ஆய்வுச் சிந்தனைகள்


ஒப்பிலக்கியம்

குறுந்தொகைக் குறிஞ்சித் திணைப் பாடல்களில் முதற்பொருளைச் சுட்ட இடம் பெற்றுள்ள தலைமைப் புனைவுக்கூறுகள் - ஓர் அடிக்கருத்தியல் பார்வை.

கவிதையின் "மையப்பொருளே, பாடுபொருளே" அடிக்கருத்து எனப்படும். இவ்அடிக்கருத்து ஓர் இலக்கியப் படைப்பில் அத்துடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளால் உருவாக்கப்படும். இந்நிகழ்ச்சிகள், உவமை, உருவகம், அடைமொழி என்று எதுவாகவும் இருக்கலாம். அடிக்கருத்துடன் தொடர்புடைய இந்நிகழ்ச்சிக் கூறுகளையே கவிதைத் திறனாய்வாளர்கள் "கவிதைக்கூறுகள்" (Poetic units) என்பர். இக்கவிதைக் கூறுகள் ஓரிலக்கியப் படைப்பை உருவாக்கவே புனையப்படுகின்றன. எனவே, இவற்றைக் "கலைப்புனைவுக்கூறுகள்" என்றும் குறிப்பிடுவர். ஓரிலக்கியத்தைப் படைக்கும் பொழுது படைப்பாளன் திரும்பத்திரும்ப சில கூறுகளைத் தவிர்க்க முடியாது பயன்படுத்துவான். அங்ஙனம், இலக்கியப் பாடுபொருளுக்கு நெருக்க உறவுடையதாகத் திரும்பத்திரும்ப வரும் புனைவுக் கூறுகள் "தலைமைப் புனைவுக்கூறுகள்" எனப்படும். இத்தலைமைப் புனைவுக் கூறுகளைத்தான் ஆங்கிலத்தில் "மோட்டிப்வ்" (Motif) என்று அழைக்கின்றனர் (செ. சாரதாம்பாள், அடிக்கருத்தியல் கொள்கைகளும் திறனாய்வு அணுகுமுறைகளும், ப.8). இவ்வாறு உருவாக்கப்பட்ட தலைமைப் புனைவுக் கூறுகள் கூட்டுச்சேர்க்கையினாலேயே ஒரு பெரிய அடிக்கருத்தின் முழு உருவ அமைப்பும் அமைகிறதைக் காணமுடிகிறது. இவ்வகையில் ஒவ்வொரு பாடலையும் ஆய்வு நோக்கில் பார்க்கும்பொழுது நிகழ்ச்சிகளும், சூழல்களுமே தலைமைப் புனைவுக்கூறு உருவாக்கத்திற்குப் பெரிதும் காரணமாய் அமைகிறது என்பதைக் கண்டுணர முடிகிறது.

ஒப்பிலக்கிய ஆய்வுக்களங்களுள் தலைமைப்புனைவுக்கூறு ஆய்வும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒப்பிலக்கியக் கொள்கை குறித்த சிந்தனைச் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக அமைவது "குறுந்தொகை". இதில் வரும் குறிஞ்சித் திணைப் பாடல்களுக்குரிய முதற்பொருள் புனைவுக்கூறுகள்,

துறைக் குறிப்போடு தொடர்புடைய புனைவுக்கூறுகள்
குறிப்புப்பொருள் (உள்நோக்கம்) அமைந்த புனைவுக்கூறுகள்
திணையைச் சுட்ட வந்த புனைவுக்கூறுகள்

என்ற மூன்று நோக்கத்தையும் எவ்வாறு முழுமையடையச் செய்கின்றன என்பதை அடையாளம் கண்டு எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கம்.

