவிட்டான் என்று காந்தியின் சிந்தனையைக் கூறுகிறார். அந்தப் பெண் ஒன்றாம் நம்பர் சந்தில் பிறந்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யவில்லை என்ற செய்தியையும் கூறுகிறார். அவளின் விருப்பப்படிதான் வேலூர்ச் சிறைச்சாலைக்குத் தான் வந்ததையும், முத்திருளப்பன் குடும்பத்திற்கு உதவியதையும், வாசகசாலை நடத்த உதவி புரிந்ததையும் கூறுகிறார். இந்தச் சூழ்நிலையில் இருந்துதான் ராஜாராமன் மதுரத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான்.

மனதடுமாற்றம்:-

ராஜராமன் மதுரத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கியபோது இவ்வளவு நான் வெறுக்கும்படி அவள் அப்படி என்னதான் செய்துவிட்டாள் என்று நினைத்தான். ஒன்றாம் நம்பர் சந்தில் பிறந்ததும், தனபாக்கியத்தின் கைகளில் வளர்ந்ததும் வாழ்வதும் அவள் செய்த பிழைகள் இல்லை என்பதை உணர்கிறான். மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது பெரிதில்லை. எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் பெரிது. சாதியையும், குலத்தையும் வைத்து மட்டும் நான் ஒருத்தியை உதாசீனப்படுத்தினால் காந்தியை மனப்பூர்வமாகப் பின்பற்றுபவனாக இருக்கமாட்டேன் என்று சுயசிந்தனையில் மூழ்கி - பின்பு தெளிவு பெறுகிறான். பின்பு அவன் சிறையில் இருந்து வந்ததை அறிந்து மதுரம் அடிமனத்திலிருந்து ஆத்மபூர்வமாகச் சௌக்கியமா எனக் கேட்டாள். ராஜாராமன் சற்று யோசித்துப் பேசத் தொடங்கினான். பின்பு அவள் பாடிய பாடலின் பொருள் என்ன என்று கேட்கிறான். ராமா உன்னைப் பக்தி செய்யும் மார்க்கம் தெரியவில்லையே என்று அவன் பக்கமாகக் கையைச் சுட்டிக்காட்டிப் பதில் கூறுகிறாள். அதைக் கேட்டதும் ராஜாராமன் மெய்சிலிர்த்து நின்றான்.

ஒருமுறை மதுரம் ஜமீன்தாருக்கு வீணை வாசிக்கச் சென்றிருந்தாள் என்பதை அறிந்ததும் ராஜாராமனுக்கு கோபம் ஏற்பட்டது. அவள் திரும்பி வந்தபோது ராஜாராமன் தூங்கிக் கொண்டிருந்தான். மதுரம் அவனுடைய கால்களைப் பற்றி வணங்க முற்பட்ட பொழுது அவளைப் பார்க்கவே வெட்கப்படுவதாக ராஜாராமன் கூறுகிறான். அதற்கு மதுரம் என்னுடைய கைகளால் நான் இந்தப் பாதங்களைப் பற்ற முடியாமல் போகலாம். ஆனால் மனத்தினால் இடைவிடாமல் நான் இந்தப் பாதங்களைப் பற்றுவதை நீங்கள் தடுக்கமுடியாது என்று கூறுகிறாள். காரணமின்றி அவளை வேதனைப்படுத்திவிட்டோமே என்று ராஜாராமன் மனவருத்தமடைகிறான்.

ஆத்மார்த்தமான அன்பு:-

ஒருமுறை மதுரை மாநாட்டு வேலைகள் காரணமாக ஐந்தாறு நாட்கள் ராஜாராமன் வாசகசாலைக்கு வரவில்லை. ஆதலால் மதுரம் அவனைப் பார்க்க முடியவில்லை. அந்த நாட்களில் எப்படிப் பொழுது போனது என்று ராஜாராமன் மதுரத்திடம் கேட்க அதற்கு அவள் நிறைய ராட்டு நூற்றேன், ராமா உனைப் பக்தி செய்யும் மார்க்கம் தெரியலியே என்று கதறிக் கதறிப் பாடினேன், வீணை வாசித்தேன். இவற்றையெல்லாம் செய்ய முடியாதபோது நிறைய அழுதேன் என்றாள். யாரை நினைத்து அழுதாய் என்று அவன் கேட்க, இப்ப என்கிட்ட கேட்கிறவர் யாரோ அவரை நினைத்து என்று கூறுகிறாள். அவள் பேசும் அழகையும் நாசூக்கையும் எண்ணி எண்ணித் திகைத்து ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அவன் நின்றான். மேலும் ராஜாராமன் மேலூரில் தனக்குச் சொந்தமான வீடு, நிலம் இவற்றை விற்றுவிட்டு முன்பணத்தை மதுரத்திடம் தருகிறான். அதற்கு மதுரம் நிலம் விற்பதற்கு என்ன அவசரம் வந்தது என்றும் என்னை ஒரு வார்த்தை கேட்டிருந்தால் விட்டிருக்கமாட்டேன் என்றும் அவன்மேல் வைத்திருக்கும் ஆத்மார்த்த அன்பின் காரணமாக அவன்மேல் உரிமையோடு கோபித்துக் கொள்கிறாள். ஆத்மாவோடு ஆத்மாவாகக் கலந்து உறவுகொண்டு விட்டவளைப் போல இவ்வளவு ஒட்டுதலாக அவளால் எப்படிப் பேச முடிகிறது என்று ராஜாராமன் மனத்துள் வியந்தான்.