முதலெனப்படுவது நிலமும் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே (தொல். அகம். 4)

தொல்காப்பியம் சுட்டிய முதற்பொருளில் நிலம் மட்டும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

"........................................
சேயோன் மேய மைவரை உலகமும்........" (தொல். அகம். 5)

முருகக் கடவுளரின் காத்தலைக் கொண்ட உயர்ந்த மலையாகிய இடம் "குறிஞ்சி" நிலம். இந்நிலம் எனும் முதற்பொருளைச் சுட்ட "சாரல், மலை, வரை, சிலம்பு, அருக்கம், குன்றம், கானம், சுடுபுனம், புனவன்துடவை, துறுகல் ஆகிய சொற்றொடர்கள் குறுந்தொகை குறிஞ்சிப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுள், "சாரல், துறுகல், நெடுவரை" என்னும் மூன்று சொற்றொடர்கள் மட்டும் பக்கவரையறையைக் கருத்தில்கொண்டு ஆய்வுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

துறைக்குறிப்போடு தொடபுடைய புனைவுக் கூறுகள்:-

"துன்னரும் சாரல்....."
சாரல்>துன்னரும் சாரல் (மதுரைக்கதக்கண்ணன் 88:3)

இப்பாடலில் "மக்கள் அடைதற்கரிய சாரலின் வழியே" தலைவன் இரவில் வருகிறான் என்று தோழி கூறுவதாகப் புனையப்பட்டுள்ளது. இப்புனைவுக்கூறு இரவுக்குறி நேர்ந்த வாய்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது எனும் துறையைச் சார்ந்தது. ஆதலால், துறை குறிப்பிற்கு ஏற்றவாறு புனையப்பட்டுள்ளது.

"சாரல் நீள் இடை......."
சாரல்>நீள் இடைச்சாரல் (கபிலர், 153:5)

இப்பாடல் "வரையாது, நெடுங்காலம் வந்தொழுகுகின்றுழி, நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை? என்ற தோழிக்கு. அவர் வரவு, நமக்கு ஆற்றாமைக்கு காரணம் எனத் தலைமகள் கூறுயது" எனும் துறைப்பாடல். எனவே அதற்கு ஏற்றவாறு "தலைவன் செல்லும்வழி, மலைச்சாரல் கண்ணுள்ள நெடுவழி, அதன் துன்பம் எண்ணி, தலைவி வருந்துகிறாள்" என்று புனையப்பட்டுள்ளது.

குறிப்புப்பொருள் அமைந்த புனைவுக்கூறுகள்:-

"...............................வீயுகுதுறுகல்" (நெடுவெண்ணிலவினார், 47:1)
கல்>துறுகல் வீயுகுதுறுகல்

இப்புனைவுக் கூறின், பொருள் "தலைவன் காட்டில் வரும்போது நிலவொளியில், வேங்கைமலர் பரவிய துறுகல்லைப் புலியென்று எண்ணி அஞ்சுவான்" என்பது நேரடிப்பொருள். ஆனால், தோழி அதனுள் ஒரு உட்பொருள் வைத்தே உரைக்கிறாள். இரவில் வந்து தலைவியைச் சந்திக்கும் தலைவனின் செயலை ஊரார் அறியும்படியாக நிலாவொளி வீசுகிறது. அதனால். இச்செயல் அலராக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. எனவே தலைவனே இரவுக்குறி தவிர்த்து வரைந்துகொள் என உட்பொருளுடன் தோழி உரைப்பதாகப் புனைவுக்கூறு அமைக்கப்பட்டுள்ளது.

"..........இரும்பிணர்த்துறுகல்"
கல்>துறுகல்>இரும்பிணர்த்துறுகல் (கபிலர், 13:1)

இப்புனைவுக்கூறும் உட்பொருளுடன் புனையப்பட்டுள்ளது. "மழைப் பொழிந்ததால் துறுகல் தூய்மையுற்று மாசு நீங்கப்பெற்ற நாடன்" என்பது இப்புனைவுக்கூறின் வெளிப்படையான பொருள். ஆனால், அதன் உட்பொருள், "துறுகல் தன் இயல்பினை மறைக்கும் மாசுநீங்கப் பெற்ற நாடன். அவ்வியல்பிற்கு மாறாக என் கண்களின் இயல்பை மறைக்கும் பசலையை வளரச்செய்தான் என்பது குறிப்பு.