ஆனால் அவள் அப்படிப் பேசியது அவனுக்கு மிகவும் இதமாகத்தான் இருந்தது. மேலும் மதுரம் ராஜாராமனிடம் ஓர் உரிமையைக் கேட்கிறாள். தேசத்துக்காக நீங்க கஷ்டப்படுவதற்கும், தியாகம் செய்வதற்கும் உரிமை இருப்பது போல, உங்களுக்காகக் கஷ்டப்படுவதற்கும் தியாகம் பண்ணுவதற்கும் தனக்கும் கொஞ்சம் உரிமை வேண்டும் என்கிறாள். ஒரு தியாகி மற்றவர்களும் தியாகியாவதற்கு அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் தியாகத்தையே அவன் ஒரு சுயநலமாய்ப் பயன்படுத்துவது போல் ஆகிவிடும். நீங்கள் ஊரறிய உலகறிய தேசத்துக்காகத் தியாகம் செய்யுங்கள். ஆனால் ஊரறியாமல் உலகறியாமல் புகழை எதிர்பார்க்காத ஒரு அந்தரங்கமான தியாகத்தை உங்களுக்காக நான் பண்ணுவதை நீங்கள் தடுக்கக்கூடாது. அது நியாயமுமில்லை. தர்மமுமாகாது என்று கூறுகிறாள். ஜாமீன் வழக்கில் கைது செய்யப்பட்டுக் கடலூர்ச் சிறையில் இருக்கும் ராஜாராமனுக்கு மதுரம் ஒரு கடிதம் எழுதுகிறாள். நீங்கள் விடுதலையாகி வரும் வரை எல்லா காரியங்க€யும் நான் கவனித்துக் கொள்கிறேன். எந்தக் கவலையும் உங்களுக்கு வேண்டாம். பக்கத்தில் இருக்காவிட்டாலும், மானசீகமாக நானும் உங்களோடு அச்சிறைவாசத்தை அனுபவிப்பதாகவே பாவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டாள். அக்கடிதம் ராஜாராமனுக்குப் பாலைவனத்தின் இடையே பயணம் செய்யும்போது பருகக் கிடைத்த நல்ல தண்ணீர் போல இருந்தது.

ஆத்மார்த்த அன்பின் உண்மையை உணர்தல்:-

மதுரத்தின் அம்மா இறந்த பிறகு சில நாட்கள் கழித்து முதன்முதலாக ராஜாராமன் மதுரத்தைப் பார்க்கிறான். அம்மா போயிட்டா என்று சிறு குழந்தையைப் போல அவள் அப்போதுதான் புதிதாக உணர்ந்தவள் போலக் கதறிக்கதறி அழுதாள். மனம் திறந்து பிறக்கும் சோகம் இதயத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு முன் தவிர்க்கப்பட முடிவதில்லை என்பதை அவள் நிலையில் இருந்த ராஜாராமன் நன்றாக உணர்கிறான். மதுரம் ஆசிரமம் அமைவதற்குத் தன் நகைகளை விற்று நிதி உதவி செய்தாள். கை, கால்களில் ஒன்றுமில்லாததை ராஜாராமன் கண்டான். பெரிய பெரிய தியாகங்களைச் செய்துவிட்டு, அவை தியாகம் என்ற நினைவே இல்லாமல் அவன் முன் பேதமையோடு சிரித்துக் கொண்டு நின்றாள் மதுரம். அப்பொழுது எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் ராஜாராமன் மலைத்து நின்றான். மேலும், மதுரத்தைக் கச்சேரிகளுக்கு அழைப்பவர்கள் ராஜாராமனிடம் சம்மதம் பெற்றாக வேண்டியிருந்தது. ராஜாராமன் மகிழ்ச்சியுடனேயே அதைச் செய்தான். அதற்கு ராஜாராமன் தேசம் விடுதலையாகிற வரை பிரம்மச்சாரியாக இருக்க ஆசைப்பட்டவனை உன்னைத் தொடாமலேயே குடும்பஸ்தனாக்கி விட்டாய் என்று மதுரத்திடம் கூற அதற்கு அவள், உங்க சத்தியத்துக்கு நான் துணையாய் இருக்கிறேனே தவிர, அதைப் பங்கப்படுத்த நினைக்கக்கூட இல்லை என்கிறாள் மதுரம்.