திணையைக் குறிக்க வந்த புனைவுக்கூறுகள்:-

"ஓங்குவரை........" (குட்டுவன் கண்ணன், 179:4)
வரை>ஓங்குவரை

"கோடுயர் நெடுவரை" (உறையூர் முதுகூத்தன், 353:2)
வரை>நெடுவரை> கோடுயர் நெடுவரை

"அண்ணல் நெடுவரை" (தும்பிசேங்ர கீரனார், 393:3)
வரை>நெடுவரை>அண்ணல் நெடுவரை

இப்புனைவுக்கூறுகள் மூன்றும் முறையே, "உயர்ந்தமலை, கொடுமுடிகள் உயர்ந்த நீண்ட மலை தலைமையையுடைய உயர்ந்தமலை" என்ற பொருளில் புனையப்பட்டுள்ளன. இவை அனைத்தும் குறிஞ்சித்திணைப் பாடலில் திணையைக் குறிக்க இடம்பெற்ற புனைவுக்கூறுகள்.

புனைவுக்கூறுகள்:-

* துன்னரும் சாரல், சாரல் நீள் இடை ஓங்குவரை, கோடுயர் நெடுவரை, அண்ணல் நெடுவரை ஆகிய சொற்றொடர்கள் மலையையும், அதன் உயரத்தையும் குறிக்கவந்த புனைவுக்கூறுகள்.

* வீயுகுதுறுகல், இரும்பிணர்த்துறுகல் ஆகிய பெயரடைகள் துறுகல்லின் தன்மையைச் சுட்ட வந்த புனைவுக்கூறுகள்.

தலைமைப் புனைவுக் கூறுகள்:-

மேலே மலையைச் சுட்ட வந்த புனைவுக்கூறுகளுள் "துன்னரும் சாரல், சாரல் நீள் இடை" என்ற இரண்டு புனைவுக்கூறுகளும் "மலைவழியின் அச்சத்தை" உணர்த்த திரும்பத்திரும்ப குறிஞ்சி பாடிய புலவர்களால் பயன்படுத்தப்பட்டு "வழியின் அச்சம் உணர்த்தல்" எனும் தலைமை நோக்கத்தை முழுமையடையச் செய்வதால் இதை ஒரு தலைமைப் புனைவுக்கூறாகக் கொள்ளலாம்.

மற்றும் ஓங்குவரை, கோடுயர் நெடுவரை ஆகிய புனைவுக்கூறுகள் "மலையின் உயரத்தை"க் குறிக்க இருவேறு புலவர்களால் திரும்பத்திரும்ப பயன்படுத்தப்பட்டு மலையின் உயரத்தைச் சுட்டல் எனும் தலைமை நோக்கத்தையும் நிறைவு செய்வதால் இதையும் ஒரு தலைமைப் புனைவுக்கூறாகக் கொள்ளலாம்.

மேலும், வீயுகுதுறுகுல், இரும்பிணர்த்துறுகல் ஆகிய இரண்டு புனைவுக்கூறுகளும் "குறிப்புப்பொருள் உணர்த்தல்" என்ற முறையில் வெவ்வேறு புலவர்களால் திரும்பத்திரும்ப பயன்படுத்தப்பட்டுக் "குறிப்புப் பொருள் உணர்த்தல்" எனும் முதன்மை நோக்கத்தை முழுமைப்படுத்துவதால் இதையும் ஒரு தலைமைப் புனைவுக்கூறாகக் கொள்ளலாம்.

இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஏழு பாடல்களும் அடிக்கருத்தியல் ஆய்வுக்கு ஏற்றவாறு அமைந்து தலைமைப் புனைவுக்கூறுகள் சுட்டல் எனும் ஆய்வு நோக்கத்தை முழுமையாக்கின என்று முடிவு கூறப்படுகிறது.

நன்றி: ஆய்வுக்கோவை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link