ஆத்மாவின் ராகங்கள்:-

மதுரம் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்றுதான் ஆசிரமத்திற்கு உதவி புரிந்தாள். இறுதியில் வீடும் ஜப்திக்கு வந்தபோதும் சிரிப்பு மாறாத முகத்துடன் வாடகை வீட்டில் குடியேறினாள். இறுதியில் அவளை விட்டு அனைவரும் சென்றவுடன் அவளது உடல்நிலை மிகவும் மோசமானது. அந்த நிலையை பிரகதீஸ்வரர் ராஜாராமனிடம் மனதை உருக்கும் பிரியத்தைப் பார்த்து இருக்கிறேன். உடம்பை உருக்குகிற பிரியத்தைப் பார்த்து இருக்கிறேன். இந்தப் பிரியமோ மனசு, உடம்பு, எலும்பு, அத்தனையும் உருகியிருக்கு என்று ஆத்மாவின் ராகங்களின் சிறப்பினை விளக்குகிறார்.

புன்முறுவல் பூத்தபடி உறங்குவது போல வாடிய ரோஜா மாலையாகக் கட்டிலில் கிடந்தது மதுரத்தின் உயிரற்ற சரீரம், சரீரத்தோடு அவனை அடைவதற்கு ஆசைப்பட்ட மதுரம் சரீரத்தை நீத்து ஆத்மாவாகவே அவனுள் வந்து கலந்துவிட்டாள். ராஜாராமன் சில வேதனையான நேரங்களில் தன் அறையில் உள்ள மதுரத்தின் வீணையைப் பார்த்தபடி அமர்ந்திருப்பான். அப்படிப்பட்ட நேரங்களில் சடப்பொருளான அந்த வீணையும் அவனோடு பேசியிருக்கிறது, பாடியிருக்கிறது, வளையல் அணிந்த தந்தக்கைகள் அதன் தந்திகளை மீட்டி நிசப்தமான நள்ளிரவு வேலைகளில் அவனுக்கு மட்டுமே கேட்கும்படியான மதுர சரீரத்தை வாரி வழங்கி இருக்கிறது.

பனி உருகி இமயம் அழியாது என்றாலும் கங்கை பிறக்கும் தேசபக்தி இமயத்தைப் போன்றது என்றால் சுதந்திரம் கங்கையைப் போன்றது. ராஜாராமன் போன்ற பலருடைய பொன்னான வாலிபத்தைக் காந்தி தம்முடைய பணிக்காக வாங்கிக் கொண்டார். அதனால் ராஜாராமன் பெருமைப்படலாம். ஆனால் அவனுடைய தியாகத்தில் அவனுக்காகத் தியாகங்களைச் செய்தவளுடைய தியாகமும் கலந்துதான் இருக்கிறது. அது தனித்தியாகம் இல்லை. வாழ்வில் கலக்க முடியாதவர்கள் தியாகங்களில் கலந்துவிட்டார்கள்.

அன்று மதுரத்தின் சிரார்த்ததினம். ராஜாராமன் தூங்கப்போகும் போது வீணையை எடுத்து வந்து கண்பார்வை படும்படி வைத்தார். வளையல்கள் அணிந்த தந்தநிறக் கைகள் மெல்லவந்து ஸ்வரசதிகளையும், ராக தேவதைகளையும் மிருதுவாகத் தடவிக் கொடுப்பது போல் மீட்டின.

உடம்பாலோ, மனத்தாலோ, புலன்களாலோ மட்டும் வாழாமல் அவற்றில் நின்று, அவற்றிலும் மேம்பட்டு ஆத்மாவினால் வாழ்ந்த ஒருத்தியின் தியாகத்தினாலும், சுதந்திரப் போர் என்ற பவித்திரமான நோன்பினாலும், முழுமையடைந்த ஒருவரின் இந்தக் கதையில் இதுவரை யாரும் கேட்டிராத ஆத்மாவின் இனிய பண்புகள் ஒலிப்பதை நம்மால் உணர முடியும்.

நன்றி: ஆய்வுக்கோவை.
2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link